Wednesday, September 23, 2009

சகல கலா வல்லவனே. . . . .



படிக்குப் பாதிக்கு மேல்
பம்மல் K சம்பந்தம் !!
இதர சில பகுதிகள்
இந்தித் திரைக்கே சொந்தம் !!

”நம்மவர்” செய்ததில்
நாலில் ஒரு பங்கு

நடிப்பில் செய்யவில்லை
நண்பர் அக்‌ஷய் குமார் !!
நடிப்பு ரொம்ப சுமார் !!

செம்மை யில்லா
சென்னைத் தமிழை
"செம்மை"யாய்ப் பேசி

முதல் காட்சி முதல்
முழுப் படத்திலும்
முறுக்கேறிய உடம்போடு

பிசிறில்லாது
பிய்த்து உதறியிருப்பார்
கலை ஞானி !!




நடிப்பு என்பதை
நாவில் அன்றி

நாடியில் வைத்திருக்கிறாள்
நாளும் அவர்க்கு கலைவாணி !!

வசனம் என்பது பெருமளவில்
வகைப்படுத்துகிறது ஒரு படத்தை !!

தனித்து நிற்கும்
தரமான எழுத்தால்

தட்டுகின்றார் கிரேசி
தமிழ்ப் படத்திற்கு
முதல் இடத்தை !!

ஆர்ப்பாட்டங்களில் கொழுத்தும்
ஆங்கில நடிகர்களை இழுத்தும்

2002 படத்தை
2009 படம்

இயக்கம், இசை என
இதர துறைகளிலும்
இம்மியும் வெல்லவில்லை !!

இருப்பினும்
இந்தி உலகு

நம்மவர் பெருமையை
நாளும் சொல்லவில்லை !!

படம் முடிந்ததும்
படிந்தது மனதில் குறை !!
தமிழ்த் திரைக்கு அதுவே
தனிப் பெருங் கறை !!

”அம்மாவும் நீயே” தொடங்கி
ஐயிரண்டு வேடம் வரை

ஐயம் திரிபற
ஐம்பது ஆண்டுகளாய்

ஏது செய்யினும்
ஏதாவது ஓர் விதத்தில்

ஏற்றமுற வேண்டும் என
ஏங்கித் தவிக்கிறான் ஒருவன் !!
ஏனையோரைப் போல் அவனும்
“உன்னைப் போல் ஒருவன்” !!

அவனுக்கு
அவ் வழியில்

இன்றைய தலைமுறை
இளைய “தளபதிகள்”
இனி வரும் காலங்களில்

செய்யப் போவது யாது ?
விடைக்கு இன்றுவரை
விறைத்து நிற்கிறதென் காது !!

Labels: , , ,

Thursday, September 10, 2009

தொட்டனைத்தூறும் மணற்கேணி. .



அது அமெரிக்க அதிபரின்
அதி முக்கிய உரை !!
அவையாக அவர்
அதற்கு தேர்ந்தெடுத்தது
அமெரிக்க பள்ளிச் சிறுவரை !!

பேச்சின் மையம்
மெச்சும் இவ் வையம் !!

முப்பால் எழுதியவன்
முன்னூற்றி தொண்ணூற்றொன்று முதல்
நானூறு வரை

நாவார நவின்ற
நாளும் பயன்தரு ”கல்வி” !!

தேர்ந்தெடுக்கப்பட்ட ஊடகம்
தொலைக்காட்சிப் பெட்டி !!

அனேக பள்ளிகளில்
அனைத்து சிறார்களும்
அமர்ந்தனர் அதன் முன்
அத்தேதியில் முட்டி !!

மதி தெரியா
மதியம் 12 மணிக்கு

அதிபர் உரை
அரங்கேறிய
ஆர்லிங்டன் பள்ளி அரங்கத்துள்

அனைவரிடத்தும்
அமைதியான மூச்சு !!
அழகுற ஆரம்பித்தது பேச்சு !!

செவிக்கு உணவாக
செறிய கருத்துக்களை
செவ்வனே ஓபாமா
செப்பினார் !!

கட்சி சாரா வண்ணம்
கச்சிதமாய் பேசி

வீணர்கள் வாயில்
வீணில் விழாது தப்பினார் !!

”நாளை நம்
நாடு முன்னேற
நாளும் உமக்கு வேண்டும்
நாடி நரம்புகளில் துடிப்பு !!
கைகொடுக்கும் அதற்கு படிப்பு !!

வேறு சிந்தனையை
வேரறுத்து
வேகமாய் முன்னேறுக !!

இட்டப்பட்ட பணியில்
இடம் பிடிக்க
இட்ட பணியிலின்று
இனிதே தேறுக !! “

இதுதான் அதன் சாரம் !!
இதற்கு அவர் எடுத்தது
இருபது மணித்துளி நேரம் !!

அன்றைய தேதியில் அவ்வுரை
அத்தியாவசியமா
அனாவசியமா என

அனேகர் கேட்கின்றனர்
அடித்து !!

அதை நீங்களே
அறுதியிடுங்கள்
அவ்வுரையைப் படித்து !!

அடியேன் எழுத விழைவது
அதைப் பற்றியல்ல !!
அதன் குறை நிறை சுற்றியல்ல !!

இவ்வுரை நடக்கும் முன்
இரண்டு நாட்களாய்

பள்ளி செல்லும் பிள்ளையுள்ள
பலரது வீட்டில்
பலமுறை அடித்தது தொலைபேசி !

அலம்பித் தள்ள முடியுமோ
அது தந்த தொல்லையை
விலை பேசி ?

அழைப்பு வந்த இடம்
கல்வித் திட்டத்தை
கட்டமைக்கும் துறையினின்று !!

அழைப்பவர் யார் என
அறிந்த பிறகு
அதனை எடுக்காது
அவமதிப்பது முறையுமன்று !!

”அதிபர் நிகழ்த்தவிருக்கிறார்
அழகான ஒரு உரை !!

அதனைப் பள்ளியில்
அருமையான உம் பிள்ளை
அமர்ந்து பார்ப்பதில்

முழுமனதாக உமக்கு
முதற்கண் சம்மதமில்லையேல்

முடிவாக அதனை
முன்னமே உரை ”!!

”எனக்கு இது
ஏற்புடையதில்லை என
எமக்கு எழுது !!

எங்கு படிக்கிறாரோ அங்கு
எங்கேனும்

உள் பக்கமாய்
உம் பிள்ளைகளை
உட்கார வைப்பர் அப்பொழுது !! “

இதுவே அவர்கள்
விடுத்த செய்தி !!
இருகண்ணும் விரிந்ததெனக்கு
இதைக் கேட்டதும் வியப்பெய்தி !!

அச் சலுகை கிரமமா?
அக்கிரமமா?

என சிந்தித்தே
என் முடி கொட்டியது !!

பலரை எதற்கிது என
பலமுறை கேட்டும்
பலத்த ஏமாற்றமே கிட்டியது !!

குடியரசுக் கட்சி
சனநாயக கட்சி என

கட்சி சார்ந்த பூசல்கள்....
தொட்டதற்கெல்லாம்
நீதித் துறை வாசல்கள்....

இவையன்றோ தீர்மானிக்கின்றன
இவ்வாறு வழங்கப்பெறும் சுதந்திரத்தை ?!

நானிலத்தார் இடவேண்டாமா
நாளை நம் சந்ததி

எக் கட்சியோடும் சேராது..
எவ் உரிமையையும் மீறாது..

தனித்து தரணியில்
தலையெடுக்க வேண்டுமெனும்
தலையாய உரத்தை ?

பேசுவது ஒரு நாட்டின்
மேதகு தலைவர் !!

குறுகிய கண்ணோட்டமும்
குற்ற மனமும் கொண்டோரே

தாம் குடியரசுக் கட்சி
தமக்கெதிர் சனநாயக கட்சி என

அருஞ்சுணங்கனாய்
அரசியல் பேசி அலைவர் !!

எடுத்த பணி
எப்பணியாயினும்
அப்பணிக்கு உன்னை
அர்ப்பணி

என...
எடுத்துச் சொன்னது
ஓபாமாவின் செவ் வாய் !!

ஒரு கட்சியை சார்ந்துவிட்டதால்
ஒவ்வாதார் அவர் என
ஒதுங்குபவர்க்கு

ஒருக்கால் இருக்கலாம்
ஜாதகத்தில் செவ்வாய் !!

ஆயிரத்து முன்னூற்று முப்பதில்
அவர்க்கு எந்தை வைக்கிறான்
அழகான ஓர் பதில் !!

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு !!

அதனைப் படிப்பதால்
அவர்க்கு வரட்டும் செறிவு !!

Labels: , , ,

Wednesday, September 09, 2009

மங்கையராய் பிறப்பதற்கே. . . .



அனாதரவாய்
அழுதது ஒரு குடும்பம்
அதி தினமும் வாடி !!
வேதனை தீர்க்க
வேண்டியது நீதிமன்றத்தை நாடி !!

இரண்டு தம்பி
ஈரிரண்டு தங்கையோடு

இசைபட வாழ்ந்த பெண்
இஷ்ராத் ஜஹான் !!
இருந்திருந்தால் அவளை
இரண்டாவது மும்தாஜாக
மணந்திருப்பான் ஷாஜஹான் !!

”லஷ்கர் தொய்பாவின்
லட்சியத்திற்கு நீ உள்கை!!
தெரியும் எமக்கு
தெள்ளத்தெளிவாக உனது
தீவிரவாதக் கொள்கை !!”

என..
எவ் ஊரிலோ
எவ் உத்தரவின் பேரிலோ

சிந்தியாது சுட்டது
சிரிக்கும் தரத்திற்கு
சீரழிந்துவிட்ட காவல் துறை !!

அதன் முகத்தில் இன்று
”அது படுகொலை” என
விட்டது நீதித்துறை அறை !!

எப்பக்கம் நீதியோ...
எவர் நிரபராதியோ....

என்னைச் சூழ்கிறது
எண்ணொணா விசனம் !!
விசனத்தின் மூலம்
” நள்ளிரவில்
நடுச்சாலையில்
நம் பெண் தனியாய் “ எனும்
மகாத்மாவின் வசனம் !!

பதி விரதையோ...
படும் கிராதகியோ...

பட்டப் பகலிலேயே
பாதுகாப்பில்லை
பாவையர்க்கு நம்
பாரத வீதியில் !!

தருமம் மரித்ததை
தட்டிக் கேட்க

நரேந்திர மோடிக்கு
நாதியில் !!



Labels: , , ,

Thursday, September 03, 2009

ராஜசேகரா. . . . .

ysr

இறப்பைச் சொல்லி
இறவா இகழுற்றது
இந்நாள் !!
இயல்பென ஏற்கமுடியவில்லை
இழப்பினை என்னால் !!

அழுகுரலில் விம்முகிறது
ஆந்திரப் பிரதேசம் !!

பிறந்தவர் இறப்பது
பிரபஞ்ச விதி என
பிதற்றித் தேற்றுகின்றது அவரை
பிற தேசம் !!

மறைந்த முதல்வர்
மறைந்த விதம்
மனதை உறுத்துகிறது !!
மாற்றான் என்னையும்
மாளாச் சோகம் வருத்துகிறது !!

அவரைக் கொண்டு செல்ல
அவசரத்தில் வந்த காலனும்
தரையிறங்கவில்லை !!
அதனாலோ என்னமோ
அவரது வானூர்தியும்
தரை இறங்கவில்லை !!

”அடித்தளத்தில் இருப்பவனும்
அனுபவிக்க வேண்டும் வளர்ச்சியை !
அனுதினம் உலகு
அவன் முகத்திலும் காணட்டும்
அலர்ந்த தாமரையின் மலர்ச்சியை !!”

அகால மரணத்தால்
அமரரான முதல்வர்
அவ்வாறு சொல்லி
அன்று பிடித்தார் ஆட்சி !!

அது அமையின்
அவனி உணரும்
அன்பர் அவரது
அரசியல் மாட்சி !!

உலகு அறிய வேண்டும்
உன்னதமான இரு நீதி !!
முக்கியமாய் அரசியல்வாதி !!

குணம் ஒதுக்கி
பணம் பதுக்கி

தம் வளர்ச்சிக்கே
தனித்து பாடுபட்டு..
தீய வழியில் ஈடுபட்டு..

நாட்டை முன்னேற்ற நினையாது
நாளும் முனையாது

எல்லாம் எமதே என
காலை ஆட்டுகின்றீர் !
என்றோ ஒரு நாள்
காலை நீட்டுகின்றீர் !!

அந்தகன் உம்மை
அழைத்த வழியில்
அநீதி இருப்பின்

”எதிரிக்கும் இவ்வழியில்
எமன் வர வேண்டாமென”

உம்மால் உடல் தளர்ந்தவனும்
உகுக்கிறான் கண்ணில் நீர் !!
அத்தகைய நல்லவனை
அற வழியில்
ஆளளாமே நீர் ?

எனக்கும் ரெட்டிக்கும்
எவ்வொரு தொடர்பில்லை !!

எனினும்
எண்ணொணா சோகத்தில்
எதையேனும் சொல்லி
என்னைத் தேற்றவே
என் நா எழவில்லை !!

மானுடமே !!
நிலையாமை என்பது
நிதம் நாம்
நினைய வேண்டிய ஒன்று !!

இருப்பவர் யாவரும்
இருக்கும் யாவையும்

இருக்கும் யாம்
இருக்கும் வரை !
இவ் வையம்
இவ்வாறன்றோ வாழ்கிறது
இதுவரை ?!

இதுகாறும் கண்டிருக்கிறோமா
இவ்வாறு நினையா ஒருவரை?

உயிரற்று உடல்
உறங்கும் நாள்
உடன் இறங்குகின்றோம் ஆறடியில் !!

அழகுறச் சொல்லுகிறான்
அதனை ஒருவன் ஈரடியில் !!

மூவிரல் உயர்த்தியவன்
மூதுரையில் சொல்கிறான்

“நெருநல் உளனொருவன் இன்றில்லை” !
அதனை மீறும் சொல்
அவனியில் ஒன்றில்லை !!

Labels: , ,