Monday, April 21, 2008

சரஸ்வதி சதகம் 11 - 20

11)
பன்னீர் வேண்டாம் பட்டாடை வேண்டாம்
நன்னீராடி வெண்ணீறணி நாளும் - பேச
நாச்சொல் வைத்தாள் நாமகளை வேண்ட
பாச்சொல் ஒன்று போதுமே

12)
சாவித்திரியாய் சாரதையாய் சர்வ ரூபிணியாய்
மேவியிருப்பாள் சிருங்கேரியில் காண் - அனைத்திலும்
ஆயாய் அவளே அமைய அறிந்திலதை
ஆயாய் நீயரு மனமே

13)
சர்வ வித்தையும் சரஸ்வதியில் தொடங்கினும்
கர்வமில்லா அடக்கம் காண் - அவளன்றி
ஆறறிவு பெற்றும் ஐந்தறிவாய் இருப்போம்
ஓரறிவால் ஓர்ந்து பார்

14)
ஓதாத சனமும் மீதான தனமும்
போதாத மனமும் பாழ்! - ஆங்கண்
மாதா பார்வை மிகுக்கின் மாசுமிகு
தீதானது சேரும் தீ

15)
நில்லாச் சிறப்பும் நிலையாச் செல்வமும்
கல்லாப் பிறப்பும் களைவாள் - வாணியவள்
பாதம் தொட்டு நெற்றியில் ஒற்றிட
காதம் போகும் பீடு

16)
கற்றதை மறந்து பெற்றதை துறந்து
உற்றதை இழந்து உழலோம்! - மதியினில்
மாற்றம் தரும் மாமகளாம் நாமகளின்
தோற்றம் காணப் பெறின்

17)
மா மதியாளே! மை விழியாளே!
கா வா நீ - உணர்ந்திட்டேன்
நா இன்றி நாளை இல்லை
தா பா நீ

18)
குறை கற்றும் நிறை கற்றதாய்
பறை தட்டும் பாமரா! - வேதா
இன்றி உனக்கு உண்டோ பதம்
நன்றி கூறிடு நிதம்

19)
ஓமம் வேண்டாம்; உருத்திராட்சம் வேண்டாம்
தூமம் வேண்டாம் தூமனிதர்க்கு! - நாமகளின்
நாமம் நாவில் நாட்டிட நாளும்
சேமம் தாமாய் சேருமே

20)
வெண்பட்டு மெய்யாள் ஈரிரண்டு கையாள்
கண்பட்டு போகும் கசடு - பண்பட்டு
வாழ்வார் வாணியை வாழ்த்தின் வாழ்வில்
தாழார் துயரால் தலை

Labels: , , , ,

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home