Monday, May 26, 2008

பழகிய அசுரன்...அழகிய அசுரன்.. - 2

gatothkach
..
நிடினியும் டோனியும்
நிண்டெண்டோவும் சோனியும்

அசுர கதியில்
அந்திப் பகலாய்
அலறி இருக்கும்
அவசர யுகம் !!
அதனால் இன்று
அசுரனுக்கும் வேண்டும்
அதி புதுமையான
அறிமுகம் !!

பிரதி தினமும்
பிள்ளைகளை அவை
போட்டி போட்டு கட்ட..
பிரயத்தனப் பட்டும்
இதிகாசங்களால் இயலவில்லை
பிஞ்சுகளின் காதினை எட்ட..

போதாததற்கு
தினமும் தொலைக்காட்சியில்
திகட்டுமளவு பேட்டி !!
பாட்டிகளுக்கு ஞாபகம் இருக்குமா
பேரன் பேத்தி ?!

புத்தகம் இல்லை
படுத்துறங்கும் போதும்
பிள்ளைகளின் தலைப்பக்கத்தில் !
அர்த்தம் இல்லா
அர்த்தராத்திரியிலும்
அவர்கள் நினைவெல்லாம்
ஆர்குட் வலைப்பக்கத்தில் !!

சர்வ நேரமும்
சனம் இவ்வாறு
சலனச் சிந்தையில்
சஞ்சரிக்க...

முடிவெடுத்து விட்டான் இவன்
முழுமூச்சாய் அவர்களை
நச்சரிக்க...

சித்திர வடிவத்தில்..
புதிய படிவத்தில்..

திரும்புகின்றான் திரைக்கு
இந்நிலையில் இன்று..
தவறாது பாருங்கள்
”திரையரங்கு” சென்று....

கோடம்பாக்கத்தில் கேட்டால்
கோணாமல் சொல்வர்
சிரிப்புக்கு மறு பெயராக
சிங்கீதத்தை..

இன்று
இயக்கியதோடன்றி
இசைத்தும் இருக்கிறார்
இப்படத்துக்கு அவர்
சங்கீதத்தை..

இந்தியர் சிலரது
நெடுநாளைய வருத்தம்...
அனிமேஷனுக்கும் இந்தியனுக்கும்
ஏழாம் பொருத்தம் !!

அக்குறை இப்படத்தால்
அறவே தீரட்டும் !!
அவனியோர் நம் பெயரை
அனுதினமும் கூறட்டும் !!

இது போன்ற முயற்சிகள்
மேற்கெலாம் ஏராளமாய் !!
இந்தியாவில் எடுத்தமைக்கு
வரவேற்கலாம் தாராளமாய் !!

Labels: , , ,

Friday, May 23, 2008

பழகிய அசுரன்...அழகிய அசுரன்.. -- 1

200px-Mayabazar_rangarao

பீமன் இடும்பிக்கு
பீடின்றி பிறந்தவன்!
பாண்டு புத்திரர்க்கு உதவியே
பாந்தமாய் சிறந்தவன் !!

கர்ணனின் சக்தி ஆயுதத்தால்
கருணையின்றி மாண்டவன் !
அவனின்றி தப்பித்திருப்பானா
அர்ஜுனன் எனும் பாண்டவன் ?

போற்றுவீர் அவனது
பேருதவியை நித்தியம்..
போலியாகியிருக்கும் அவனின்றி
பலராமனது சத்தியம்

ஆம்..
அவனின்றி வத்சலை
எனும் பூவை
கைப்பிடித்திருக்க முடியுமா
அபிமன்யூவை ?

அற்றை நாளில்
அனேக திரைப்படங்கள்
அமைந்தன மெதுவாய்..
அது புராணப் படங்களுக்கும்
அவ்வப்போது பொருந்தும் பொதுவாய்....

அங்கொன்றும் இங்கொன்றுமாய்
அவற்றுள் சில
தனித்து நிற்கும் !!
அதன் சீட்டுக்கள்
அதிவிரைவாய் விற்கும் !!

நிறைய இருக்கும் அவையுள்
மாயக் காட்சிகள் !!
நிறைவாக ஓடும்
நிதமும் நான்கு காட்சிகள் !!

இன்னாரென்றில்லாது கவரும் அது
இருபாலரையும் !!
விட்டிடாது அது
அவரது பாலரையும் !!

சுற்றுப்புற சனம் அறிய
சுவரொட்டி ஒட்டுகையில்..
திமு திமுவென
திரளும் ஊர்
கீத்துக் கொட்டகையில்..

கூட்டத்தில் நெரித்து...
சீட்டைப் பறித்து...

கையகல கைக்குட்டையை
தரையில் விரித்து....
தட்டு தட்டாய்
லட்டு லட்டாய்
வாயுள் போவது கண்டு
சிரித்து....

நாக்கை மடித்து
சீட்டி அடித்து..
நமக்கே வெறுக்க
நகம் கடித்து..

காட்சிக்குக் காட்சி
காணத் தெவிட்டாத படம்
மாயா பஜார் !!
தரையிலமர்ந்து பார்த்தே
தேய்ந்திருக்கிறது பலரது நிஜார் !!

கண்டோம் அப் படத்தில்
கடோத்கஜனாய் ரங்கா ராவை!
கட்டிலடங்கா கற்பனையில்
கர்ஜித்தே கழித்திருக்கிறோம்
கணக்கற்ற ராவை !!

முறுக்கு மீசையும்
முறுக்கேறிய உடம்புமாய்...

வந்து நிற்பார் திரையில்
கதையோடு !!
ஒரு வினாடியில்
ஒன்றி விடும்
ஒட்டு மொத்த சனம்
கதையோடு !!

இது..

-- தொடரும்...

Labels: , , , , , , , ,