Wednesday, May 28, 2008

சியாமா சாஸ்திரி...

syamasastri

“பிறந்தால் முக்தி” என
போற்றப்படுகிறது பெருமையாய்
ஆரூர் !!
உண்டோ அதற்கு ஒப்பாக
ஓரூர் ?

அறியும் சங்கீத உலகம்
அம்மண்ணில் அவதரித்தாரது
அளப்பரிய பெருமை !!
அறியார் அறியார்
அவர்தம் அருமை !!

இசையார்வலர் போற்றும்
இணையில்லா மும்மூர்த்திகளில்..

ஒருவர் மூத்தவர் !!
முதுமைக்கு முன்னமேயே
உயிர் நீத்தவர் !!

“சியாம கிருஷ்ண” எனும்
முத்திரை பதித்து
கர்நாடக சங்கீதத்தின்
கவித்துவமிக்க ஆழத்தை
கூட்டியவர் !!

கணக்கறியா பாடல்களில்
காஞ்சி காமாட்சியை
கண் முன் காட்டியவர் !!

விஸ்வநாத ஐயருக்கும்
வேங்கலஷ்மிக்கும்
வேங்கட சுப்பிரமணியனாய்
பிறந்தவர் !!
“விரிபோனி” ஆதியப்பரை
குருவாகக் கொண்டு
சிறந்தவர் !!.

1762 முதல்
1827 வரை

அறுபத்தைந்து ஆண்டுகள் மட்டும்
அவனியில் வாழ்ந்த
அப் பெரியவர்
சியாமா சாஸ்திரி !!

சாஸ்திரீய சங்கீதத்தில்
சங்கராபரணத்தில்
சனமறியுமோ அவரன்றி
“சரோஜ தள நேத்திரி” ?!

தியாகராஜர் க்ருதிகள்
திராட்சைக்கு ஒப்பாக
தித்திக்கும் பொதுவாக
வாயில் சென்றவுடன் !!

சாஸ்திரியின் பாடல்களோ
வாழையாய் இனிக்கும்
வார்த்தை நெஞ்சில்
நின்றவுடன் !!

தாளத்திற்கு
தம் பாடலில்
தனித்த இடம்
தந்தவர் !

“தேவி ப்ரோவ சமயமிதே”
“தருணம் ஈதம்மா”
“ப்ரோவவம்மா”
“பார்வதி நின்னுனே” என

அறியா ராகங்களில்
அரிய க்ருதிகளை
அழகாய்க் கொண்டு வந்தவர் !!

எல்லாம் இருப்பினும்..
எது மறப்பினும்..

சங்கீதம் அறிந்தோர்
சந்தேகம் இன்றி
சியாமா சாஸ்திரி என்றதும்
சிலாகித்து சொல்வார்
ஸ்வர ஜதியினை !!

அந்தோ !
அறிந்து வருந்துகின்றேன்
அல்லும் பகலும்
அவரது வம்சாவளியினரின்
அவல கதியினை !!

விட்டு வைக்காது
விரட்டி விரட்டி
விதி அவர் சந்ததியினரை புரட்ட..
முட்டி தட்டி
முழக்கி முழக்கி பாடுவோர்
முயலவில்லை ஏனோ
நிதி திரட்ட !!

அவதியுற்று
அக் குடும்பம்
அனுதினம் பஞ்சத்தில்
அணு அணுவாக
சரிகையில்....
அகதமியில் நாமிருக்கலாமோ
பட்டுச் சரிகையில் ?

காண்கிறேன் அவர்கள் முகத்தில்
கவலைக் களை !!
கச்சேரி சபாக்கள்
களையுமா அவர் தம்
கவலைகளை ??

கச்சேரி செய்யும்
கலைஞர்க்கு ஈட்டுகின்றது
கட்டிலடங்கா பணத்தை
ஒலி நாடா !!

ஒரு சிலர்
ஒன்று கூடி
ஒவ்வொரு விற்பனையினின்றும்
ஒரு பணத்தை
ஒதுக்கினால்
ஒரு நாளும் இக்குடும்பங்கள்
ஒடுங்கி வாடா !!

இனியும் விடலாகாது
இவர் தம் முகம் தொய்ய !
இன்றே விழைவீர்
இயன்ற உதவியை செய்ய !!

பரிதவிக்கிறது ஒரு குடும்பம்
கவலை மிகுதியில் !!
அவர்களின் பூர்வீகமோ
கலைஞர் தொகுதியில் !!

தீராத அவர் குறையை
தீர்த்து வைப்பாரா
திருக்குவளை தந்த
தவப் புதல்வர் ?
தீர்க்கின் வரலாற்றில்
தடம் பிடிப்பார்
தமிழக முதல்வர் !!

கட்சி நிதியினின்று
கலைஞர் அருளட்டும்
கருணாநிதி உளலோ என
கோடியை !!
கச்சேரியில்
கேட்கலாம் திகட்டாது
“கருணாநிதி இலலோ” என
சாஸ்திரியின் தோடியை !!

Labels: , , ,

Monday, May 26, 2008

பழகிய அசுரன்...அழகிய அசுரன்.. - 2

gatothkach
..
நிடினியும் டோனியும்
நிண்டெண்டோவும் சோனியும்

அசுர கதியில்
அந்திப் பகலாய்
அலறி இருக்கும்
அவசர யுகம் !!
அதனால் இன்று
அசுரனுக்கும் வேண்டும்
அதி புதுமையான
அறிமுகம் !!

பிரதி தினமும்
பிள்ளைகளை அவை
போட்டி போட்டு கட்ட..
பிரயத்தனப் பட்டும்
இதிகாசங்களால் இயலவில்லை
பிஞ்சுகளின் காதினை எட்ட..

போதாததற்கு
தினமும் தொலைக்காட்சியில்
திகட்டுமளவு பேட்டி !!
பாட்டிகளுக்கு ஞாபகம் இருக்குமா
பேரன் பேத்தி ?!

புத்தகம் இல்லை
படுத்துறங்கும் போதும்
பிள்ளைகளின் தலைப்பக்கத்தில் !
அர்த்தம் இல்லா
அர்த்தராத்திரியிலும்
அவர்கள் நினைவெல்லாம்
ஆர்குட் வலைப்பக்கத்தில் !!

சர்வ நேரமும்
சனம் இவ்வாறு
சலனச் சிந்தையில்
சஞ்சரிக்க...

முடிவெடுத்து விட்டான் இவன்
முழுமூச்சாய் அவர்களை
நச்சரிக்க...

சித்திர வடிவத்தில்..
புதிய படிவத்தில்..

திரும்புகின்றான் திரைக்கு
இந்நிலையில் இன்று..
தவறாது பாருங்கள்
”திரையரங்கு” சென்று....

கோடம்பாக்கத்தில் கேட்டால்
கோணாமல் சொல்வர்
சிரிப்புக்கு மறு பெயராக
சிங்கீதத்தை..

இன்று
இயக்கியதோடன்றி
இசைத்தும் இருக்கிறார்
இப்படத்துக்கு அவர்
சங்கீதத்தை..

இந்தியர் சிலரது
நெடுநாளைய வருத்தம்...
அனிமேஷனுக்கும் இந்தியனுக்கும்
ஏழாம் பொருத்தம் !!

அக்குறை இப்படத்தால்
அறவே தீரட்டும் !!
அவனியோர் நம் பெயரை
அனுதினமும் கூறட்டும் !!

இது போன்ற முயற்சிகள்
மேற்கெலாம் ஏராளமாய் !!
இந்தியாவில் எடுத்தமைக்கு
வரவேற்கலாம் தாராளமாய் !!

Labels: , , ,

Friday, May 23, 2008

பழகிய அசுரன்...அழகிய அசுரன்.. -- 1

200px-Mayabazar_rangarao

பீமன் இடும்பிக்கு
பீடின்றி பிறந்தவன்!
பாண்டு புத்திரர்க்கு உதவியே
பாந்தமாய் சிறந்தவன் !!

கர்ணனின் சக்தி ஆயுதத்தால்
கருணையின்றி மாண்டவன் !
அவனின்றி தப்பித்திருப்பானா
அர்ஜுனன் எனும் பாண்டவன் ?

போற்றுவீர் அவனது
பேருதவியை நித்தியம்..
போலியாகியிருக்கும் அவனின்றி
பலராமனது சத்தியம்

ஆம்..
அவனின்றி வத்சலை
எனும் பூவை
கைப்பிடித்திருக்க முடியுமா
அபிமன்யூவை ?

அற்றை நாளில்
அனேக திரைப்படங்கள்
அமைந்தன மெதுவாய்..
அது புராணப் படங்களுக்கும்
அவ்வப்போது பொருந்தும் பொதுவாய்....

அங்கொன்றும் இங்கொன்றுமாய்
அவற்றுள் சில
தனித்து நிற்கும் !!
அதன் சீட்டுக்கள்
அதிவிரைவாய் விற்கும் !!

நிறைய இருக்கும் அவையுள்
மாயக் காட்சிகள் !!
நிறைவாக ஓடும்
நிதமும் நான்கு காட்சிகள் !!

இன்னாரென்றில்லாது கவரும் அது
இருபாலரையும் !!
விட்டிடாது அது
அவரது பாலரையும் !!

சுற்றுப்புற சனம் அறிய
சுவரொட்டி ஒட்டுகையில்..
திமு திமுவென
திரளும் ஊர்
கீத்துக் கொட்டகையில்..

கூட்டத்தில் நெரித்து...
சீட்டைப் பறித்து...

கையகல கைக்குட்டையை
தரையில் விரித்து....
தட்டு தட்டாய்
லட்டு லட்டாய்
வாயுள் போவது கண்டு
சிரித்து....

நாக்கை மடித்து
சீட்டி அடித்து..
நமக்கே வெறுக்க
நகம் கடித்து..

காட்சிக்குக் காட்சி
காணத் தெவிட்டாத படம்
மாயா பஜார் !!
தரையிலமர்ந்து பார்த்தே
தேய்ந்திருக்கிறது பலரது நிஜார் !!

கண்டோம் அப் படத்தில்
கடோத்கஜனாய் ரங்கா ராவை!
கட்டிலடங்கா கற்பனையில்
கர்ஜித்தே கழித்திருக்கிறோம்
கணக்கற்ற ராவை !!

முறுக்கு மீசையும்
முறுக்கேறிய உடம்புமாய்...

வந்து நிற்பார் திரையில்
கதையோடு !!
ஒரு வினாடியில்
ஒன்றி விடும்
ஒட்டு மொத்த சனம்
கதையோடு !!

இது..

-- தொடரும்...

Labels: , , , , , , , ,

Thursday, May 22, 2008

சூறையும்...நடுக்கமும் - 2

இயற்கையாய் இன்றி
இயற்கையால் இன்று
இயற்கை எய்தி
இருக்கின்றார் பலர் !!
இன்னும் கணக்கில் வரவில்லை
இப்பொழுது வரை சிலர் !!

இது தான் கடவுளின்
ஆசியா??
அழுகையோடு கேட்கிறது
ஆசியா !!

புரட்டிவிட்டன அவர் வாழ்வை
பூகம்பமும் புயலும் …
இயல்பு வாழ்க்கை
இனி என்னணம்
இவர்களால் இயலும் ?

ஆறட்டும் இன்றே
அவரது காயம்!
அதற்குத் தேவை
மனித நேயம் !

திபெத்தை துன்புறுத்தும்
சீனத்தையும்..
நிவாரணப் பணிகளை
நிரந்தரமாய் முடக்கும்
மியான்மர் ராணுவத்து
ஈனத்தையும்....

வைதது போதும்
எள்ளி !!
வைப்போம் அச்சிந்தனையை
தள்ளி !!

“இன்னா செய்தாரை ஒறுத்தல்”
”இடுக்கண் களைவது நட்பு“

நன்று சொல்கிறது
நம் மொழி !!
நல்கும் அதுவே
நல் வழி !!

அதனை என்றும் நினைப்போம் !
ஆதரவற்றோரை அணைப்போம் !!

”பகைவனுக்கு அருள்வாய்”
எனச் சாற்றிடுவோம் !!
ஆறுதலாய் சில செயல்
ஆரவாரமின்றி ஆற்றிடுவோம் !!

Labels: , , ,

Wednesday, May 21, 2008

சூறையும்...நடுக்கமும் - 1

burma nargis

தேக்குக்கு பெயர் போன
மண்..
தேம்பிச் சிவந்திருக்கிறது
அதன் கண்...

‘எல்லாம் எங்களின்
பிராரத்த கர்மா’
கதறுகிறது பர்மா

நர்கீஸ் எனும்
சூறாவளி
தந்திருக்கிறது அதற்கு
ஆறா வலி...

முறிந்து விழுந்தன
முதிர்ந்த மரங்கள்..
உதவிக்கு ஏங்குகின்றன
ஊரார் கரங்கள்...

எங்கு காணினும்
சொல்லொணாச் சோகம் !!
முன் எச்சரிக்கையால்
உண்டாகவில்லை உபயோகம்!!

இது நடக்கு முன்
புயல் கரையைக்
கடக்கு முன்..

இந்தியா கொடுத்தது
48 மணி நேர
அவகாசம் !
அதற்குள் அரங்கேறி விட்டது
அட்டகாசம்...

பர்மாவின் பெரிய நதி
ஐராவதி !!
அனுதினமும்
அதன் பொருளாதாரம்
அயராது இருக்க
அதுவே கதி !!

இயல்பாகவே அது
சீறிப் பாயும் !!
இப்புயலால் இன்று
அடித்துச் சென்றததில்
அனைவரது பாயும் !!

எங்கு காணினும்
வெள்ளம் !!
வெதும்புகிறது உள்ளம் !!

போதாததற்கு
சீனாவும் நிலநடுக்கத்தின்
சீற்றத்தில் ஆட...
சிதிலங்களுக்கு நடுவே
சிறை வைக்கப்பட்ட
சிறுவரை அனைவரும் தேட...

நெஞ்சம் விம்முகிறது!
குரல் கம்முகிறது !!

Labels: , , , , ,

Tuesday, May 20, 2008

மஹா பெரியவர்...

180px-Paramacharya1

ஜெய வருஷத்தில்
வைகாசி அனுஷத்தில்

சுவாமிநாதனாய்
விழுப்புரத்தில் உதித்தவர்..
சந்திரசேகரனாய்
கச்சியில் தன் பெருமையை
பதித்தவர்

எத்துயரும் தீர்க்கும்
மருந்தவர்....
எளிமையாய் வாழ்ந்த
அருந் தவர்..

அறிந்திருக்கிறேன்
அவர் பெருமையை
காற்று வாக்கில் !!
படித்திருக்கிறேன்
பல முறை
அவர் எழுத்தை
”அருள்வாக்கில்” !!

இன்று நாட்டில்
இருக்கின்றார்
இலட்சம் துறவி !
இல்லை அவருள்
இவரொத்த பிறவி !!

காண முடிகிறது அன்றாடம்
நாட்டினுள் காவி !!
கண் மூடு நேரத்தில்
நடக்கிறது கண்றாவி !!

கட்டுண்டு தவிக்கிறது
இந்து மதம் !!
கரையேற்றுமா அதனை
கச்சி மடம் ?!

தேசாந்தரியாய்...
”எந்நேரமும் உன் சந்நிதியில்”
என தேவகாந்தாரியாய்...

இருக்க உண்டெனக்கு
விருப்பம் !!
வரவேண்டும் அதற்கொரு
திருப்பம் !!

ஐயனே...
உங்களை சந்தித்ததில்லை
உமது இருக்கையில்
நீர் இருக்கையில் !!
ஒரு நாள் வந்து பார்ப்பேன்
ஓரிருக்கையில் !!

Labels: , ,

Friday, May 16, 2008

ஒரு நாயின் டைரிக் குறிப்பு....

dog praying

நன்றி என்றதும்
நினைவுக்கு வருபவன்
நான்....
ஒப்பாகுமோ என்முன்
வேறு எதுவும் தான்?

வையத்துள் என் தொழில்
வாஞ்சையாய் வாலாட்டுதல் !!
காவலுக்கு நான் இல்லையெனில்
காணக் கூடுமோ மனிதனிடம்
காலாட்டுதல்?

வருவோர் முகம்
திருடனாக இருப்பின்
நான் முறைப்பேன் !!
இரைந்து குரைப்பேன் !!

காவல்துறையில் நான்
பிரதானமான விலங்கு !!
கிடைத்திருக்கிறது என்னால்
குற்றவாளி பலருக்கு
விலங்கு !

டோபர்மேன்
டேல்மேஷியன்
பொமெரேனியன்
லேப்ரடார் என
என்னுள் பல ஜாதி !!
மனிதனுக்கு அன்பு
என் மீது அலாதி !!

மனிதன்..
உடைமைகளை பாதுகாக்க
என்னை நம்பி இருக்கான்
இன்று...
என்னை வைத்து
அடித்துக் கொள்கின்றார்
“இரு கான்”....

என்னை..
ஒருவன் வீட்டில்
மற்றொருவன் பெயரில்
கூப்பிட...
முடிவெடுத்து விட்டேன் நான்
கடவுளை நம்பி கையைக்
கூப்பிட

தேவனே...
வேண்டாம் எனக்கு
அரசியல் வாசம்..
என் வழி
என்றும்
எல்லோருக்கும்
விசுவாசம் !!

Labels: ,

Tuesday, May 13, 2008

யாரென்ன சொன்னாலும்.....

clip_image001

Picture courtesy: The Hindu, dt 2008/05/09

சாஸ்திரீய சங்கீதத்தில்
கிடையாது சாதி
இருப்பின் இருந்திருப்பாரா
மெளலானா நாதசுரம் ஊதி?

அந்த அளவிற்கு
அவர் பிரசித்தம் !
வேண்டாம் வீணாய்
பிற சித்தம் !!

இன்று
இப் பெண்
அவ் வரிசையில் !!
இனி கிறித்தவர்
இருப்பார்
அகதமியின்
முன் வரிசையில் !!
அவள் குரல்
ஒலிக்கும் பல
அலைவரிசையில் !!

கச்சேரியில் இனி
களை கட்டுவார்
ஏசு..
இதனை உணராதாரை
இன்றே நீ
ஏசு..

பருப்புக்கு உதவாத
”செருப்பு” விஷயம் தொட்டு
ஒன்றுக்கும் உதவாத
”ஒன்றுக்கு” வரை

தொந்திரவு தருவார்க்கு
ஒரு சேதி…
உணர்வீர் அதனை
இத் தேதி...

வம்புச் சண்டையை
வீணில் அழைக்காதீர் !
அரசியலை இசையுள்
அவசியமின்றி நுழைக்காதீர் !!

ஒரு சிலர் மட்டும்
பாடத் தந்த வரமா
”சொகசு ஜூட தரமா” ?

எவர்க்கும் பொதுவானது
ராகம் தாளம்...
எதற்கு வீணில்
எகத்தாளம் ?

அகிலத்தில் பற்றற்றவரை
அன்னை என்றழைக்கிறது
அச் சமயம்..
அவர்களையும் வசப்படுத்தியிருக்கிறது
இவ் இசை
இச் சமயம்...

சாஸ்திரியையும் தீட்சதரையும்
உடுமலையையும் ஊத்துக்காடையும்
பிற மதத்தினரும் பாட
அந் நெறியாரும்
அனுதினம் அதனை
நாட....

வளரும் நம் இசை
மண்மிசை !!
ஒலிக்கும் நம் புகழ்
எண்டிசை !!

கேட்டதையே
திரும்பத் திரும்பக்
கொடுத்தாலும்
கேட்காதவற்றை
தோண்டித் தோண்டி
எடுத்தாலும்

கர்னாடக சங்கீதம்
வற்றாத ஒரு கடல் !!
ஒக்குமோ இனியும் அதில்
ஒரு சிலரை ஒதிக்கிடல் ?

அன்னையே..
எதிர் பார்க்கிறேன் ஒன்றை
உன்னிடத்தில் !!
உருவேற்றி விடு இதனை
உன் திடத்தில் !!

மாற்றி விடு
பல நாள் பட்ட
விதிகளை !!
பாடு தமிழில் புதிய
க்ருதிகளை !!

நாவில் நீ
தமிழ்க் க்ருதிகளை
தேம்பாது அணி !!
கேட்க விழைகிறேன்
உன் மூலமாய்
தேம்பாவணி !!

Labels: , , , , , , ,

Monday, May 12, 2008

ஏற்றமும் சீற்றமும் - 02

எதனால்
உலகு நம்புகிறது
“எதனால்”?

தீர்க்குமா துயரை
தாவரத்தினின்று வரும்
எரி சக்தி ?!
சரியென்று படவில்லை
இந்த யுக்தி !!

பயிரிடுகிறது உலகம்
சோளத் தோப்பாய் !!
எதற்கும் அஞ்சாது
விலையேறுகிறது எந்தன்
பீப்பாய் !!

விளை நிலம் இருப்பது
வயிற்றுக்கா?
வண்டிக்கா?
யார் தான் இன்னணம்
கண்டிக்கா?

உலகே!
இனியுமா
இறங்கும்
என் விலை
எனும் கனவு?
இன்றே அடுத்த
செயல் என்னவென்று
வினவு

வாகனம் மீது
பற்றைக் குறை !
தானே மறையும்
பற்றாக்குறை !!

இருக்கவே இருக்கிறது
பொதுப் பேருந்து !!
அனைவரையும்
அதில் செல்ல
நீ உந்து !!

உபயோகித்து தூக்கி எறியும்
பண்பினை கத்தரி !!
மறுமுறை பயனாக்கும்
முயற்சியை கற்றறி !!

மின்சாரத்தை
மிகக் குறைந்த அளவில்
பாதரச விளக்குகள்
இழுக்கும் !
அதனை அமல்படுத்த
வருமா இழுக்கும்?

தெருவோரத்தில் தெரிகிறது
காய்கறி மண்டி !
வேண்டாம் அங்கு செல்ல
வண்டி !!

விடுவோம் யாரால்
இந்நிலை எனும்
முழக்கம் !!
மாற்றுவோம் நெடுநாளைய
பழக்க வழக்கம்

-- முற்றும்

Labels: , , , , ,

Friday, May 09, 2008

ஏற்றமும் சீற்றமும்...

gas pump

மண்ணுலகில்
மறைந்து விட்டது
பிற கடுப்பு !!
முக்கியத்துவம் பெறுகிறது
முன்னம் மறந்து விட்ட
விறகடுப்பு !!

ஆளாக்குகிறேன் பலரை
பெருந் துயரத்தில் !
இருந்தும் பறக்கிறேன்
பெரும் உயரத்தில் !!

உலகளவில் என் பெயர்
கச்சா எண்ணை !!
உவமிப்பார் உலகிற்கு
அச்சாக என்னை !!

வாகனங்கள் என்னருளால்
புகை கக்கும் !
இல்லையேல் நின்று போய்
நெரிசலில் சிக்கும் !!

ஏறுகிறது என் விலை
தினம் சந்தையில் !!
காறுகிறது என் பெயரை
சனம் நிந்தையில் !!

அளவின்றி என் தேவை
அனைத்து நாடுகளிலும்
அதிகரிக்க
அவதியுறுகின்றன ஆலைகள்
அதி விரைவாய் என்னை
சுத்திகரிக்க

தடை கண்டார் பலர்
எனது வரத்தில் !!
கை வைக்கின்றார்
தனது சிரத்தில் !!

மேலும்...
சேமிப்புப் பணத்தையும்
நான் அபகரிக்க
உலகோரை இது
மிக நெரிக்க..

முடியவில்லை பலரால்
விருந்தினரை உபசரிக்க
தடுமாறுகிறார்
இதனை அனுசரிக்க



தொடரும்

Labels: , , , ,

Friday, May 02, 2008

12 - 22 - 30.....

விடுவீர் வாலிதாசனுமா
எனும் நினைப்பை !
மாற்றுங்கள் உங்கள்
கனைப்பை !!

மங்கையரின்
அங்க அளவை
எங்களவனும் எழுத

வந்தது எமக்கு பீடு
போனது போக்கறியாது
நமது நாடு

என...
நீளப் பாடேல்
பிலாக்கணத்தை !!
நீக்குவீர் நற்சிந்தை
இலாக் கணத்தை !!

மூன்று எண்கள்
கண்ட உம் கண்கள்...

ஞாபகப்படுத்தியதோ நிணத்தை ?!
நான் சொல்ல வந்தது
பணத்தை !!

பெருக்குவீர்
அவை ஒவ்வொன்றோடும்
ஆயிரம் கோடிகள் !!
நாள் தோறும்
நாட்டில் அவற்றை
நாக்கில் கொண்டுள்ளார்
பாயிரம் பாடிகள் !!

ஆம்..
தீர்ந்தது இன்று பலரின்
தாளாக் கோபம்....
காரணம்
ஒரு துறை
கடந்த மூன்றாண்டுகளில்
கண்ட
கணக்கறியா லாபம் !!

225px-Laluprasadyadav

அத் துறையின் பெயர்
ரயில்வே எனும்
இருப்புப் பாதை !!
அதனை ஆதாயமாக்கியவன்
லாலு எனும்
இணையற்ற மேதை !!

இன்று இலங்குகிறது
இத் துறை
இந்திய பொருளாதாரத்தின் வேராய் !
இதன் நிலை
சில காலம் முன்பு
நேருக்கு மாறாய் !!

லாபமாய் ஓட்டு
இல்லையேல்
லாவண்யமாய் பூட்டு
என...

அரசு அறிக்கையை
விதி நீட்ட...
அமைச்சர் பலர்
அமைதியாய் முயன்றும்
முடியவில்லை
நிதி ஈட்ட...

அரசு கொடுத்திருக்கும்
ஆதி நாளில்..
இத்துறையை தனியாருக்கு !!
இச் சந்தேகம்
இன்று
இனி யாருக்கு ?

அரசு என்றால்
அலங்கோலம் என
அரற்றுவார் சிலரால்
அவமானப்பட்டது
அன்று
அத் துறை !!
அத்துணை
அழுக்கு நிரம்பிய
அதனை
அலம்பி விட்டான் இன்று
இத் துரை !!

தமக்கு முன்
பணியில் இருந்தாரை
தூற்றாது...
பயணச் சீட்டின் விலை
ஏற்றாது...
பணியினின்று பலரை
மாற்றாது...

லாலுவின் இச்சாதனை
பெரிது !!
அறியுங்கள் அதனைச்
சிறிது !!

மொத்தத்தில்...
மத்திய அரசு
போற்றுகின்றது லாலுவை !!
என்ன செய்யுமோ
நம்மூர்
பாலுவை ?

Labels: , , , ,

Thursday, May 01, 2008

மே தினம்...

44137219_DSCN0022

உழவுக்கும் தொழிலுக்கும்
வந்தனை !
மீசைக் கவிஞன்
அன்று வைத்த
சிந்தனை !!

தண்ணீர் தட்டுப்பாடு..
தடையான மின்சாரம்..
தரத்திற்கு தகாத விலை..
தற்கொலை..
என..

தடுக்கி விழுந்தால்
தமியன் உழவனுக்கு
தனது நாட்டில்
பரிதாப நிலை !!

ஆயினும்..
அவனியில்
அவன் குறித்து
அணுவளவும் இல்லை
அனுதாப அலை !!.

பாரதியின் வாக்கு
பொய்த்ததா?
நம் இலக்கியமே
நமக்கு கைத்ததா?

காய்ந்து கிடக்கிறது
வயல் !
கால் வயிற்றுக் கஞ்சி
ஆகிவிட்டது அவனுக்கு
அயல் !!

கனிவாக
கனி உண்ட
கூன் கிழவியும்
கூறினாள் அன்று...

”வரப்புயர” நீர் உயரும்
நீர் உயர நெல் உயரும்
நெல் உயர குடி உயரும்
குடி உயர கோன் உயரும்
கோன் உயர அரசு உயரும்
என்று...

மறந்து விட்டதோ
அவள் பெயரை
மண்ணும்?
உழவன்றி என்னணம்
உலகம் உண்ணும் ?

காலத்தே உழுபவன்
காசில்லாமல் அழுபவன்
குடியானவன்...
கண்ணீரன்றி வேறொன்றை
குடியான் அவன்....

அன்றாடம் இதுவே
என்றான

அவன் வாழ்வை...
தலைத் தாழ்வை..

செய்யவில்லை அரசு
சட்டை !
தள்ளப்படலாகாது அந்நிலைக்கு
நீலச் சட்டை !!

உழவன் இருக்கிறான்
கடுஞ் சினத்தில் !!
தொழிலாளனுக்காவது
தோள் கொடுப்போம்
இன்றைய தினத்தில் !!

Labels: , , , , , , ,