Friday, April 18, 2008

ஈழம் - 02

நண்பர்களே !!
நிலம் மாறி
நடப்பட்ட
பண்பர்களே !!

ஏ தமிழ் ஈழமே !!
யாமறிவோம் உமது
நட்பின் ஆழமே !!

விடு
நாட்டுக்கு நடுவே
கோடு போடும்
அறிவினை !!
தேவையா மற்றொரு
பிரிவினை?

எங்க தேசம்
என இருந்த
வங்க தேசம்
இன்று எங்கே?
இக் கதி
வர வேண்டுமா
அங்கே ?!

1947..
இந்தியாவும் பாகிஸ்தானும்
மனப் போர் புரிந்தன !!
மறுத்துக் கொண்டே
பிரிந்தன..!!

நிலத்துக்குள் விழுந்தது
கோடு !!
இன்று வரை தொடர்கிறது
துப்பாக்கி சூடு !!

வெற்றி..
பிரித்துத் தள்ளுதலிலா ?
வேற்றுமையை
பொறுத்துக் கொள்ளுதலிலா ?

பேசவில்லையா
உன் துயரை நான்
மத்தியில்?
அந்த அளவுக்கா
எனக்கு புத்தியில்?

அவர்களுக்கு
இது தீர்க்கும்
உத்தியில் !!
காரணம் அடுத்த
பத்தியில் !!

தினப் பிரச்சினையாயினும்
உன்னுடையது
இனப் பிரச்சினை !!

தமிழனாய் அன்றி
தரணிக்கு பெளத்தம்
தந்த பெருமையில்
சொல்கிறேன்..

சிங்களவர் ஆயினும்
எங்களவர்
என நினைப்பவர்
நாங்கள் !!
இதற்காக எங்களை
வெறுக்கலாமா தாங்கள் ?!

உந்தன் கோரிக்கை
யாது?
உன் துயர்
உணராது உலகு
அதனை அறியாது !!

பட்டியலிடு அவற்றை !!
சுட்டிக் காட்டாதே
பிறரது தவற்றை !

பள்ளி ஏடுகள்
உரைக்க வேண்டும்
உன் விருத்தத்தை !!
உலக நாடுகள்
உணர வேண்டும்
உன் வருத்தத்தை !!

10 ஆண்டுகளுக்கு முன்பு
பார்க்கவோ பேசவோ
இல்லாதிருந்த நாடு
கோசவோ..

அங்கு அமைதி
வேரோடவில்லையா?
உலக நாடுகள் அதற்கு
போராடவில்லையா?

உலகோர் காதுகளில்
விழுகிறது உந்தன்
சுதந்திர ஒலிகள் !!
ஆனால்..
உன் முகமாய்
அவர்க்குத் தெரிவது
விடுதலைப் புலிகள் !!

கண்ணுக்கு கண் எனில்
உலகு ஆகும் குருடு !!
எனவே..
அகிம்சை வழியில்
உலகோர் மனத்தை
திருடு !!

உலக நாடுகள்
அறியாது திபத்தின்
துயரை !!
ஆயினும் அறியும்
ரிச்சர்ட் கியரை !!

சீனா..
இருந்திருக்கலாம்
இன்று வரை
திபத்தில் கோலோச்சி.
இனி இருக்க
விடுவாரா
நான்சி பெலோசி?!

உனது இன்றைய
அத்தியாவசியத் தேவை
உன் கருத்தை
உலகில் பறைசாற்றும்
தூதுவர் !!
அதன் பின்
எவர் உன்னோடு
மோதுவர் ?

அநீதி என
அவனி உணரின்
விதிக்கும் விடை
பொருளாதாரத் தடை !!
மூடும் கடை !!

பேசிப் பேசி
என்ன செய்தது
நார்வே?
வருகிறது எவர்க்கும்
சோர்வே !!

உனது பிரச்சினையை
உலக மயமாக்கு !!
உலகோரை
உன் வயமாக்கு !!

முயன்ற வரை
போராடு !!
போகாது பிரச்சினை
தீராது !!
ஆனால் நழுவாதே
உண்மையை ஓராது !!

சரித்திரம் இல்லை
சண்டையை சமாதானம்
அழைத்ததாய் !!
மண்ணில் மறம்
தழைத்ததாய் !!
அநீதியை அகிம்சை
விழைத்ததாய் !!

வேண்டாம் செரு !!
சற்று பொறு !!

விலக்கிடு வாளை !!
விளங்கும் நாளை !!

பிடிவாதம்
பயங்கரவாதம்
இரண்டும் விடு !!
சமத்துவத்துக்கான
அடித்தளத்தை
இன்றே நடு !!
ஆறலாம் நாட்பட்ட
வடு !!

எதற்கு வீண்
தர்க்கம்?
என்றும் நீ
எம் வர்க்கம் !!
என் கடைக்கண் என்றும்
உன் பக்கம் !!

என்றும்
என் தோள்
உன் துயர் தாங்கும் !!
மனது உந்தன்
மகிழ்ச்சிக்கு ஏங்கும் !!

ஒரு நாள்
உன் கண்ணீர்
துடைப்பேன் !
புதியதோர் உலகம்
படைப்பேன் !!

Labels: , , , , , ,

1 Comments:

At 4/18/2008 7:05 AM , Blogger Unknown said...

I understand and respect your thoughts on this sensitive issue. At the same it will never be resolved unless both parties are sincere and ready to compromise. Unfortunately there is a slim chance of that happening.

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home