செம்மங்குடி....
அந்தி வானம்..
அமைதியான நேரம்...
அவ்வப்போது மழைத்துளி..
அகதமியின் வாசல்...
முன்னாள் ஜனாதிபதி
முக்கிய விருந்தினராக
வருகை !
பலரிடம்
பவ்யமாய் கட்டப்பட்ட
இரு கை !!
பாதுகாப்பு ஏற்பாடுகள்
பலமாக முடுக்கப்பட்டதால்...
வளாகத்துள்
வண்டி நிறுத்தம் தடுக்கப்பட்டதால்..
வாகனத்தை தள்ளி நிறுத்தி..
கண்டவரும் காணா வண்ணம்
”காது கேட்கும் கருவி” பொருத்தி..
அழைப்பிதழை அணைத்தவாறு..
அடிக்கொருதரம் மணிக்கட்டை
அவசர அவசரமாய் பார்த்தவாறு
அனேகர் வாயில் கடக்க...
அரங்கத்தின் கதவு நோக்கி
அதிவிரைவாய் நடக்க...
”அன்னபூர்ணே விசாலாட்சி” என
அட்சர சுத்தமாக
காதில் சாமா...
ஒலித்தகடில் ஒலித்தவர்
ஒப்பாரில்லா
செம்மங்குடி மாமா...
அன்று
அவரது 100வது
பிறந்த தினம் !!
அவரைக் கொண்டாட
அவரது சிஷ்யர்களிடம்
அமைந்திருக்கிறது இன்றும்
சிறந்த மனம் !!
”ஷீணமை திருகா” முகாரியும்
”ஸ்ரீகாளஹஸ்தித” ஹுசேனியும்
”தெலியலேலு ராமா” தேணுகாவும்
செம்மங்குடியின் திறம் பேசும் !!
அமைதியாக பாட வேண்டியதை
அசுர கதியில் பாடுவாரை
அவை ஏசும் !!
ரீதிகெளளை என்றால்
தமிழகம் முழுதும்
தங்கு தடையின்றி இன்று
”கண்கள் இரண்டால்”
ஜேம்ஸ் வசந்தன் முகம் !!
தருமோ அது செம்மங்குடியின்
”த்வைதமு சுகமா” சுகம்?
உச்சஸ்தாயி போகாத
உடைந்த குரலால்……
உள்மூச்சு நிற்கும் வரை
உன்னிப்பாய் “நோட்ஸ்” எழுதிய
விரலால்…….
காசுக்காக இசை போதிக்கா
கண்ணியவான்...
காஞ்சிப் பெரியவரே
“சங்கீத தாத்தா” என போற்றிய
புண்ணியவான்...
சதாசிவத்திடம் சீட்டில்
எம். எஸ்ஸிடம் பாட்டில்
எல்லை கடந்த நெருக்கம்....
அவரவர் மறைவின் போதும்
அவருக்கிருந்த உருக்கம்...
மாறும் காலத்துக்கு ஒப்பி
மாறிய அவரது தொப்பி....
சிறியவர் பெரியவர் எனாது
சிஷ்யர்களிடம் அவர்க்கிருந்த
சினேகம்..
சிரமம் குரலில் இருப்பினும்
சிதையேறும் வரை
சிறப்பாய் ஒத்துழைத்த தேகம்...
நீறணிந்த முகத்தின் பொலிவு..
நீண்ட ப்ருகாக்களின் வலிவு....
கைத்தடி
கண்ணாடி என
அவர்க்கே உரித்தான
அடையாளக் குறிகள்...
அந்திமக் காலம் வரை
அவர்க்கிருந்த
அற வாழ்க்கை நெறிகள்...
அச் சுரத்தை
அப்படிப் போடு..
அவ் வரியை
அப்படிப் பாடு...
என.....
அறிவுரையின் ஊடே
அவ்வப்போது தலையெடுக்கும்
தஞ்சாவூர் நையாண்டித் தனம்..
தனக்கென வாழாது
தரணிக்கு வாழ்ந்த
தயாள மனம்....
வாய்க்கு நாட்டை
கைக்கு ராட்டை....
என....
காந்தீயக் கொள்கையில் பிடிப்பு...
கதரிலும்
கடைப்பிடித்த எளிமையிலும்
அவர் கொண்டிருந்த துடிப்பு...
என
ஒளிச் சித்திரம்
ஒளிர்ந்தது திரையில்...
ஒன்றினர் ரசிகர்கள்
பதினைந்து நிமிடம் வரையில்..
நன்கு தொகுக்கப்பட்ட
வாழ்க்கைக் குறிப்புகள்..
பலருக்கு வரவழைத்தன
பலத்த சிரிப்புகள் !!
கேரள இசைக் கல்லூரியில்
போதித்ததால்..
மாநிலம் தாண்டி சாதித்ததால்
முகவாட்டம் துறந்து
”முல்லைப் பெரியாறையும்” மறந்து
தண்ணீர் தரா
குறையை மறைக்க....
ஸ்வாதித் திருநாள்
செம்மங்குடியால் அடைந்த
புகழை உரைக்க...
நல்வார்த்தை நான்கால்
நல்லுறவை நவில
அனுப்பி இருந்தது
திருவனந்தபுரம் தூதரை !!
அந்தோ!
கல்லெறி தூரத்திலிருந்தும்
காணவில்லை
கோபாலபுரம் ஃபாதரை !!
அழைப்பிதழ் போகவில்லையா?
அல்லது..
அரங்கத்தோடு ஆகவில்லையா ?
நம் நாட்டாரை
நம் நாட்டார் ஏத்த...
பட்டாடை போர்த்த....
அரசினை ஆள்வாருக்கு
அவகாசமில்லையா ?
அல்லது
அட்சர சுத்தமாய்
சங்கீத சகவாசமில்லையா ?
நான்கு நாள் கச்சேரியில்
நடு இரண்டு நாள்
நான் சென்றிருந்தேன் !!
ஸ்ரீகண்டனும்
சுதாவும் அருந் தேன் !!
சாவேரி
தர்பார்
நாட்டக்குறிஞ்சி
மோகனம்
மத்யமாவதி என
ராக மாலிகையாய்…
ரணமான மனதுக்கு
ரம்மியமான மூலிகையாய்…
எப்போது யார் பாடினும்...
எங்கு எதற்கு கூடினும்.....
வில் அங்கம் ஏந்தியவனை
வில்லங்கம் அன்றி துதிக்கும்....
வரலாறு காண முடியாதான்
வரலாறு தன்னை.....
வரலாறு காணா வழுத்தத்தினால்
வரலாற்றில் இடம் பதிக்கும்......
படு சோக்கான பாட்டு
”பாவயாமி ரகுராமம்” !!
அது உள்ள வரை
அத்தமிக்காது
செம்மங்குடி நாமம் !!
Labels: Abdul kalam, bavayami raguramam, dhenuka, dwaitamu sukama, huseni, James Vasanthan, Kerala music college, MSSubbulakshmi, mukhari, Music academy, ritigaula, sadasivam, semmangudi-100 years
3 Comments:
vaali range ku eludhirkeenga!
super!
Prabu Karthik - thanks
Your circasm on non participation of MK is well written. I liked those lines. As PK has mentioned your writings reminds me Vaali. Keep it up!
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home