Thursday, January 26, 2006

அம்மா - 14

இவ்வண்ணம்
இருந்த வாழ்வில்....

ஆற்று வெள்ளத்துக்கு
உண்டு கரை !!
ஆறு மணிக்கு
உண்டு எமக்கு உரை !!

கிரணங்கள் மடங்கும் !!
பகல் அடங்கும் !!
அல் தொடங்கும் !!

தம் இல் திரும்பும்
எவ் விலங்கும் !!
எம் இல்லில்
சஹஸ்ரநாமம் இலங்கும் !!

யாமம் தோறும்
தூமம் !!
தந்திருக்கிறது பல
சேமம் !!

தொடங்கும்
திங்களின் பாவாடைக்கு
விண்மீனின் கொசுவ மடிப்பு !!
எங்களின் படிப்பு !!

அம்மா படித்தது
பத்து வரை !!
படிப்பு சொல்லிக் கொடுத்ததும்
பத்து வரை !!
அவள் திறமையை அடைக்க
பத்தாது
பத்து வரை !!
அவளிடம் நான் கற்ற அளவு
பத்து துவரை !!

உரையை கையில் தந்து
ஒப்பிப்பேன் !!
குறையில்லை! என்பாள்
தப்பிப்பேன் !!

இல் சுத்தம் செய்தவள்
இலக்கண சுத்தமும்
செய்வித்தாள் !!

நான்
வாலி படித்து கற்றதை விட
அவள்
தாலி பார்த்து கற்றது
அதிகம் !!

இக் கவிதையின்
விதையும் அவள் !
விதைத்தவளும் அவள் !!

விளையாத,
ஒன்றுக்கும் வளையாத
விதைகளை
உதைத்தவளும் அவள் !!
உதைத்த பின்
பதைத்தவளும் அவள் !!

-- தொடரும்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home