Wednesday, May 28, 2008

சியாமா சாஸ்திரி...

syamasastri

“பிறந்தால் முக்தி” என
போற்றப்படுகிறது பெருமையாய்
ஆரூர் !!
உண்டோ அதற்கு ஒப்பாக
ஓரூர் ?

அறியும் சங்கீத உலகம்
அம்மண்ணில் அவதரித்தாரது
அளப்பரிய பெருமை !!
அறியார் அறியார்
அவர்தம் அருமை !!

இசையார்வலர் போற்றும்
இணையில்லா மும்மூர்த்திகளில்..

ஒருவர் மூத்தவர் !!
முதுமைக்கு முன்னமேயே
உயிர் நீத்தவர் !!

“சியாம கிருஷ்ண” எனும்
முத்திரை பதித்து
கர்நாடக சங்கீதத்தின்
கவித்துவமிக்க ஆழத்தை
கூட்டியவர் !!

கணக்கறியா பாடல்களில்
காஞ்சி காமாட்சியை
கண் முன் காட்டியவர் !!

விஸ்வநாத ஐயருக்கும்
வேங்கலஷ்மிக்கும்
வேங்கட சுப்பிரமணியனாய்
பிறந்தவர் !!
“விரிபோனி” ஆதியப்பரை
குருவாகக் கொண்டு
சிறந்தவர் !!.

1762 முதல்
1827 வரை

அறுபத்தைந்து ஆண்டுகள் மட்டும்
அவனியில் வாழ்ந்த
அப் பெரியவர்
சியாமா சாஸ்திரி !!

சாஸ்திரீய சங்கீதத்தில்
சங்கராபரணத்தில்
சனமறியுமோ அவரன்றி
“சரோஜ தள நேத்திரி” ?!

தியாகராஜர் க்ருதிகள்
திராட்சைக்கு ஒப்பாக
தித்திக்கும் பொதுவாக
வாயில் சென்றவுடன் !!

சாஸ்திரியின் பாடல்களோ
வாழையாய் இனிக்கும்
வார்த்தை நெஞ்சில்
நின்றவுடன் !!

தாளத்திற்கு
தம் பாடலில்
தனித்த இடம்
தந்தவர் !

“தேவி ப்ரோவ சமயமிதே”
“தருணம் ஈதம்மா”
“ப்ரோவவம்மா”
“பார்வதி நின்னுனே” என

அறியா ராகங்களில்
அரிய க்ருதிகளை
அழகாய்க் கொண்டு வந்தவர் !!

எல்லாம் இருப்பினும்..
எது மறப்பினும்..

சங்கீதம் அறிந்தோர்
சந்தேகம் இன்றி
சியாமா சாஸ்திரி என்றதும்
சிலாகித்து சொல்வார்
ஸ்வர ஜதியினை !!

அந்தோ !
அறிந்து வருந்துகின்றேன்
அல்லும் பகலும்
அவரது வம்சாவளியினரின்
அவல கதியினை !!

விட்டு வைக்காது
விரட்டி விரட்டி
விதி அவர் சந்ததியினரை புரட்ட..
முட்டி தட்டி
முழக்கி முழக்கி பாடுவோர்
முயலவில்லை ஏனோ
நிதி திரட்ட !!

அவதியுற்று
அக் குடும்பம்
அனுதினம் பஞ்சத்தில்
அணு அணுவாக
சரிகையில்....
அகதமியில் நாமிருக்கலாமோ
பட்டுச் சரிகையில் ?

காண்கிறேன் அவர்கள் முகத்தில்
கவலைக் களை !!
கச்சேரி சபாக்கள்
களையுமா அவர் தம்
கவலைகளை ??

கச்சேரி செய்யும்
கலைஞர்க்கு ஈட்டுகின்றது
கட்டிலடங்கா பணத்தை
ஒலி நாடா !!

ஒரு சிலர்
ஒன்று கூடி
ஒவ்வொரு விற்பனையினின்றும்
ஒரு பணத்தை
ஒதுக்கினால்
ஒரு நாளும் இக்குடும்பங்கள்
ஒடுங்கி வாடா !!

இனியும் விடலாகாது
இவர் தம் முகம் தொய்ய !
இன்றே விழைவீர்
இயன்ற உதவியை செய்ய !!

பரிதவிக்கிறது ஒரு குடும்பம்
கவலை மிகுதியில் !!
அவர்களின் பூர்வீகமோ
கலைஞர் தொகுதியில் !!

தீராத அவர் குறையை
தீர்த்து வைப்பாரா
திருக்குவளை தந்த
தவப் புதல்வர் ?
தீர்க்கின் வரலாற்றில்
தடம் பிடிப்பார்
தமிழக முதல்வர் !!

கட்சி நிதியினின்று
கலைஞர் அருளட்டும்
கருணாநிதி உளலோ என
கோடியை !!
கச்சேரியில்
கேட்கலாம் திகட்டாது
“கருணாநிதி இலலோ” என
சாஸ்திரியின் தோடியை !!

Labels: , , ,

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home