Friday, December 30, 2005

TVR - 11

sowmya sarvesh in outerbanks

கை பிடித்தானோடு
பெண்கள் செல்ல
கை பிடித்தாளோடு
மாமா மாமி மட்டும்..

வீடு இன்று காலி !!
படிக்கிறார் மாமா
நாற்காலியில்
ஆற அமர வாலி !!

வீடு கிட்ட
ஆள், அரவு, வீடு விட்டு
உறவு விட்டு
துறவு கேட்கப் போகிறேன் என்பார் !!

அன்பு அவரை தடுக்கிறது !
பேரன் "பின் லேடன்" மூலம்
படாத பாடு படுத்துகிறது !!

வாழ்கிறார்
தங்கை தம்பி சூழ
நங்கை நல்லூரில் !!

மாமா மாமியிடம் நான் படித்த
மிகப் பெரிய பாடம்....

சொத்து என்பது
முத்தாய் வரும் !
கொத்தாய் வரும் !

வந்த வேகத்தில் போகும் !
மனம் மேலும் மேலும் என ஏங்கும் !!

நெடி துயில் தூங்கும் நாள்..
சடலம் ஆவியில் வேகும் நாள்..
உடலை யார் தூக்குவார்?
பணமா? முன் சேர்த்த
குணமா?

இனமும்..
இழந்த தானமும்..
இழக்காத மானமும்...
இவை அன்றோ
இறவாப் புகழ் நல்கிறது?
இன்றளவும் இவ்வையம்
இதைத்தானே சொல்கிறது?

வாழ்வுக்கு
வித்தாய்
சத்தாய்
சம்பத்தாய்
உறவன்றோ வருகிறது?!
உயர்வு உனக்கு தருகிறது?!

இவை அமைந்தால் எதற்கு
பதவி? சேர்?
ஆகவே இவற்றைச் சேர் !!
அமைந்த பிறகு
அமர பதவி சேர் !!

சொல்லாமல் சொன்னார் இப் பாடம் !!
ஆக்கி வருகிறேன் இதனை மனப்பாடம் !!

வாழ்வார் என் மாமா பல்லாண்டு !
விரைவில் உண்டு எல்லோருக்கும்
கற்கண்டு !!

சஷ்டி முருகனை வணங்குபவருக்கு
சஷ்டியப்தபூர்த்தி வருகிறது !!
முஷ்டி தட்டி
வேஷ்டி சேலை கொடுத்து
புஷ்டியாக கொண்டாடுவோம் !!

-- முற்றும்

TVR - 10


2005_11_03_jpg0057
Originally uploaded by sowgan6163.
ஆதி நாள் தொட்டு
அரங்கனை, கிருஷ்ணனை
மனையில் வைத்தார் !!

Nov 4th 2005 அன்று
அரங்கத்து கிருஷ்ணனை
மணையில் வைத்தார் !
தன் இரண்டாவது பெண்ணிற்கு
துணையாய் வைத்தார் !!

கிருஷ்ணா கட்டினார்
காயத்ரீ கழுத்தில் தாலி !
ஷணத்தில் ஆனார் என் மாமா
பாக்கியசாலி !!

வித்தகர் கிருஷ்ணா என்
ஷட்டகர் ஆனார்!!

வடகலை ஊர்
காயத்ரீக்கு ஈந்தது
புகலை !
தந்தது எனக்கு
சகலை !!

சாரதா நிலையம் !
குறை உள் கொண்ட
உறையுள் !!

மாமாவின் இல்லமது !!
எல்லோருக்கும் தந்திருக்கிறது
ஏற்றமது !
இன்னமுது !!

உள் குறைவு !
உள்ளுக்கு குறைவில்லை !!

வருவாய் குறைவாயினும்
திருவாய் மலர்ந்து
தரையில் அமர்ந்து
வந்தவர்க்கு அன்னமிடும்
அன்பு !
பண்பு !!

வாயில் கடந்தால்
காரம், காபி என சகலமும்
வாயில் !!

சில நாள் செல்லிருந்தது !!
இன்று Cell இருக்கிறது !!

அது ஒரு கமலாலயம் !
போக வேண்டாம் பிறிதொரு
ஆலயம், இமாலயம் !!

-- தொடரும்

Thursday, December 29, 2005

TVR - 9

ஒரு உறுப்பு.
இரு பொறுப்பு....
அடக்காவிட்டால் வரும்
கழுத்தறுப்பு

அது நாக்கு..
வாக்கு வெல்லவும் செய்யும்
பாக்கு மெல்லவும் செய்யும்..

நாவை அடக்கு !!
நோவை ஒடுக்கு !!

காலையில் எழுந்து ஓடு !
இல்லாவிடில்
ஏந்துவாய் ஓடு !

தவற்றை மறந்து
இவற்றை
சிந்தித்துப் பார் !!
பார்! பார்! என உனை
வந்திக்கும் பார் !!

மாமாவின் ஆசிக்கு
நான் என்றும்
விசுவாசி !!

-- தொடரும்

TVR - 8

கச்சேரிக்கு வருவார் !!
பேகடை வர்ணம்
கடை விரிக்கும் !!
நித்திரா தேவி இவருக்கு
வர்ணக் குடை விரிப்பாள் !!

சிண்டை பிடிக்காத குறையாக
சண்டை போட்டிருக்கிறேன் அவரோடு !!

எடுத்துரைப்பார் அன்போடு !!
தடுத்துரைப்பார் பணிவோடு !!

சினம் விடு! - அதனை
தினம் விடு !!

தேவை வேகமான நடை !!
தேவையில்லை தேவையற்ற உடை !!

தேவை மனத்தே வை !!
அனைத்துக்கும் அவன் தான்
அடிப்படை !!
பக்தியோடு அன்னம் படை !!
அவன் தருவான் உன் பின்
படை !!

அகந்தை
அசூயை
அஜாக்கிரதை
அமைவது எதனால்?
அறிந்து வை - அவற்றை
அரிந்து வை!

அழுக்கு நீங்க
அகத்தை துவை !!

-- தொடரும்

TVR - 7

கூட்டிப் பார்க்காது
வீட்டுக்கு செலவு செய்வார் !!
வீடு கூட்டிப் பார்க்காது போனாலோ
வருத்தம் சொல்வார் !!

BPயில் பெட்ரோல் போடுவார் !!
BPக்கு bedrollல் தூக்கம் போடுவார்!!

அரைக் கை சட்டை அணிவார்!!
அறைகுறை மனிதரை
சட்டை செய்யாது
பட்டையைக் கிளப்புவார் !!
பணியில் துணிவார் !!

சர்க்கரை நோயாளி தந்தையை
அக்கறையோடு
நீர்க்கரை வரை காப்பாற்றியவர் !!

வேலை மாற்றத்தில் பார்த்தார்
டெல்லி, கோவா, பெல்லாரி ஊர்களை !!
இன்று ஏமாற்றத்தில் பார்க்கிறார்
சொங்கியாய் பின்
தங்கி போன
வங்கியின் தடுமாற்றத்தை !!

ஊதாரிப் பேர்களை ! - ஒன்றுக்கும்
உதவாத நார்களை !!

புழுங்கிக் கொண்டிருக்கிறார் !
Pensionஐ முன்னிட்டு ஜாக்கிரதையாக
புழங்கிக் கொண்டிருக்கிறார் !!

-- தொடரும்

Monday, December 26, 2005

TVR - 6

சுபமாய் ஒரு பெண்
சுபலட்சுமி (எ) சொளம்யா!!
ஜபமாய் ஒரு பெண்
காயத்ரீ (எ) ராஜேஸ்வரி !!

முன்னவள் எனக்கு
வாழ்க்கைப்பட்ட நங்கை !
பின்னவள் அவள் தங்கை !!

Jan 25th 1998....
மனசைப் பாறை ஆக்கி
மூத்தவளை
தாரை வார்த்தார் !! - கண்ணில்
தாரையாய் நீரை வார்த்தார் !!

பசும்பொன் பயணிக்க
மனம் பதை பதைக்க
விசும்பினார் விமான நிலைய
மண்ணுள்!!
நிற்கிறது அக்காட்சி இன்றும் என்
கண்ணுள் !!

மூன்றாண்டுகளுக்கு முன்
மூத்த பெண்ணின்
ஊரைப் பார்த்தார் !!
காரைப் பார்த்தார் !!

பேத்தியில் திருவாரூர்
தேரைப் பார்த்தார் !!

இன்று
பேரனில் தன்
பேரைப் பார்த்தார் !!

-- தொடரும்

Thursday, December 22, 2005

TVR - 5



பதவியில் இரும்பானவர் !
உதவியில் கரும்பானவர் !!

வாரியாராய் குலுங்க குலுங்க
சிரிப்பார் !!
வாரீர், வாரீர் என வாய் நிறைய
வரவேற்பார் !!

நான் பேசாதிருந்தால் ஏங்கிடுவார் !!
நான் பேசினாலோ சட்டென
தூங்கிடுவார் !!

சிறு வயதில் பல்லிழந்தார் !!
சிறு சொல் என்றிழந்தார்?

புயலா?
புதையலா? - ஆச்சர்யத்தோடு
தையல் எடுத்தார்
பாலாமடையில் !!
ஆசாரத்தோடு தாலி கட்டினார்
மணமேடையில் !!

சாரதா..
அவள் நாம கரணம் !
அவள் செயல் திறனுக்கு
போடலாம் பல
தோப்புக் கரணம் !!

எனக்கு என்றும்
செல்லமாய்
வெல்லமாய்
வடம்ஸ் மாமி !
சினந்தாலோ அவளொரு
சுனாமி !!

மாதாவும் சாரதா !!
சாதா விஷயத்துக்கெல்லாம் சதா
கோதாவில் இறங்கி
பாதாம் அல்வா தரும்
மனையாளும் சாரதா !!

வடம்ஸ் மாமி..
பதி, விரதம் என்றிருக்கும்
ஒரு பதிவிரதை !!
அவளுக்கு உண்டு ஒரு நாள்
தனிக் கவிதை !!

-- தொடரும்

TVR - 4

வெற்றிவேலை தொழும்
திருநீற்று நெற்றி !!
தினமும் அவர்க்கு தருகிறது
வெற்றி மேல் வெற்றி !!

மயிலேறுவானை தரிசனம் முடித்து
ரயிலேறுவார்
சிருங்கேரிக்கு !!

ஆச்சார்யாள்
திருப்பாதம் தொழுவார்
கண்ணில் ஒற்றி !!

வாழ்ந்து வருகிறார்
அவர் சொல் பின்பற்றி !

அகந்தை அவம் அகற்றி !!
அன்பு சிவம் புகற்றி !!

காது கை பொத்தி
அபிவாதனம் வாங்காத அச்
சாது கை தூக்கி
பாதுகை தருவார் !

மாமா அவரை
மனதார தொழுவார் !!
மனதுள் அழுவார் !

-- தொடரும்

Tuesday, December 20, 2005

TVR - 3


2005_11_18_jpg0010
Originally uploaded by sowgan6163.
TVR..
அவ் விஸ்வநாதன் சாரதாவின்
இரண்டாவது பிள்ளை !
மனசோ சங்கொத்த வெள்ளை !!

T... V.... R...
இப் பெயர் கேட்டு இன்று
சேவியார் யார்?
கேட்டறியாத பாவி யார் யார்?

கேவி அழும் குழந்தையும்
சாவி கொடுத்த பொம்மையாய்
தாவி வரும் அவரிடம்

மன்னாடி மங்கலத்தில் பிறந்தார் !!
பெற்றோர் சந்தோஷத்தில் பறந்தார் !!

மண்ணுக்கு பெருமை வர
விண்ணளவு சிறந்திருக்கிறார் !!

வங்கியில் வேலை !
கும்பிடுவதோ
அங்கி சம்பங்கியோடு
கந்தனின் வேலை !!

பல தெய்வம் தொழும் உடம்பன் !!
குல தெய்வம் செந்தூர் கடம்பன் !!

எந்தூர் செல்லினும்
செந்தூர் மறவேன் என்பார் !!

கந்தவேளை
எந்த வேளையும் தொழுவார் !!

-- தொடரும்

Monday, December 19, 2005

TVR - 2

தாத்தா
பொடி பிரியர் !
ஒரு கை Syringe ஊசிக்கு !!
மற்றொன்று பொடி
உறிஞ்சும் நாசிக்கு !!

நொடியில் செய்திகளை அறியும்
ஆர்வமுள்ள வெறியர் !

செய்திகள் பார்க்கும் போது பேசினால்
TVஐ சாத்துவார் !!

முடியாவிட்டால்
அறை விட்டு நம்மை சாத்துவார் !!
அறை விட்டு அகல்வார் !!

அவரோடு நான்
அதிகம் வார்த்தை வார்த்ததில்லை !!
ஆனால் கேட்டிருக்கிறேன்
அவர் கொடுத்த வாக்கு என்றும்
தோற்றதில்லை !!

சாரதா சமேத
சந்திர மெளலீஸ்வரனாய்
சனம்
தினம் கொண்டாடிய
என் தாத்தாவின்
தாரம் சாரதா !!

அவர் ஒரு அவதாரம்!
அவர்க்கோ அவள் தான் ஆதாரம் !!
மூலாதாரம் !!
ஜீவாதாரம் !!

அவர் தான்
அவளின் அலங்காரம் !!
அவளின்றி அவர்க்கு
இறங்காது ஆகாரம் !!

பாரமாக யார்க்கும் இல்லாமல்
சாரமாக வாழ்ந்தவர்கள் !!

பாட்டி இன்று
அம்பியகத்தில் !!
தாத்தா அனைவர்
அகத்தில் !!

-- தொடரும்

Friday, December 16, 2005

TVR - 1

சுமார் 50 வருடம் முன்னே...

இந்திய வரைபடத்தில்
மங்கலாய் விளங்கும்
மன்னாடி மங்கலம் எனும் ஊர்....

வண்டாடிய சோலையும்
நண்டாடிய ஏரியும்
கொண்ட அவ்வூர்
திண்டாடியது மருத்துவ வசதியின்றி!!
மக்களோ பண வசதியின்றி!!

கோலம் போடும் பெண்கள்
ஓலம் போட்டனர்!

நிக்கிறியே சாமி
சக்கரம் சங்குமா !
கொண்டை சேர்ந்த பூவும்
குங்கும நெற்றியும் தங்குமா?
அல்லாடறேன் அங்குமிங்குமா !!

மக்கள் முனகினர் !
மூலையில் முடங்கினர் !!

திடீரென்று ஒரு நாள்
கூடினர்! ஆடினர் !
பாடினர் ! கூத்தாடினர் !!

கொண்டாடினர் ஒரு
கோமகனை !
மருத்துவனை !!

அடி ஆத்தி!!
நாவார தொழுகிறேன் இவரை
நாவில் சொல் ஏத்தி !!

கயிலையில் பிறங்கும் தீ
அவ் வைத்தீ..

ஆலம் உண்டு
சூலம் கொண்டு
ஊர்த்துவ தாண்டவம் ஆடிய
அப் பைத்தி...

பெட்டை எனக்கு பொட்டும்
தலை நிறைய மொட்டும்
நிலைக்க..

இன்று
கால் கொண்டு வந்தானோ
இவ் வைத்தியாய்?

சிலாகித்தது கிராமம் !!
சிலிர்த்தது ரோமம் !!

ஒரு நாள்..
ஒருவனுக்கு....
பிடரியில் படார் என அறைந்து
பிடித்த பிணி நீங்கச் செய்த
படித்த மருத்துவன் !!

அவர் தான் மாமேதை விஸ்வநாதன் !
1998ல் மறைந்து போன மாமனிதன் !
எனக்குத் தாரம் வழி தாத்தா !!

-- தொடரும்

Monday, December 12, 2005

பாட்டி எனும் பரமாத்மா - 10

கூட்டுக் குடும்பமாய் வாழாத மானுடரே !!
உரைக்கின்றேன் உமக்கு !!
இதில் உண்மை இருக்கு !!

யாது கண்டீர் வாழ்வில்?
தேங்காய் மாவு தெரியுமா?
திதி வாரம் புரியுமா?

இஞ்சி லேகியம் அறிவீரோ? - குற
வஞ்சி கூத்து பார்த்தீரோ?

வாய்க்கால் வயலில் நடந்தீரா?
விசிறிக் காற்று நிழலில் கிடந்தீரா?

பெரியோர் வழி வாழ்க்கை
கடந்தீரா?
அ·திலேல் உந்தன் பிறவிக்
கடன் தீரா!!

பார்த்ததையெல்லாம் வாங்குகிறீர் !
பணம் பத்தாது என ஏங்குகிறீர் !!

பணம் பணமென பறக்கிறீர் !
சொந்தத்தை துறக்கிறீர் !
ஆறடி நிலம் தான் சொந்தம் என்பதை
மறக்கிறீர் !!

பாட்டி மடி இருந்தால்
ஊட்டி உமக்கு
ஓய்வெடுக்க எதற்கு?

கூட்டில் ஒரு
பாட்டி இருந்தால்
"பாட்டில்" மறையும் !!
பாட்டு, பண்பாடு நிறையும் !!
பாடு குறையும் !!!

ஓட்டி விடுவாள்
விஷ ஜுரத்தை!!
ஆட்டி விடுவாள்
அழுங் குழந்தையின் தொட்டிலை !

காட்டி விடுவாள் கதையில்
கந்தனையும் முகுந்தனையும் !!

நாட்டி விடுவாள்
நற்சிந்தனையை !!

சூட்டி விடுவாள்
சிடுக்கெடுத்த தலையில் பூவை !!

ஊட்டி விடுவாள்
ஒரு வாய் சோறும்
ஒரு துளி நார்த்தங்காயும் !!

என் பாட்டி !!
எத்தனை எத்தனை செய்தாள்?
எத்தனையும் வியக்குமாறு இவை
அத்தனையும் செய்தாள் !!

வேறெங்கு காண்பேன்
இவளொத்த ஒருவரை !!
வாழ்வாள் 100 வயது வரை !!

என் எழுத்து அனைத்தும்
அவளுக்கு அர்ப்பணம் !!
தருமோ பணம்
அவள் விமர்சனத்தின் சுகம்?

அவள் Autographக்கு
சமர்ப்பிக்கிறான்
இந்த "பல்லவன்"
இந்த Autographஐ !!

-- முற்றும்

பாட்டி எனும் பரமாத்மா - 9

ஜெயலட்சுமி, சங்கரி !!
கண்களாய் இரு
பெண்கள் !!

மூத்த பெண்
சமீபத்தில் வானில் !!
இளையவள் சமீபத்துக்கு
எதிர்பதமாம் பெருங்களத்தூர் எனும்
அதுவான கானில் !!

பேரன் கள்! என
பெயரெடுக்கா
பேரன்கள்!!
உள்ளம் கள்ளமில்லா
பேத்திகள் !!

கணக்கிட்டுக்
கொள்ள முடியா
கொள்ளு பேரன்கள்,
கொள்ளு பேத்திகள் !!

சித்தி அவள் லஷ்மணனுக்கு !!
சித்தி அடையாத எழுத்துக்களால்
பிரசித்தி பெற்ற
வாதூலன் எனும் எழுத்தாளனுக்கு !!

-- தொடரும்

பாட்டி எனும் பரமாத்மா - 8

போதும் போதுமென
மென்னி நிறைய
பொன்னி சோறு
பத்து மணிக்கு உண்டு !!

அச்சோறு இன்று
பார்ப்பார் யாரு?
அதற்கு ஒப்பு ஏது வேறு ?

பிற்பகல் தோறும்
முலாம் பூசிய
வெங்கலப் பானையில்
பொங்கல் உண்டு !!

ஆள் உயர உலக்கை உண்டு !!
உலகை சுற்றிப் பறக்கும்
பொடிகள் அதில் பிறக்கும் !!
மூக்கை நெடி துளைக்கும் !!

முழங்கை நீளக் காய் காய்க்கும்
முருங்கை உண்டு !!
வீட்டு எதிரில் !
பறிக்கலாம் எளிதில் !!

வீட்டில் புழுக்கிய அரிசி,
தோட்டம், துரவென
வாழ்ந்த மாதரசி !!

-- தொடரும்

பாட்டி எனும் பரமாத்மா - 7

கடம்பூர் சமையல் -
எனக்குஅதன் மீது என்றும்
தனி மையல் !!

தளிகை சாமான்கள் தனத்தின்
மளிகைக் கடையிலிருந்து !!

செவிடன் பயரிட்டு தரும்
தவிடு போக்கிய நெல் !!

உள்ளூரிலும் குத்தலாம் இடிசலாக !!
எண்டத்தூரில் குத்துவோம் பதவிசாக !!

கறிகாயை
பதார்த்தம் என கூறும்
யதார்த்தம் தெரிந்த உழவர்கள் !!

விறகடுப்பு சமையல்!! - LPG விலை குறித்த
கடுப்பில்லா சமையல் !!

-- தொடரும்

Thursday, December 08, 2005

பாட்டி எனும் பரமாத்மா - 6

சுண்ணாம்புக் காளவாய் உண்டு !!
நாவுக்கரசரை அவிக்கத்
தவித்த காளவாய் அன்று !!

நாவுக்கும் வாய்க்கும்
நாளும்
அவிக்க சோறு தரும்
காளவாய் ஒட்டிய நிலம்!!

வாரணம் இல்லா ஊரிலும்
காரணப் பெயர் !!

கடல் அலை கிடையாது !!
கடலை உண்டு !!
கொத்தாய் !! எமக்கு
சொத்தாய் !!

பெண் உடலை பார்த்து
"கடலை" போடும்
விடலை உண்டு !!

சிஸ்டர் தள்ளி இருந்தாள் பாட்டிக்கு
டிரான்ஸிஸ்டர் மட்டும் துணைக்கு !!

நானிலம் காட்டும்
மாநிலச் செய்திகள்
தப்பாமல் மாலை 6:30 மணிக்கு !!

சலங்கை, தம்பூரான் கிடையாது !!
சலங்கை பூரான் நிறைய உண்டு !!

தேன் உண்டு !!
தேள் உண்டு !!

கொல்ல அஞ்சா
நல்ல பாம்பு உண்டு !!
அஞ்சாதார் யாருண்டு?

பார்த்திருக்கிறேன் !!
வேர்த்திருக்கிறேன் !!

-- தொடரும்

பாட்டி எனும் பரமாத்மா - 5

நடேசன், ஜிங்கான் !!
மங்காப் புகழுக்கு உரியவர்கள் !!
வீட்டு வேலையில் உதவியவர்கள் !!

என் தாத்தாவின் சொல்
தன் ஆத்தாவின் சொல்
என வாழ்ந்தவர்கள் !!

கவனத்தோடு கரும்பு பயிரிடும்
சவனத்து ரெட்டி !!

பேச்சு குறிஞ்சியாய்
மூக்குப் பொடி உறிஞ்சியாய்
வாழ்ந்த ராமகிருஷ்ண ரெட்டி !!

திருவிழா உண்டு
காளியம்மன்
கங்கம்மன்
மாரியம்மனுக்கு !!

ஏரி ரொம்ப
மாரி அனுப்பு
எனும் மனுவுடன் !!

பூக்காரி பார்த்ததில்லை !!
பூசாரி பார்த்திருக்கிறேன் !!

-- தொடரும்

பாட்டி எனும் பரமாத்மா - 4

நெல் கொட்டும் குதிர் உண்டு !!
குதிரைக் கறவியது எலியா எனும்
புதிர் உண்டு !!

புதிய காலை தோறும்
பழையது உண்டு !
உண்டு தோளில்
பழைய துண்டு
பழையதுண்டு
கிணற்றுக் குளியலுக்கு போகையில் !!

பொங்கு நுரை
பம்ப் செட்டருகே
நுங்கு உண்டு !!
நுங்கு தரும் பனை மரங்களில்
எம் குடும்பத்தினருக்கு
பங்கு உண்டு !!

புளி உண்டு - பொந்தில்
கிளி உண்டு !!
சத்தியமாய் இவை
நித்தியம் உண்டு !!

கொல்லை மேடு உண்டு !!
எல்லைக் கோடு
எல்லோர் நிலத்துக்கும் உண்டு !!

ஆல் இலை
இலை எனாமல்
உண்டு !!

உமிக்கரி உப்பு உண்டு !!
பல் விளக்கி வந்தால்
சிக்கரி சேர்த்த
டிகிரி காப்பி உண்டு !!

-- தொடரும்

பாட்டி எனும் பரமாத்மா - 3


2005_11_18_jpg0005
Originally uploaded by sowgan6163.
கடம்பூர் !!
குக் கிராமம் !!
ஜெயராமனை கைபிடித்த
ஜானகியின்
புக் கிராமம்!!

விழித்துக் கொள்ளும் ஊர்
உதித்து விட்டேன்! என
வெண்கதிரின் தந்தி
சேவல் ஏந்தி
வந்த பின் !
தந்த பின் !!

கொட்ட கை இருக்கும்!! - சினிமா
கொட்டகை கிடையாது !!

சாலையில் சுத்தமாய்
தார் இருக்காது !!
ஜனகம் எனும் இடைச்சியின் சுத்தமான
மோர் இருக்கும் !!

ஸ்திதிலமான வீடு !!
எமக்கு விடுமுறை தோறும்
மிதிலையான வீடு !!

கீத்துக் கொட்டகை வாசல் !!
பார்த்திருக்கிறது பலவூர் பூசல்!!

தலை மேல் ஓலை
பழையதானால்
விலைக்கு போகாது !!
உலைக்கு போகும் !!

-- தொடரும்

Wednesday, December 07, 2005

பாட்டி எனும் பரமாத்மா - 2


2005_11_06_jpg0001
Originally uploaded by sowgan6163.


யாக்கையில் தான் மூப்பு !! வேலை
பார்க்கையில் உண்டு
ஊரின் கை கூப்பு !!

பட படப்பு இல்லா
பர பரப்பு !!
சுறுசுறுப்பு !!

கீரை ஆய்கிறாள் !!
குறுக்கெழுத்தை ஆராய்கிறாள் !!

தினம் மலரும்
தின மலரில் செய்தி அறிகிறாள் !!
முதுகுத் தண்டு நோக
வாழைத் தண்டையும்
கீரைத் தண்டையும் அரிகிறாள் !!

இதழோரம் என்றும் நாராயணம்!!
பூ இதழ் கொண்டு
சுந்தர காண்டம் பாராயணம் !!

தீபாவளியையும் மலரையும் தொலைத்தவள் !!
தீபாவளி மலரை தொலைத்தால்
தொலைத்து விடுவாள் !!
துளைத்து விடுவாள் !!

இவள்
தேகம் மறந்து எழுதும்
ஸ்ரீ ராம ஜெயம் பார்த்துதான்
சீதைக்கே
ஸ்ரீ ராமனின் ஜெயம்
சந்தேகமற புரிகின்றது !!

அகவை 91றினால் தோலில் சுருக்கம் !!!
அவை அனைத்தையும் எழுத
ஆகும் பல சருக்கம் !!

-- தொடரும்

Monday, December 05, 2005

பாட்டி எனும் பரமாத்மா - 1

ganesh
களக்காட்டில் பிறந்தவள் !
ஆற்காட்டில் புகுந்தவள் !
களம் காடு பார்த்தவள் !!

Mansionல் வாழ்ந்ததில்லை !!
இருந்தாலும் உறவுகள் இவளை
Mention பண்ண தவறுவதில்லை !!
இன்று Pensionல் Tension இல்லாமல்
வாழ்கிறாள் !!

பண்டிகை எல்லாம்
அவள் கை பக்குவம் உண்டு!!
உண்டு உண்டு அவளை
மெச்சியது உண்டு !!
உண்டு உண்டு அவளை
மெச்சியது உண்டு !!

காரம் இருக்கும்!
அகங்காரம் இருக்காது !!

முறுக்குண்டு !
முறுக்கில்லை !!

நெடுஞ் சாண் கிடையாய் விழின்
கூடவே தருவாள்
ஒத்தை ரூபாய் நோட்டும்
ஒரு வாய் ஆசீர்வாதமும் !!

கண் தெரிய
ரவியை பார்த்தாள் !
கண் தெரிய
ரவியை பார்க்கிறாள் !!

ஒரு ரவி
கண் இருள் போக்கிய
கண்ணியன்!
புண்ணியன் !!
வைத்தியன் !!

மற்றொருவன்
மண் இருள் மூடாதிருக்க உதவும்
பகலவன் !
பகல் அவன் !!
கதிரவன் !
கதிர் அவன் !!

-- தொடரும்