Monday, January 30, 2006

அம்மா - 16

அம்மாவோடு-
பகல் காட்சி பார்த்ததில்லை !!
பொருட்காட்சி பார்த்திருக்கிறேன் !!

தையல் இவளுக்கு
தையல் தெரியும் !!
தையல் தெரிந்தவருக்கு
இத் தையலின் தையல்
கதையல்ல
புதையல் என புரியும் !!

அடுக்களைக்கு வருவோம் !!
அறுசுவைக்கு வருவோம் !!

பொரித்த கூட்டு
பதார்த்தங்களின் புன்னகை
தரித்த கூட்டு !!
பின்னாளில்
மாமியார் கையில் விதி
மரித்த கூட்டு !!

சனி தோறும்
மைசூர் ரசம்
சாதத்தோடு செய்யும்
சரசம் !!

சாம்பார் ! - சாப்பிட்டவர்
தேம்பார் !!

தாளகம் !! - அமுதத்
தாடகம் !!

குல்குந்து
குஞ்சா லாடு !!
சாப்பிட்டு சப்புக் கொட்டாதவன்
பெருமாள் மாடு !!

பார்த்து பார்த்து செய்வாள் !!
அன்பை அதில் பெய்வாள் !!

-- தொடரும்

அம்மா - 15

circle cone cylinder
சுற்றளவு பரப்பளவு
சொல்லித் தருவாள் பாங்காய் !!
முதலில் பருப்பு தேங்காய்
பால் குவளை
கண்ணில் வரும் !! பிறகு
எண்ணில் வரும் !!

முருகேசன் குவளையையும்
மோர் மிளகாயையும்
முறைப்பேன் !!
உம்மால் எனக்கு தொந்திரவு
என உரைப்பேன் !!

பை பை என
வாசலில் படிப்பேன் !!
பையா! ஏ பையா !!
சாமான் வாங்கும் பையா?
என்றால் வெடிப்பேன் !!
திக்கு வாயா என்றால்
அடிப்பேன் !!
இது Pi என்று சொல்லி
துடிப்பேன் !!

சிந்தனையில்
சைத்தன்யத்தை வைத்தவளையும்
சைத்தானாய்
பை தான் படுத்தியது!

பித்தப் பைக்கும்
கருப்பைக்கும்
இருமுறை கத்தியின் கீழ்
போனாள் !!
எடை குறைந்தவளானாள் !!

-- தொடரும்

Thursday, January 26, 2006

அம்மா - 14

இவ்வண்ணம்
இருந்த வாழ்வில்....

ஆற்று வெள்ளத்துக்கு
உண்டு கரை !!
ஆறு மணிக்கு
உண்டு எமக்கு உரை !!

கிரணங்கள் மடங்கும் !!
பகல் அடங்கும் !!
அல் தொடங்கும் !!

தம் இல் திரும்பும்
எவ் விலங்கும் !!
எம் இல்லில்
சஹஸ்ரநாமம் இலங்கும் !!

யாமம் தோறும்
தூமம் !!
தந்திருக்கிறது பல
சேமம் !!

தொடங்கும்
திங்களின் பாவாடைக்கு
விண்மீனின் கொசுவ மடிப்பு !!
எங்களின் படிப்பு !!

அம்மா படித்தது
பத்து வரை !!
படிப்பு சொல்லிக் கொடுத்ததும்
பத்து வரை !!
அவள் திறமையை அடைக்க
பத்தாது
பத்து வரை !!
அவளிடம் நான் கற்ற அளவு
பத்து துவரை !!

உரையை கையில் தந்து
ஒப்பிப்பேன் !!
குறையில்லை! என்பாள்
தப்பிப்பேன் !!

இல் சுத்தம் செய்தவள்
இலக்கண சுத்தமும்
செய்வித்தாள் !!

நான்
வாலி படித்து கற்றதை விட
அவள்
தாலி பார்த்து கற்றது
அதிகம் !!

இக் கவிதையின்
விதையும் அவள் !
விதைத்தவளும் அவள் !!

விளையாத,
ஒன்றுக்கும் வளையாத
விதைகளை
உதைத்தவளும் அவள் !!
உதைத்த பின்
பதைத்தவளும் அவள் !!

-- தொடரும்

அம்மா - 13

கொண்டை பிய்ந்து
சிண்டை பிடித்து அம்மா
காலை தோறும்
சாலை பார்த்து
மூலையில் உட்காருவாள்!!

தோலை உரிக்கிறேன்!
வாலை வெட்டுகிறேன் !
காலை கட்டுகிறேன் ! என
கால் நடையாய் எம்மை
பார்ப்பாள் !!
கோலை தேடுவாள் !!
சாடுவாள் !!

மூலையில் புலம்புவாள் !!
கண்ணீரில் கன்னத்தை
அலம்புவாள் !!

சண்டை சச்சரவு தான்
வாழ்க்கை !!
காலப் போக்கை அவை
மனதுள் பதிக்கின்றது !!
நெஞ்சம் பின் நாளில்
அதை நினைத்து
திதிக்கின்றது !!
திரும்பி வா என
துதிக்கின்றது !!

வாழ்க்கையில்
சண்டை பார்க்காத கை
பாழ் கை !!
சண்டை நேசிக்காத
மண்டை பார்க்கும்
சீக்கை !!

யுத்தத்துக்கு எண்ணம்
இருந்த வாழ்வில்
முத்தத்துக்கு கன்னம்
இருந்தது !! ஆதலின்
வண்ணம் மிகுந்தது !!

-- தொடரும்

Monday, January 23, 2006

அம்மா - 12

இளையவன் கணேசன்
சோழன்!!
தலை தாழன் !!
தாழின் வாழன் !!
வள வள வாயன் !!
பாடும் போது தூயன் !!
சாடும் போது பேயன் !!

மூவேந்தனில் இவன்
பாவேந்தன் !!
தமிழ் நா வேந்தன் !!
தமிழன்றி நாவில்
வேறொன்றை ஏந்தன் !!

வாலி தாசன் !!
குருவை தொழுது
இக்கவிதை தரும்
காளிதாசன் !!

ஊர் பெருங்களத்தூர் !!
அந்நாளில் பார்த்திருக்கிறது
அரசர்களின் அஞ்சா நெஞ்சம் !!
குடும்பத்து போருக்கா பஞ்சம்?

எமது போர்..
எவர் எழுதினார் இதை
வளவி?
ஆகவே இது
எழுதாக் கிளவி!

அரு கதை !! - உண்டு
அருகதை !!

குருஷேத்திரப் போர்
படிப்போர் பலர்
எம் வாசல் வழி
கடப்போர் !!
எம் குரல் கேட்போர் !!
பிரளயமா என
வானம் பார்ப்போர்!

எம் போரைப் பார்த்து
வாய் திறப்போர் !!
திறந்த வாய் மூட
மறப்போர் !!

செருப்பு, பருப்பு
தைத்த உடை
விதித்த தடை
கடிகாரம்
வெடி, காரம்
மூக்குப் பொடி
பல் பொடி
என்று அனைத்துக்கும் சண்டை !!
உருளும் மண்டை !!

பாதுகை பறக்கும் !
பஞ்சு மெத்தை கிழியும் !!
முன் பல் உடையும் !!
முட்டி தேயும் !!

-- தொடரும்

அம்மா - 11

தேக்கொத்த யாக்கை !!
கூற மாட்டான் சாக்கை !!
வேலை தான் அவனுக்கு
வாழ்க்கை !!

டில்லி, உதய்பூர், ராஞ்சி போனன்!!
இஞ்சியாய் இருந்தவன்
சுற்றுலாத் துறைக்கு உழைத்து
சுற்று பெருத்தன் !!

நட்சத்திர உணவு விடுதியில்
மேலான வேலை!
மேலாளன் வேலை !!

சாப்பிட்டவுடன் பாக்கு நீட்டிடுவர் !!
பணம் கட்ட முடியாமல்
திக்கு முக்காட வைத்து
முகத்தில் பற்றை தீட்டிடுவர்!!

நள்ளிரவில் அவன்
வண்டி தொடும் சாலை !!
எமது ஊரோ ஒரு மூலை !!

இன்று பார்க்கிறான் -
ஒப்பீடு இல்லா
காப்பீடு வேலை !!
வித்தை இதில்
பார்க்கிறான் பல
கத்தை !!

-- தொடரும்

Friday, January 20, 2006

அம்மா - 10

அடுத்தவன் ஜெயராமன் !!
அவன் சேரன் !!
ஒருத்தனோடும் சேரன் !!
தனித்து இருப்பன் !!

முன்னாளில்
அவனுக்கு இருந்தது
மயக்கம் !!
ஆதலின்
அம்மாவுக்கு அவனை
தனித்து விட
தயக்கம் !!
அறிந்தாளில்லை அவள்
பின்னாளில் இவனது
இயந்திர
இயக்கம் !!

படித்தது
எத் தரப்பும் மெச்சும்
உப்பு உரப்பும்
பந்தி பரப்பும் ஆன
தொந்தி நிரப்பும்
படிப்பு !!

பரிசாரகம் !!
பார்த்ததில்லை
பரிகாசம் !!

உலை வைக்கவும்
இலை வைக்கவும்
தலை வைக்கவும்
சொல்லித் தரும்
கலை !!

சட்டையின்றி
பட்டையோடு சந்தி செய்து
கூழ் அரை வயிறு குடித்து
ஏழரைக்கு ஓடுவான்...

பட்டையோடு பந்தி போட
சொல்லித் தரும்
பட்டப் படிப்புக்கு !

இவனளவில் அது
"பட்டை" படிப்பு !!

-- தொடரும்

அம்மா - 9

தத்தை
தத்தை முறியடித்தாள் இச்
சொத்தை பெற்று !!
முத்தை பெற்று !!

கண் மீன் ஆனவளின்
முதல் விண்மீன் !!
இவனால் புகழ்
கொண்டது ஜமீன் !!

ஆதலின் இவன்
பாண்டியன்!!
"சபை" காத்த பாண்டியன் !!

தமிழ்ச் சபை
திருச் சபை அல்ல !!

குப்பை சப்பை விஷயத்தை ஆராய்ந்து
தப்பை ஆப்பையால் அளந்து
கோப்பையால் பருகும்
பெருங்களத்தூர் கலக சபை !!

தோண்டி தோண்டி
சண்டையிடும் சண்டியன் !
அம்மாவுக்கு வேண்டியன் !!

-- தொடரும்

Monday, January 16, 2006

அம்மா - 8

இல்லுக்கு வருவோம் !!
அதில் நடந்த
மல்லுக்கு வருவோம் !!

கதவு கண்ட அகம்
மகவு கண்டது !!
மகவு கண்ட அகம்
தகவு கண்டது !!

மூவேந்தர் உதித்தனர் !
தாய் தந்தை ஆசீர்வதித்தனர் !!

நாராயணன் மூத்தவன் !!
நடத்தியிருக்கிறான் பல
கூத்தவன் !!

பெரும் புயல்
இப் பயல்
மூன்று வயது
முயலாய் இருந்த வருடம் !!

பலமுறை
பாட்டி புலம்பியிருக்கிறாள்!
என்னிடம் விளம்பியிருக்கிறாள் !!

மழை ஒழுகும் வீட்டு நடு
எங்கே ஓடும் இந்த வடு?

குளிருக்கு ஒடுங்கி இருப்பான் !!
இடிக்கு நடுங்கி இருப்பான் !!

பெரு மழை பெய்தது
பல வாரம் !!
சன்னல் இடத்திலோ
சுவரில் துவாரம் !!

ஈரலுக்கு இரை ஏந்திய
சாக்குப் பை
சாரலுக்கு திரையானது!!

அப்பாவிடம்
அளவு கோலில்
அளவின்றி
அடி வாங்கிய
அடியவன் !!
அடியவனையும் அனைவரையும்
ஏற்றி வைத்த ஏணிப்
படியவன் !!

தெம்பாய் பம்பாய் போனான் !!
கணினியில் கொம்பாய் ஆனான் !!

பூஜ்யமும் ஒன்றும்
ராஜ்யம் ஆளும் என்பான் !!
அவ்விரண்டில்
இரண்டு பத்தென்பான் !!
நாலை நூறென்பான் !!

உண்மை தான்!
பைனரியில் அது
உண்மை தான் !!

2=10 (in binary)
4=100 (in binary)

-- தொடரும்

அம்மா - 7

அவர் கை அடி பட்டு
அடியேன் கன்னம் வீங்கியதில்லை !
கால் அடி தொட்டு
ஆசீர்வாதமும் வாங்கியதில்லை !!

வீங்காததை நினைத்து
ஏங்காத நாளில்லை !
வாங்காததை நினைத்து துயரம்
தாங்காத நாளில்லை !!

பேரன் என் மீது அன்பு
பேரன்பு !!

கடுதாசி எழுதினார்
பேரனை
நோய் நொடியிலிருந்தும்
நாய்க் கடியிலிருந்தும்
காப்பாற்றுவீர் என்று !!

அது தான் அக்
கருணைக் கடல் எழுதிய
கடைசி மடல் !!
அதன் பின்னன்றோ
உயிர் நீத்தது அவர்
உடல்?!!

அவரை பயரிட்ட
அவரை
எவரை ஒப்பிட்டு
ஏத்த இயலும்?
முயலும் எவ் இயலும்
அயலும் !!

நித்யசூரியாய்
வீற்றிருக்கிறார் புகைப்படத்தில்
நெற்றிக்குத் தான் பொட்டு !!

வணங்கி கும்பிட்டு
இன்றுவரை வாங்குகிறோம்
கணக்கில் பெருங் கை தட்டு !!

-- தொடரும்

Friday, January 13, 2006

அம்மா - 6

களை நிலத்தை
விளை நிலம் ஆக்கி
களைத்தவர் !
கணக்கில் இவர்
யார்க்கு சளைத்தவர்?

உயரம் தான்
தவக்களை!
முகத்தில் தெரியும்
தவக் களை !!

மணிக்கணக்காய் கணக்கில்
நேரம் தூரம்
சொல்லித் தருவார் !!
செவி மடுத்தோர்
மதிப்பெண்களை
அள்ளி வருவார் !!

பேரன்களின்
விடைகளை அவர்கள் பள்ளி
உடை களையும் முன்..

அடைவாசல் படியில்
எடை பார்த்த
விடாக்கண்டர் !!

ராமப்ரியாவின்
ராமானுஜன் !!

ஹைதராபாத் வரை
முழங்குகிறது அவர்
புகழ் ஓசை !
காந்தாவுக்கும் அவர் மேல்
கொள்ளை ஆசை !!

-- தொடரும்

அம்மா - 5

தா! தா! என
தாத்தா
திருடனை துரத்தியிருக்கிறார் !!

ஜெயராமன் தாத்தா
அயராது கட்டிய வீடு !
அவர்க்கு இல்லை ஈடு !!

ராமப்ரியாவில் அவர்..

கேட்டும் இருக்கிறார்
பண்ணை !
போட்டும் இருக்கிறார்
பண்ணை !!

அவர் பண்ணையில்
நட்டது தென்னை மரம் !!
விட்டது வியர்வையெனும் உரம் !!

தென்னம் பிள்ளைக்கு
கெல்லிக் கொடுத்தார்
மண்ணை!
பேரப் பிள்ளைக்கு
சொல்லிக் கொடுத்தார்
எண்ணை !

உருவில் அவர்
குட்டை !
கணக்கில் தப்பு செய்வோர்க்கு
கொடுப்பார்
குட்டை !!

-- தொடரும்

Tuesday, January 10, 2006

அம்மா - 4

கொடுத்தாள்
வெங்குட்டுவுக்கு கரம்
தொடங்கியது இல்லறம் !

அவர் ஆறடி
இவள் வருவாள்
அவர் மார் அடி !!

அவர் -
கெளசிக கோத்திரம்
உண்டு தேவையான
ஆத்திரம் !
தெரியாது சாத்திரம் !!

உபவீத நாதம்
சாம வேதம் !
பண்ண மாட்டார் வேண்டா
வாக்கு வாதம்
தேவை வேளைக்கு
சாதம் !

தெரியும் சில கீதம் !
சுருதி பேதம் !
பாதம் கொண்டு
நடப்பார்
நிறைய காதம் !!

ராமப்ரியா !
ராகத்தின் பெயரில் அகம் !
அம்மாவின் சகம் !!

அச் சகம்
அனுதினம் ஒரு அனுபவம்
பதிப்பிக்கும்
அச்சகம் !!

பார்த்திருக்கிறது
உலகம் பாராத வண்ணம்
உலகம் பாராத
பல கலகம் !!

-- தொடரும்

Monday, January 09, 2006

அம்மா - 3

சங்கரி நாமம் !
சங்கரி நாமமல்ல !!
சைவம் !!

சனித்த நாள் முதல்
காலையில்-
வெம்பு கரிக்கு ஆயிரம்
மாலையில்-
சம்பு ஹரிக்கு பாயிரம்
என
சங்கரிக்கு வாழ்க்கை !
நுழைத்ததில்லை யார்
வாழ்க்கையிலும் மூக்கை !!

தமிழிலும் தமிழிசையிலும்
நா நாளும் அமிழும்
சுரமாய் உமிழும்

பாடியிருக்கிறாள்
பல வயலினோடு
பல கயலினோடு

மிகையில்லை ! - பல
வகை வாத்தியத்தோடு
வாசித்த சில
புகைப்படம் இருக்கிறது

பாமாலையில் பூமாலை
போடுவாள் !
குருதியை சுருதியாக்கி
பாடுவாள் !
கதி கருதி உமா
பதியை தேடுவாள் !

-- தொடரும்

Thursday, January 05, 2006

அம்மா - 2

2005_11_16_jpg0002

பணம் தனம்
இல்லாக் குடும்பத்துக்கும்
ஆத்தா தான் ஆத்தி !!
இன மரங்களிலேயே
இலை வரை
மணக்கும் ஆத்தி !

அம்மா!
மன இருள் அகற்றும் தெய்வம்
மனிதருள் தோன்றும்
கால் ஊன்றும்
என்பதற்கு சான்று !

களக்காடு
பூக்காடு கொள்ள
ஆற்காடு ஏற்காடு
கூட்டிச் செல்ல
கொண்டல் வந்தது !
தென்றல் தந்தது !!

புரியவில்லையா?
தெரியவில்லையா?

ஆற்காடு ஜெயராமன் தாத்தாவுக்கும்
களக்காடு ஜானகி பாட்டிக்கும்
இரண்டாம் கிள்ளை!
இவளுக்கு இணை இல்லை !!

என்னவள் தென்னவள் !
ஜெயா பெரியம்மாவுக்கு
சின்னவள் !

ஆயில்ய நட்சத்திரத்தில்
உதித்தாள் !
ஆலயமாய் குவலயத்தில்
கால் பதித்தாள் !!

-- தொடரும்

Tuesday, January 03, 2006

அம்மா - 1

2005_11_04_jpg0058

அம்மா!
அகர வரிசையில் முதல்
ஆனந்தத்துக்கு முதல்
இனத்துக்கு முதல்
ஈகைக்கு முதல்
உயிருக்கு முதல்
ஊக்கத்துக்கு முதல்
எளிமைக்கு முதல்
ஏக்கம் தீர முதல்
ஐயம் அகல முதல்
ஒழுக்கத்துக்கு முதல்
பிறக்கும் எவ்வுயிரும் எழுப்பும்
ஓசைக்கு முதல்
ஒளடதத்துக்கு முதல்

அம்மா!
இ·தனைத்துக்கும் முதல் !
இன்று தமிழ்நாட்டுக்கும்
முதல் !!

'அன்னையும் பிதாவும்
முன்னறி தெய்வம்'
முழங்குகிறது கொன்றை !!
காண இயலாது
அதனினும் சிறந்த ஏத்தல்
வேறொன்றை!!

ஆகவே ஆச்சி
அத்தனுக்கும் முன் !
இறைக்கும் முன் !!

என்னவளின் பெருமையை நான்
இறைக்கும் முன்...

இறைத்து பின்னர்
இரைக்கும் முன்..

உரைத்து விடுகிறேன் ஒன்று
பொதுவாக...

நிறை இவள் முன்
இறையை
விளக்கு விளக்கு என
விளக்கும்..

அடி முடி
காண முடியா
விளக்கு! விளக்கு!
என அளக்கும்..

பழ நூல்
முழ நூல் !!

-- தொடரும்