வாணி...
1)
வெண் கமலத்தே வீணையோடு வீற்றவளை
வெண்பாவிற்கு கேட்டேன் வழி - தண்
கண் சிமிட்டி காட்டினள் உபாயம்
எண்ணியதும் வந்தது பண்.
2)
ஏணியின்றி இல்லை ஏறுதற்கு உதவி
தோணியன்றில்லை நதி தாண்டுதல் - கழனி
காணியின்றி இல்லை நல் வாழ்வோ
வாணியின்றி இல்லை யாமே
3)
சொல்லை தருபவளுக்கு சுடர் ஏற்ற
இல்லை கூத்தனூரன்றி கோவில் - ஆதலின்
உளமே ஆலயமாய் வளமாய் வாணியை
வாயார வாழ்த்திப் பாடு
4)
நான்முகனின் இல்லாள் நாரதனை ஈன்றாள்
நயத்தகு சொல்லாள்; நல்லாள் - அறிவிலி
கல்லாரைத் தள்ளாள்; பொல்லாரைப் பேணாள்
கலைமகளை போற்றிப் பணி
5)
உயர் கலைகள் எட்டெட்டின் பிறப்பிடம்
துயர் கல்லாமையின் இறப்பிடம் - ஆனிப்
பொன் குணங்களின் ஒளிர்விடம் ஆங்கண்
என்றும் வீற்றிருப்பாள் வாணி
6)
மகதி வீணையோனின் தாய் கல்லா
அகதிகளை காப்பாள் நலமாய் - நெஞ்சச்
சகதி களையும் சரஸ்வதியின் புகழை
நற்கதி அடைய நினை
7)
சொற்புகழ் தருபவள் அன்னத்தில் வருபவள்
கற்பு நெறி மிக்கவள் - கலைவாணியாள்
நற்புகழை நாளும் நாவார நன்னெறியுடன்
தற்புகழை விடுத்துப் பாடு
8)
உற்றவன் உலகத்தை உருவாக்குவான் தான்
பெற்றவன் கலகத்தை உருவாக்குவான் - கச்சபீ
யாழ் மீட்டுவாளை நெஞ்சார நினைக்கின்
வாழ்வின் முரண் விளங்கிடும்
9)
ஞானத்தின் முதல்வி நாமகளின் வாரிசோ
கானத்தின் முதல்வன் காணீர்! - வானே
போற்றும் வாகீசுவரியை பூசிக்க தானே
தோற்றுப் போகும் துயர்
10)
நயத்தகு நாதத்தில் புத்தகத்தில் பதத்தில்
வியத்தகு வேதத்தில் வீற்றவள் - மனச்
சுமை களையும் சுகமருந்தாம் கலைமகளை
இமைப்பொழுதும் நினைவில் இருத்து
11)
பன்னீர் வேண்டாம் பட்டாடை வேண்டாம்
நன்னீராடி வெண்ணீறணி நாளும் - பேச
நாச்சொல் வைத்தாள் நாமகளை வேண்டிட
பாச்சொல் ஒன்று போதுமே
12)
சாவித்திரியாய் சரஸ்வதியாய் காயத்திரியாய் ஜகதீஸ்வரியாய்
மேவியிருப்பாள் சிருங்கேரியில் காண் - அனைத்திலும்
ஆயாய் அவளே அமைந்திருக்க அறிந்திலதை
ஆயாய் நீ அருமனமே
Labels: magathi, saraswathi, sringeri, vagatheeswari, vani
1 Comments:
Coming to ur blog after a long time...
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home