Thursday, April 27, 2006

நிலம் - 22

காலையில் மண்ணை
காசு என்கிறோம் !!
சொத்தைப் பெருக்குகிறோம் !!

மாலையில் அதனை கால்
தூசு என்கிறோம் !!
"சொத்தை" என
பெருக்குகிறோம் !!

அனுதினம் நிலம்
மிதிபடுகிறது
நம் கால் அடியில் !!
அதனை நாம்
அளப்பதும் அடியில் !!
அதற்குச் சண்டை
முடிவதும் அடியில் !!

ஈரடியில் வந்த நாம்
பாரடி! பாரடி! என
பார்ப்போர் பேசவேண்டுமென
பறக்கிறோம் !!

காலடியில்
அருளாய் உதித்தவனும்
நாலடியில்
பொருளாய் பதித்தவனும்
சொல்வது..

-- தொடரும்

நிலம் - 21

நிலத்தை
பதிவு செய்கிறோம்
பத்திரம் பத்திரமாக...
பிறகு விழி
பிதுங்கி பாதுகாக்கிறோம்
மிக "பத்திரமாக" !!

கடல் நிலத்தின்
வரம்பு !!
காண முடியாது அவ்
வரம்பு தாண்டி
மரம் பூ !!

மனிதனின் ஆசைக்கு
ஏது வரம்பு?
ஆசையை வென்றது
எந்த உடம்பு?
அது தானே உண்டாக்குகிறது
சோகத் தழும்பு ?

அதற்கு
கணக்கே இல்லை !!
என்று இருந்தது
எல்லை?

வேலி மேல் வேலியாய்
வேலியோடு நிலம்
கேலி மேவ வாங்குகிறோம் !!
கடன் சுமையில் தூங்குகிறோம் !!

-- தொடரும்

நிலம் - 20

ஜோடியாய் சேர்ந்து
கோடியாய் பெற்று

மனிதன் நிலத்துக்கு
தந்திருக்கிறான்
மக்கள் பெருக்கம் !
சன நெருக்கம் !!

இருப்பினும் இருவர்க்கும்
மிக நெருக்கம் !!

மனிதனுக்கு பெருமை
நிலத்தை வாங்குவதில் !!
நிலத்துக்கு பெருமை
அவனை தாங்குவதில் !!

தாங்க முடியாத
கோபம் வரின்
தாங்க முடியாமல் நிலம்
சில சமயம் ஆடும் !

ஆடும் போது
ஆடும் ஆடும் !!
வீடும் ஆடும் !!

மனிதன் நிலத்தை
வளைத்துப் போடுகிறான் !!
வளைத்ததுக்கு கடன் அடைத்து
களைத்துப் போகிறான் !!

-- தொடரும்

நிலம் - 19

கடல் கொண்ட
பகுதிக்கு பெயர்
நெய்தல் !!
அதன் வேலை
காலையில் வெள்ளியாய்
மாலையில் கருநீலமாய் என
வேளைக்கு ஒன்றாய் ஆடை
நெய்தல் !!

இதனூடே
மேகத்துக்கு வயிறு நிரப்பச்
செய்தல் !!
மழை பெய்தல் !!
மழை இல்லையேல்
எங்ஙனம் நாம்
உய்தல் ?!

பூமியில்..
கடலின் விழுக்காடு
எழுபது !!
நிலம் கொண்டது மீந்த
முப்பது....

இந்த முப்பதுக்குள்...

என்ன சொல்ல !! -
நிறைய நடக்கிறது
தப்பதுக்குள் !!

-- தொடரும்

Thursday, April 20, 2006

நிலம் - 18

காரணம் அங்கவள்
எரியும் சுள்ளி !!
நிற்பாள் கால் வைப்பாரை
எள்ளி !!

கொஞ்ச முடியாது
அவளை கள்ளி! என்று
தூக்கி அள்ளி !!
ஏனெனில் அவளிடம் உண்டு
சப்பாத்திக் கள்ளி !!

மணல் சதா
எரியும் !!
கானல் நீர்
தெரியும் !!
மணற்காற்று திரியும் !!

ஆயினும்..
அம்மண் தரும்
எண்ணையில் எரிவதன்றோ
மண்ணெண்ணை
"திரியும்" ?!

மண்ணை தோண்டினால்
எண்ணை !!
அவ் எண்ணையன்றோ தருகிறது
அராபியருக்கு அனுதினம்
வெண்ணை ?!

-- தொடரும்

நிலம் - 17

நிலத்தின்
நாலாவது முகம்
கனல் !!
தணல் அதன்
மணல் !!
அங்கு காண முடியாது
நுணல் !!

அது பாலை !!
பார்க்க முடியாது
அதில் பாலை !!
ஒட்டகம் தவிர
வேறு மிருகம் அங்கு
ஆட்டாது வாலை !!

வாசிக்க முடியாது
தபாலை !!
எவர் நீட்டுவார்
ஓலை? !!

கழற்றும் அத்து மீறி
நடப்பார் தோலை !!
கிடையாது அதனிடையே
சோலை !!
மண் முகடுகள் தான்
சாலை !!

நிலமகள் அங்கு
இருக்க மாட்டாள்
துள்ளி !!
யாரோடும் சேர
விரும்பாள் நள்ளி !!

-- தொடரும்

Monday, April 17, 2006

நிலம் - 16

நாள் ஆகும் !!
மெய்யில் வெய்யில் ஏற
நிலம் வேகும் !!

வயலின்
களை மாறும் !!
பயிர் ஊடே
களை ஏறும் !!

அதை பிடுங்க
ஊரும் ஊரும் !!
வேலையில் ஊறும் !!
ஊறிய கைகள்
களைப்பாறும் !!

ஒரு நாள்...
உருவாகும் புதிர் !!
கருவாகும் கதிர் !!
நிறையும் குதிர் !!

இப்படித்தான் உருவாகிறது
சந்தடி இல்லாமல் ஒரு
சந்ததி !!

இதைத் தான்
சூடி தந்த கிழவி
"வரப்புயர" என்று
பாடினாள் !!
அதியமானுக்கு அரசின்
இலக்கணம் சூடினாள் !!

படித்தால் நம்
சிறப்புயரும் !!
பிறப்புயரும் !!

-- தொடரும்

நிலம் - 15

வெல்லும் தன்
நெல்லும்
என
உழவன் நிலத்தைக் காப்பான்
அல்லும்....
இப்படி சில நாள்
செல்லும்..

விதை-
நிலமகளின் சதை
கீறும் !!
அன்றோடு அதன்
கதை தீரும் !!

மீண்டும்
விதையாவது எப்போது
என எண்ணி
விதை போகும் !!
மண்ணோடு மண்ணாய்
ஆகும் !!

உருவாகிறது நாற்று !!
மெல்ல உரசுகிறது காற்று !!
உருண்டோடுகிறது பிற அழகு
இதன் முன் தோற்று !!

எங்கும் பச்சை !!
பசை தரும் பச்சை !!
அப் பச்சைக்குத் தான்
அவனியில் அனு தினமும்
சர்ச்சை !!

எச்சையோடு அப்
பச்சை சேர்ந்தால் தான்
இழுக்க முடியும்
மூச்சை !!

அது இல்லையேல் எவரும்
பிய்த்துக்கொள்வார் பிச்சை !!
எடுப்பார் பிச்சை !!

-- தொடரும்

Thursday, April 13, 2006

நிலம் - 14

உரம்!
தாவரம் செழிக்க வரும்
வரம் !!

எரு !!
நிலம் தொழும்
குரு !!

நிலமகள் கவிதை !!
உழவன் கவிஞன்!!
இவள் கை பற்றிய
கொழுநன் !!

அவள் சொல்கிறாள்
அவனுக்கு...
விதை அதை
விதை !
தொடங்கும் கவிதையின்
கதை !!

உழவன்
தலை சீவுகிறான் !!
வேலைக்குத் தாவுகிறான் !!
இனத்தைக் கூவுகிறான் !
தானியம் தூவுகிறான் !!

-- தொடரும்

நிலம் - 13

கரம்பு, தரிசு
அனைத்தும் அவனுக்கு
பரிசு !!

அவனது ஏர் !
அதுதான் நிலமகள் ஏறும்
தேர் !!

எருது !!
நிலமகள்
நிலத்துக்கு தந்த
விருது !!

அம்மண்ணின் சேறு வாசம்
அம்மணியின் வாசம் !!
தினமும் தேடுவாள் அதன்
சகவாசம் !!

கேணி !!
நிற்பாள் அவள் அங்கு
நாணி !!

நதி !!
நிலப்பெண்ணின்
ஜதி !!

ஓடை !!
அவள் ஆடை !!

சால் !!
அதன் மேல் இவளுக்கு
மால் !!

வரப்பு !!
இரப்பு நீங்க தரும்
இவனுக்கு சிறப்பு !!
அவளுக்கு மெய்சிலிர்ப்பு !!

-- தொடரும்

Monday, April 10, 2006

நிலம் - 12

மருதம்..
அதன் அழகு
மதுரம் !!
நிலமகளுக்கு
நிதம் மதம் தரும்
அமிர்தம் !!

உழவன் !!
நிலமகளை தினம்
தொழுவன் !!

ஒரு போதும் அவன்
பிற ஒன்றை
தழுவன் !!
அறம் வழுவன் !!
தன் வேலையினின்று
நழுவன் !!

அதிகாலையில் எழுவன் !!
உழுவன் !!
உழாக்கால் அழுவன் !!
கால் கை கழுவன் !!

தள்ளாமை வந்த போதும்
எள்ளாமை வராது
அவனைக் காப்பது
உழவைத் தள்ளாமை !!
அதில் அவன் காணும்
வெள்ளாமை !!

அவன்
அகராதியில் இல்லை
முயலாமை !!
அற வழியின்றி
பிற வழி
செல்லாமை !!

புவியில் அவன் போக்குவது
இல்லாமை !!
இதை உணராதிருப்பது
கல்லாமை !!
அவ்வாறு இருப்போர்
கல் ஆமை !!

-- தொடரும்

நிலம் - 11

மூன்றாவது நிலம் -
அது விளைகளம் !!

கழனி
கேதாரம் என
பல பெயர் அதற்கு !!
அறிமுகம் தேவையில்லை
இதற்கு !!

கழனி !
பார்த்திருந்தால்
போயிருக்க மாட்டான் முருகன்
பழனி !!

வாய்க்கால்...
வயல்...
விளைச்சல்...
உண்டு பண்ணும்
இன்பமான உளைச்சல் !

நிலமகள்
தருமம் கருதி
கருமம் ஆற்றும்
இடம் !

அது மருதம்..
மரகதம் அதன்
சருமம் !!

-- தொடரும்

Thursday, April 06, 2006

நிலம் - 10

அடுத்து...
இருள் படர்ந்த
அடர்ந்த காடு !!- அதில்
இருக்காது மாடு !!

அதன் மறு பெயர்
அடவி !!
அதில் தொலைந்தால்
மனிதன் தவிப்பான்
வழி தடவி !!

பஞ்ச நிலங்களில்
அஞ்ச வேண்டிய
அது முல்லை !!
அல்லை மூட்டையாக
வைத்திருக்கும் அதன்
கொல்லை !!

சில சமயம் பார்க்கலாம்
அதனுள் முல்லை !!
நிறைய பார்க்கலாம்
முள்ளை !!

குறவன் - மலைவாசி !!
மறவன் - வேடன்
எனும் காட்டுவாசி !!

இந்நாளில் இவர்களை
நாம் சொல்கிறோம்
ஆதிவாசி !!

-- தொடரும்

நிலம் - 09

நிலம்..
தாது கனிமங்களின்
சங்கம் !!
வைரம் தங்கம்
அதன் அங்கம் !!

புஞ்சை என இகழ்ந்தாலும்
நஞ்சை என புகழ்ந்தாலும்..

நஞ்சை தராமல்
பஞ்சை தரும்
நாம் அகழ்ந்தால் !!

சோம்பலின்றி நாம்
திகழ்ந்தால் !!

பகை
நகை
புகை
குகை என
பல வகை
பார்த்த நிலம்
தகையானது !!

குறிஞ்சி!!
மலையும் மலை சார்ந்த
பகுதியும் !!
குற்றாலக் குறவஞ்சி கூறும்
அதன் தகுதியும்
வனப்பு மிகுதியும் !!

-- தொடரும்

Monday, April 03, 2006

நிலம் - 08

அவன் தான் முன்பு
நிலத்தை தோண்டி எடுத்தான்
கேழலாய் !!
அந்நிலத்தில் அன்றோ
இன்று நடக்கிறது காரியம்
ஊழலாய் ?!

நிலம் ஆளும் மகள்
ஓட்டுக்கு கரம் குவித்தாள் !
பிறகு சொத்தையன்றோ
குவித்தாள் ?!

பாதங்கள் படியும் நிலம்
பஞ்ச பூதங்களில் ஒன்று !!

அவனே விண்ணரசு !!
அவன் மண்ணில் அரசாக
மண்ணுக்கு வந்தான் -
பிருதிவி லிங்கமாக
கஞ்சியில் !!

திக்கெண் நிற்கும்
முக்கண் கொண்ட
சொக்கனை
முதற்கண் என மதிக்காது
மண் என மதித்த

அவ்வூர் சந்நியாசி
வாழ்கிறார் இன்று
சிறைக்
கஞ்சியில் !!!

அவர் செய்தது விகற்பம் !!
ஆதலின் ஆனார்
மிக அற்பம் !!

-- தொடரும்

நிலம் - 07

நிலம்..
மனிதனின் பலம் !!
இதை அடையத்தான்
வைக்கிறான் அவன்
கிரி வலம் !!

நிலம் புலம்
இருந்தால்
கொழிக்கும் நலம் !
செழிக்கும் குலம் !!

செயலை இறைக்கும்..
செவியை மறைக்கும்...
தந்து
நன்னெறி காட்டியபடி
வாழும் மனிதருக்கும்

மண் வெறி எனும்
நில ஆசை கண்ணை
மறைக்கும் !

மனிதன்
உழுத போதும்
அழுத போதும்
நிலம் தான் தந்தது...

சீதையை !
கீதையை !!

ஹரியின் தாரம் வந்தது
போர் அடிக்கும் களத்திலே !

ஹரியின் ஆதூரம் வந்தது
போர்க்களத்திலே !!

-- தொடரும்