Tuesday, September 30, 2008

கொஞ்சம் காதல்...கொஞ்சம் சாலம்..

tptm0

தவறான ஒரு விபத்தில்
தந்தை தாய் இழந்து
தவிக்கும் பிஞ்சுகள்...

தம் பெற்றோரது
தகவை காணாது
தத்தெடுப்பார் அனைவரிடத்தும்
தடுமாறிடும் நெஞ்சுகள்..

அந்நேரத்தில்
அதீதமான ஒரு தீர்ப்பு...
அவ்விபத்தை விளைவித்தவன்
அவர்களுக்கு பொறுப்பென...
அவர்களும் வருகின்றனர்
நமக்கென்ன இதில் மறுப்பென....

வாட்டத்தோடு தேவன்
வானத்தினின்று காண்கிறான்
வாரிசுகள் வந்த இடம்
“ரண களம்” ஆவதை !!
வானத்தினின்று அனுப்புகிறான்
வடிவான ஒரு தேவதை !!

நடப்பது என்ன ?
நிகழ்வது என்ன ?

thoda pyaar thoda magic

இது தான்
“தோடா பியார் தோடா மாஜிக்”
தேடாதீர் தேவையற்ற லாஜிக்...

நம் மொழி
நம் இனம் எனும்
இறுமாப்பு கொண்டோம்..
இருப்பினும்
இத்துணை நாள்
தமிழ்த் திரையில்
யாது கண்டோம் ?

முன்னோக்கி வரும் குண்டை
பின்னோக்கி நின்று

கத்தியால் துளைத்தல்...
கத்தியை கையால் வளைத்தல்...

என...

படத்துக்குப் படம்
பழைய கஞ்சி...
படைப்பாளியும்
படைத்ததையே படைக்கிறார்
பணத்திற்கு அஞ்சி....

நல்ல இயக்குநரிடமும்
நல்லதைச் சொல்லும் கலையில்லை !!
நடிகர் முகத்திலோ களையில்லை!!

செலவிடுகிறார் தயாரிப்பாளர்
கோடி கோடியாக..
செல்ல முடிவதில்லை
செல்லங்களை கூட்டிக் கொண்டு
ஜோடி ஜோடியாக...

காரணம்...
நடனத்தில் கிளுகிளுப்பு...
அரசியல் புளுபுளுப்பு..

அமைதியின்மை...
அசுரத் தன்மை...

ஒளியற்ற படமெடுப்பு...
ஒன்றுக்கும் உதவாத
படத் தொகுப்பு....

நடைமுறை வாழ்வென்று
காட்சிக்கு காட்சி க்ரூரம்...
நல்ல படைப்புகளுக்கும்
நம் இயக்குநருக்கும்
வெகு தூரம்....

படத்துக்குப் படம்
நடிகர் கவனமெல்லாம்
“சிக்ஸ் பேக்” வயிற்றுக்கு...
தமிழ்த் திரையோ
தடுக்கித் தடுக்கி
செல்கிறது கயிற்றுக்கு....

நடிப்பன்றி அனைத்தையும்
காட்டியதால்...
புகழ்க் கொடி நாட்டியதால்...

பில்லா தொடங்கி
கல்லா கட்டும்...

புகழேணியில் நயன்...
நாட்டம் ”பிறிதொன்றில்”
நாளும் இருப்பின்
நாட்டிற்கு என்ன பயன் ?

குருடியாக ஒரு படத்தில்...
குழந்தைகள் மனம்
வருடியாக இப்படத்தில்..

tptm2

என ஒருத்தி
ஏறுகின்றாள் நாளும்
புகழ் ஏணி !!
இந்தித் திரையில்
அவள் என்றென்றும் ”ராணி” !!

கதையில் வளமில்லை....
நடிக்கத் தேவையான
களமில்லை என...

தகத் தகாயமான இப்படம்
தனக்கு வந்திருப்பினும்
தமிழ் நாட்டு த்ரிஷா
தட்டிக் கழித்திருப்பார்...

”தசாவதாரம்” தொடங்கி
தருக்கேறிய சிலரோ
தன் முகத்தையே
முன்னிறுத்தி விழித்திருப்பார்....

உடம்பு புல்லுருவி....
படம் குருவி..

இனிதென்ன செய்தார் அவர்
இது நாள் வரை
தோள் பட்டையினின்று
தோதாய் பீடி உருவி ??.

பழைய பாட்டை
புதுமைப் படுத்துதல்...
பெரிதும் ரசிகரை
பாடாய்ப் படுத்துதல்...

என...
போகிறது தமிழ்த் திரை
போக்கற்று....
போதும் வாடுகிறான் ரசிகன்
வாக்கற்று....

பிளாக்
ரங் தே பசந்தி
தாரே சமீன் பர்
தோடா பியார் தோடா மாஜிக்

என..
இந்தித் திரை ....
இன்று வரை...

படிப் படியாக
முன்னேற்றம் நோக்கி
மாறு சிந்தையோடு மாறுகிறது !!
புகழ் உச்சியில் ஏறுகிறது !!

நம் படமும் முன்னேறுமென
நானும் நாளுக்கு நாள்
ஏங்குகிறேன் !!
மூச்சு வாங்குகிறேன் !!

தீர்க்கமான கதையமைப்பு...
திருத்தமான வடிவமைப்பு..
நவீனமான உடையமைப்பு...

ரம்மியமான பின்னிசை....
ரசிக்க வைக்கும் மெல்லிசை..

என இப்படம்
பார்ப்பாரை மேலும் மேலும்
பார்க்கத் தூண்டும் !!
எடுத்தால் இது போல்
படம் எடுக்க வேண்டும் !!

ஒன்று சொல்கிறேன் நிறைவாக..
அதி விரைவாக....

நல்லதையே நினைத்து
நல்லதையே நடத்தும்
நல்ல கடவுள்
நமக்கேன் செய்தார் கெட்டதை...?
நம்ப முடியவில்லையே
நம்மால் இயன்றும்
நடந்து விட்டதை ?

இப்படத்தில் வரும்
இயல்பான இவ் வசனம்...
என் மகவிற்கு ஏற்படுத்திய
எண்ணிலடங்கா விசனம்...

தமிழ் திரைப்படங்களில்
தவிடளவும் இல்லை !!
அது வரை
தமிழ்ப் பட சுவரொட்டி பார்த்து
தூக்குவேன் நான் கல்லை !!

Labels: , , , , , , ,

Thursday, September 25, 2008

செம்மங்குடி....

IMG_2785

அந்தி வானம்..
அமைதியான நேரம்...
அவ்வப்போது மழைத்துளி..
அகதமியின் வாசல்...

முன்னாள் ஜனாதிபதி
முக்கிய விருந்தினராக
வருகை !
பலரிடம்
பவ்யமாய் கட்டப்பட்ட
இரு கை !!

பாதுகாப்பு ஏற்பாடுகள்
பலமாக முடுக்கப்பட்டதால்...
வளாகத்துள்
வண்டி நிறுத்தம் தடுக்கப்பட்டதால்..

வாகனத்தை தள்ளி நிறுத்தி..
கண்டவரும் காணா வண்ணம்
”காது கேட்கும் கருவி” பொருத்தி..

அழைப்பிதழை அணைத்தவாறு..
அடிக்கொருதரம் மணிக்கட்டை
அவசர அவசரமாய் பார்த்தவாறு

அனேகர் வாயில் கடக்க...
அரங்கத்தின் கதவு நோக்கி
அதிவிரைவாய் நடக்க...

”அன்னபூர்ணே விசாலாட்சி” என
அட்சர சுத்தமாக
காதில் சாமா...
ஒலித்தகடில் ஒலித்தவர்
ஒப்பாரில்லா
செம்மங்குடி மாமா...

IMG_2790

அன்று
அவரது 100வது
பிறந்த தினம் !!
அவரைக் கொண்டாட
அவரது சிஷ்யர்களிடம்
அமைந்திருக்கிறது இன்றும்
சிறந்த மனம் !!

”ஷீணமை திருகா” முகாரியும்
”ஸ்ரீகாளஹஸ்தித” ஹுசேனியும்
”தெலியலேலு ராமா” தேணுகாவும்

செம்மங்குடியின் திறம் பேசும் !!
அமைதியாக பாட வேண்டியதை
அசுர கதியில் பாடுவாரை
அவை ஏசும் !!

ரீதிகெளளை என்றால்
தமிழகம் முழுதும்
தங்கு தடையின்றி இன்று
”கண்கள் இரண்டால்”
ஜேம்ஸ் வசந்தன் முகம் !!
தருமோ அது செம்மங்குடியின்
”த்வைதமு சுகமா” சுகம்?

உச்சஸ்தாயி போகாத
உடைந்த குரலால்……
உள்மூச்சு நிற்கும் வரை
உன்னிப்பாய் “நோட்ஸ்” எழுதிய
விரலால்…….

காசுக்காக இசை போதிக்கா
கண்ணியவான்...
காஞ்சிப் பெரியவரே
“சங்கீத தாத்தா” என போற்றிய
புண்ணியவான்...

சதாசிவத்திடம் சீட்டில்
எம். எஸ்ஸிடம் பாட்டில்

எல்லை கடந்த நெருக்கம்....
அவரவர் மறைவின் போதும்
அவருக்கிருந்த உருக்கம்...

மாறும் காலத்துக்கு ஒப்பி
மாறிய அவரது தொப்பி....

சிறியவர் பெரியவர் எனாது
சிஷ்யர்களிடம் அவர்க்கிருந்த
சினேகம்..
சிரமம் குரலில் இருப்பினும்
சிதையேறும் வரை
சிறப்பாய் ஒத்துழைத்த தேகம்...

நீறணிந்த முகத்தின் பொலிவு..
நீண்ட ப்ருகாக்களின் வலிவு....

கைத்தடி
கண்ணாடி என
அவர்க்கே உரித்தான
அடையாளக் குறிகள்...
அந்திமக் காலம் வரை
அவர்க்கிருந்த
அற வாழ்க்கை நெறிகள்...

அச் சுரத்தை
அப்படிப் போடு..
அவ் வரியை
அப்படிப் பாடு...

என.....

அறிவுரையின் ஊடே
அவ்வப்போது தலையெடுக்கும்
தஞ்சாவூர் நையாண்டித் தனம்..
தனக்கென வாழாது
தரணிக்கு வாழ்ந்த
தயாள மனம்....

வாய்க்கு நாட்டை
கைக்கு ராட்டை....

என....

காந்தீயக் கொள்கையில் பிடிப்பு...
கதரிலும்
கடைப்பிடித்த எளிமையிலும்
அவர் கொண்டிருந்த துடிப்பு...

என
ஒளிச் சித்திரம்
ஒளிர்ந்தது திரையில்...
ஒன்றினர் ரசிகர்கள்
பதினைந்து நிமிடம் வரையில்..

நன்கு தொகுக்கப்பட்ட
வாழ்க்கைக் குறிப்புகள்..
பலருக்கு வரவழைத்தன
பலத்த சிரிப்புகள் !!

கேரள இசைக் கல்லூரியில்
போதித்ததால்..
மாநிலம் தாண்டி சாதித்ததால்

முகவாட்டம் துறந்து
”முல்லைப் பெரியாறையும்” மறந்து

தண்ணீர் தரா
குறையை மறைக்க....
ஸ்வாதித் திருநாள்
செம்மங்குடியால் அடைந்த
புகழை உரைக்க...

நல்வார்த்தை நான்கால்
நல்லுறவை நவில
அனுப்பி இருந்தது
திருவனந்தபுரம் தூதரை !!

அந்தோ!
கல்லெறி தூரத்திலிருந்தும்
காணவில்லை
கோபாலபுரம் ஃபாதரை !!

அழைப்பிதழ் போகவில்லையா?
அல்லது..
அரங்கத்தோடு ஆகவில்லையா ?

நம் நாட்டாரை
நம் நாட்டார் ஏத்த...
பட்டாடை போர்த்த....

அரசினை ஆள்வாருக்கு
அவகாசமில்லையா ?
அல்லது
அட்சர சுத்தமாய்
சங்கீத சகவாசமில்லையா ?

IMG_2792

நான்கு நாள் கச்சேரியில்
நடு இரண்டு நாள்
நான் சென்றிருந்தேன் !!
ஸ்ரீகண்டனும்
சுதாவும் அருந் தேன் !!

சாவேரி
தர்பார்
நாட்டக்குறிஞ்சி
மோகனம்
மத்யமாவதி என

ராக மாலிகையாய்…
ரணமான மனதுக்கு
ரம்மியமான மூலிகையாய்…

எப்போது யார் பாடினும்...
எங்கு எதற்கு கூடினும்.....

வில் அங்கம் ஏந்தியவனை
வில்லங்கம் அன்றி துதிக்கும்....

வரலாறு காண முடியாதான்
வரலாறு தன்னை.....
வரலாறு காணா வழுத்தத்தினால்
வரலாற்றில் இடம் பதிக்கும்......

படு சோக்கான பாட்டு
”பாவயாமி ரகுராமம்” !!
அது உள்ள வரை
அத்தமிக்காது
செம்மங்குடி நாமம் !!

Labels: , , , , , , , , , , , ,

Monday, September 22, 2008

மாங்காய் உலகம். . .

IMG_2804

அடுக்கு மாடி குடியிருப்புகளில்
ஏது கொய்யா ?
இருந்தாலும் அவற்றை
இன்றைய அவசர உலகில்
எவரும் கொய்யா !!

அதி நவீன சென்னையில்
அனுதினமும்
அத்தனை வேகம் !!
அதனில் உழன்று
அல்லலுறுகிறது
அனேகர் தேகம் !!

அறுபது மைல் தொலைவில்
தணிகை-திருப்பதி வளைவில்

தமிழக எல்லை விடுமுன்
ஆந்திர எல்லை தொடுமுன்

இருக்கிறது ஒரு ”உலகம்”
இன்பத்துக்கென தனியாய் !!
குலுங்குகிறது பூத்து
காய் கனியாய் !!

அதன் பெயர் “ Mango World “ !!
அனுதினமும் காய் கனி
அதிகம் விரும்புவார்க்கு
அது காணக் கிடைக்காத “Gold” !!

முக்கனிகளில்
முதலாமது மட்டுமே
முற்றும் இருக்குமென்று....

பெயரை வைத்து எண்ணினேன் !!
பெரும்பாலானோர் செய்யும்
பெரும் பிழையை
பெயருக்கு நானும் பண்ணினேன் !!

IMG_2797

IMG_2794

திசைக்கு ஒன்றாய்
திரண்டு காய்த்த மரங்கள் !!
அள்ளிப் பறித்தன அவற்றை
அடியேன் பிள்ளைகள் கரங்கள் !!

மானுடமே !!
மற சற்று நேரம்
தங்க மாளிகையின்
தூத்துக்குடி முத்தை !!
ருசி ”மாங்காய் உலகின்”
சாத்துக்குடி முத்தை !!

வாங்கிப் போட்டவன்
அரசியல்வாதியா? ஆன்மீகவாதியா?...
வாங்கத் தந்தது
கருப்பா? வெளுப்பா?

என...

சோதிக்காதே !!
”ஆடி அடங்கும் வாழ்க்கைக்கு”
ஆறடிக்கு மேல்
ஆருக்கும் எதற்கென
போதிக்காதே !!

எவன் முக்கியம்?
உழு நிலம்
வளைத்துப் போட்டவனா ?
உழுது உழுது
களைத்துப் போனவனா ?

லட்சம் லட்சமாய்
லஞ்சம் வாங்கும்
வஞ்சக நரியா ?
பச்சைப் பசேலென்று
பஞ்சம் தீர்க்கும்
காய்கறியா ?

IMG_2813

உழவனுக்கு பெரிதில்லை
பகையாளியும் பங்காளியும் !!
அவன் கவனமெல்லாம்
பப்பாளியும் தக்காளியும் !!

IMG_2811
IMG_2810

4 அடியில் காய்க்கும்
பாகலும்
2 அடியில் தொங்கும்
பீர்க்கும்

பார்ப்பாரை ஈர்க்கும் !!
பசியை தீர்க்கும் !!

நான் சென்ற நேரம்
கோடை முடிந்திருந்தது !!
பருவம் சிறிது கடந்திருந்தது !!

மாங்காயின் வரத்து
அற்றுப் போயிருந்தது !!
மிஞ்சிய சிலதும்
விற்றுப் போயிருந்தது !!

IMG_2801

எஞ்சிய எல்லா பழத்தையும்
எக்கச்சக்கமாய் வாங்கினேன் !!
பலவற்றை மரத்தினின்று
பறந்து பறந்து பறித்தே
பலமுறை மூச்சும் வாங்கினேன் !!

IMG_2799

IMG_2798

வியந்தேன் வாழைக்கிருந்த
சகாயமான விலையை !!
அள்ளி வந்தேன்
அடியோடு குலையை !!

விற்கப்பட்ட அனைத்துக்கும்
வழங்கப்பட்டது ரசீது
வரியையும் சேர்த்து !!
பணத்தை கொடுத்து
பெரிதும் வியந்தேன்
தொழில் சுத்தம் பார்த்து !!

புறப்பட எத்தனிக்கையில்
நூறு ரூபாயை எடுத்தேன் !!
“வைத்துக் கொள்ளுங்கள்” என
வயலில் உழைத்தார்க்கு
வாஞ்சையாய்க் கொடுத்தேன் !!

வாழைத் தார் அறுத்தார்
வாங்க மறுத்தார் !!
வந்ததெல்லாம் போதாதென்று
வையத்துள் ஏங்குவோர்
அவர் முன் சிறுத்தார் !!

இயம்பினார் ஒன்றை !!
என்னளவில் அது
”புதிய கொன்றை” !!

இன்னார்க்கு இவ்வளவு என
இருக்கிறது ஊதியம்
இங்கே உழைப்புக்கென்று !!
இங்குள்ளோர் பிழைப்புக்கென்று !!

அது தவிர வேறெதுவும்
ஒட்டாது !!
பணத்தை பத்திரப்படுத்துங்கள்
ஆற்றில் கொட்டாது !!

அவ் வயலின் ஈரமும்
அம் மனதின் ஈரமும்

என்னைத் தாக்கிற்று !!
கையாலாகாதவனாய் ஆக்கிற்று !!

எத்தொழில் வரினும்
எதுவும் உழவை செயிக்கவில்லை !
”உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்”..
வள்ளுவம் பொய்க்கவில்லை !!

சென்னைவாசிகளுக்கு “Mango World”
சரியான சவுக்கடி !!
அவர்களாக உணராமல்
அவரை விட்டு அகலாது
அவர்களாக ஏற்படுத்திய
அவசியமற்ற நெருக்கடி !!

குப்பையை தெருவில் கொட்டி..
மட்டற்று மரத்தை வெட்டி....

காசு கொடுத்து
குடிநீரை வாங்கி...
காசற்ற நாள்
கண்ணீரை தாங்கி....

வந்ததை வைத்து பிழைக்காது..
முதுகு வளைந்து உழைக்காது..

தனக்கென தோட்டமின்றி...
அதில் நாட்டமின்றி...

அடைகிறான் சென்னைவாசி
ஆயிரம் சதுர அடியினில் !!
அவன் கவனம்
”தொட்டி” செடியினில் !!

அனேக தினங்களில்
அகத்தில் காய்கறி
அரியாது...
கணக்குக்கு வெண்டை
துவாதசிக்கு சுண்டை
என அறியாது....

வெளியில் பலநாள் உண்டு..
வென்றோம் உலகை எனும்
வெளித்தோற்றம் கொண்டு...

வாழ்கின்றான் நகரத்தான் !!
கொடுத்து வைக்கவில்லையவன்
மண்வாசனையை நுகரத்தான் !!

வாங்கியதை வண்டியில் ஏற்றி....
வாழ வந்தாளை
வழி வந்தாரை
வாழ்ந்தால் ”தோப்பும் துரவுமாய்”
வாழ வேண்டுமென தேற்றி.....

சென்னை வந்தேன் !!
உள்ளம் கவர் கனிகளை
உறவுகளுக்கு
உவந்து தந்தேன் !!

இவ்வளவு எதற்கென
இயம்பாதிருக்க...
“யாரால் முடிகிறது” என
புலம்பாதிருக்க.....

பாட்டியின் காலை நீவினேன் !!
பழுக்காதிருக்க வாழையை
பாங்காய் வறுவல் சீவினேன் !!

இரண்டு நாள்
இல்லமே மணத்தது !!
காய்க்காத இல்லத்து கொய்யாவை
காணுந்தோறும் உள்ளம் கனத்தது !!

திருப்பதி செல்லும் தோறும்
திரும்பத் திரும்ப செல்வேன் !!
பார்ப்பாருக்கும் கேட்பாருக்கும்
Mango World புகழ் சொல்வேன் !!

Labels: , , , , , , ,

Sunday, September 21, 2008

நான் வளர்கிறேனே பாட்டி. . . . .

எப்படி இருந்த நான்……

2006_10_22_jpg0002

2006_10_22_jpg0003எப்படி ஆயிட்டேன்…….

IMG_2890

IMG_2895

IMG_2892

Thursday, September 18, 2008

கூடல்நகர் கயற்கண்ணி. . .

IMG_2746

திருக்கயிலை உறைபவன்
திருவிளையாடல் புரிந்த ஊர் !!
தீர்ப்பு ஒன்று தவறானதால்
தீயில் எரிந்த ஊர் !!

தமிழ்ச் சங்கத்தின்
தலை நகர் !!
தன்னிகரில்லா அதற்கு
தரணியிலில்லை நிகர் !!

நக்கீரர்
கபிலர்
பரணர்
உலவிய நாடு !!
உவந்து கூறும் அவர் புகழை
உலகத் தமிழ் ஏடு !!

மீன் கொடி பறக்கும்
பாண்டிய மண் !!
கொஞ்சும் தமிழ்
அதன்கண் !!

“ப்புல”
“ம்முல”
ஆங்காங்கே வார்த்தையோடு
அவற்றை சேர்த்து
அவுக, இவுக,
“அங்கன” “இங்கன”
லந்து, பந்தா கோர்த்து...

நாக்கை சிறிது
மடித்து பழக்கிட…
பேச்சை சிறிது
சன்னமாய் முழக்கிட…

மதுரைத் தமிழ் வரும் !!
மட்டற்ற சுகம் தரும் !!

நள்ளிரவோ
நண்பகலோ

எவ்வேளையிலும் கிடைக்கும்
எவர்க்கும் உண்டி !!
எவ்வுணவு விடுதியின் முன்னும்
எந்நேரமும் வண்டி !!

வாய்க்கு “ஜிகர்தண்டா”
வாசனைக்கு மல்லி

வாய்ப்பாட்டுக்கு சேஷு
வாதத் தலைமைக்கு
ஞான சம்பந்தன், பாப்பையா

வாரிக் குடிக்க வைகை
வாய்விட்டு சிரிக்க
”வைகைப் புயல்”

இவர்களும் இவையும்
இவ்வூர் பெருமையை கூறும் !!
இன்ன பிறவற்றை நூறும் !!

ஆளுகின்றாள் அவ்வூரினை
ஆதிநாள் முதல் அங்கயற்கண்ணி !!
அனேக பாடல்கள்
அவளை துதி பண்ணி !!

சேம நலம் பேண..
சென்றேன் அவளைக் காண..

கோயில் எங்கும்
கும்பாபிஷேக வேலை !!
காண முடிந்தது அதனால்
கோபுரமெங்கும் ஓலை !!

IMG_2749

தண்ணீர் சிறிதளவே
பொற்றாமரை குளத்தில் !!
பாசியற்றிருப்பினும்
பச்சையாயிருந்தது
தாவர வளத்தில் !!

விபூதி வினாயகன்
ஒரு கோடியில் !!
அருகம்புல்லன்றி
அவனருகே ஒரு மூடி இல் !!

தண்ணீர் பட்டாலே
கரைந்திடுவான் !!
தமியார்க்கு ஒன்றென்றால்
விரைந்திடுவான் !!

காண வந்தவளை தேடி
விரைந்தேன் !!
கணத்தில் கண் நிறைந்தேன் !!

ஒய்யாரமாய் நின்றிருந்தாள்
ஒரு கையில் கிளியோடு !!
கண்ணில் தண் ஒளியோடு !!

சுந்தரேசுவரரையும்
முக்குறுணிப் பிள்ளையாரையும்
வலம் வந்து நின்றேன் !!
எங்கே அழகன்? என்றேன் !!

IMG_2755

கண்டேன் அவனை
கண்ணெதிர் தூணில்
தாரை வார்க்கும் பொறுப்பில் !!
அவனன்றி ஆரழகு?
அதற்கு மறுப்பு இல் !!

அனுதினமும்
அழகாயிருப்பதே
அவன் வேலை !!
செல்லவிருக்கிறேன் அதற்காக
மாலிருஞ்சோலை !!

IMG_2758

ஆயிரங்கால் மண்டபத்தில்
ஆனது புகைப்படக் கருவி மக்கர் !!
ஆயினும் அதனழகில்
ஆர் தான் கண் சொக்கர்?

வெளிப் போந்தோம்
புது மண்டபக் கடைகள் வழியாக !!
வெயில் காய்ந்தது பழியாக !!

IMG_2762

காலணி விட்ட இடம்
கால்கள் நடந்தன !!
சில நிமிடம் கடந்தன !!

காணவில்லை மனைவியின்
செருப்பினை !!
மறந்தாள் கடைக்காரி
பாதுகாக்கும் பொறுப்பினை !!

அவளைத் திட்டித் தீர்த்தேன் !!
ஆதங்கத்தை கொட்டித் தீர்த்தேன் !!

”மதுரை சந்திப்பு” போகுமுன்
உணவுக்கு இறங்கினோம்
முருகன் இட்லி கடையில் !!
அது போன்ற இட்லி
அரிது ! மிகை இல் !!

உள்ளம் திளைத்திருந்தது !!
உடல் களைத்திருந்தது !!

ஊர் திரும்பத் துணிந்தேன் !!
நான்கு நாள் சிந்தனைகளை
நினைவில் அணிந்தேன் !!

நமது திருத்தலங்களில்
நான் பார்த்த வரையில்

திருநீறணியா தேகமில்லை !!
திமிரான வேகமில்லை !!

பலவற்றிற்குப்
பெருநகரம் எனும்
பலத்த தகுதியில்லை !!
அதனாலோ எனவோ
வாகனங்கள் மிகுதியில்லை !!

இங்கங்கெனாது
இருளில் நடக்கிறது
ஆயிரம் ஊழல் !!
இருக்கிறது அசுத்தமாய்
சுற்றுச் சூழல் !!

இவற்றை வைத்து போடலாகாது
நகரத்தை எடை !
அகத்தின் அழகை
அழகுறக் காட்டுமா உடை ?

பெரும்பாலான மக்களிடம்
பெரும்பாலான நேரத்தில்

கீழும் மேலும் பார்த்து
கிடைத்ததைப் பறிக்கும் நோக்கில்லை !!
”பணம் பணம்” எனும் போக்கில்லை !!

வண்டியேறி புறப்பட்டேன்
இச் சிந்திப்பில் !!
வந்திறங்கினேன் விடிகாலை
தாம்பரம் சந்திப்பில் !!

வைகறை ஆனதால்
வெயில் தகிக்கவில்லை !!
இருந்தும் சொல்கிறேன் -
சென்னை சகிக்கவில்லை !!

Labels: , , , , , ,

Monday, September 15, 2008

சீரலைவாய் சிவகுமரன்...

IMG_2727

ஒரு பழத்திற்காக
உலகம் சுற்றியவன் !!
இடம் வலமென
இரு பெண்டிரை
கரம் பற்றியவன் !!

செந்தில்
செந்தூரன்
சண்முகன்
சிவ குமரன்
கந்தன்
கடம்பன்
கதிர்வேலன்
குகன்
முருகன்
முத்துக்குமரன் என

பல பேரன் !!
தக்கன் பேரன் !!

தமிழ்க் கடவுள் என
போற்றப்படுபவன் !!
திருமுருகாற்றுப்படையில்
ஏற்றப்படுபவன் !!

விரைந்தேன் அவனைப் பார்க்க !!
விழைந்தேன் பழங்குறை தீர்க்க !!

போன இடம் சீரலைவாய் !!
போகவில்லை அவ்வூர்
சுனாமி எனும் பேரலைவாய் !!

ஆதி நாளில்
ஆண்டியாய் திரிந்தவன் !!
அத்தலத்தில் சூரனுடன்
அறப்போர் புரிந்தவன் !!

திருநெல்வேலியினின்று
திருச்செந்தூர் வழியில்
வண்டி விரைந்தது !!
கண் நிறைந்தது !!

ஆம்...
தாமிரபரணி விழுகிறது
தானாய் விழியில் !!
தடுக்கி விழ சாலையில்
குழி இல் !!

பொருநை எனப்
பெயர் பெற்ற
“பார்த்தாலே பாபமறும்”
புண்ணிய நதி !!
அதன் கரையெங்கும்
திருப்பதி !!

ஆம்.....
திருக்குருகூர்
திருப்புளிங்குடி
திருப்பேரை
திருக்கோளூர்
திருவைகுண்டம்
திருவரகுணமங்கை
திருத்தொலைவில்லிமங்கலம்

என...

அழகழகாய்
அங்கொன்றும் இங்கொன்றுமாய்
நவ திருப்பதி கோயில்கள் !!
நான்கு திக்கும்
கோபுர வாயில்கள் !!

செந்தூர் எல்லை நுழைந்து
மேல் அங்கி களைந்து

கடலில் கால் நனைத்து
“கந்தா” என நினைத்து

கோயிலில் கால் வைத்தேன் !!
தலையில் கை வைத்தேன் !!

கர்ப்பக்கிரகத்துள்
கடமை மறந்து
காசுக்காக காத்திருக்கும்
கணக்கற்ற தலை !!
நோக்குகின்றார்
நாளொரு மேனியும்
பொழுதொரு வண்ணமுமாய்
வசதி படைத்தார் வருதலை !!

ஓராறு முகனின்
ஒரு பெயரும்
ஒரு மந்திரமும்
காதில் விழுவதில்லை !!
கந்தர் அலங்காரம்
கந்தர் அனுபூதி
கந்த சஷ்டி கவசமென
ஒன்றைச் சொல்லியாவது
ஒருவரும் தொழுவதில்லை !!

மாசில்லா கோவிலினும்
காசில்லா கோவில் மேல் !!
காக்கட்டும் அவர்களையும்
கந்தனின் வேல் !!

கற்பூரம் ஒற்றி ..
கர்ப்பக்கிருகம் சுற்றி...

புராதன சிற்பங்கள் கண்டு....
பிரசாதம் உண்டு...

களையிழந்திருந்தது என் சேனை !
களிப்பூட்டியது அவரை யானை !!

IMG_2724

IMG_2722

மனமின்றி விடைபெற்றேன் கந்தனிடம் !!
மனதை பறிகொடுத்தேன் மொந்தனிடம் !!

IMG_2732

பொருநையில் வைத்தேன் காலை !
எதிரே அடர்ந்த வாழைச்சோலை !!

IMG_2729

நெல்லை வந்து களைப்பாறி
பிள்ளைகட்கு தலைவாரி

சென்றேன் அத்தை இல்லம் !!
ஆயினர் என் பிள்ளைகள்
அவளுக்கு செல்லம் !!

IMG_2739

IMG_2741

அதிக நேரம் ஆனதால்
”அல்வாவை” விடுத்து
அவசர கதியில்
வண்டிச் சத்தம் கொடுத்து...

ஏறினேன் புகைவண்டியுள்
குடும்பத்தோடு கை கோர்த்து...
வண்டி புறப்பட்டது
அடையப்போகும் ஊர் பார்த்து...

அவ்வூர் ?
அழகன் பெண் கொடுத்த ஊர்..
அம்பலத்தான் பெண் எடுத்த ஊர்..

ஊரெங்கும் பெண் ஆட்சி !!
பெயர் மீனாட்சி !!

Labels: , , , , ,

Monday, September 08, 2008

சச்சி பிள்ளை...உச்சிப் பிள்ளை

IMG_2697

அரங்கத்திலுள்ள
அம்மா மண்டபத்தினின்று
காவிரியில்
கால் நனைத்தால்...
கஜமுகனை நினைத்தால்..

IMG_2698

கால் காத தூரத்தே
காணலாம் மலைக்கோட்டை !!
அதுவே
அன்பனவன் பேட்டை !!

ஆற்றின்
அப்பக்கம் இருக்கிறது
அப்பதி !!
அவனே அதன்
அதிபதி !!

IMG_2699

ஏறினேன் அவன் மலை
சந்தியா கால நேரத்தில் !!
ஆனைக்காவும் அரங்கமும்
ஆயின புள்ளிகளாக தூரத்தில் !!

IMG_2705

ஆகாயம் பார்த்த கட்டிடங்கள்
ஆற்றின் இப்புறம் !!
ஆங்காங்கே வெற்றிடங்கள்
ஆற்றின் அப்புறம் !!

ம்....
மாறிவிட்டது திருச்சி
மக்கள் வருகைக்கு அப்புறம் !!

தாயுமான சுவாமியையும்
தும்பிக்கையனையும்
திருக்கோயில் கட்டி
திருப்பணி செய்தோர்
பல்லவர்கள் !!
குடவரைக் கோயில்
கட்டுவதில் வல்லவர்கள் !!

அழகுற இருந்தது கோவில் !!
அகவல் இருந்தது நாவில் !!

சிறிய உருவில்
வீற்றிருந்தான் !!
”சங்கட ஹர சதுர்த்தியின்”
சந்தன அலங்காரம் ஏற்றிருந்தான் !!

அவன் அணிந்திருந்த
அருகம்புல்லை.....
அழகுற காட்டியது
அர்ச்சகரின் கற்பூர வில்லை !!

கன்னம் தட்டி
நெற்றி குட்டி

கரணமிட்டு கும்பிட்டேன் !!
குறுகிய சிந்தனைகளை
குற்ற மனதிலிருந்து நெம்பிட்டேன் !!

பாதம் பணிந்தேன் !!
இறங்கத் துணிந்தேன் !!

அத்தமிக்கும் சூரியனால்
அந்தி வானில்
அழகழகு வண்ணங்கள் !!
அகத்திடையோ
அனேக எண்ணங்கள் !!

இந்தியாவில்...
எளிதில்
எவ் வசதியும் இல்லாது...
எனினும் எவை ”இல்லை”
எனும் அசதியும் இல்லாது...

மக்கள் வாழ்கின்றனர் !!
பக்தியில் ஆழ்கின்றனர் !!

அமெரிக்காவில்...
அனைத்தும் இருக்கிறது !!
அவ்வளவும் இருந்தும்
அனேகரிடம்
”அனேகம் இல்லை” எனும்
அரற்றலே இருக்கிறது !!

இங்கா? அங்கா? என
இருக்கிறார் பலர்
இரு தலைக் கொள்ளியாய் !!
இன்பமற்று இலங்குகின்றார்
திங்கள் – வெள்ளியாய் !!

அரன் கழுத்து அரவன்றி
அனைவருமே
”இருக்குமிடத்தில் இருத்தல்”
நலமோ ?
நமக்கு நம் நாடே
பலமோ ?

சாதி
சமயம்
அரசியல்
அடிப்படை வசதி
படிப்பு
பதவி என
இந்தியாவில் சிரமம்
வளர்வதில் !

நல்லது அள்ளி
நல்லதல்லாதது தள்ளி

பாரம்பரியம் காட்டி
பக்தியை ஊட்டி...

அமெரிக்காவில் சிரமம்
வளர்ப்பதில் !!

வாய்ப்பு வந்தால் வையம்
விரும்புகின்றது ஏற்றிட !
விரும்புவதில்லை யாரும் தோற்றிட....

நான் நல்லதை ஏற்றேனா ?
நல்லதென நம்பி தோற்றேனா?

தமிழ் சொல்கிறது
”திரை கடல் ஓடியும்
திரவியம் தேடு" !
இன்று அதனாலன்றோ
இத்தனை பாடு !!

கல் ஒன்று தடுக்கிட...
கனவா இன்னமும்? என
கட்டியவள் கை சொடுக்கிட....

IMG_2707

நினைவுக்கு வந்தேன்...
விதியை நொந்தேன் !!

இறங்கும் போது
”இனி எப்போ?” என
கவலையோடு கேட்டது
காவிரி ஆறு !!
சலசலவென மக்கள்
சிராப்பள்ளி சந்திப்பின் பக்கம்
- மணி ஆறு !!

ஒன்பது மணிக்கு ரயில் !!
அடுத்து செல்லுமிடமிருப்பவன்
அனுதினம் ஏறுகிறான் மயில் !!

IMG_2708

Labels: , , ,

Tuesday, September 02, 2008

ஆனைக்கா ஆடலரசன்.......

IMG_2692

அவன்
சிவன் !!

பிறை அணிந்தவன் !!
பிரணவத்தின் பொருளுணர
பிள்ளையின்
பிஞ்சுப் பாதம் பணிந்தவன் !!

காவிரி தீரத்தில்..
கணமும் ஈரத்தில்..

அருளுகின்றான் அன்பர்க்கு !!
அன்பாய் அஞ்செழுத்தாம்
“நமசிவாய” என்பர்க்கு !!

எந்நாளும் அவன் தொழில்
எதை என்று அழிக்கலாமென !!
ஐயன் அவன் நினைவதில்லை
"ஐந்தை எட்டில்" கழிக்கலாமென !!

அவ்வூரில்
அவனுறை நாயகி
அகிலாண்டேஸ்வரி !!
அகிலம் காக்கும் ஈஸ்வரி !!

அவளது பெயரில் ஆரம்பித்து
அவளை ஆராதிக்கும் க்ருதியில்
ஆர்வலர் காணலாம்
அழகான வரி !!

கோபமான கணவனுக்கு
அவளே தகுந்தவள் !!
உக்கிரம் மிகுந்தவள் !!

அவள் எதிரே
அக்கோயிலுள் இருப்பவன்
அவளது மூத்த மகன் !!
அழகு வினாயகன் !!

IMG_2693

ஆனைக்கா என
அழைக்கப்பெறும்
அக்கோயில்

அமைந்திருக்கிறது
அரங்கத்தினின்று
அஞ்சு கல் தூரத்தில் !!
அங்கு போயிருந்தேன்
மதிய நேரத்தில் !!

அக்கோயிலின் அழகை
அகத்தில் காணலாம்
”ஜம்புபதே”யில் !!
அவ்வழகுடன்
அப்பழுக்கில்லாதிருக்கிறது
அதன் கோபுர வாயில் !!

கோயில் எங்கும்
“தமிழில் அர்ச்சனை”
எனும் பலகை !!

"கடவுள் இல்லை” என்பார்
கடவுள் இருக்கும் இடத்திற்கும்

விடுத்திருக்கும் உத்தரவை எண்ணி
வியந்தேன் உலகை !!

அனேகமாய்
அர்ச்சனை என்றால்
அர்ச்சகர் சொல்ல வேண்டும்
அர்ச்சிப்பாரது பிரவரம் கோத்திரம் !!
அதுவே சாத்திரம் !!

அர்ச்சகர் அன்று
அசமஞ்சமாய் நின்றார்
அதனைச் செப்பாது !!
அவரை பக்தரொருவர்
அரை நிமிடம் பொரித்தார்
அதனை ஒப்பாது !!

IMG_2694

வற்றாத நீருக்கு மத்தியில்
வடிவில் சிறிய லிங்கம் !!
பார்க்கப் பார்க்க
புளகாங்கிதம் அடையும் அங்கம் !!

கல்லா? கடவுளா?
பட்டையா? நாமமா?
அரியா? அரனா?
எத்துணை சண்டை - அப்பப்பா
எத்துணை சண்டை !!

அடியும் முடியும்
அறிய முடியாதவனை
அறிய விழைகிறோம் !!
ஆக்கும் செயலற்று
ஆர்க்கும் உதவாத
ஆர்ப்பாட்டத்துள் நுழைகிறோம் !!

உச்ச கால பூசை முடித்து..
வாங்கிய நீறு குங்குமத்தை
காகிதத்தில் மடித்து…

IMG_2695

சுற்று சுற்றி வெளியில் வர
சூரியன் இருந்தான் உச்சியில் !!
அடுத்து செல்லுமிடத்தும்
இருக்கிறான் ஒருவன் உச்சியில் !!

Labels: , , , , ,