கூடல்நகர் கயற்கண்ணி. . .

திருக்கயிலை உறைபவன்
திருவிளையாடல் புரிந்த ஊர் !!
தீர்ப்பு ஒன்று தவறானதால்
தீயில் எரிந்த ஊர் !!
தமிழ்ச் சங்கத்தின்
தலை நகர் !!
தன்னிகரில்லா அதற்கு
தரணியிலில்லை நிகர் !!
நக்கீரர்
கபிலர்
பரணர்
உலவிய நாடு !!
உவந்து கூறும் அவர் புகழை
உலகத் தமிழ் ஏடு !!
மீன் கொடி பறக்கும்
பாண்டிய மண் !!
கொஞ்சும் தமிழ்
அதன்கண் !!
“ப்புல”
“ம்முல”
ஆங்காங்கே வார்த்தையோடு
அவற்றை சேர்த்து
அவுக, இவுக,
“அங்கன” “இங்கன”
லந்து, பந்தா கோர்த்து...
நாக்கை சிறிது
மடித்து பழக்கிட…
பேச்சை சிறிது
சன்னமாய் முழக்கிட…
மதுரைத் தமிழ் வரும் !!
மட்டற்ற சுகம் தரும் !!
நள்ளிரவோ
நண்பகலோ
எவ்வேளையிலும் கிடைக்கும்
எவர்க்கும் உண்டி !!
எவ்வுணவு விடுதியின் முன்னும்
எந்நேரமும் வண்டி !!
வாய்க்கு “ஜிகர்தண்டா”
வாசனைக்கு மல்லி
வாய்ப்பாட்டுக்கு சேஷு
வாதத் தலைமைக்கு
ஞான சம்பந்தன், பாப்பையா
வாரிக் குடிக்க வைகை
வாய்விட்டு சிரிக்க
”வைகைப் புயல்”
இவர்களும் இவையும்
இவ்வூர் பெருமையை கூறும் !!
இன்ன பிறவற்றை நூறும் !!
ஆளுகின்றாள் அவ்வூரினை
ஆதிநாள் முதல் அங்கயற்கண்ணி !!
அனேக பாடல்கள்
அவளை துதி பண்ணி !!
சேம நலம் பேண..
சென்றேன் அவளைக் காண..
கோயில் எங்கும்
கும்பாபிஷேக வேலை !!
காண முடிந்தது அதனால்
கோபுரமெங்கும் ஓலை !!

தண்ணீர் சிறிதளவே
பொற்றாமரை குளத்தில் !!
பாசியற்றிருப்பினும்
பச்சையாயிருந்தது
தாவர வளத்தில் !!
விபூதி வினாயகன்
ஒரு கோடியில் !!
அருகம்புல்லன்றி
அவனருகே ஒரு மூடி இல் !!
தண்ணீர் பட்டாலே
கரைந்திடுவான் !!
தமியார்க்கு ஒன்றென்றால்
விரைந்திடுவான் !!
காண வந்தவளை தேடி
விரைந்தேன் !!
கணத்தில் கண் நிறைந்தேன் !!
ஒய்யாரமாய் நின்றிருந்தாள்
ஒரு கையில் கிளியோடு !!
கண்ணில் தண் ஒளியோடு !!
சுந்தரேசுவரரையும்
முக்குறுணிப் பிள்ளையாரையும்
வலம் வந்து நின்றேன் !!
எங்கே அழகன்? என்றேன் !!

கண்டேன் அவனை
கண்ணெதிர் தூணில்
தாரை வார்க்கும் பொறுப்பில் !!
அவனன்றி ஆரழகு?
அதற்கு மறுப்பு இல் !!
அனுதினமும்
அழகாயிருப்பதே
அவன் வேலை !!
செல்லவிருக்கிறேன் அதற்காக
மாலிருஞ்சோலை !!

ஆயிரங்கால் மண்டபத்தில்
ஆனது புகைப்படக் கருவி மக்கர் !!
ஆயினும் அதனழகில்
ஆர் தான் கண் சொக்கர்?
வெளிப் போந்தோம்
புது மண்டபக் கடைகள் வழியாக !!
வெயில் காய்ந்தது பழியாக !!

காலணி விட்ட இடம்
கால்கள் நடந்தன !!
சில நிமிடம் கடந்தன !!
காணவில்லை மனைவியின்
செருப்பினை !!
மறந்தாள் கடைக்காரி
பாதுகாக்கும் பொறுப்பினை !!
அவளைத் திட்டித் தீர்த்தேன் !!
ஆதங்கத்தை கொட்டித் தீர்த்தேன் !!
”மதுரை சந்திப்பு” போகுமுன்
உணவுக்கு இறங்கினோம்
முருகன் இட்லி கடையில் !!
அது போன்ற இட்லி
அரிது ! மிகை இல் !!
உள்ளம் திளைத்திருந்தது !!
உடல் களைத்திருந்தது !!
ஊர் திரும்பத் துணிந்தேன் !!
நான்கு நாள் சிந்தனைகளை
நினைவில் அணிந்தேன் !!
நமது திருத்தலங்களில்
நான் பார்த்த வரையில்
திருநீறணியா தேகமில்லை !!
திமிரான வேகமில்லை !!
பலவற்றிற்குப்
பெருநகரம் எனும்
பலத்த தகுதியில்லை !!
அதனாலோ எனவோ
வாகனங்கள் மிகுதியில்லை !!
இங்கங்கெனாது
இருளில் நடக்கிறது
ஆயிரம் ஊழல் !!
இருக்கிறது அசுத்தமாய்
சுற்றுச் சூழல் !!
இவற்றை வைத்து போடலாகாது
நகரத்தை எடை !
அகத்தின் அழகை
அழகுறக் காட்டுமா உடை ?
பெரும்பாலான மக்களிடம்
பெரும்பாலான நேரத்தில்
கீழும் மேலும் பார்த்து
கிடைத்ததைப் பறிக்கும் நோக்கில்லை !!
”பணம் பணம்” எனும் போக்கில்லை !!
வண்டியேறி புறப்பட்டேன்
இச் சிந்திப்பில் !!
வந்திறங்கினேன் விடிகாலை
தாம்பரம் சந்திப்பில் !!
வைகறை ஆனதால்
வெயில் தகிக்கவில்லை !!
இருந்தும் சொல்கிறேன் -
சென்னை சகிக்கவில்லை !!
Labels: angayarkanni, azhagar, kovalan-kannagi, madurai, meenakshi, nakkeerar, tiruvilaiyadal
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home