Friday, November 06, 2009

சிக்குன் குனியா. . . .- இறுதியாக
3)

கலைஞர்க்கும்
கலைஞானிக்கும்
கவிப் பேரரசுக்கும்
கவிதாயினிகளுக்கும்

மேலுக்கு சுகமில்லை எனில்
மேதினியில் மருத்துவர்

மாடி ஏறி வருவார்
மாளிகை வீட்டுக்கு !!
தினத் தந்தியில்
தினம் செய்தி வரும் நாட்டுக்கு !!

ஆங்கவர் அறிவரோ
ஆதரவற்றோர்
ஆயிரம் இருக்கிறார்

வறுமைக் கோட்டுக்கு கீழ் !!
கிஞ்சித்தும் அவர்கட்கு
கிடைப்பதில்லை கூழ் !!

சிக்குன் குனியா தந்த
சித்திரவதையில்

தன் இயல்பிழந்து
தவிக்கும் பெரும்பாலானோர்
கீழ்த்தட்டு மக்கள் !!
தரமான வாழ்க்கை என்பது
அவர்கள் மறந்த சொற்கள் !!

பால் ஊற்றுபவர்
பாட்டுக்கு நாயனம் ஊதுபவர்

நாளேடு போடுபவர்
நாவிதர்

கிணறு எடுப்பவர்
கட்டுமான வேலை செய்பவர்

இவர்களின் நிலையென்ன ?
இந்நோய்க்கு
இவர்கள் தந்த விலையென்ன ?

எக்குத்தப்பாய் இந்நோய் வரின்
என்னணம் துடுப்பு போடுவார்

அலை கடலில்
அன்றாடம் மீன் பிடிக்கும்
வலைஞர் ?!
அவர்க்கு என் செய்தார்
தனக்குத் தானே பட்டமளித்து
தனித்து பரிமளிக்கும் கலைஞர் ?!

இரண்டு ரூபாய் அரிசியும்
இலவச தொலைக்காட்சி பெட்டியும்

இவர்களின் தேவையா ?
இதைத் தருவது சேவையா ?

அடிப்படை சுகாதார வசதி
அறவே அற்ற
அதே தமிழ் நாட்டில் தான்

அரசு பொது மருத்துவமனை
அப்போலோ
மலர்
பில்ராத்
செட்டிநாடு

என
விண்ணை முட்டி நிற்கும்
வியத்தகு மருத்துவ நிலையங்கள்

”குப்பை நடுவே
கொஞ்சும் குருக்கத்தி”யாக

மார் தட்டுகின்றன !!
ஆயினும் கேட்கிறேன்
அவர்களின் சேவை
ஆரை எட்டுகின்றன ??

உருப்படியில்லை எனினும்
உடனுக்குடன் காண

ஊருக்குள் ஒரு மருத்துவரை
ஊரார் தேடுகின்றார் !!
உற்றவர் கற்றவரில்லையெனில்
உள்ளம் உடல் வாடுகின்றார் !!

பெருங்களத்தூரில் இருக்கும்
பெயர் பெற்ற மருத்துவர்

பெயர் தெரியா நிறுவனத்தாரது
பெரிய பெரிய பில்லைகளை
பெரிதும் பரிந்துரைக்கின்றார் !!

ஆண்டிபயாட்டிக்
ஆம்பிசிலின் என
அன்று முதல் இன்று வரை
அரைத்த மாவையே
அரைக்கின்றார் !

நோய் நாடவோ
நோய் முதல் தேடவோ

அரசு ஆவணங்கள்
ஆணைகள்
ஆரம்ப சுகாதார மருத்துவரை
அணுவளவும் ஏன் எட்டவில்லை ?

தமிழக சுகாதாரத் துறை
தலைவரை
தமிழக முதல்வர்

தகவல்களை பரப்ப
தவிடளவும் ஏன் சுட்டவில்லை ??

தட்டிக் கேட்கும்
தார்மீகப் பொறுப்பிலிருப்பவரை
தட்டிக் கேட்டால்

”கொசுவுக்கு பயந்து
கோட்டையா விட முடியும்”

என
வரலாம் பதில் சிலேடையாக !!
வாதிடுவார் அவர்
வாரித் தந்த பெருமைகளை

உயிரினும் மேலான
உடன்பிறப்புகளே என
மேடை மேடையாக !!

சாலையில்லாமல் வாழலாம்
சேலையில்லாமல் வாழலாம்
வேலையில்லாமல் வாழலாம்

நாளையில்லாமல் என்னணம்
நாம் வாழ இயலும் ?

என்று நம் நாடு
"எல்லோரும் இன்புற்றிருக்க" முயலும் !!

வாசுகி மணாளன்
வார்த்தை வைக்கிறான்...

உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
சேரா தியல்வது நாடு

அது வரை நம் பாடு
அந்தோ பெரும் பாடு !!

-- முற்றும்

Labels: , , , , ,

Thursday, November 05, 2009

சிக்குன் குனியா. . . . - 52)

வெட்ட வெளியிலோ..
வெள்ளித் திரையிலோ..

ஊதித் தள்ளுதலின்
ஊடுருவலை தடுக்கவும்...

ஒரு மனதாகவோ
ஓரக்கண்ணாலோ

ஓரினச் சேர்க்கையை
ஓரளவேனும் அரசு
அங்கீகரிக்கவும்....

மருத்துவம் படித்தவர்
மருந்துக்கேனும்

புறநகரில் ஆறாம் வருடம்
புழங்கவும்..
புழங்கிய பிறகே
சான்றிதழ் அவர்க்கு வழங்கவும்...

போகும் வரை
போராடினார் அன்புமணி !!

பொறுமையாய்க் கேட்கிறேன்
ஆரோக்கியம் சுகாதாரமன்றோ
அவருக்கிட்ட முதற் பணி ?!

ஏதும் அத்துறையில் பிடுங்கினாரா?
இல்லை அவரும்
இந்நோய் வந்து நடுங்கினாரா ?

அடுத்து முயலாதே
அவர் இருந்துவிட்டார்
அமைச்சரவையில்
அரசியல் பகடை பாய்ச்சி !!

அவரால் யாது கண்டான்
அவதியோடு
அதிகாலை வேலைக்கு சென்று
அடுத்த வேளை சோற்றுக்கு
அல்லல் உறும்
அன்றாடங் காய்ச்சி ?

H1N1 என
உலக சுகாதார நிறுவனம்
உரக்க எச்சரித்த நாள் முதலாய்

அனைவர்க்கும் தடுப்பூசி தயாரிக்க
அமெரிக்கா எத்தனிக்கிறது !!
அனைத்து மருந்து தயாரிப்பாளரையும்
அந்தி பகலாய் நச்சரிக்கின்றது!!

Alcon
Alembic
Cipla
Dr. Reddy’s
Parke Davis
Ranbaxy

Astra Zeneca
Glaxo Smithkline
Merck
Pfizer
Roche
Sanofi Aventis

இவர்களுள் ஒருவரையேனும்
இராமதாஸ் அணுகினாரா

சிக்குன் குனியாவுக்கு
சீக்கிரம் மருந்து தயாரிக்கச்
சொல்லி ?

தெளிக்க ஆணையிட்டாரா
தென் மாநிலங்களில்
பூச்சிக் கொல்லி ?

இலட்சோப இலட்சம் அமெரிக்க
இராணுவத்தினரை முன்னிட்டு
இருபத்தொன்பது ஆண்டுகட்கு முன்பே
இவ் வியாதிக்கு

தடுப்பு மருந்தொன்று
தயாரிக்கப்பட்டதென்று
தகவான தகவல் அறிகிறேன் !!
நர்த்தனம் புரிகிறேன் !!

வியாதியை அவ் ஒளடதங்கள்
வருமுன் தடுக்குமா ?
வந்த பின்
வலி வராத
வாழ்க்கையை கொடுக்குமா ?

ஆயுளில் ஒருமுறையா ?
ஆண்டுக்கு ஒருமுறையா ?

என்னணம் அவற்றை
எடுத்துக் கொள்ள வேணும் ?
எங்ஙனம் அவை குறித்த
எண்ணற்ற தகவல்களை
எல்லோர் கண்ணும் காணும் ?

என்னை சோதித்தவர்கள்
எனக்கு அதனை
எதனால் அளிக்கவில்லை ?

ஆனந்தத்தை அடக்கும் இந்நோயின்
ஆதார காரணம் நுண்கிருமி !!
பிரயோசனமில்லை பொருமி !!

கணக்கில்லா நுண்கிருமிகள்
காலப் போக்கில் தனது
கையொப்பத்தை மாற்றும் !!

முந்தைய தடுப்பூசிகள்
முற்றும் பலனிழக்க

புதிய தடுப்பூசியே
புதிய கிருமியிடமிருந்து நம்மை
காப்பாற்றும் !!

அவ் வகைப்பட்டதா
“சிக்குன் குனியா”வின் கிருமி ?
என்ன செய்து கொண்டிருக்கிறது
AIIMS இருமி ?

எழுத்தாணி கொண்டு
எழுதியிருக்கிறான் எந்தை
எந்நாளும் உமக்கொரு வரி !!
பூசியிருக்கிறான் கரி !!

"கருவியும் காலமும் செய்கையும் செய்யும்
அருவினையும் மாண்டது அமைச்சு "

என்ன கண்டோம் யாம்
மத்தியில் உன்னை அமைத்து ?!

-- தொடரும். . .

Labels: , , , ,

Wednesday, November 04, 2009

சிக்குன் குனியா. . . . -- 4

1)

கழிவு நீரை மக்கள்
கடைத்தெருவில் விடுவதேன் ?
கொசுவால் அவதிப் படுவதேன் ?

வீடு கட்டுவோர்
வீட்டைச் சுற்றி
விட வேண்டிய

சுற்றளவு என்னவாயிற்று ?
சுற்றுப்புறமன்றோ
சுகாதாரமின்றி நாறிப் போயிற்று ?

நிரம்பட்டும் எனது தொப்பை !
நிறையட்டும் ஊரில் குப்பை !!

என வாழ்வதில்
என்ன லாபம் ?
எல்லை மீறுகிறது
எனது கோபம் !!

எண்ணிலடங்கா அவர்கட்கு
எவன் தந்தான் பட்டா ?
நாமன்றோ படுகிறோம்
நாடு கெட்டா ?

”வீட்டிற்கு ஒரு மரம்”
வீணர் பேச்சு.....
தெரு முனை பூங்காவால்
தொல்லை போச்சு .....!

இவ்வாறன்றோ பலர்
இந்தியாவில் வாழ்கின்றார் ?!
அனேகர் அவராலன்றோ
அல்லும் அல்லலில்
ஆழ்கின்றார் ?!

வருடா வருடம்
வாசலுக்கு வந்து
வரி வசூலிக்கும்
வக்கற்ற கிராமப் பஞ்சாயத்துகள்....

கையூட்டு மட்டுமே வாங்கும்
கணக்கில்லா வாரியங்கள்…
உருப்பட வழி மறிக்கும்
ஊராட்சி ஒன்றியங்கள்...

இவர்கள் எதற்கு
இந் நாட்டிற்கு ?
நடக்கிறது நடக்கிறது
தன் பாட்டிற்கு !!

அடித்தள அரசியலே
அலங்கோலமான நாட்டில்

இங்கங்கெனாது மலேரியாவால்
இந்தியர் பலர்க்கு குளிருகிறது !!
இதனூடே வாசகம் மட்டும்
”இந்தியா ஒளிர்கிறது “ ?!

தொண்ணூற்றைந்து வயதில்
தொண்டு கிழமாய் பாட்டி !!
எண்பது வயதெட்டிய எந்தை !!
எழுபதெட்டிய அன்னை !!

இவர்களை விட்டு
இளையோன் என்னை
இந்நோய் படுத்தியது

குளித்த நீரையோ
கழித்த நீரையோ

ஈர் இரண்டு மா
ஈர் நான்கு தென்னை
எண்ணிலடங்கா வாழை

இவற்றை தவிர்த்து
இம்மியும் வெளியே விடாத
இனிய என் இல்லுள்

இல்லை இக்கொசு
என்பதற்கு சாட்சி !!

இருப்பினும் சொல்கிறேன்
நாக்கு தள்ள வைக்கிறது
நான் வாழ்ந்த ஊரான
பெருங்களத்தூர் பேரூராட்சி !!

பெயரளவில் முன்னேற்றம் !!
ஊரெங்கும் துர்நாற்றம் !!

அத்தனையும் பார்க்கலாம்
அப் பஞ்சாயத்துள் !!
அமிழ்ந்து கிடக்கிறது
அவ்வூர்
அரசியல் சாயத்துள் !!

-- தொடரும். . .

Labels: , , , ,

Tuesday, November 03, 2009

சிக்குன் குனியா. . . . - 3

குடும்ப மருத்துவர்
குவித்து உதட்டைப் பிதுக்கினார் !!
எலும்பியல் நிபுணர்
எனக்கு தொடர்புடையதில்லை
என ஒதுக்கினார் !!

வினை விதைத்திட்ட
வியாதியின் பெயரை
விலா நோக விவரித்தும்

நுழையவில்லை அது
நுண்ணுணர்வுடையார் வாயில்!

தொண்டு கிழம்
திருநாவுக்கரசர் கணக்காய்
தேடிப் போனேன் கோயில் !!

சதுர் வேதமோ
சஹஸ்ரநாமமோ
சற்றும் காதை துளைக்கவில்லை !!
சஞ்சலத்தில் மனம்
சரிவர பக்தியில் திளைக்கவில்லை !!

பல்லாயிரம் வலைப் பதிவுகளை
பக்கம் பக்கமாய் புரட்டி. . . .
செய்திகளை செவ்வனே திரட்டி. . .

வாத நோய் வல்லுனராம்
ரூமட்டாலஜி நிபுணரிடம் சென்றேன் !!
ஏதேனும் செய் என்றேன் !!

இங்கில்லா
இந்நோயை

எங்கு சென்று
எப்படிப் பிடித்தாய் என

கல கலவென அவரும் சிரிக்க.....
கையை விரிக்க.....

வெறுத்துப் போனேன் !!

சிறிய கொசுவா நம்மை
சிறைப்படுத்துவது என
சிந்தித்து சிந்தித்தே
சிறுத்துப் போனேன் !!

வக்கில்லா கொசுவால்
வசமிழந்து முடங்குவதா?
வாழும் வயதில்
வாழ்க்கை அடங்குவதா ?

நாளும் முன் போல்
நலமாய் வாழ
நடையே விடை என

விந்தி விந்தி நொண்டியாய்...
வீதியில் ஒண்டியாய் ...

வலியோடு பல நாள்
வழி நெடுகப் போனேன் !!

வந்த வழியிலேயே
வந்த வலி மறைய

விரைவில் மீண்டும்
வலுவானவனாய் ஆனேன் !!

வல்லரசு அமெரிக்காவுக்கும்
வலிய இந்நோய் வர
வலுவான சாத்தியங்களுண்டென

கருத்துக் கணித்திருக்கிறார்கள் !!
கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர
கணக்கற்றோரை
கடமையில் பணித்திருக்கிறார்கள் !!

இந்தியாவில் இந்நோய்
இதுகாறும் தலைவிரித்தாடுதற்கு

என்னிடம் உண்டு
மூன்று காரணங்கள் !!
அனைத்திற்கும் உண்டு
அவசரத்திற்கு உதவா
அரசியல் தோரணங்கள் !!

-- தொடரும். . .

Labels: ,

Monday, November 02, 2009

சிக்குன் குனியா. . . . - 2

மணிக்கட்டில்
கால் மூட்டில்

பிடரில்
பிருட்டத்தில்

ஆறு மாதமோ
ஆண்டாண்டு காலமோ

வந்தாரது
வயதைப் பொறுத்து
வலி படுத்தும் !!

போது போய்விடும்
போர்த்துப் படுத்தும் !!

நாடி நரம்பெல்லாம்
நாளெல்லாம் நோகும் !!
நாளை சரியாகும் எனும்
நம்பிக்கை போகும் !!

இந்தியாவில் நான்
இவ்வருடத்திய விடுமுறையில்
இந்நோய் என்றறியாது
இரு தினம் படுத்தேன் !!

விடுமுறை முடிந்திட
”விடைகொடு எங்கள் நாடே” என
விடை கொடுத்தேன் !!

அமெரிக்கா வந்திறங்கிய
அந்த நாள் முதலாய்

வலியான
வலி ஒன்று
வதைத்தது !!

என்னமோ ஏதோவென்று
என் மனம்
எந்நாளும் பதைத்தது !!

இயல்பிழந்தேன்
இன்னதென்று சொல்லொணா
இம்சையில் இருந்து !!
இப்பிணி தரும் வலிக்கு
இல்லை இத்தேதியில் மருந்து !!

நடை குறைந்தது !!
நகை மறைந்தது !!

“கோள் என் செயும்
கொடுங் கூற்றென் செயும்”

என

சொல்லிப் பழகிய நான்
சொல்வதறியாது நின்றேன் !!

நமக்கு ஒருவேளை
நாளும் நேரமும்
நலமில்லையோ என்றேன் !!

சகுனம் பார்த்தேன் !!
சனியை நொந்தேன் !!

சோதிடம் இனித்தது !!
என் செய்கை நினைந்து
என் கண்ணே பனித்தது !!

-- தொடரும். . .

Labels: , ,