Monday, April 28, 2008

தமிழ்த் தாத்தா....

UVS_Iyer
Picture Courtesy: Wikepedia

”தொன்மொழிகளின் தேவாலயம்”
எனப் போற்றப்படும்
செம்மொழியாம் தமிழை....
மாறா வனப்புடைய
தங்கச் சிமிழை...

காலம் சில நாள்
கறையானே காவலாய்
குடி வைத்தது !!
அது ஒருவரது
உள்ளத்தை அறவே
தைத்தது !!

தில்லை முதல்
நெல்லை வரை
எல்லையில்லாது....
எடுப்பார்
தொல்லையில்லாது....

பல மூலையில்
பனை ஓலையில்

இருந்தன
பல சுவடிகள்
கேட்பாரற்று !!
இரண்டாம் பட்சமானது
தமிழ்ப் பற்று !!
காரணம் புற்று !!

சங்கம் வளர்த்த தமிழ்
அங்கம் சிதைவதை
பங்கம் அடைவதை

முடியவில்லை ஒரு
தாத்தாவால் தாங்க..
மேலும் கீழும்
மூச்சு வாங்க....

அங்கிங்கெனாது
எங்கெங்கும் சென்று...
பல நாள்
வெறும் காற்றையே
மென்று....

ஓலை தேடுவதே
வேலையாய்...

கண்டெடுத்தார்
காணக்கிடைக்கா
காப்பியங்களை
அத் தாதை..
தமிழின் மீது
தாளாப் பற்றுடைய
மா மேதை !!

அவரின்றி..
கிடைத்திருக்குமா நமக்கு
எட்டுத் தொகையும் ?
ஈடாகுமா அதற்கு
எத் தொகையும் ?

அவர் சிரமத்தை
அவர் கண்டெடுத்த
பதினெண் கீழ் கணக்கும்
பத்துப் பாட்டும்
என்றும் காட்டும்
தமிழ் தரணியிலுள்ள வரை
அவர் பெருமையை
நிலை நாட்டும்...

28/04
”தா ! தா !” என
தமிழைச் சேர்த்த
” தமிழ்த் தாத்தா”
உ வே சா
நினைவு தினம்...
தமிழனே..
நினை நீ அவரை
தினம்....

மொத்தத்தில்...
கவலைக் களை காணின்
அதனைக் களை என
தமிழ் தேடுகிறது சில
தாத்தாக்களை...

தமிழை மீட்டார்
அந்தத் தாத்தா !!
தமிழனை மீட்பாரா
இன்றைய தாத்தா?

Labels: , , , , ,

Thursday, April 17, 2008

ஈழம் - 01

இராவணன் முதலாய்
தொடங்கிய சொந்தம் !
இராஜ இராஜனால்
இறுகிய பந்தம் !!

சீதையின்
சிறை வீடு !!
சினத்தில் இன்று
தமிழகத்திற்கு விடுக்கிறது
முறையீடு !!

பொறுப்பில் இருக்கும்
கருப்புக் கண்ணாடியே !
கத்திக் கத்தி சோர்கிறது
என் நாடியே !!

எது உமக்கு
பெரிது....
இராமர் பாலமா ?
இடைவிடாது கேட்கும்
இனத்தார் ஓலமா ?

எனக்கு
எனதென்று சொல்லிட
தேசம் இல்லை !!
உனக்கு என்னவன்
எனச் சொல்லிட
நேசம் இல்லை !!

மல்லேசுரத்தில்
மலாய்த் தீவில்
தமிழன் மருண்டான்..
தமிழ் நாட்டில்
தமிழன் வெகுண்டான் !!

மட்டக்களப்பிலும்
தமிழன் அரளுகிறான் !
எத் தமிழன்
தமிழ் நாட்டில்
மிரளுகிறான் ?

நீ "அஞ்சுக்கு"
அஞ்சுகிறாய் !!
பிறகு ஏன்
"எம் இனம்"
என என்னை
கொஞ்சுகிறாய்?

ஏன் முழக்குகிறாய்
பாசச் சங்கு ?
எங்கேயும் இல்லை
எமது துயரில் உந்தன்
பங்கு !

எம் நாட்டு
அகதிகளா?
உம் நாட்டு
தொகுதிகளா?

எதன் மீது உனக்கு
பாசம்?
ஏன் இன்னும்
"தமிழ் தமிழ்" எனும்
வெளி வேசம் ?

எமது
போர் ஒன்று !
நமது
வேர் ஒன்று !!
இருக்கலாகாது
இதை மறுக்கும் சிந்தனை
வேறொன்று !!

உடைத்து விடு
எமது கை விலங்கை !!
உருவாகும் புதியதோர்
இலங்கை !!

வைக்கிறது ஈழம்
வழக்கை !!
வலிக்கிறது எனக்கு
வலக்கை !!

கொடுக்க வேண்டும்
கோட்டையில் உள்ளோர்
இதற்கு பதில் !!
இன்றைய தேதியில்
இன்றியமையாத பிரச்சினை
இருக்கலாமா
இதற்கு பதில்? !!

வந்து விழுந்த
வார்த்தை கண்டு
வெறிக்கிறேன்..
எனது கருத்தை
சிறிது விரிக்கிறேன் !!

-- தொடரும்

Labels: , , ,