Monday, December 12, 2005

பாட்டி எனும் பரமாத்மா - 10

கூட்டுக் குடும்பமாய் வாழாத மானுடரே !!
உரைக்கின்றேன் உமக்கு !!
இதில் உண்மை இருக்கு !!

யாது கண்டீர் வாழ்வில்?
தேங்காய் மாவு தெரியுமா?
திதி வாரம் புரியுமா?

இஞ்சி லேகியம் அறிவீரோ? - குற
வஞ்சி கூத்து பார்த்தீரோ?

வாய்க்கால் வயலில் நடந்தீரா?
விசிறிக் காற்று நிழலில் கிடந்தீரா?

பெரியோர் வழி வாழ்க்கை
கடந்தீரா?
அ·திலேல் உந்தன் பிறவிக்
கடன் தீரா!!

பார்த்ததையெல்லாம் வாங்குகிறீர் !
பணம் பத்தாது என ஏங்குகிறீர் !!

பணம் பணமென பறக்கிறீர் !
சொந்தத்தை துறக்கிறீர் !
ஆறடி நிலம் தான் சொந்தம் என்பதை
மறக்கிறீர் !!

பாட்டி மடி இருந்தால்
ஊட்டி உமக்கு
ஓய்வெடுக்க எதற்கு?

கூட்டில் ஒரு
பாட்டி இருந்தால்
"பாட்டில்" மறையும் !!
பாட்டு, பண்பாடு நிறையும் !!
பாடு குறையும் !!!

ஓட்டி விடுவாள்
விஷ ஜுரத்தை!!
ஆட்டி விடுவாள்
அழுங் குழந்தையின் தொட்டிலை !

காட்டி விடுவாள் கதையில்
கந்தனையும் முகுந்தனையும் !!

நாட்டி விடுவாள்
நற்சிந்தனையை !!

சூட்டி விடுவாள்
சிடுக்கெடுத்த தலையில் பூவை !!

ஊட்டி விடுவாள்
ஒரு வாய் சோறும்
ஒரு துளி நார்த்தங்காயும் !!

என் பாட்டி !!
எத்தனை எத்தனை செய்தாள்?
எத்தனையும் வியக்குமாறு இவை
அத்தனையும் செய்தாள் !!

வேறெங்கு காண்பேன்
இவளொத்த ஒருவரை !!
வாழ்வாள் 100 வயது வரை !!

என் எழுத்து அனைத்தும்
அவளுக்கு அர்ப்பணம் !!
தருமோ பணம்
அவள் விமர்சனத்தின் சுகம்?

அவள் Autographக்கு
சமர்ப்பிக்கிறான்
இந்த "பல்லவன்"
இந்த Autographஐ !!

-- முற்றும்