கொஞ்சம் காதல்...கொஞ்சம் சாலம்..
தவறான ஒரு விபத்தில்
தந்தை தாய் இழந்து
தவிக்கும் பிஞ்சுகள்...
தம் பெற்றோரது
தகவை காணாது
தத்தெடுப்பார் அனைவரிடத்தும்
தடுமாறிடும் நெஞ்சுகள்..
அந்நேரத்தில்
அதீதமான ஒரு தீர்ப்பு...
அவ்விபத்தை விளைவித்தவன்
அவர்களுக்கு பொறுப்பென...
அவர்களும் வருகின்றனர்
நமக்கென்ன இதில் மறுப்பென....
வாட்டத்தோடு தேவன்
வானத்தினின்று காண்கிறான்
வாரிசுகள் வந்த இடம்
“ரண களம்” ஆவதை !!
வானத்தினின்று அனுப்புகிறான்
வடிவான ஒரு தேவதை !!
நடப்பது என்ன ?
நிகழ்வது என்ன ?
இது தான்
“தோடா பியார் தோடா மாஜிக்”
தேடாதீர் தேவையற்ற லாஜிக்...
நம் மொழி
நம் இனம் எனும்
இறுமாப்பு கொண்டோம்..
இருப்பினும்
இத்துணை நாள்
தமிழ்த் திரையில்
யாது கண்டோம் ?
முன்னோக்கி வரும் குண்டை
பின்னோக்கி நின்று
கத்தியால் துளைத்தல்...
கத்தியை கையால் வளைத்தல்...
என...
படத்துக்குப் படம்
பழைய கஞ்சி...
படைப்பாளியும்
படைத்ததையே படைக்கிறார்
பணத்திற்கு அஞ்சி....
நல்ல இயக்குநரிடமும்
நல்லதைச் சொல்லும் கலையில்லை !!
நடிகர் முகத்திலோ களையில்லை!!
செலவிடுகிறார் தயாரிப்பாளர்
கோடி கோடியாக..
செல்ல முடிவதில்லை
செல்லங்களை கூட்டிக் கொண்டு
ஜோடி ஜோடியாக...
காரணம்...
நடனத்தில் கிளுகிளுப்பு...
அரசியல் புளுபுளுப்பு..
அமைதியின்மை...
அசுரத் தன்மை...
ஒளியற்ற படமெடுப்பு...
ஒன்றுக்கும் உதவாத
படத் தொகுப்பு....
நடைமுறை வாழ்வென்று
காட்சிக்கு காட்சி க்ரூரம்...
நல்ல படைப்புகளுக்கும்
நம் இயக்குநருக்கும்
வெகு தூரம்....
படத்துக்குப் படம்
நடிகர் கவனமெல்லாம்
“சிக்ஸ் பேக்” வயிற்றுக்கு...
தமிழ்த் திரையோ
தடுக்கித் தடுக்கி
செல்கிறது கயிற்றுக்கு....
நடிப்பன்றி அனைத்தையும்
காட்டியதால்...
புகழ்க் கொடி நாட்டியதால்...
பில்லா தொடங்கி
கல்லா கட்டும்...
புகழேணியில் நயன்...
நாட்டம் ”பிறிதொன்றில்”
நாளும் இருப்பின்
நாட்டிற்கு என்ன பயன் ?
குருடியாக ஒரு படத்தில்...
குழந்தைகள் மனம்
வருடியாக இப்படத்தில்..
என ஒருத்தி
ஏறுகின்றாள் நாளும்
புகழ் ஏணி !!
இந்தித் திரையில்
அவள் என்றென்றும் ”ராணி” !!
கதையில் வளமில்லை....
நடிக்கத் தேவையான
களமில்லை என...
தகத் தகாயமான இப்படம்
தனக்கு வந்திருப்பினும்
தமிழ் நாட்டு த்ரிஷா
தட்டிக் கழித்திருப்பார்...
”தசாவதாரம்” தொடங்கி
தருக்கேறிய சிலரோ
தன் முகத்தையே
முன்னிறுத்தி விழித்திருப்பார்....
உடம்பு புல்லுருவி....
படம் குருவி..
இனிதென்ன செய்தார் அவர்
இது நாள் வரை
தோள் பட்டையினின்று
தோதாய் பீடி உருவி ??.
பழைய பாட்டை
புதுமைப் படுத்துதல்...
பெரிதும் ரசிகரை
பாடாய்ப் படுத்துதல்...
என...
போகிறது தமிழ்த் திரை
போக்கற்று....
போதும் வாடுகிறான் ரசிகன்
வாக்கற்று....
பிளாக்
ரங் தே பசந்தி
தாரே சமீன் பர்
தோடா பியார் தோடா மாஜிக்
என..
இந்தித் திரை ....
இன்று வரை...
படிப் படியாக
முன்னேற்றம் நோக்கி
மாறு சிந்தையோடு மாறுகிறது !!
புகழ் உச்சியில் ஏறுகிறது !!
நம் படமும் முன்னேறுமென
நானும் நாளுக்கு நாள்
ஏங்குகிறேன் !!
மூச்சு வாங்குகிறேன் !!
தீர்க்கமான கதையமைப்பு...
திருத்தமான வடிவமைப்பு..
நவீனமான உடையமைப்பு...
ரம்மியமான பின்னிசை....
ரசிக்க வைக்கும் மெல்லிசை..
என இப்படம்
பார்ப்பாரை மேலும் மேலும்
பார்க்கத் தூண்டும் !!
எடுத்தால் இது போல்
படம் எடுக்க வேண்டும் !!
ஒன்று சொல்கிறேன் நிறைவாக..
அதி விரைவாக....
நல்லதையே நினைத்து
நல்லதையே நடத்தும்
நல்ல கடவுள்
நமக்கேன் செய்தார் கெட்டதை...?
நம்ப முடியவில்லையே
நம்மால் இயன்றும்
நடந்து விட்டதை ?
இப்படத்தில் வரும்
இயல்பான இவ் வசனம்...
என் மகவிற்கு ஏற்படுத்திய
எண்ணிலடங்கா விசனம்...
தமிழ் திரைப்படங்களில்
தவிடளவும் இல்லை !!
அது வரை
தமிழ்ப் பட சுவரொட்டி பார்த்து
தூக்குவேன் நான் கல்லை !!
Labels: dasavataram, kuruvi, nayantara, rani mukherji, sad state of tamil cinema, thoda pyar thoda magic, trisha, vijay