சச்சி பிள்ளை...உச்சிப் பிள்ளை

அரங்கத்திலுள்ள
அம்மா மண்டபத்தினின்று
காவிரியில்
கால் நனைத்தால்...
கஜமுகனை நினைத்தால்..

கால் காத தூரத்தே
காணலாம் மலைக்கோட்டை !!
அதுவே
அன்பனவன் பேட்டை !!
ஆற்றின்
அப்பக்கம் இருக்கிறது
அப்பதி !!
அவனே அதன்
அதிபதி !!

ஏறினேன் அவன் மலை
சந்தியா கால நேரத்தில் !!
ஆனைக்காவும் அரங்கமும்
ஆயின புள்ளிகளாக தூரத்தில் !!

ஆகாயம் பார்த்த கட்டிடங்கள்
ஆற்றின் இப்புறம் !!
ஆங்காங்கே வெற்றிடங்கள்
ஆற்றின் அப்புறம் !!
ம்....
மாறிவிட்டது திருச்சி
மக்கள் வருகைக்கு அப்புறம் !!
தாயுமான சுவாமியையும்
தும்பிக்கையனையும்
திருக்கோயில் கட்டி
திருப்பணி செய்தோர்
பல்லவர்கள் !!
குடவரைக் கோயில்
கட்டுவதில் வல்லவர்கள் !!
அழகுற இருந்தது கோவில் !!
அகவல் இருந்தது நாவில் !!
சிறிய உருவில்
வீற்றிருந்தான் !!
”சங்கட ஹர சதுர்த்தியின்”
சந்தன அலங்காரம் ஏற்றிருந்தான் !!
அவன் அணிந்திருந்த
அருகம்புல்லை.....
அழகுற காட்டியது
அர்ச்சகரின் கற்பூர வில்லை !!
கன்னம் தட்டி
நெற்றி குட்டி
கரணமிட்டு கும்பிட்டேன் !!
குறுகிய சிந்தனைகளை
குற்ற மனதிலிருந்து நெம்பிட்டேன் !!
பாதம் பணிந்தேன் !!
இறங்கத் துணிந்தேன் !!
அத்தமிக்கும் சூரியனால்
அந்தி வானில்
அழகழகு வண்ணங்கள் !!
அகத்திடையோ
அனேக எண்ணங்கள் !!
இந்தியாவில்...
எளிதில்
எவ் வசதியும் இல்லாது...
எனினும் எவை ”இல்லை”
எனும் அசதியும் இல்லாது...
மக்கள் வாழ்கின்றனர் !!
பக்தியில் ஆழ்கின்றனர் !!
அமெரிக்காவில்...
அனைத்தும் இருக்கிறது !!
அவ்வளவும் இருந்தும்
அனேகரிடம்
”அனேகம் இல்லை” எனும்
அரற்றலே இருக்கிறது !!
இங்கா? அங்கா? என
இருக்கிறார் பலர்
இரு தலைக் கொள்ளியாய் !!
இன்பமற்று இலங்குகின்றார்
திங்கள் – வெள்ளியாய் !!
அரன் கழுத்து அரவன்றி
அனைவருமே
”இருக்குமிடத்தில் இருத்தல்”
நலமோ ?
நமக்கு நம் நாடே
பலமோ ?
சாதி
சமயம்
அரசியல்
அடிப்படை வசதி
படிப்பு
பதவி என
இந்தியாவில் சிரமம்
வளர்வதில் !
நல்லது அள்ளி
நல்லதல்லாதது தள்ளி
பாரம்பரியம் காட்டி
பக்தியை ஊட்டி...
அமெரிக்காவில் சிரமம்
வளர்ப்பதில் !!
வாய்ப்பு வந்தால் வையம்
விரும்புகின்றது ஏற்றிட !
விரும்புவதில்லை யாரும் தோற்றிட....
நான் நல்லதை ஏற்றேனா ?
நல்லதென நம்பி தோற்றேனா?
தமிழ் சொல்கிறது
”திரை கடல் ஓடியும்
திரவியம் தேடு" !
இன்று அதனாலன்றோ
இத்தனை பாடு !!
கல் ஒன்று தடுக்கிட...
கனவா இன்னமும்? என
கட்டியவள் கை சொடுக்கிட....

நினைவுக்கு வந்தேன்...
விதியை நொந்தேன் !!
இறங்கும் போது
”இனி எப்போ?” என
கவலையோடு கேட்டது
காவிரி ஆறு !!
சலசலவென மக்கள்
சிராப்பள்ளி சந்திப்பின் பக்கம்
- மணி ஆறு !!
ஒன்பது மணிக்கு ரயில் !!
அடுத்து செல்லுமிடமிருப்பவன்
அனுதினம் ஏறுகிறான் மயில் !!

Labels: cauvery banks, rockfort, tiruchirapalli, uchi pillaiyar
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home