Tuesday, March 31, 2009

யாமறிந்த மொழிகளிலே...... - 06

..
..
”ஆங்கிலம் உமக்கு
அறவே வாராதோ” என
அனேகருக்கு உண்டு நினைப்பு !!
அந்த அளவு அவருக்கு
அம்மொழியோடு பிணைப்பு !!

கேட்க கன்னடம் போல் இருக்கும் !!
கேட்கக் கேட்க காது இனிக்கும் !!

அது துளு மொழி !!
அந்தோ!
அறிய முடியாது
அவனி அதனை
எழுதிய வரி வழி !!

அன்பர்களே!
அம்மொழிக்கு எழுத்து வடிவம்
அறவே இல்லை !!
வாய் வார்த்தையின்றி
வையம் அறிய முடியாது
வடிவான அதன் சொல்லை !!

ஏற்றுவாரின்றி அழிந்ததா?
எழுதுவாரின்றி ஒழிந்ததா?

நம்மொழியும் அவ்வழி போகுமா ?
நமக்கே அன்னியமாய் ஆகுமா ?

அடுத்த முறை தேவையின்றி
அன்னிய மொழி பேசுங்கால்
அக் கேள்வியால்

உரக்கக் கேளுங்கள்
உன்னதமான தமிழை
உதாசீனப்படுத்துவார் தம்மை !!
உறைக்கட்டும் அவர்க்கு
உயர்ந்த நம்மொழியின் செம்மை !!

“அங்கன யாரும் சொல்லுதியா?
இங்கன ஒரு பய சொல்ல மாட்டேங்கான்”

“ரமணா”வில் வரும்
ரம்மியமான இவ்வசனம்

பலரை வசீகரித்தது !!
புகழை சேகரித்தது !!

வட்டாரத் தமிழின்
வற்றாச் சுவையுடைய
வசனத்தால் நெகிழ்ந்தார்
வலிய உரைப்பர்

”நெடு நாள் கடந்தும்
நெல்லைத் தமிழ் கேட்குங்கால்
நெஞ்சு நிறையுதென்று” !!

அறிவரோ அவர்
அத்தகைய தமிழ்
ஆங்காங்கே மறையுதென்று ?

”எத் திசையும் புகழ் மணக்க
இருந்த பெரும் தமிழ் அணங்கே”....
இருக்கின்றாயா
இன்னமும் நீ இங்கே ??
தமிழர் உன்னை
தமிழ்த் தாய் வாழ்த்தன்றி
இனி காண்பது எங்கே ??

-- தொடரும். . .

Labels: , , ,

Friday, March 27, 2009

யாமறிந்த மொழிகளிலே...... - 05

“ஆயிரம் கரங்கள் நீட்டி
அணைக்கின்ற தாயே போற்றி
அருள் பொங்கும் முகத்தைக் காட்டி
இருள் நீக்கம் தந்தாய் போற்றி “

அத்தகு “இறைச் செய்யுளுள்”
அமைதி உங்கட்கு
அதிகம் வாய்ப்பதில்லையா ?
அதையறியாது நீவிர் பேசுதல்
அறிவாளரை ஏய்ப்பதில்லையா ?

தெவிட்டாது தமிழ்
தெளியச் சொல்லிடின் என்றேன் !!
தனித்து விடப்பட்ட
தமிழின் பக்கம் நின்றேன் !!

இது ஒரு புறம் !!
இதற்குண்டு மறுபுறம் !!

தமிழ் தமிழ் என்றவுடன்
“தி.மு.க” வா எனப்படுகிறேன் !!
அந்த அளவுக்கு மொழிப்பற்று
அரசியலானது கண்டு
அவதியின் உச்சம் தொடுகிறேன் !!

மொழிப் பற்றும்
மொழி வெறியும்

வேறு வேறு !!
உலகோரை வேண்டுகிறேன்
உடனிதை உணருமாறு !!

அலுவல் முன்னிட்டு
அண்டை மாநிலத்து பிரபலங்கள்
அவ்வப்போது தமிழகத்துக்கு
அழகு மிளிர வருகையில்...

மாத்திரை இலக்கணம் இறந்து
மெல்லினம் வல்லினம் மறந்து

”ஷெண்ணை என்கு
ரிம்பப் பிதிக்கும் “ என..

நாக்கை நாலு முழம் நீட்டி
ஓரிரு எழுத்தைக் கூட்டி

ஒய்யாரமாய் தமிழில்
ஒசிய இருவார்த்தை பேசுவர் !!

அவர் அயலார் !!
அழகுத் தமிழை
அழகோடு பேச இயலார் !!

தமிழரே தமிழை
தாறுமாறாய் பேசினால்
தரக்குறைவென்று கூசினால்

யாரே புன்னகை வீசுவர் ?!
நாட்டார் நம்மையன்றோ ஏசுவர் ?

இவற்றுக்கு அப்பாற்பட்டு
இலக்கண சுத்தமாய்
இரண்டொருவர் பேசிடின்

”கலைஞானி”யா
”கவிப்பேரரசா” என்பர் !!

வாய்க்கு வந்தபடி பேசும்
வக்கில்லா வம்பர் !!

”மோர்” எனப் பெயரிட்ட
மோரில்லா நவீன அங்காடிகளில்
சிற்றுண்டி உணவகங்களில்
சீலைக் கடைகளில்

தமிழில் பேச விரும்பி
தமிழ் பேசுவீர்களா? என
தமியேன் நான் கேட்டால்

-- தொடரும். . .

Labels: , ,

Wednesday, March 25, 2009

யாமறிந்த மொழிகளிலே......- 04

கறிகாய்க் கடையில்
காய்கறி “ஃபிரெஷ்”ஆ எனக்
கேட்கிறோம் !!
எவ்வளவு மதிப்பெண் என்பதற்கு
எவ்வளவு “மார்க்” என்கிறோம் ?

ஏதிலார் காலத்து
ஏகாதிபத்திய ஆதிக்கத்தில்
ஏற்பில்லாது நாம்
ஏற்ற மொழி

ஏரார்ந்த நம் மொழியூடே
ஏகமாய் இருக்கிறது ஊடுருவி !
புவி மணக்கும் நாற்றினிடை
புகலாமோ புல்லுருவி ?!

பிற மொழியினரான
பிரகாஷ் ராஜ் பேசுமளவு

நம்மவர் பேசுவதில்லை
நம் ”தொன்” மொழியை !!
நினைக்கும் போதே
நனைக்கிறது ஈரம்
என் கண் விழியை !!

அழுத்தம் திருத்தமாக
அழகுத் தமிழில்
அனேக வார்த்தையை பேச

மக்கள் அஞ்சுகின்றனரா ?!
மாற்று மொழியே
மகத்தான மொழியென்று
மதியிழந்து துஞ்சுகின்றனரா ?

பிறிதொருவரை பார்க்குங்கால்
“ஹாய்” என்கிறோம் !!
போய் வருங்கால்
“Bye” என்கிறோம் !!

வாய் நிறைய
வாசலில் வந்தாரை
வாரீர் என்றோ...
செல்வாரை
“சென்று வாரீர்” என்றோ...

நாவார பேசுவதில்லை நாம் !!
நம் மொழியை தாழ்த்துவதில்
நமக்கிணை நாம் தாம் !!

“ததோ யுத்தப் பரிஸ்ராந்தம்”
ஆனந்திக்க வைக்கிறது
ஆதித்ய ஹ்ருதயம் !!
அகிலத்தார்க்கு அது சொல்லும்
அழகான கதிரவனின் உதயம் !!

சமஸ்கிருதத்தில் "ஸ்லோகம்"
சலனமின்றி படிக்குங்கால்
சந்தேகமற தெளிவு பிறக்கிறது !!
சட்டென்று நா சிறக்கிறது !!

தமிழில் சொல்லுங்கால்
தமியேன் மனம்
தறிகெட்டு ஓடுகிறது !!
நா மட்டும் கடவுளின்
நாமத்தை பாடுகிறது !!

சிறிது நாள் முன்பிதனை
சிரித்துச் சொன்னாள் என்னிடம்
சிந்தியாது ஒரு தமிழ்ப் பெண் !!
சிவந்தது என் கண் !!

-- தொடரும். . .

Labels: ,

Monday, March 23, 2009

யாமறிந்த மொழிகளிலே......- 03

”உன்னை எங்கு காணினும்
உடனே திரும்புகிறேன் !!
உன்னுடன் கூட விரும்புகிறேன்” !!

” இன்னமும் இருக்கிறது
இளமையாய் இரவு !!
இங்கு இனி தொடங்கட்டும்
இனிதே நம் உறவு !!”

கடுங் கொச்சையென்று
கண் மூடு நேரத்தில்
காதைப் பொத்தாதீர் !!
காச்சு மூச்சென்று கத்தாதீர் !!

இவ் வசனம்
இருந்தது ஆங்கிலத்தில்
”பச்சைக் கிளி முத்துச் சரத்தில்” !!
இப் படத்துள்
இது தேவையா எனும்
இயல்பான சிந்தனை இல்லை
இயக்குனர் சிரத்தில் !!

தமிழில் அதனைச் சொல்ல
தமிழர் பண்பாடு அவரை
தடுக்கிறது !!
ஆயினும் ஆங்கண் அவருக்கு
ஆங்கிலம் கை கொடுக்கிறது !!

நமது மொழியும்
நமது பண்பாடும்
பின்னிப் பிணைந்தவை !!
இயல்பாக இணைந்தவை !!

இது எம்
இனிய தமிழின் தோல்வியா ?
ஆங்கிலத்தின் வெற்றியா ?

மொத்தத்தில்
வார்த்தைக்கு மட்டும் தமிழராக
வாக்கில் சிறிதும் தமிழற்ற

வக்கற்ற ஈனனோ
வசுதேவ் மேனனோ

தமிழில் சொல்லக்கூடியதை
தங்கு தடையின்றி
தமிழில் சொல்வதில்லை !!
தமிழில் சொல்ல முடியாததை
தமிழில்லா மொழியில்
தயக்கமின்றி சொல்வதால்
தமிழோ தமிழரோ
தவிடளவும் வெல்வதில்லை !

சிறுவரை மட்டுமன்றி
”சிகரங்களையும்” சில சமயம்
சிக்கல்கள் தொடுகின்றன !!

தமிழ் நாட்டில்
தமிழர் ஒருவருக்கு
தமிழ் இசையமைப்பாளர் சங்கம்
தலைமை தாங்கி நடத்திய
தகவான பாரட்டு விழாவில்

ஆங்கிலத்தில் அமைகிறது
கே. பி. யின் உரை !!
தட்டிக்கேட்க முடியுமா
“தங்கமே தமிழுக்கில்லை
தட்டுப்பாடு “ எனச் சொல்லி
தமிழ்ப் படத்திற்கு
“டூயட்” எனப் பெயரிட்டவரை ?

“கரெக்ட்” பண்ணுதல்
“டஃப்” கொடுத்தல்
”பீட்டர்” விடுதல் !

” பிக் அப்”
“பில்ட் அப்”

கல்லூரி மாணவர்தம்
கலைக் கருவூலத்துள் விளைந்த
காலத்தால் அழியாச் சொற்கள் !!
காட்டுவர் அனேகர் பற்கள் !!

வழக்குத் தமிழிலும் இவ்வாறு
வகை வகையாய் காண்கிறேன்
வார்த்தைக் கலப்பை !!
மாற்றுகின்றன அவை
மன்னுபுகழ் தமிழின் வனப்பை !!

- தொடரும். . .

Labels: , , , , , , , , ,

Thursday, March 19, 2009

யாமறிந்த மொழிகளிலே...... - 02

..
..
அல்லும் ஆராய்ந்து
அங்குமிங்கும் அலைந்து..

அயராது அனேகவற்றை
அள்ளிக் குவிக்கிறான் !!

சிறிதவற்றை சுகித்ததும்
சிரத்துள் தங்கிய
சிலாக்கியமான சிலவற்றை

சிரமம் தள்ளுதல் என
சிந்தித்து தினமும்
சிக்கித் தவிக்கிறான் !!

அழியாத அவை
அவனது அடையாளங்கள் !!
அனேக தினம்
அதன் சுகத்தை
அனுபவித்துள்ளன
அவனது ரத்த நாளங்கள் !!

தேன் தமிழ் மொழியும்
தென்னிந்திய இசையும்

என் அளவில்
என்றும் இருந்ததில்லை எட்டியாய் !!
இன்று வரை பிடித்திருக்கிறேன்
இன்னமும் இவற்றைக் கெட்டியாய் !!

தில்ரூபா
தலாஷ்
ஃபன்னா
பாரீஷ்
இஷ்க்
ஜபர்தஸ்த்...

அரபுச் சொற்களை
அங்குமிங்கும் ஏந்தியது
இந்தி மொழி !!
இதுவல்ல நம் வழி !!

ஆந்திர மொழியிலும்
ஆதிக்கமுண்டு சமஸ்கிருதத்திற்கு !

நம் மொழியில்
நம்மிடையே உண்டு
நமது வார்த்தை
நனிசிறந்த பல பதத்திற்கு !!

இன்று நம் மொழி
இலக்கு தவறி இருக்கிறது !!
“இங்கிலீஷ்” பேசுவதென்பது
இன்றியமையாதது என்றெண்ணி

நம் மண்ணே
நம் மொழி பேச மறுக்கிறது !!

எடுத்துச் சொல்கிறேன் சிலதை
எடுத்துக் காட்டாக !!
எப்படிப் பேசலாம்
என என்னை
ஏசாதீர் கூட்டாக !!

”வாரணம் ஆயிரம்” என
வரி விலக்குக்கு ஒப்பி
வசையினின்றி தப்பி....

படத்தின் தலைப்பு மட்டும்
பாவை ஆண்டாளது
பாட்டின் முதலடி !!

ஆயினும் திரைப்படம் முழுதும்
ஆங்கில மொழியின்
ஆதிக்க நெடி !!

-- தொடரும்

Labels: , , , ,

Tuesday, March 17, 2009

யாமறிந்த மொழிகளிலே......- 01

உண்ணும் உணவோ
எண்ணும் கனவோ

ஒருநாளும்
ஒரே போல் இருப்பதில்லை !!
அவ்வாறு அமையின்
அனேகர் பொறுப்பதில்லை !!

நாக்கோ
மூக்கோ

வாக்கோ
நோக்கோ

வயதுக்கு வயது மாறுகிறது !!
வரலாறும் அதையே கூறுகிறது !!

புத்தனுக்கு பொலிவு வாழ்க்கை
புதிதாய் ஒருநாள் கசந்தது !!

அதகளத்தில் அடிக்கொருதரம்
அகோர தாண்டவமாடிய
அரசன் அசோகனுக்கு
அமைதி ஒருநாள் உசந்தது !!

கோனுக்கு எப்படியோ
குடிக்கும் அப்படியே !!

சிறிய வயதில்
சிணுங்க வைத்த
சிவக்கச் சுட்ட அப்பளம்..

சிறிது வயதானவுடன்
சிறுகச் சிறுக இனிக்கிறது....
நாட்பட நாட்பட
நார்த்தையும் நாவில்
நாளும் தனிக்கிறது !!

நாத வயப்பட்டு
நான்கு மணிக்கு எழுந்து
சலனமின்றி நாம் கேட்ட
சல நாட்டை...

நாற்பது வயதில்
நமுத்து விடுகிறது !!

இதுவரை கேட்டிராத
இன்ன பிற இசை
இமைக்கும் வேளையில்
இழுத்து விடுகிறது !!

மாறாதிருக்க நாம்
மறியல்ல !!
மாறாதிருப்பதும் நெறியல்ல !!

கடந்த பாதையை நினைந்து
கணமும் மெனக்கெடவா?
கண் முன் விரியும்
கண்டிராப் பாதையை
கணக்கிடவா ?

என மனிதன்
என்றும் அலை பாய்கிறான் !!
எண்ணி எண்ணியே
எண்ணற்ற நாள் தேய்கிறான் !!

நிலம் துறந்து
பலம் மறந்து

என்றென்றோ
எங்கெங்கோ

எப்படி எப்படியோ
எதை எதையோ

ஏகமனதாய் இனி
ஏதுவானது இதுவென
ஏற்கும் மனிதன்..

-- தொடரும்