Monday, February 27, 2006

கடல் - 10

இல்லை எனும் சொல்
அதன் எல்லை வரை
இல்லை

கடல் அனைவருக்கும்
கை விரிக்கிறது

வருவார்க்கு என்ன
கொடுக்க என அதன்
கை அரிக்கிறது

ஊணுக்கு ஊனும்
உப்பும் வைத்து
சிரிக்கிறது

உப்பு..
அதற்கு உண்டோ
ஒப்பு?

சுறா..
அதன் வலிமைக்கு முன்
எதுவும் புறா...

மனிதனுக்கோ..
தப்பு எனும் ஒப்பு
உப்பு என கரிக்கிறது !
நற்சிந்தனை மரிக்கிறது !!

ஒப்பாமல் ஒப்பி
மேலும் மேலும்
தப்பு தப்பு என
வழி தப்பி
சொதப்பி
மனிதன் உப்பு உப்பு
என உப்புகிறான் !!
மீள முடியாமல் விரல்
சப்புகிறான் !!

-- தொடரும்

கடல் - 09

நிறத்தில் சாம்பல் காண்பீர்
திறத்தில் சோம்பல் காண்பீரோ?

அலை..
விழுந்ததை நினைத்து
மறுங்குவதில்லை
சுருள்வதை நினைத்து
சுருங்குவதில்லை
நொறுங்குவதில்லை

தேவையற்றவையை அருந்துவதில்லை
தினையளவும் வருந்துவதில்லை

பலமுறை விழுந்த போதும்
அலையில்
புண் இல் !!
காரணம் அது விழுவது
திரண்டு புரண்டு மண்ணில் !!
பிறகு இரண்டு கண்ணில் !!

அலைக்கு...
எழுந்ததை நினைத்து
செருக்கு இல்லை
தருக்கு இல்லை

ஆஹா...
அதன் திறமையை முடிய
ஒரு சுருக்கு இல்லை

-- தொடரும்

Thursday, February 23, 2006

கடல் - 08

மனிதன் வாழ்வில்
அலை அலை
என அலைகிறான்
மனம் கலைகிறான்
வழி தொலைகிறான் !!

'வினைக்கு தகுந்தபடி
வாழ்க்கை' என்பதை
மறக்கிறான் !! - பண்பு
துறக்கிறான் !!

பலவற்றை
மறைக்கிறான் !!
இறையின் பெருமையை
குறைக்கிறான் !!
எதுவும் முடியும் பணத்தால்
என அதனை
இறைக்கிறான்!!

தன்னைத் தானே சிலுவையில்
அறைகிறான் !!
படிமிசை ஒரு நாள்
மறைகிறான் !!
அந்தோ! ஆறடியில் அன்றோ
உறைகிறான் !!

அலையும்
அலைகிறது !!
ஆனால் என்று
குலைகிறது?

இன்பமும் துன்பமும் அதற்கு
நிலை !
அதனால் அதற்கு என்றும்
நிலை !!

-- தொடரும்

கடல் - 07

மனிதனுக்கு தெரிந்தது
நழுவுதல்..
கை கழுவுதல்...

கடலுக்கு தெரிந்தது
கால் தழுவுதல்...

மனிதனுக்கு தெரிந்தது
இனம் மதம்

கடலுக்கு தெரிந்தது
தினம் இதம்

அலைகளால் கடல்
முன்னோக்கி வருகிறது
அணைக்க..

கொலைகளால் மனிதன்
பின்னோக்கி செல்கிறான்
பலர் வாழ்வு
அணைக்க...

-- தொடரும்

Monday, February 20, 2006

கடல் - 06

வாதையின் பிள்ளை
சீதையை பார்க்க
தாவியதும் கடல்...

சோதையின் பிள்ளை
வாய் திறந்து
காட்டியதும் கடல்..

மொத்தத்தில்
பரமபதம் அளிப்பவனும்
பாசுபதம் அளித்தவனும்
பிரணவ பதம் உரைத்தவனும்
உடல் கிடத்தியிருப்பது
கடல் !!

கடல்
நம் சமயத்தின் அம்சம் !
சமயத்தில் பண்ணும்
துவம்சம் !!

அறிவியல் சொல்லும்
அதில் தொடங்கியது தான்
அனைத்து உயிர்களின்
வம்சம் !!

திண்ணம் நழுவி
பெண்ணைத் தழுவி
முத்தமிடும்
முறைகேடான மானுடர் தம்
எண்ணம் நீலம்..

மண்ணைத் தழுவி
முறையாக
முத்தமிடும் கடல்
வண்ணம் நீலம்...

ஒரு அஞ்சை
அடக்காமல் நாம்
தவிக்கிறோம்
கடல் "ஆறையும்"
அடக்குகிறது...

மனிதன் கற்க
வேண்டியது நிறைய
அலையிடம் !!
ஏனெனில் அது
கலை இடம் !!

-- தொடரும்

கடல் - 05

jpg0044

கடல்..
பூமி சுற்றியிருக்கும்
சீலை !!
பாலைக்கு
ஊற்றும் பாலை !!
மேகத்தின் வயிறு
நிரப்புவதே
அதன் வேலை !!

மறுவில்லாத
ஒரு வில்லோடு வந்த
பேறு தரும் அரசு
வீற்றிருப்பது
பேருவில்....

ஆம்..
வரை வாழ் மாலுக்கும்
நுரை சூழ் பாற்கடல் எனும்
பால் ஆழி
உறைவிடம்..

தரை வாழ் காலுக்கும்
கரை சூழ் கடல்
அரை நாழி
ஓய்விடம்

இறைக்கு
மறைப் பொருள்
நிறைவாக உரைத்தவன்
உறைவதும்
கடல் அருகில்...

கண்
இமைக்கு முன்
உமைக்கு
உடலில் சரி பாகம்
குறைவின்றி கொடுத்தவன்
உறைவதும்
கடல் அருகில்...

அவன் சிகப்பன் !!
இவன் அவன் தகப்பன் !!
தக தகப்பன் !!
நெருப்பன் !!

அவன் கந்தன் !!
இவன் அவனை தந்தன் !!
இவன் கண் தோன்றி அவன்
வந்தன் !!

அவன்
தோகை ஏறும்
வள்ளி நாயகன் !!
இவன்
கூகை மேவும்
சுள்ளி நாயகன் !!
கொள்ளி நாயகன் !!

மேற்சொன்னோர்க்கு
செந்தூர்
நாகையில் தான்
ஜாகை !!

-- தொடரும்

Thursday, February 16, 2006

கடல் - 04

jpg0050

சமுத்திரம்,
பேரு
என பல பேரு...
விழுங்கியிருக்கிறது
கோடிக்கரை தொடங்கி
பல ஊரு....

வெறுமையானது -- ஆனாலும்
அருமையானது !!

அலை -
அதன் அழகுக்கு
கிடையாது
விலை

உண்டு பண்ணும்
உன்மத்தம்
அதன் சத்தம்

ஹோ எனும்
அதன் ஆர்ப்பு
எவர்க்கும் தரும்
இனமறியா ஈர்ப்பு

அதன் சிலு சிலுப்பு
தரும்
குளு குளுப்பு

தாலேலோ சத்தத்தோடு
முத்தமிடும்
மிதி காலை
ஏலேலோ ஏத்தம் காணும்
அதி காலை

விசும்புக்கு அது தரும்
முத்தம்
பார்ப்பதற்கு பரிசுத்தம்

நித்தம்
உண்டு பண்ணும்
விலை மதிக்க முடியா
பித்தம் !

வேலைக்கு திரும்ப
மனம் பண்ணும்
யுத்தம் !!

-- தொடரும்

கடல் - 03

sanju   in outerbanks sand

அவன் தணி !!
தணி இவன்
பணி !!

அவன் மரு !!
இவன் இக்கவிதையின்
கரு !!

அவன் இவனுள் அடைந்தான்
தேவன் அமுதம் கடைந்தான்
அடைந்தான்..

கடல்...
சொல்லிக் கொண்டே இருக்கலாம்
அதன் அழகை
தமிழ் எனும்
முது மொழியில்
மது மொழியில் - என்
புது மொழியில்

எப் புள்ளியும்
கடல் முன்
வெற்றுப் புள்ளி !!

முற்றுப் புள்ளி ஆகாது
இருக்க
கடலைப் பார்க்கிறோம்
சற்று தள்ளி !!

வேண்டும் என
அள்ளி விடவும் முடியாது !
வேண்டாம் என
தள்ளி விடவும் முடியாது !!

கடல்....
காண்கிறது
வலைஞன் துடுப்பு..
ஆயினும்
அதன் ஆழம் காண
எக் கலைஞனுக்கு உண்டு
துடுப்பு?

-- தொடரும்

Monday, February 13, 2006

கடல் - 02

sanju   in outerbanks - 3

அவன் சேனை
மலைத் தேனை
மாந்தும் வண்டு !!
இவன் சேனை
நீந்தும் நண்டு !!

அவன் பாறையானவன் !!
இவன் சூறையானவன் !!

அவனிடம் காணலாம்
வேழம்!
இவனிடம் காணலாம்
ஆழம் !!

அவனிடத்தே வளம் !!
இவனிடத்தே பவளம் !!

அவன் ஓங்கியிருப்பான் !
இவன் தேங்கியிருப்பான் !!

அவன் உயர்ந்த கிரி !!
இவன் பரந்த விரி !!

அவன் முடி கொண்டவன்!!
இவன் மீன் நெடி
கொண்டவன் !!

அவன் அசையாக்
குன்று !!
இவன் என்று இருந்தான்
நின்று?

அவன் சிகரம் !!
இவன் சாகரம் !!

அவன் பர்வதம் !!
இவன் அழகுக்கு கிடையாது
ஓர் பதம் !!

-- தொடரும்

கடல் - 01

glistening sands of outerbanks
குறிஞ்சியின் காதலன்
மலை !
நெய்தலின் நாயகன்
அலை !!

அவன் மேரு !!
இவன் பேரு !!

அவன் வரை !!
இவன் நுரை !!

அவனுக்கு உளி !!
இவன் முன் எதுவும்
துளி !!

அவனிடத்தே வடிக்கலாம் சிலை !!
இவனிடத்தே பிடிக்கலாம் வலை !!

அவன் கொள்வது ஏற்றம் !!
இவன் கொள்வது சீற்றம் !!

அவன் பார்க்கிறான்
மலைச் சாரல் !!
இவன் சேர்க்கிறான்
முகில் தூறல் !!

அவன் அசலம் !!
இவன் சலம் !!

அவன் மடிக்க முடியாதவன் !!
இவன் குடிக்க முடியாதவன் !!

அவனிடத்தே உண்டு தூசி !!
இவனிடத்தே உண்டு பாசி !!

-- தொடரும்

Thursday, February 09, 2006

அம்மா - 22

மெட்டி போட்ட
நாட்டுப் பெண்கள்
கட்டில் போட..

ஆதி நாள் தொட்டு
விட்டில் பூச்சி வரும் நேரம்
வட்டில் சோற்றை போட்டவள்..

மெட்டில் தாலேலோ வைத்து
தொட்டில் போட்டாள் !!

3 பேரன்கள் !!
படு சூரன்கள் !!

கத்தி ஊர் கூட்டாமல்
கத்தி கூர் புத்தி கொண்ட
4 பேத்திகள் !!
ராசாத்திகள் !!

1995ல்
1999ல்
அமெரிக்கா வந்தாள் !!
நயகரா கரையில் நடந்தாள் !
சான் ·பிரான்ஸிஸ்கோ பாலம்
கடந்தாள் !!
கரோலினா இடிக்கு பயந்தாள் !!
9/11ல் துவம்சமான
அம்சமான இரட்டை கோபுரத்தில்
ஏறி வியந்தாள் !!

வாழ்கிறாள்
91 வயது அம்மாவோடும்
தன் பதியோடும்
தன் பதியில்
தம்பதியாய் !!
நிம்மதியாய்!!

அவளூரில்
23 வருடங்கள்
அவள் சேலை பார்த்து !!
அயலூரில்
11 வருடங்கள்
என் வேலை பார்த்து !!

"என்றும் அன்புடன்" என்று
மென்று முழுங்கி
நிடதங்கள்
கடிதங்களில் தொடர்கிறது !!
நிமிடங்கள்
நாட்களாய் கனக்கிறது !!

வாழ்க்கைத் தடங்கள்
வாழ்ந்த இடங்கள்
படங்களாய் கண்ணில் !!

நீயும் கண்ணில் !!
நீரும் கண்ணில் !!

-- முற்றும்

அம்மா - 21

சங்கதி நிறைந்த
சங்கரி வாழ்க்கை
சங்கதியும் நிறைந்தது !!

மன ரோகம் குறைந்ததும்
கன ராகம் நிறைந்தது!!
ஆதியும் ரூபகமும்
ஆகிருதியை அறைந்தது !!
ஆதியோடு துயர் மறைந்தது !!

சக்திக்கு காலையில் எரிசேரி !!
முக்திக்கு மாலையில் கச்சேரி !!

பல அரங்கில் கேட்டிருக்கிறோம் !!
ஏட்டோடு !! கை
நோட்டோடு !!

துட்டை பார்த்த பயல்கள்
துட்டை பார்க்கக் கூடாதென..

காலா காலத்தில்
கால் கட்டை போட்டாள் !!

நாட்டுப் பெண் மூவர் !!
மூவரும் புக்ககம் புகுந்த
பெட்டகங்கள் !! - எமது
ஈரம் பார்த்து வந்த
ஒட்டகங்கள் !!
இணையற்ற புத்தகங்கள் !!

ஒருவள் ஆதியில்
அனகாபரணனை
பதி கொண்ட குணவதி !!
இந்நாளில் நாராயணன்
கை பிடித்த யுவதி !!
உமா (எ) பார்வதி

ஒருவள் மதியான பெண் !!
கோமதி (எ) சுதா
ஜெயராமன் திருமதி !!
சதா சுதாவுக்கு தருகிறான்
அவன் வெகுமதி !

ஒருத்திக்கு தான்
பதிப் பெண்களிலேயே அதிக
மதிப்பெண் !!
செளம்யா (எ) சுபலட்சுமி !!

அவள் நற்குணங்களின் சங்கம் !!
புடம் போட்ட தங்கம் !!
கிடையாது கர்வ பங்கம் !!

மாண்டு கண்டு பிடிப்பதில்
மாண்டு போவர் பிறர்
இவள் முன் !!

-- தொடரும்

Monday, February 06, 2006

அம்மா - 20

ராமப்ரியா
இவளை ஏத்தும் நாவால்..

இரு கரம் குவித்து
இது காறும் வந்திக்கிறது
இடை விடாது சிந்திக்கிறது
இரு சந்திரசேகரனை !!

ஒருவர்!
மன வைத்தியர் !
மற்றொருவர்
மகா பெரியவர் !!

ஒருவர்
மனம் முன்னேற உதவிய,
குழப்பத்தை அடக்கிய
லகான் !!
மற்றொருவர்
சனம் முன்னேற உதவிய
மாசற்ற மகான் !!

மன மருத்துவரும்
சன மருத்துவரும்
கலங்கரை விளக்கமாக
இல்லையேல்...

எமது நா வாய்
வறள..
ராமப்ரியா எனும்
நாவாய்
கலங்கி இருக்கும் !! எங்ஙனம்
துலங்கி இருக்கும்?

தனக் குழப்பம்
மனக் குழப்பம்
எல்லாம் இருப்பினும்
தனக்கு எனாமல்
தரணிக்கு என்று வாழ்வது
அம்மாவின் கணக்கு !!
அதில் என்றைக்கு இருந்தது
பிணக்கு?

அக்காள் பிள்ளைகள்
நாற்றான காலம் முதல்
அக்காள் காற்றான
காலம் வரை...

மாற்றார் இவர் எனாது
ஊற்றாக உறவுகளுக்கு
செய்திருக்கிறாள்
பல கூற்று!!
அதற்கு ஏது
கை மாற்று?

-- தொடரும்

அம்மா - 19

கொடிக்கு
குளிர் போயின்
துளிர்!!
குளிர் துளிர்க்கு வரின்
கொடிக்கன்றோ நீங்கும்
உயிர்?

ஓடக்காரன் செயலிழக்கலாம்
ஓடம் செயலிழந்தால் ?

நீடித்து நொடிக்கும்
மனநோயை
நொடிப் பொழுதும்
நம்பிக்கையால் ஒடித்தாள் !!
மன நோய்
மரண நோய் எனும்
அவநம்பிக்கையை பொடித்தாள் !!

விதைகள்
வீண் கதைகள் ஆகாமல்
விருட்சமாய் ஆக்கினாள் !!
உயர்வாக்கினாள் !!
துயர் போக்கினாள் !!

அப்பாவை
பீடித்திருந்த நோயும் நீடிக்கவில்லை
பீடி, பிராந்தி, வில்லைக்கு நாங்களும்
போகவில்லை !!

வீடு
அடமானம் போகும்
அவமானம் வாராது
அவள் அன்று காத்தது
அனைவரின்
தன்மானம்...
அதற்கு எது என்று ஆகும்
சன்மானம்?

-- தொடரும்

Thursday, February 02, 2006

அம்மா - 18

கனமானது கணம் !!
ரணமானது மனம் !!
ரதமானது இனம் !!

தழலூதும் கை
குழலூதும் கையாக..
நார் பிடித்த கை
தேர் பிடிக்க...

சாரதியானாள் !!
பர்த்தாவை
பார்த்தன் ஆக்கினாள் !!

வெறுப்பை அறுக்கும்
பொறுப்பை ஏற்றாள் !!

ஈசான்ய மூலையில் உட்காராமல்
ஆசானாய் ஆனாள் !!

விசும்பலை மூட்டை கட்டினாள் !!
விசும்பை முட்ட கை நீட்டினாள் !!
அறிவைத் தீட்டினாள் !!

ஆதவன் பிரகாசிக்கும்
ஆகாயமாய் ஆனாள் !! - எமக்கு
ஆபத்சகாயமாய் ஆனாள் !!

முன் வழி காட்டும்
முன் மறி
வழி மாறியதால்
மந்தையில் மற்ற ஆடுகள்
தறி கெட்டு ஆடாமல்

நெறி கெட்டு போகாமல்
மானம் பறி போகாமல்....

மேய்க்கும் சேவையை
சேய்க்கு என ஏற்றாள் !!
காப்பாற்றினாள் !!

தன் நெஞ்சம் கலங்கலாம் !!
தன்னை தஞ்சம் என்றும்
தன் மடி மஞ்சம் என்றும்
கொஞ்ச வந்த
குஞ்சுகள் அஞ்சலாமா?
அதை பார்த்து என்
கண் துஞ்சலாமா?

-- தொடரும்

அம்மா - 17

அப்பா!
சிறிது காலம்
சிந்தனை தேக்கத்தில்
கந்தனை மறந்தார்!
வந்தனை துறந்தார் !!

மனச் சோர்வை தேக்கினார் !!
தூக்கத்தை நீக்கினார் !!

வேலை என்றால் நடுங்கினார் !!
போர்வைக்குள் ஒடுங்கினார் !!

விழி பிதுங்கினார் !!
வீட்டுக்குள் பதுங்கினார் !!

அம்மா அந்நாளில்
பேதையாய் நின்றாள் -- ஆனாலும்
கீதையாய் நின்றாள் !!

-- தொடரும்