Friday, January 29, 2010

ஆரோ. . . .



மறதி எனும் Alzheimer’s (Black)
மாற்றான் தாய் எனும்
Surrogate motherhood (Filhaal)

எழுத்துக்களின் உருமாற்றம்
எனும் Dyslexia (Taare zameen par)
AIDS awareness (Phir Milenge)

மதம் சார்ந்த
Communal problems (Firaaq)
மனிதம் சார்ந்த
Common man’s justice (A Wednesday)

அவ் வரிசையில் இன்று
Progeria (Paa) !!
அதன் பெருமை
அப்பப்பா !!

தனித் திறமையோடும்
தமிழ் நாட்டின் ”துணை”யோடும்

தந்திருக்கிறது இதனை
இந்தித் திரை !!
படத்திற்கு படம்
புதிதாய் தேடுகிறது இரை !!

எடுக்கலாம் என பலரால்
எண்ணிட முடியாததை
எண்ணித் துணிந்து.....

எதிர்ப்பையும்
எதிர் பார்ப்பையும்
சரி சமமாய்
சமாளிக்கலாமென துணிந்து...

சித்திரமாய் வடக்கு எடுத்து
சிரமமின்றி ஏறுகிறது புகழுச்சியில்
சர்ரென்று !!
நாம் கிடக்கிறோம்
“என் உச்சி மண்டையில் சுர்” என்று !!

மரபணுக்களின் மாற்றத்தால்
வயதுக்கு வராமலேயே
வயது வந்து...

இளமை
இளமையிலேயே அணியும்
முதுமைச் சட்டை ”ப்ரோஜேரியா” !!

அதனால் வரும்
அளப்பரிய சிக்கல்களை
அன்றாட அல்லல்களை
அனேக அவலங்களை

விளக்கவில்லை படத்தில்
விலாவாரியா !!

வந்த வியாதியை நினைந்து
வசமிழந்து வாடாது....
வசனங்களில் துக்கங்களை
வரையின்றிப் பாடாது...
சமூகத்தின் ஏற்ற தாழ்வுகளை
சகட்டு மேனிக்கு சாடாது...

குழந்தைத் தனமும்
குதூகலமும் சேர்த்து ...
குறுக்கே பல
குறுஞ்செய்திகளை கோர்த்து...

அற்புதமாய் படைத்திருக்கிறார் !!
தழுவி எடுக்கப்பட்டது எனும்
தர்க்கம் தந்த அழுக்கை
தங்கு தடையின்றி துடைத்திருக்கிறார் !!

இரவலாய் வாழும்
இப் பூமியுள்

இருக்கும் நாள் வரை
இருப்போம் இன்பமாய்
இதுவாவது இருக்கிறதே எனும்
பாக்கியத்தோடு !!

இனி வரும் நாள்
இனிக்கும் எனும்
இசைமிகு வைராக்கியத்தோடு !!

என வாழ்கிறான்(ர்) ”ஆரோ” !!
எண்ணித் தவிக்கிறேன் நான்
தமிழில் இவ்வாறு
தன் நடிப்பால்
தனித்து மிளிரப்போவது ஆரோ ??

தன்னோடு முன்னாளில்
தன் மகளாய் நடித்தாரை

தற்காலத்தில்
தனது கதாநாயகியாக்கி
தனி “டூயட்” பாடுமளவே
தமிழ் சினிமா வளர்ந்திருக்கிறது !!

திட்டித் திட்டியே தமியேனின்
திருமேனியும் நாடியும்
தினம் தளர்ந்திருக்கிறது !!

வடக்கில் பலர் ஏற்கின்றார்
வயதுக்கு ஏற்ற பாத்திரங்களை !!
நம்மவரில் ஒருவர்
நலங் கெட்டு கொண்டாடுகிறார்
ஐம்பது ஆண்டு சாதனையின்
பிரவர கோத்திரங்களை !!

”ஒரு கூடை சன்லைட் “
ஒரு மூடை ஃபைட்

“எங்கேலாம் உன்னேப்போல
துச்சாதனன் இருக்கானோ
அங்கேலாம் என்னேப் போல
கிஷ்ணனும் இருப்பான்டா”
எனும் “பஞ்ச் டயலாக்” என

கிடக்கிறார் ஒருவர்
கிடைத்த வரை ஆதாயமென
வெட்கம் செத்து !!
அடங்கவில்லை அவரது
அந்தக் கால பித்து !!

நம் பாணியிலிருந்து
நாம் மாறினால்
நமது சமூகம்
நம்மை ஏற்காதெனும்
நொண்டிச் சாக்கு

தரங் கெட்ட
தமிழ்த் திரையின்
நெடு நாள் சீக்கு !!

கட்டிய புடவையில்
கண்ணியமாய்
கவர்ச்சி எனும்
கவலையின்றி

பெற்றது
பெற்ற வியாதியால்
பெற்றவளாய் தான்
பெற்ற பொறுப்பையும்…
பெறச் செய்தவன் மீது
பெரும் வெறுப்பையும்…

காட்சிக்கு காட்சி காட்டி
தரத்தை நிலை நாட்டி

கண்ணையும் கருத்தையும்
கவர்கின்றார் வித்யா பாலன்
நடிப்பா நிசமா என
நம்ப முடியாது !!

எடை உடை
தணிக்கைக் குழுவின் தடை

என எதற்கும்
எள்ளளவும் கவலைப்படாது...
படம் விடாது...

துகிலுரிந்தால் ஒழிய
துயிலெழாது கூட்டம் என

இன்றைய தமிழ்
இடுப்பழகிகளும்...
இளம் தமிழ்
இயக்குனர்களும்..

நினையும் வரை
நமக்கு விடியாது !!

”காயப் பட்டவரினும்
காயப் படுத்தியவர்
அடையும் பாடு கொடிது !!
அதன் துயர் நெடிது !! “

அழகான வசனம் வரும்
அந்த அந்திக் காட்சியில்

ஓரிரு வார்த்தை
ஒருங்கே பேச முடியா
ஓய்ந்த நிலையில்

ஓர விழியால்
ஒரு முறுவல் காட்டி

அன்னையை பார்ப்பார்
அமிதாப் !!
அக் காட்சி
அடிகோலும் செய்தி
அதி “டாப்” !!

இந்தியில் புத்தகத்துக்கு ”கிதாப்” !!
இந்தியாவில் நடிப்புக்கு அமிதாப் !!

Labels: , , , , , , , , , ,

Tuesday, January 12, 2010

இருபது வருடங்கள். . . – இறுதியாக



எம். எல். வி.
எஸ்.ராமனாதன்
சந்தானம்
டி. கே. ஜே
கே. வி. என்
எம். எஸ்
செம்மங்குடி
ராஜம் ஐயர்
டி. கே. பி

எண்பத்தொன்பதில் இருந்தனர்
எண்ணிலா ஜாம்பவான்கள் !!
அவர் பாடலுக்கு ஒப்பாகாது
அரும் பழந் தேன்கள் !!

ஒவ்வொருவருக்கும் இருந்தது
ஒவ்வொரு பாணி !!
இன்று அவர்களை
இறுகப் பிடித்திருக்கிறது
இரும்பு ஆணி !!

காலம் வந்தோ...
காலம் வராமல்
காலன் வந்தோ...

நித்ய சூரியாய் அவர்கள்
நிற்கின்றார் வானில் !!
வருடா வருடம்
வந்து வந்து போகிறது
வசந்தமெனும் வேனில் !!

அவர் முன்
அவையில் புகுந்து...
ஆற்றல் மிகுந்து...

அன்று நீவிர் செய்த
அசுர சாதனை
அருந்தமிழர் கண்ணில் !!
அத்தகு மண்ணில் ....

அந்நாளில்
அப் பாடகர்கள் எடுத்த
அருபெரும் பொறுப்பினை

சங்கீத உலகு
சந்தேகமின்றி
சாற்றியிருக்கிறது

சாரதி நீ ! என
உந்தன் தோளில் !!

அடுத்த சந்ததியினர்க்கு
அச் சிறப்பை செய்ய
அகிலத்தில் உம்மை விட்டால்
ஆளில் !!

முன்னோர் வகுத்த
முறையான சங்கீதம்
முழுமை உற்று
முதன்மை பெற்று

முதன்மையாய் அடையட்டும்
முன்பறியா இடம் !!
உங்கள் கையில் அத்தேரின்
உன்னதமான வடம் !!

- முற்றும்

Labels: , ,

Monday, January 11, 2010

இருபது வருடங்கள். . . – 7


Picture Source: The Hindu, India's National Newspaper

நுனிப்புல் மேய்பவர்....
நுழைபுலம் ஆய்பவர்....

விழாவுக்கு விழா
விசிறி வருகிறார்
இரு பிரிவாக !!
அறிதல் அவசியம்
அவரை விரிவாக !!

வழக்கமான க்ருதிகளை
வகை வகையாய்ப் பாடி
வாங்கும் கை தட்டலா ?.

இதுவன்றோ பாடல்! என
இமை மூட மறந்த
இரசிகனிடம் பார்க்கும்
இரு கை கட்டலா ?!

எது தரம் ?
எப்புகழ் நிரந்தரம் ?

ஆழ் மனதில்
ஆழங்கால் பதிக்குமாறு
ஆரும் பாடா “ஒன்றை”
ஆணித்தரமாய் பாடுவீர் என
ஆவலாய் பலர்
ஆங்கே தேடிக் கொண்டிருக்க

”கண்ட நாள் முதலாய்”
கட்ட முடியுமோ அவரை
பாடிய க்ருதிகளையே நீவிர்
பாடிக் கொண்டிருக்க ?!

ஆகலாகாது இனி அவரது
அழகு கண்கள்
அழுது செய்ய !!
ஆரம்பியுங்கள் இனியாகிலும்
ஆனதைச் செய்ய !!

மற்றுமொரு குற்றச்சாட்டு
மக்களிடம் உண்டு !!
பாடுகின்றீராம் பல முறை
பாட நூல் கண்டு !!

சீறிக் கேட்கிறார் பலர்
”சீனியர் உங்களையும்
சிறையிடலாமா
சிறிய நூல்கண்டு ? “ !

சிந்தாமணி
சித்தரஞ்சனி
சிம்மவாஹினி
சுத்த சீமந்தினி

ஜகன்மோகினி
ஜயந்தஸ்ரீ
ஜயந்தசேனா

மணிரங்கு
மாஞ்சி
தேணுகா
தேவாம்ருதவர்ஷிணி
நாசிகாபூஷணி

கல்கடா
கமணாஸ்ரமா
குஜ்ஜரி
கெளட மல்ஹார்

சொன்னதும் நினைவுக்கு வரும்
சொற்ப கீதமன்றி
அவ்வளவாக பாடலில்லா
அழுத்தமான ராகங்கள் !!

புதுவரவினை அவற்றில் கேட்டு
புளகாங்கிதம் அடைய
விழைகின்றன தேகங்கள் !!

ஆரூர் பிறந்தாரன்றி
வேறூர் பிறந்தார்

பாயிரம் எடுத்து..
பாச் சுரம் தொடுத்து..

எதுவும் முடியவில்லை எனில்
எட்டுக் கட்டியாகிலும்
எடுத்துக் கொடுத்து..

பதவிசாய் தரும்
பக்குவத்தை
பல நாளாய் உங்களிடம்
பரவலாய் தேடும்
பலதரப்பட்ட மக்கள் மக்கில்லை !!

சுதாவை அப் பணிக்கு
சுற்றித் தேடா திக்கில்லை !!

ஏனைய கலாநிதிகளுக்கு
ஏனில்லை இந்த
ஏரார்ந்த பொறுப்பு ?
என வரலாம் மறுப்பு !!

”உன்னை நீ
உயர்த்திக் கொள்” !
உரைக்கிறது கீதை !!
உணர்வார் மேதை !!

Labels: , , ,

Friday, January 08, 2010

இருபது வருடங்கள். . . – 6




கேட்டறியாப் பாடல் பாடி
கேட்பவர் தரத்தை
கேள்வியின்றி உயர்த்தும் நேயமும்...

தலையெடுக்கும் தலைமுறைக்கு
தம்மால் இயன்ற உபாயமும்..

அடுத்த இரு படி !!
அதற்குத் தேவை

உருப்படியான
உருப்படி !!

அவ்விரண்டு படி உங்கட்கு
அறவே தடுக்கிறது !!
அது எங்கட்கு
அதிக துயர் கொடுக்கிறது !!

சண்முகப்ரியாவில் நீவிர்
”சரவண பவ” என்றதும்
சரவண பவன் என்கிறது
சமீப நாளாய்
சங்கீத அவை !!

அரைத்ததையே அரைக்கிறாளென
அவ்வளவு அவசரத்தில்
அனுதினம் அவை !!

கச்சேரியின் கால அளவும்
கச்சிதமாய் குறைய....
மக்கள் எதிர்பார்க்கின்றார்
முன்னுக்கு இப்போது நிறைய !!

இருக்கும் நேரம்
இரண்டு மணிக் கூறுகள் !!
புத்துணர்ச்சிக்கு மக்கள்
புதிதாய் எதிர்பார்க்கின்றார்
புதுமையின் சாத்தியக்கூறுகள் !!

நைச்சியமாய் லலிதாவில்
”நன்னு ப்ரோவு” என்றதும்
நமக்கேன் நோவு? என
நம் மக்கள் நழுவுகின்றார் !!
போதும் என
போதும் கையைக் கழுவுகின்றார் !!

“வாதாபி” என்றவுடன்
வாதாபியில் வென்ற

நரசிம்மவர்மன் கணக்காய்
நம்மவர் உறுமுகின்றார் !!
கோபத்தில் செருமுகின்றார் !!

” ஹம்ஸநாதம்
ஹம்ஸாநந்தி
பலஹம்ஸ

பலவாறு இருக்கிறது
பல ஹம்சம் !!
பாடலாமே அதனில்
பயனுள்ள
பல அம்சம் ?!

அடிக்கொரு தரம்
அன்று முதலாய் கேட்ட
ஹம்சத்வனி
தேவையா இனி ? “

குற்றச்சாட்டு வருகிறது
குறைவின்றி !!
வெளியேறுகிறார் மக்கள்
நிறைவின்றி !!

சிம்மேந்திர மத்யமத்தில்
சிரமமின்றி முருகன்

”ஒரு பதம் வைத்து
மறு பதம் தூக்கி நின்றாட”...

மறந்து கூட
மறுபடியும் வேண்டாம் என
மக்கள் கிடந்து மன்றாட...

சித்தம் வேகின்றது !!
நித்தம் போகின்றது !!

எமக்குத் தெரிந்தது
எதற்கு? என
எடுத்த க்ருதிகளுக்கெல்லாம்
எல்லா தரப்பினரும்
எதிர்ப்பைத் தெரிவிப்பது

எதிர்பார்ப்பில்
எதிர் பார்ப்பார் குற்றமா ?
எதிர் பாடுவார் குற்றமா?

சிக்கி இக் கேள்வியில்
சிக்கல் வந்த
“சிக்கல்” வேலாய்
சிறியேன் நான் வியர்த்திட.....

உவந்து கேட்கிறேன்
உடனே உங்களது
உன்னத தரத்தை உயர்த்திட !!

Labels: , , , , , ,

Thursday, January 07, 2010

இருபது வருடங்கள். . . – 5



மக்கள் மனதில் உட்காருதல் !!
மங்காப் புகழ் உச்சியில்
மட மடவென்று ஏறுதல் !!

மாறும் காலத்துக்கு ஏற்ப
மாறுதல் !!
நாளைய சந்ததியினர்
நம் பெருமை கூறுதல் !!

பாடகர் ஒருவரின்
பாங்கான வளர்ச்சியை

நான்காக இவ்வகையில்
நாம் பிரிக்கலாம் !!
ஏக்கம் தாக்கம்
தேக்கம் விரிக்கலாம் !!

முன்னம் பாடியவர்கள்
முயன்று பெற்ற
முதலாவதை
முதலாவதாய்

எந்த மக்கள் முன்
எண்பத்தொன்பதில்
எதிர் நின்றாரோ

அன்றே சுதா
அழகுற செய்து விட்டார் !!

அடுத்து முயலாமல்
அடுத்தபடி
அடுத்த படி என

அதி விரைவில் யாரும்
அவ்வளவு எளிதாக எட்டார் !!
அதனையும் சுதா
அசாத்தியமாக தொட்டார் !!

எண்பத்தொன்பது தொடங்கி
எட்டு பத்து ஆண்டுகளாய்

எமது வீட்டிலன்றி
எல்லோர் வீடுகளிலும்
எண்ணற்ற நாடுகளிலும்

AVM
Amudham
Koel
OMI
RPG
Sangeetha
Sony Nad
Vani என

கும்பல் கும்பலாய் சுதாவின்
குறுந்தகடுகள் குவிந்தன !!

அகல விரிந்த காதுகளும்
அகிலத்தார் கண்களும்

சகல காலமும்
சதா சுதாவின்
சங்கதி மீது கவிந்தன !!

கல்சுரலில் சுதா என்றதும்
கல்லுரலை மக்கள்
கவலையின்றி உதறினர் !!

சஞ்சாரம் கேட்டார்
சம்சாரம் மறந்து
சற்றே பதறினர் !!

எல்லே இளங்கிளியே
எனப் பாடும் மார்கழியில்
நுங்கம்பாக்கம் கல்சுரலில்
நுழைந்தேன் 12/13/97ல்...

LA எனும்
லாஸ் ஏஞ்சல்ஸில் 1998ல்....

செம்மங்குடியின்
சென்டினரி 2008ல்...



இதனூடே
இடையறாது
இதர பிற
இடங்களில்...

செவி கொடுத்து..
”சீட்டு” கொடுத்து..

ஆனந்தித்து கேட்டாயிற்று !!
ஆயிரம் பார்த்தாயிற்று !!

வந்து விட்டது எனக்கும்
வயதினை ஒத்த நரை !!
இருப்பினும் ருசிக்கிறது
இசையெனும் இரை !!

எங்கு கேட்டாலும்
எப்படி கேட்டாலும்
எவ்வளவு கேட்டாலும்
எவரைக் கேட்டாலும்
“எவரைக்” கேட்டாலும்

இன்னும்
“இன்னும்” எனும் எண்ணம்
இருக்கின்றது பிரதானமாக !!
இருக்க முடியவில்லை என்னால்
இங்கு தான் நிதானமாக !!

-- தொடரும்

Labels: , , ,

Wednesday, January 06, 2010

இருபது வருடங்கள். . . – 4


Pic courtesy: The Hindu, Indias National Newspaper

"அபரிமிதமான பக்தி !!
அது தான் எம். எஸ் சக்தி !!

சிம்ம கதி
சர்ப்ப கதி
கஜ கதி
ரிஷப கதி

ரங்கனுக்கு மட்டுமா ?
ராகத்துக்கும் எட்டுமா ?

நதி கதியில்
நம்மை சூழும்

பிரமாதமான சுருதி
பிரவாகமாய் !!
பிரமிப்பூட்டும் வேகமாய் !!

அதுவே எம். எல். வி யின்
அசாத்தியமான வரம் !!
அசத்தும் தரம் !!

ஏற்ற ராகத்துக்கு
ஏற்ற
ஏற்ற இறக்கம் !!

உச்சரிப்புக்கு ஒரு
உத்தரவாதம் !!
சுரத்தானம் பிரதானம் !!

அது டி.கே. பி யின்
அகமார்க்கம் !!

சப்தமின்றி நம்மை அச்
சங்கீதம் தேட வைக்கும்
சன்மார்க்கம் !!

அவர்களது பாட்டை...
அதைத் தர
அவர்களது பாட்டை..

அதிகம் கேட்கின்...
அண்ணாந்து பார்க்கின்..

அவர் போல் பாடுதல்
அரிதென்று எண்ணி

நம்மால் முடியாது என
நாம் கும்பிடலாம் !!

ஒரு முறை சுதாவை
ஒருங்கே ஒருவர் கேட்டால்

நம்மாலும் முடியும் என
நம்மை நாமே நம்பிடலாம் !!

நவராத்திரியில் பாடும்
நம் அகத்து பெண் போலே..
போகப் போக இனி
போகப் போகிறாள்
புகழ் உச்சிக்கு மேலே !! "

விகடன், கல்கி தரும்
விமர்சனத்தை விட

அவ் வரிகள்
அன்று என்னை

இழக்கச் செய்தது வசம் !!
இன்றளவும் அதுவே நிசம் !!

இது தான் சுதாவின்
இமாலய பலம் !!

இதுகாறும் அவரை
இப்படித் தான் பார்க்கிறது
இனிய தமிழ் நிலம் !!

தன் வீட்டு பெண்
தனித் தன்மை கொண்டு
தரணியில் உயர்வது போல்

பாரம்பரிய சங்கீத உலகு
பார்க்கிறது சுதாவை
கச்சேரி விடாது !!

ஏனைய பாடகரை
ஏறெடுத்தும் அக்கூட்டம் தொடாது !!

சுதா கச்சேரியில்
சுமாராக பாடினாலும்
சுகமாக பாடினாலும்

கச்சேரி முடிந்ததும்
கண்டார் கேட்டாரது
கண்ணில் கண்ணீர் உறுதி !!

இப்படி சொதப்பாமல்
இன்னமும் பாடியிருக்கலாமே என
இங்கங்கே பலரும்....

இதற்கு மேல் எப்படி? என
இதர சிலரும்

வாடுவார் தாபத்தில் !!
வாதிடுவார் கோபத்தில் !!

இன்று வரை
இது தான் தொடர்கின்றது !!
இக்கவிதையில் செய்தியொன்று
இங்கு தான் படர்கின்றது !!

Labels: , ,

Tuesday, January 05, 2010

இருபது வருடங்கள். . . – 3




சுருதி சுத்தமாக
சுதா அன்று பாடிய

கீர்த்தனைகள் கூட்டத்தை
கிறங்கடித்தன !!
செம்மையாய் அவை
செய்வதறியா சுகத்தில்
நகங் கடித்தன !!

சங்கதிகள் எனக்கு
சற்றுமில்லை ஞாபகத்தில் !!

கச்சேரி முடிந்து
கணக்கிலார் வெளியேறினர் !!
கருத்தை கூறினர் !!

ஆஹா என
ஆனந்தித்தார் ஒருவர் !!
என்னமா குரல் உருளுகிறது
என அங்லாய்த்தனர் இருவர் !!

" MLV’s efforts
Are not wasted !!
This is the best
I have ever tasted " !!

ஆங்கிலத்தில்
ஆராதித்தார் ஒருவர்
ஆலாபனை தந்த
ஆனந்தபாஷ்பத்தில் !!

"தந்தனானா தன்ன
தந்தனானா தன்ன என
“ப்ரும்மம் ஒகடே” வில்
பின்னி விட்டாள் !!

தனது குருவை மிஞ்சியவளாய்
தனித்து மின்னி விட்டாள் " !!

" காதில் சுருதி இன்னும்
ஓய்ந்த பாடில்லை !!
இனி சுப்புடு
இவளை எழுதா ஏடில்லை "!!

" எந்த ராகமாயினும்
எடுத்தவுடன் தெரிகின்றதே
இழை !!

கழுத்துக்கு ஏற்ப
கனகச்சிதமாய் ஆடுகின்றது
காதின் குழை !!

இன்று முதல்
இவள் காட்டில் மழை " !!

அடித்துச் சொல்கிறேன்
அடுத்த வருஷம்
அவளுக்கு ”அஞ்சரை” என்றும்...

பிசிறில்லா
பிருகாவில்
பிய்த்து விட்டாள் என்றும்...

வகை வகையாய்..
மிகை மிகையாய்..

ஒவ்வொருவரும்
ஒவ்வொன்று சொல்லி
ஒருவாறு தங்கள்

ஆனந்தத்தை பகர்ந்தனர் !!
அரங்கத்தினின்று நகர்ந்தனர் !!

கடைசியாய் வந்தது
அற்புதமான ஓர் விமர்சனம் !!
சுதாவின் பெருமை
அதனில் நிதர்சனம் !!

-- தொடரும்

Labels: , ,

Monday, January 04, 2010

இருபது வருடங்கள். . . – 2

சங்கீதச் செம்மல்
சந்தானத்தின்

அன்றைய கச்சேரி
அந்தி மாலை
அஞ்சரைக்கு !!

அடியொற்றினோம்
அன்னையும் நானும்
அகதமி அரங்கினுள்

மண்டையில் வெயிலேறி
மதியம் இரண்டரைக்கு !!

சந்தானமா ?
சூப்பர் ஸ்டாரா ?

பாடவிருப்பது யாரென
பார்த்தோருக்கு வியப்பு
பாதாதிகேசம் வரும்படி

நுழைவுச் சீட்டு பெற
நுழைவாயில் தாண்டி
நுழைய

முயன்றும் எம்மால்
முடியாமல் ஆயிற்று !!

கண் மூடி
கண் திறப்பதற்குள்
கண் எதிரே

சந்தானத்தின் கச்சேரிக்கு
சரமாரியாய் சீட்டுகள்
சரசரவென விற்றுப் போயிற்று !!

பெருத்த ஏமாற்றத்தில்
பெருத்த
பெருத்த சீற்றத்தில்

வெறுங் கையோடு
வெளி வந்து
வெறுத்துப் போனேன் !!

அனுபவத்தின் ஆரம்பமே
அத்தமனமானது !!
அடித்துச் சொல்வேன்
அந்த ஏமாற்றம்
அதி கனமானது !!

”இரண்டரைக்கு தொடங்கிய
இரண்டு மணி கச்சேரி
இலவசமடா !!
இப்போது போனாலும்
இனிதே கேட்கலாம்
இரண்டொரு துக்கடா !!”

இழுத்தாள் என்னை
இனிய அன்னை !!

கேட்க வந்தாரை
கேட்க முடியவில்லை !!
என் வருத்தம்
என்னின்று வடியவில்லை !!

உள் நடப்பதை விரும்புவதா ?
உடன் ஊர் திரும்புவதா ?

வேண்டா வெறுப்போடு..
வேண்டாமெனும் மறுப்போடு...

உளம் தத்தளிக்க..
உள்ளே கால் வைக்க
உடல் எத்தனிக்க ..

ஏன் இப்படி? எனும்
ஏமாற்றத்தோடு
ஏறினேன் அகதமியில் படி !!

அன்று
அப் படி
அலுப்பை தந்தது
அப்படி !!

அரங்கினுள் வைத்தேன்
அடி !!
ஏக காலத்தில்
ஏகமாய் வியர்த்தேன்
பல நொடி !!

L-Board பாடகருக்கு
எள் போட இடமில்லாது

நின்று கேட்டவாறு
நிரம்பி வழிந்தது கூட்டம் !!
வசீகரிப்பதாய் இருந்தது
பாடகரின் முகவாட்டம் !!

சுற்றம் பார்த்து...
”சுதா”ரித்து...

பாடுவது யாரென
கேட்டேன் பொதுவாக !!

சுரம் வர
சுரம் பாடும்

நேர்த்தியான எம்.எல்.வியின்
நேரிடை மாணவி



சுதா என்றது அவளை
சுற்றி நின்ற கூட்டம்
மெதுவாக !!

-- தொடரும்

Labels: , ,

Sunday, January 03, 2010

இருபது வருடங்கள். . .

1989…

சச்சின்
சனத் எனும்

இணை பிரியா துருவங்கள்…
இருபது வருடங்கள்….
இத்யாதி இத்யாதி…..

எழுதுவேன் நான் இவ்வாறு
என்று நீவிர் எதிர்பார்த்தால்

இங்கு இடமில்லை அத்
தர்க்கத்திற்கு !!
போங்கள் வேறு பக்கத்திற்கு !!

தமியேன் நான்
தரவிருக்கும் கருத்து

கீர்த்தி சம்பந்தப்பட்டதல்ல !!
மும்மூர்த்தி சம்பந்தப்பட்டது !!

"வானொலி" பார்த்து
வானொலி கேட்ட

குடும்பங்களுள் அன்று
குறுந்தகடுகள் இல்லை !!
நாடா துணையை
நாடா நாளில்லை !!

எழும் காலை
எட்டரை மணியன்றி

எவ்வீட்டையும்
”எந்த பாக்கியமு”ம்
எட்டியதில்லை !!

ஏனைய சிலருக்கோ
பேண்ட் ஒன்றில் சேனல் நான்கில்

மாலை ஆறரைக்கு பாம்புருண்டு
தடங்கலுக்கு வருந்தி தடம் புரண்டு



ஆடிக்கு ஒருமுறை
அமாவாசைக்கு ஒருமுறை
அரங்கேறும்

”அரங்கிசை”யன்றி மற்றொன்றில்
அவ்வின்பம் கிட்டியதில்லை !!

Internet பிறக்கவில்லை !!
இவ்வுலகம் திறக்கவில்லை !!

பஞ்சாட்சரத்தை நினைந்தே
பழகிய பல வீடுகள்...
அஞ்சாயிரம் வரவினை
அறவே தொடவில்லை !!

ஆயினும் அவர்கள்
ஆத்ம சுகத்தை விடவில்லை !!

பற்றவில்லை எனும்
பற்றாக்குறை
பலரை பற்றவில்லை !!

இசை மீது
இசை பலருக்கு
இம்மியும் வற்றவில்லை !!

கார்த்திகை கடக்க மார்கழி...
கால் நடக்கும் ஓர் வழி...
கச்சேரி மீது ஈர்விழி.....

என
“எந்தரோ மஹானுபாவுலு” வாக…
“எத்தனை கேட்டாலும்
போதும் என்பதே இல்லை”
என்பதற்காக

எண்ணற்றோர் வாழ்ந்தார் !!
எண்ணம் சிந்தனை என
எல்லாவற்றிலும் சங்கீதமாக
எண்ணிலார் ஆழ்ந்தார் !!

நாட்டை அறியாரும்
"நாட்டை" அறிய

பாட்டை விரும்பி
பாட்டை இறங்கினார் !!

நேர்முகமாக ஒரு
நேர்த்தியான கச்சேரியை
நேரம் காலம் பார்த்து
நேரடியாக கேட்க

அவ் வருடம்
அவ்வழியில் இறங்கியவருள்
அடியேனும் ஒருவன் !!
அந்த எண்பத்தொன்பதில்
பதினேழு வயது சிறுவன் !!

"இருந்தால் கேட்பேன்
சந்தானம் !!
இறந்தால் கொடுப்பேன்
கண் தானம் !!" என

மகா சனங்களை
மகா பாடு படுத்திய
மகாராஜபுரத்தாருக்கு

அவ்வாண்டு
அகதமி தந்தது
அழகிய விருதாம் ”சங்கீத கலாநிதி” !!
அனைத்து மூலையிலும்
அதிகாலையிலும்
அவரது துதி !!

அவ் வருடம்
அவ் அரங்குள்
அவர் பாடிய
அந்த இருபத்தைந்தாம் தேதி ….

அங்கு தொடங்குகிறது
இக் கவிதையின் சேதி !!

-- தொடரும். . .

Labels: , ,