Wednesday, April 30, 2008

விலைவாசி.....

விலை வாசி!
சொல்லும்படி இல்லை
விலைவாசி!!

அரிசி, பருப்பு
எரி வாயு, எண்ணை ...
அனைத்தின் விலையும்
கைக்கெட்டா இடத்தில் !!
பொருட்களை
பார்க்க மட்டுமே முடிகிறது
படத்தில் !!

இன்னணம் ஏறலாகாது
அத்தியாவசியப் பொருள்கள் !!
முறையிடுகின்றன
முக்கு மூலையெல்லாம்
செய்திச் சுருள்கள் !!

பதவியில் இருக்கும் அரசுக்குப்
பொறுப்பில்லை என்று ஆக..
பாமர சனத்திற்கோ
பருப்பில்லை இன்று வேக ..

அநியாயத்திற்கு ஏறிய
அகவிலை...
அரசின் காதில்
ஏன் இத்தனை நாள்
புகவிலை ?

நிதியமைச்சருக்குத் தூக்கம்
நிரந்தரமாய் நீக்கம்
காரணம்..
பண வீக்கம்

உழவினின்று
நீங்கும் நிலமா ?
உலகோரின்
வாங்கும் பலமா?

எதனால் ஏற்பட்டது
இந்த ஏற்றம்?
காண முடிகிறது மக்களிடத்து
கட்டிலடங்கா சீற்றம் !

இந்தியன் ஒவ்வொருவரின்
இன்றைய கேள்வி...

நிலையாது நிரந்தரமாய்
நீங்குமா முடையும்?
நீக்குமா துயரை
ஏற்றுமதித் தடையும்?

இல்லையேல்.....
ஆட்சி வலுவிழந்து
உடையும் !!
கிழியும் அதன் முன்
ஆட்சியிலிருப்பார் உடையும் !!

Labels: , , , , ,

Tuesday, April 29, 2008

உலக நாயகன்......

gse_multipart17173

அழுகையும் முத்தமும்
அவனது முத்திரை !
அனேக தினங்களில்
அணுவளவும் இல்லை
அவனுக்கு நித்திரை !!

பணம் எண்ண
படம் பண்ண
படவுலகில்
பலர் உளர்....
வரலாம் அதனால்
தாளாத் தளர்...

அதில் இல்லை
அவனுக்கு உடன்பாடு !
அவற்றால் செரிக்காது
அவனுக்கு சாப்பாடு !!

முயற்சி புதிதாக இருப்பின்
முழுமையாய் இணங்குபவன் !
முற்றிலும் திறமையை
முழுமூச்சாய் வணங்குபவன் !!

குட்டனாய்
திருடும் துட்டனாய்
சப்பாணியாய்
சீனுவாய்
நாயகனாய்
பேசாதவனாய்
தேவனாய்
வசூல் ராஜனாய்
தென் இலங்கை தமிழனாய்
ஆளவந்த நம்மவன் !
திரையில் இத்தனை
திருமுகம் காட்டியவன்
எம் மவன்?!

தசாவதாரத்தில் முதலாவது??....
மச்சம்...
உண்டா கமலுக்கு
மச்சம்?

இது தான்
இன்றைக்கு பலரது அச்சம் !
இருக்கின்றார்
இரு கண் விரிந்து
எதிர்பார்ப்பெனும்
அவதியின் உச்சம் !!

என் விடை?
என்றும் போல்
ஒன்று தான்...
உணர்ந்தால்
நன்று தான்....

நமக்கு முக்கியம்
படமல்ல
பிடிக்கவிருக்கும்
இடமல்ல

விட்டுச் செல்லவிருக்கும்
தடம்
அதன் பாதையில்
தமிழ்த் திரை பிடிக்கும்
நாளைய தேதியில்
வடம்

Labels: , , , , , , , , ,

Monday, April 28, 2008

தமிழ்த் தாத்தா....

UVS_Iyer
Picture Courtesy: Wikepedia

”தொன்மொழிகளின் தேவாலயம்”
எனப் போற்றப்படும்
செம்மொழியாம் தமிழை....
மாறா வனப்புடைய
தங்கச் சிமிழை...

காலம் சில நாள்
கறையானே காவலாய்
குடி வைத்தது !!
அது ஒருவரது
உள்ளத்தை அறவே
தைத்தது !!

தில்லை முதல்
நெல்லை வரை
எல்லையில்லாது....
எடுப்பார்
தொல்லையில்லாது....

பல மூலையில்
பனை ஓலையில்

இருந்தன
பல சுவடிகள்
கேட்பாரற்று !!
இரண்டாம் பட்சமானது
தமிழ்ப் பற்று !!
காரணம் புற்று !!

சங்கம் வளர்த்த தமிழ்
அங்கம் சிதைவதை
பங்கம் அடைவதை

முடியவில்லை ஒரு
தாத்தாவால் தாங்க..
மேலும் கீழும்
மூச்சு வாங்க....

அங்கிங்கெனாது
எங்கெங்கும் சென்று...
பல நாள்
வெறும் காற்றையே
மென்று....

ஓலை தேடுவதே
வேலையாய்...

கண்டெடுத்தார்
காணக்கிடைக்கா
காப்பியங்களை
அத் தாதை..
தமிழின் மீது
தாளாப் பற்றுடைய
மா மேதை !!

அவரின்றி..
கிடைத்திருக்குமா நமக்கு
எட்டுத் தொகையும் ?
ஈடாகுமா அதற்கு
எத் தொகையும் ?

அவர் சிரமத்தை
அவர் கண்டெடுத்த
பதினெண் கீழ் கணக்கும்
பத்துப் பாட்டும்
என்றும் காட்டும்
தமிழ் தரணியிலுள்ள வரை
அவர் பெருமையை
நிலை நாட்டும்...

28/04
”தா ! தா !” என
தமிழைச் சேர்த்த
” தமிழ்த் தாத்தா”
உ வே சா
நினைவு தினம்...
தமிழனே..
நினை நீ அவரை
தினம்....

மொத்தத்தில்...
கவலைக் களை காணின்
அதனைக் களை என
தமிழ் தேடுகிறது சில
தாத்தாக்களை...

தமிழை மீட்டார்
அந்தத் தாத்தா !!
தமிழனை மீட்பாரா
இன்றைய தாத்தா?

Labels: , , , , ,

I P L....

விரைவு வண்டி
விரைவு உண்டி

இவ்வரிசையில்
இந்தியாவில் இன்று
இலங்குகின்றது ஒன்று

அதன் பெயர்
ஐ பி எல்
இயம்புகின்றார் உலகத்தார்
இது ஒரு சூறாவளிப்
புயல்

கிரிக்கெட்டு வாரியத்தார் கையில்
பல கோடி !
வெற்றிக் களிப்பில் மிதக்கிறார்
லலித் மோடி !!

சிலரை எடுக்கின்றார்
கடைச் சரக்காய் ஏலத்தில் !
சிலரை விடுகின்றார்
”கடைச்” சரக்காய்
நிர்மூலத்தில் !
நல்லவர்க்கு உண்டா
நன் மதிப்பு
இக் காலத்தில் ?


இன்னார்க்கு
இன்றைய தேதியில்
இவ்வளவு என்று
கட்டுக் கட்டாய்
பணம் புழல்கிறது !

துட்டுக்கு ஏற்றவாறு
ஆடுவார் மட்டை
சுழல்கிறது !

போதாததற்கு...
பற்றாத ஆடையில்
கன்னியர் ஆட்டம்
தக தக தகவென.....
கூறுமா இதயம் இதனை
தகவென?

அணி ஒன்றுக்கு
120 பந்து வீச்சுக்கள் !!
எதிர் அணியிடம்
காண முடிகிறது
பதற்ற மூச்சுக்கள் !!

துரித கதியில்
தினம் நடக்கிறது
ஒருவரது சதம் !
மனதிற்குள் எனக்கில்லை
ஒருமுறையும் இதம் !!

சொல்கின்றார் சிலர்
5 நாள் போட்டி
ஒரு நாளானது
யாராலே?
மொத்து மொத்து
என மொத்தாது
சொத்து... சொத்து என்று
டொக்கு வைத்த
பேராலே

ஒரு நாள் போட்டி
அரை நாளானது
“சொத்து ! சொத்து !”
என ஆடுவோர் போனதாலா?
இதெல்லாம்
ஆட்டக்காரர் திறமையை
அளக்கும் அளவுகோலா?

மொத்தத்தில்...
மணிக்கட்டு பார்ப்பார்க்கு
கிரிக்கெட்டு தன்னைத்
தாழ்த்த..
இல்லை எனக்கு மனம்
இதனை வாழ்த்த

Labels: , , , , ,

Thursday, April 24, 2008

நதியும்...நாட்டு கதியும்

நாடகம்..
நடத்துகின்றது
கர்நாடகம்

இடையூறப்பா
இந்த எடியூரப்பா

தேவை...
தமிழகத்திற்கு நீர் !
ஏன் இருக்கின்றீர்
தடையாய் நீர்?

மொண்டு குடித்தாலும்
கொண்டு குடித்தாலும்

தீராது எமது விடாய் !
தெரிந்துமா தண்ணீரை
திறந்து விடாய்?

மேலும்...
சந்திப்பாய் சாவை
என பேசியிருக்கிறாய்
"சிவாஜி ராவை"...
கட்ட வேண்டும் உமது
நாவை...

நமது துயர்
நீக்கும் எண்ணம்
அங்கில்லை...
மத்திய ஆட்சியில்
நமக்கா பங்கில்லை?

பாவேந்தன் எங்கே?
முழங்கட்டும்
”பொங்கு தமிழர்க்கு
இன்னல்” என
சங்கே !!

Monday, April 21, 2008

சரஸ்வதி சதகம் 11 - 20

11)
பன்னீர் வேண்டாம் பட்டாடை வேண்டாம்
நன்னீராடி வெண்ணீறணி நாளும் - பேச
நாச்சொல் வைத்தாள் நாமகளை வேண்ட
பாச்சொல் ஒன்று போதுமே

12)
சாவித்திரியாய் சாரதையாய் சர்வ ரூபிணியாய்
மேவியிருப்பாள் சிருங்கேரியில் காண் - அனைத்திலும்
ஆயாய் அவளே அமைய அறிந்திலதை
ஆயாய் நீயரு மனமே

13)
சர்வ வித்தையும் சரஸ்வதியில் தொடங்கினும்
கர்வமில்லா அடக்கம் காண் - அவளன்றி
ஆறறிவு பெற்றும் ஐந்தறிவாய் இருப்போம்
ஓரறிவால் ஓர்ந்து பார்

14)
ஓதாத சனமும் மீதான தனமும்
போதாத மனமும் பாழ்! - ஆங்கண்
மாதா பார்வை மிகுக்கின் மாசுமிகு
தீதானது சேரும் தீ

15)
நில்லாச் சிறப்பும் நிலையாச் செல்வமும்
கல்லாப் பிறப்பும் களைவாள் - வாணியவள்
பாதம் தொட்டு நெற்றியில் ஒற்றிட
காதம் போகும் பீடு

16)
கற்றதை மறந்து பெற்றதை துறந்து
உற்றதை இழந்து உழலோம்! - மதியினில்
மாற்றம் தரும் மாமகளாம் நாமகளின்
தோற்றம் காணப் பெறின்

17)
மா மதியாளே! மை விழியாளே!
கா வா நீ - உணர்ந்திட்டேன்
நா இன்றி நாளை இல்லை
தா பா நீ

18)
குறை கற்றும் நிறை கற்றதாய்
பறை தட்டும் பாமரா! - வேதா
இன்றி உனக்கு உண்டோ பதம்
நன்றி கூறிடு நிதம்

19)
ஓமம் வேண்டாம்; உருத்திராட்சம் வேண்டாம்
தூமம் வேண்டாம் தூமனிதர்க்கு! - நாமகளின்
நாமம் நாவில் நாட்டிட நாளும்
சேமம் தாமாய் சேருமே

20)
வெண்பட்டு மெய்யாள் ஈரிரண்டு கையாள்
கண்பட்டு போகும் கசடு - பண்பட்டு
வாழ்வார் வாணியை வாழ்த்தின் வாழ்வில்
தாழார் துயரால் தலை

Labels: , , , ,

Friday, April 18, 2008

ஈழம் - 02

நண்பர்களே !!
நிலம் மாறி
நடப்பட்ட
பண்பர்களே !!

ஏ தமிழ் ஈழமே !!
யாமறிவோம் உமது
நட்பின் ஆழமே !!

விடு
நாட்டுக்கு நடுவே
கோடு போடும்
அறிவினை !!
தேவையா மற்றொரு
பிரிவினை?

எங்க தேசம்
என இருந்த
வங்க தேசம்
இன்று எங்கே?
இக் கதி
வர வேண்டுமா
அங்கே ?!

1947..
இந்தியாவும் பாகிஸ்தானும்
மனப் போர் புரிந்தன !!
மறுத்துக் கொண்டே
பிரிந்தன..!!

நிலத்துக்குள் விழுந்தது
கோடு !!
இன்று வரை தொடர்கிறது
துப்பாக்கி சூடு !!

வெற்றி..
பிரித்துத் தள்ளுதலிலா ?
வேற்றுமையை
பொறுத்துக் கொள்ளுதலிலா ?

பேசவில்லையா
உன் துயரை நான்
மத்தியில்?
அந்த அளவுக்கா
எனக்கு புத்தியில்?

அவர்களுக்கு
இது தீர்க்கும்
உத்தியில் !!
காரணம் அடுத்த
பத்தியில் !!

தினப் பிரச்சினையாயினும்
உன்னுடையது
இனப் பிரச்சினை !!

தமிழனாய் அன்றி
தரணிக்கு பெளத்தம்
தந்த பெருமையில்
சொல்கிறேன்..

சிங்களவர் ஆயினும்
எங்களவர்
என நினைப்பவர்
நாங்கள் !!
இதற்காக எங்களை
வெறுக்கலாமா தாங்கள் ?!

உந்தன் கோரிக்கை
யாது?
உன் துயர்
உணராது உலகு
அதனை அறியாது !!

பட்டியலிடு அவற்றை !!
சுட்டிக் காட்டாதே
பிறரது தவற்றை !

பள்ளி ஏடுகள்
உரைக்க வேண்டும்
உன் விருத்தத்தை !!
உலக நாடுகள்
உணர வேண்டும்
உன் வருத்தத்தை !!

10 ஆண்டுகளுக்கு முன்பு
பார்க்கவோ பேசவோ
இல்லாதிருந்த நாடு
கோசவோ..

அங்கு அமைதி
வேரோடவில்லையா?
உலக நாடுகள் அதற்கு
போராடவில்லையா?

உலகோர் காதுகளில்
விழுகிறது உந்தன்
சுதந்திர ஒலிகள் !!
ஆனால்..
உன் முகமாய்
அவர்க்குத் தெரிவது
விடுதலைப் புலிகள் !!

கண்ணுக்கு கண் எனில்
உலகு ஆகும் குருடு !!
எனவே..
அகிம்சை வழியில்
உலகோர் மனத்தை
திருடு !!

உலக நாடுகள்
அறியாது திபத்தின்
துயரை !!
ஆயினும் அறியும்
ரிச்சர்ட் கியரை !!

சீனா..
இருந்திருக்கலாம்
இன்று வரை
திபத்தில் கோலோச்சி.
இனி இருக்க
விடுவாரா
நான்சி பெலோசி?!

உனது இன்றைய
அத்தியாவசியத் தேவை
உன் கருத்தை
உலகில் பறைசாற்றும்
தூதுவர் !!
அதன் பின்
எவர் உன்னோடு
மோதுவர் ?

அநீதி என
அவனி உணரின்
விதிக்கும் விடை
பொருளாதாரத் தடை !!
மூடும் கடை !!

பேசிப் பேசி
என்ன செய்தது
நார்வே?
வருகிறது எவர்க்கும்
சோர்வே !!

உனது பிரச்சினையை
உலக மயமாக்கு !!
உலகோரை
உன் வயமாக்கு !!

முயன்ற வரை
போராடு !!
போகாது பிரச்சினை
தீராது !!
ஆனால் நழுவாதே
உண்மையை ஓராது !!

சரித்திரம் இல்லை
சண்டையை சமாதானம்
அழைத்ததாய் !!
மண்ணில் மறம்
தழைத்ததாய் !!
அநீதியை அகிம்சை
விழைத்ததாய் !!

வேண்டாம் செரு !!
சற்று பொறு !!

விலக்கிடு வாளை !!
விளங்கும் நாளை !!

பிடிவாதம்
பயங்கரவாதம்
இரண்டும் விடு !!
சமத்துவத்துக்கான
அடித்தளத்தை
இன்றே நடு !!
ஆறலாம் நாட்பட்ட
வடு !!

எதற்கு வீண்
தர்க்கம்?
என்றும் நீ
எம் வர்க்கம் !!
என் கடைக்கண் என்றும்
உன் பக்கம் !!

என்றும்
என் தோள்
உன் துயர் தாங்கும் !!
மனது உந்தன்
மகிழ்ச்சிக்கு ஏங்கும் !!

ஒரு நாள்
உன் கண்ணீர்
துடைப்பேன் !
புதியதோர் உலகம்
படைப்பேன் !!

Labels: , , , , , ,

Thursday, April 17, 2008

ஈழம் - 01

இராவணன் முதலாய்
தொடங்கிய சொந்தம் !
இராஜ இராஜனால்
இறுகிய பந்தம் !!

சீதையின்
சிறை வீடு !!
சினத்தில் இன்று
தமிழகத்திற்கு விடுக்கிறது
முறையீடு !!

பொறுப்பில் இருக்கும்
கருப்புக் கண்ணாடியே !
கத்திக் கத்தி சோர்கிறது
என் நாடியே !!

எது உமக்கு
பெரிது....
இராமர் பாலமா ?
இடைவிடாது கேட்கும்
இனத்தார் ஓலமா ?

எனக்கு
எனதென்று சொல்லிட
தேசம் இல்லை !!
உனக்கு என்னவன்
எனச் சொல்லிட
நேசம் இல்லை !!

மல்லேசுரத்தில்
மலாய்த் தீவில்
தமிழன் மருண்டான்..
தமிழ் நாட்டில்
தமிழன் வெகுண்டான் !!

மட்டக்களப்பிலும்
தமிழன் அரளுகிறான் !
எத் தமிழன்
தமிழ் நாட்டில்
மிரளுகிறான் ?

நீ "அஞ்சுக்கு"
அஞ்சுகிறாய் !!
பிறகு ஏன்
"எம் இனம்"
என என்னை
கொஞ்சுகிறாய்?

ஏன் முழக்குகிறாய்
பாசச் சங்கு ?
எங்கேயும் இல்லை
எமது துயரில் உந்தன்
பங்கு !

எம் நாட்டு
அகதிகளா?
உம் நாட்டு
தொகுதிகளா?

எதன் மீது உனக்கு
பாசம்?
ஏன் இன்னும்
"தமிழ் தமிழ்" எனும்
வெளி வேசம் ?

எமது
போர் ஒன்று !
நமது
வேர் ஒன்று !!
இருக்கலாகாது
இதை மறுக்கும் சிந்தனை
வேறொன்று !!

உடைத்து விடு
எமது கை விலங்கை !!
உருவாகும் புதியதோர்
இலங்கை !!

வைக்கிறது ஈழம்
வழக்கை !!
வலிக்கிறது எனக்கு
வலக்கை !!

கொடுக்க வேண்டும்
கோட்டையில் உள்ளோர்
இதற்கு பதில் !!
இன்றைய தேதியில்
இன்றியமையாத பிரச்சினை
இருக்கலாமா
இதற்கு பதில்? !!

வந்து விழுந்த
வார்த்தை கண்டு
வெறிக்கிறேன்..
எனது கருத்தை
சிறிது விரிக்கிறேன் !!

-- தொடரும்

Labels: , , ,

மீரா ஹெர்பல்....

வெள்ளி..
கிழமைக்கு உண்டொரு
பழமை..

அப் பழமையுள்
ஒன்றியது
பெண்மை..

"சிக்காக" இல்லாது
சிக்காக இருக்கும்
கூந்தல்..
எண்ணெய் படிந்து
அதனை
அள்ளி முடிந்து..

காளையர் காண
கன்னியர் சூழ

நதி தீரம் சென்று
நெடு நேரம் நின்று

மாராப்பை மறைத்து
மச்சானின் வீராப்பை
உரைத்து

ஆற அமர
அளக பாரம் அலசி
பேசிடுவர் பெண்டிர்
பெருங் கதை !!
பேச முடியாது
ஒரு கவிதையுள்
இதை !!

இன்றோ..
காவிரியில்
நீர் இல்லை !!
எனவே அங்கு
நீ இல்லை !!

கூடவே காலமும் மாற..
சமுதாயத்துள் உன்
நிலை ஏற..

சிறு மஞ்சளும்
செம்பருத்தியும்
சீயக்காயும்
சேர்க்க
ஆகிறது நேரம்..
ஆனது உனக்கு அது
தூரம்...
இருந்தும் தேவைப்படுகிறது
வெள்ளி தோறும்
தலைக்கு ஈரம் !!

தேகத்தில் கூடுகிறது
வேகம் !!
இருப்பினும்
இறங்கவில்லை
இளங்காலை பருவத்து
மோகம்...

33க்கு
போராடும் பெண்ணே!!
போராடு !!
மீரா ஹெர்பல் கொண்டு
நீராடு பெண்ணே
நீராடு !!

Unauthorized copying/distribution/reproduction of this poem is strictly prohibited.
This was jointly developed by Sankari Venkittu and Ganesh Venkittu
who reserve all ownership rights

Labels: , ,

Wednesday, April 16, 2008

கியோட்டோ....

சாலைப் புகையும்
ஆலைப் புகையும்
சுவாசிப்பின்..

சுகம் காணுமோ
சுவாசப் பையும்?
சுவாசம் சந்தேகமின்றி
நையும் !!

இது..
ஐ. நா வின் ஒருமித்த
கூற்று !
இருக்க முடியாது
இதற்கு மாற்று !!

போதாததற்கு
பருவ நிலை மாற்றம்
தாறுமாறாய்
தட்பவெட்ப ஏற்றம்

ஓசோன் படையுள்
பொத்தல்..
ஊதாக் கதிர்
ஊடுருவி உடம்பில்
ஒத்தல்...

என
எங்கும் காண முடிகிறது
கத்தல் !!

கியோட்டோ ஒப்பந்தம்..
கையெழுத்தான முதலே
தீப்பந்தம் !!

கண்காணிப்பு.
கருத்துப் பரிமாற்றம்..
என் தொழில்
இதுவே என
இந்தியா நழுவ..

அமெரிக்காவும்
"ஒப்புக்கு இந்த
ஒப்பந்தம்" !!
ஊர்ச்சிதம் செய்ய
எனக்கில்லை நிர்ப்பந்தம் !!
என
கை கழுவ..

·போட்டோவுடன் நிற்கிறது
கியோட்டோ..
தடைகளுக்கு காரணம்
தம் தம் நாடுகளில்
தலைவர்கள் எதிர்பார்க்கும்
அரசியல் ஓட்டோ?

தேவை..
பாழாகும் பயிர்கள்
பாதிக்கும் உயிர்கள்
மீது பரிவு !!
அதற்கு அவசியம்
சுற்றுச் சூழல்
குறித்த அறிவு !!

Labels: , , , , ,

Monday, April 14, 2008

காவிரி....

ஏற்படுத்தியிருக்கிறது
ஏக பரபரப்புடன்
ஏமாற்றம் கூட்டும்
சிக்கல்
ஹோகேனக்கல்

தண்ணீரை
தன் நீராய்
கர்நாடகம் பார்க்க...
முயற்சித்தும்
முடியவில்லை
முனைவோரால்
இப் பிரச்சினை
தீர்க்க...

அத் தண்ணீரின் மூலம்
தலைக் காவிரி !!
தமிழகமோ தண்ணீரின்றி
தலை விரி !!

உழவனுக்கு இதனால்
காயம் !!
ஆயினும் பூசப்பட்டிருக்கிறது
அரசியல் சாயம் !!

தேவை மக்கள்
நலன்
பேசிப் பேசி என்ன
பலன்?..

என..
இடது சாரி
உருக..
இதனூடே
மானாவாரி
கருக...

வாடுகிறான்
கிராம வாசி !
ஏறுகிறது
விலை வாசி !!

தொன்று தொட்டு
தமிழகத்திற்கு
தண்ணீர் பிரச்சினை
தருகிறது விக்கல்
விட்டு விட்டு !
அரசியல் கட்சிகள்
அனுகூலத்தை
ஆராய வேண்டும்
ஆதாயத்தை
விட்டுவிட்டு !!

Labels: , , , , ,

Friday, April 11, 2008

திபெத்

buddha

ஆசை..
ஆளைக் கொல்லும் துயரின்
ஆதி !
இதுவே பெளத்த மத
நீதி !!

ஆசையற்ற சிரம்
வாழ்வின் வரம் !!

என் வழி
எண் வழி
என...

எல்லாவற்றையும்
துறந்தவன்
புத்தன் !
பரிசுத்தன்..

அவனது மதத்தார்க்குள்
இன்று அடிதடி !!
இறுக்கும் அளவுக்கு
கெடுபிடி !!

ஆம்..
கேட்கிறது திபெத்துள்
சுதந்திர கானம் !!
கொதிக்கிறது அக்கானத்தால்
சீனம் !!

பிரச்சினையின் மையம்
தேசிய எல்லை !!
சீனாவின் வாதமோ..
இது எனதென்னும் வரை
இராது தொல்லை !!

பிரச்சினை விரிகிறது !!
லாசா எரிகிறது !!

தேவை..
மற்றொரு போதி மரம் !!
மறைய வேண்டும்
மண்ணிலுள்ளோர் மனதுள்
"எனது எனது" என்னும்
சுரம் !!

Labels: , , , ,

Tuesday, April 08, 2008

சோறு....ஊறு

powar
picture courtesy: The Hindu

"உருவு கண்டு எள்ளாமை வேண்டும்"
வள்ளுவன் வாக்கு !!
உணரின் உயரும் நோக்கு !!

ஆயினும்...
பொது வாழ்வில்
சிலருக்கு வேண்டும்
உடல் மீது கவனம் !!
இல்லையேல்
இளிக்கும் புவனம் !!

வியர்க்கிறது என்
புருவம் !!
வியர்க்க வைத்தது
புகைப்படத்தில் வலப் பக்கம்
உள்ள உருவம் !!

ரொமேஷ் பொவார்..
தலைக்கு மேல் அவருக்கு
தொங்குகிறது கயிறு !!
அதற்கு மேலாக
தொங்குகிறது
அவர் வயிறு !!

ஆடுகளத்தில்
ஆடுவோர்க்கு
தேவை வேகம் !!
ஒத்துழைக்க வேண்டும் அதற்கு
தேகம் !!

வேகம் இருப்பின்
விளையாட்டில்
விரைவாய் விழும்
விக்கெட்டும் !!
விழின் வீரர் புகழ்
திக்கெட்டும் !!

மொத்தத்தில்..
பொவார் பந்துக்கு
வேண்டும் சுழற்சி !
உடம்புக்கு வேண்டும்
உடற்பயிற்சி !!