Tuesday, June 24, 2008

கவியரசர்....

kannadasan2

வயதில் பெரியவரே !
வணக்கத்துக்கு உரியவரே !!

6/24
உங்கள் பிறந்த நாள் !!
உரக்கப் பாடுகிறது
உந்தன் புகழை
எந்தன் தாள் !!

நின்னை
நினையாத நாளில்லை !!
நினையாதார் ஆளில்லை !!

எவ்வெழுத்தும் உன்முன்
என்றென்றும் எடுபடாது !!
எழுதாக்கால் என் சோகம்
என்னின்று விடுபடாது !!

நல்ல பாடலுக்கு
நீங்களே அலகு !!
நன்கு அறியட்டுமிதை
நம் கவிதை உலகு !!

பொங்கிப் பெருகும்
புது வெள்ளமாய்
புதுக்கவிதை புனைந்தவரே !!
”நம்மை அறிந்தால்
நம் தலை தாழாது” என
நினைந்தவரே !!

தமிழ் நாட்டில்
தமிழ்ப் பாட்டில்

முறுக்கும் மிட்டாயும்
முழுமையாய் இன்று
முற்றுகை !!
இத்தகு பாடலுக்கே
இந்நாளில் இங்கே ஒற்றுகை !!

போதாததற்கு
யரலவழள
ஞஙனநமண வுடன்
போட்டி போட்டிட !!
இடையினம் மெல்லினத்தை
இழுப்பதாய்
கோடிட்டுக் காட்டிட !!

அரிதாய் ஒரு பாடல்
அதிகம் பிரபலமானால்
அரும்பெருவிழா எடுக்கிறார் !!
அறைகூவல் விடுக்கிறார் !!

இது ஒரு வகையில் !!
இன்னமும் சொல்வேன் – மிகையில் !!

காற்றுள்ள போதே
தூற்றிக் கொண்டு
தமிழ் தமிழென்பாரை
போற்றிக் கொண்டு

போதி
சேதி
நீதி
தேதி என

இன்றளவும்
இருக்கின்றார் சிலர்
“பேரரசாய்” பட்டம் அணிந்து !!
எத்தரப்பினரையும்
எளிதில் கவரும் பாடல்
என்றைக்குத் தருவாரவர் துணிந்து?

”மயக்கமா? கலக்கமா?”
என இரு சொல்லில்
என்றுமழியா உங்கள் பாடல்
எமது உள்ளத்தை ஆற்றியது !!
ஒரு நாளில்
ஒருவரது வாழ்க்கையையே
ஒருங்கே அது மாற்றியது !!

உருக்கமான சங்கதிகளில்
உணர்ச்சியை தூண்ட
உம்மால் முடிந்தது !!
உலகத் தமிழரின்
உள் மனதில்
உங்கள் பாடல் படிந்தது !!

அத்தகு..
எளிய சொல்லின்றி
தெளிய கருத்தின்றி

எங்ஙனம் இவர் பாடல்
எண்ணற்றவரை ஈர்க்கும்?
என்றாகிலும் தோற்கடிக்குமோ
எக்கினை ஈர்க்கும்?

ஆழ் கடலினை
ஆதிக்கம் செய்யுமோ
ஆர்ப்பரிக்கும் அலை நுனி ?
காய்ச்சுமோ கதிரவனைக்
காலைப் பனி ?!

இசையுலகு
இருபத்தேழு வருடமாக
இழந்து தவிக்கிறது
இனிமையான உந்தன் பாடலை !!
இருந்தும் நாங்கள்
இழக்கவில்லை
இன்றளவும் எங்கள் தேடலை !!

உண்டோ ஒருவரேனும்
உன்னிடத்தை நிரப்ப ?
சிறிய சந்தங்களில்
சீரிய சிந்தனை பரப்ப ?

Labels: , , ,

கடல் கடக்கிறான்...

hanuman for obama
Picture courtesy: The Hindu

இந்திரனின் வஜ்ஜிராயுதத்தால்
இரு கன்னம் வீங்கியவன் !!
தோளில் சூரிய குலத்
தோன்றல்களை
தோதாக முன்னம் தாங்கியவன் !!

இராக்கதன்
இந்திரசித்தனால்
இமை திறவாது...

மயங்கியோர்
மயக்கம் தெளிய
மலை ஏந்தியவன் !!
மண்ணில் அவனில்லையேல்
மடிந்திருப்பான் போரில்
சூர்ப்பனகை மூக்கறுத்த
சிலை ஏந்தியவன் !!

மணம் விரும்பாதவன் !!
மங்கையர் பக்கம்
கணமும் திரும்பாதவன் !!

கெளசலை புத்திரனின்
கெளரவ தூதன் !!
அனுதினம்
அவன் நாவில் இராம நாதன் !!

அறம் பிறழ்ந்து
அயன் மனை நோக்கினான்
அரண்மனை..
அந்நாளில் கண்டிருக்கிறது
அனுமனை..

வேண்டா வெறுப்பாக !!
வாலில் வைத்த தீயால்
வெந்தது ஊரே நெருப்பாக !!

அன்னையைக் காண
அன்றே பறந்தான்
ஓ ராமா என்று !!
அவனைத் தன்
அருகில் பார்ப்பான்
ஓபாமா இன்று !!

ஆஞ்ச நேயனே !!
அஞ்சனி சேயனே !!

அசோக வனமோ
அமெரிக்காவோ...

எதற்காக
என்று நீ வானில் ஏறினும்
எவர் தம் சுகத்தை
எவர்க்கு எடுத்துக் கூறினும்

நடக்கிறது ஒன்று அதுவாக !!
நயக்க வைக்கிறது பொதுவாக !

அமெரிக்காவிலும் இருக்கிறாள்
அழுது கொண்டு ஒரு
அன்னை !!
தன் கட்சியின் வேட்பாளராக
தகுதியிழந்தாள் தேர்தலில்
தன்னை !!

வேறொருவர் பக்கம்
வீசுகிறது இன்று காற்று !!
இதனைச் சொல்லி
இல்லேரியைத் தேற்று !!

பார்க்குமிடமெங்கும்
பாரினில்
பார்க்கிறேன்
பனிப் போரை!!
பார்த்ததா அமெரிக்கா
பாதிக்கப்பட்டு கண்
பனிப்போரை ?!

அநியாயத்தை
”அமைதிக்காக” என
அழைக்கிறது
அனேக நாவும் !!
எதற்கு வீணில் இதற்கு
எவர்க்கும் உதவா ஐ. நாவும் ?

வேலை நீக்கம்
விலை வீக்கம்

என..
எல்லாவற்றிலும் தளர்ச்சி !!
எதிலும் இல்லை
எள்ளளவும் வளர்ச்சி !!

எங்கும் எதிலும் ஓட்டை !!
எதை முன் வைத்து
எடுக்கப் போகிறார்
எல்லா மக்களின் ஓட்டை ?

பொறுப்பற்ற போரா?
பொருளாதாரத் தேரா?

எது முக்கியம் ?
எதற்கு வீணில்
எங்கும் அமைதி
எனும் அர்க்கியம் ?

அன்பனே !!
அரசவை தேர்தலை முன்னிட்டு
அமெரிக்கா செல்கிறாய்
அன்பர் ஓபாமாவுக்கு
அன்பளிப்பாய் !!
அவர் அனைவர்க்கும்
அனைத்து மதத்தையும்
அவனியில் மதிக்கும்
அன்பளிப்பாய் !!

Labels: , , , ,

Monday, June 23, 2008

வீரத் தாய்...

32838522.PersianLeopard5

ஆலயத்தினும் சிறந்தவள் !!
ஆளப் பிறந்தவள் !!

பல வேளையில்
பற்பல வேலையில்

தன்னையே மறப்பவள் !!
தளர் வரினும்
தன் சுகத்தை
துச்சம் என துறப்பவள் !!

”காலத்தே கல்வி” என
கடைத்தேறும் வழியை
குடும்பத்திற்கு திறப்பவள் !!
சகம் தன் மகனை
சான்றோன் எனச் சாற்றுங்கால்
சந்தேகமின்றி உவப்பவள் !!

அவளே அன்னை !!
அவளன்றி
அகிலத்தார்
அறியக் கூடுமோ
அறநெறி தன்னை ?!

அத்தகைய ஒருவளால்
அபாரம்! அருமை! என
அரற்றுகிறேன் வியப்பெய்தி !!
தித்தித்து
திகைக்க வைத்தது இச் செய்தி !!

இதன் நாயகி
சேயின் துயர்
தாயின் துயர் என
ஏற்ற தாய் !!
இல்லை
இத் தேதியில்
இதை விட ஒன்று
இக் கவிதைக்கு ஏற்றதாய் !!

முறம் என்பது
முன்பு இருந்தது
முற்றத்தில் புடைக்க !!
சிறுகதையில் கேட்டிருக்கிறோம்
சிற்றூரில் ஒரு நாள்
சிறு நங்கை எடுத்தாளதனை
சிங்கத்தை புடைக்க !!

நிஜம் என
நிரூபித்து இருக்கிறாள்
இன்று இதனை
இந்த நங்கை !!
சாமானியமாய் நினைக்கலாகாது
சரித்திரம் படைத்த
இவள் பங்கை !!

இது நடந்த இடம்
இந்திய நேபாள எல்லை !!
இருளகலா அடவியானதால்
இதனுள் பூபாளம் இல்லை !!

இருண்ட கானகத்தில்
இருந்தது இரு பக்கமும்
இமயமாய் வளர்ந்த வேங்கை !!
இமை மூடு நேரத்தில்
இதற்குள்ளிருந்து வந்ததோ
இரத்த வெறி வேங்கை !!

African-Leopard2c-Samburu-National-Reserve2c-Kenya-847038

அது பாய்ந்து
அவள் பையனைக் கவ்வ..
அன்னையவள் பாய்ந்திருக்கிறாள்
அது மண்ணைக் கவ்வ..

போட்டது போட்டபடி ஓடாது...
புலம்பல் பாட்டு பாடாது...

தனக்கு வந்த சோதனையை
தனியாளாய் சமாளிக்க நேரிட..
துணிந்திருக்கிறாள் இவள்
துவளும் வரை போரிட !!

திரளான பலத்தை
திடுமென திரட்டியிருக்கிறாள் !
வழி மாறிய
வன விலங்கை
விழி தெறிக்க
விரட்டியிருக்கிறாள் !!

இதர விலங்குகள்
இதன் உணவை
இழுத்துச் செல்லாதிருக்க
இதனைப் பட்டினியில்
இம்சித்து கொல்லாதிருக்க..

இப் பிராணிக்கு
இயற்கை அளித்திருக்கிறது
இயல்பான ஒரு வரம் !!
இன்றைய தேதியில்
இது நிகழ்ந்திருப்பின்
இலங்கியிருக்கும் கலவரம் !!

இரையைப் புசிக்க
இதற்குத் தெரியும்
இலகுவாய் மரம் ஏறிட..
அது மட்டும் நடந்திருப்பின்
அகிலத்தாரால் முடியுமோ
அன்னையவள் முகத்தை ஏறிட ?

அதனை முறியடித்தது
அவளது கரம் !!
அதனையும் மிஞ்சியது
அவளின் நெஞ்சுரம் !!

இம்மியும் சந்தேகமின்றி
இதுவன்றோ தாய்ப்பாசம்?
இதர எதுவும்
இதன் முன் தலைக் கேசம் !!

இல் சிறக்க
இம்மையில்..
இருக்கிறாரோ ஒருவர்
இங்கே இனி தாயினும் ?
இந்நிகழ்ச்சி கேட்ட புவி
இதனை உணரட்டும்
இனிதாயினும் !!

Labels: , ,

Friday, June 20, 2008

எங்கிருந்தோ வந்தான்....

spielberg2


அவன்..
அகிலத்தாரை
அருமையான படங்கள் மூலம்
அழகாய்க் கட்டியவன் !!
இயக்குனனாய்
இரு முறை
இமயத்தை எட்டியவன் !!

சுறாவைக் காட்டி
சுயமிழக்கச் செய்து
பயம் உறுத்தியவன் !!
இம்மி பிசகாது
இட்லரின் கொடுமைகளை
இமை முன் நிறுத்தியவன் !!

இவன்...
இளைய தலைமுறை
இமை படபடக்க வைக்கும்
இந்தியன் !!

இன்றைய தேதியில்
இளைஞர் கையில்
இந்தியா எனில்
இதற்கு உதாரணமாக
இருப்பவன் அனில் !!

தனித்து நின்று
தரணியை வெல்லுதல்
தன் பாணி என
தருக்கின்றி சொல்லும்
அம்பானி !!

அல்லும் முன்னோனுக்கு
அலுவலில் அல்லல்
அதிகம் பலரோடு உரசலாய் !!
அடிக்கடி பேசப்பட்டது அது
அரசல் புரசலாய் !!

 Falcon

அன்பன் நம்மவனுக்கோ
அண்ணனிடமே சண்டை !!
இமைப்பொழுது பார்ப்பினும்
இருவரும் காண்பிக்கின்றார்
முதுகுத் தண்டை !!

இந்நிலையில்
இவனது நிறுவனமாம்
இசைமிக்க ரிலையன்ஸ்
இயைந்திருக்கிறது அவனோடு
இன்ப மயமான அலையன்ஸ் !!

அன்பரே !!
அழகான இந்தியாவுக்கு
அதி விரைவாய் வருக !!
உலகத் தரமான படங்களை
உங்கள் கையால் தருக !!

எம்மவரிடம் உண்டு
எவரையும் மிஞ்சும் திறமை !!
கோடிட்டுக் காட்டுவதில் தான்
கொண்டுள்ளோம் பழமை !!

ஆ என்றதும் எடுக்கிறார்
ஆளுயரக் கத்தி !!
ஆயாசம் வந்து விட்டதெனக்கு
அல்லும் இதனைக் கத்தி !!

அனேகப் படமுண்டு
ஆகா ஆகா என !
அருமையாய் ஒன்றில்லை
ஆகா! ஆகா! என !!

நிரம்ப இல்லை
நினைவில் நிற்பவை !!
நின்னிடம் இருக்கிறது
நிறையக் கற்பவை !!

எனது தேசத்துப் படங்கள்
எனக்குப் போயிற்று கைத்து !!
என்றாவது ஒரு நாள்
எழுதாக் கிளவியை
எடுத்துச் சொல்வீரா
எம்மவரை வைத்து ?!

கரத்தில் எடுத்தார்
கற்றோர் சிலர்
கரை காணா கப்பலில்
காதலை !!
கையில் எடுப்பீரா நீர்
கண்ணீரில் காதலை ?!
கொடூரமாய்ச் சாதலை ?

முற்றிலும் புதிய கோணத்தில்
முழு நீளத்தில்...

செல்லுலாய்ட்டில்
செதுக்குவீரா நீராகிலும்
ஜாலியன் வாலா பாக்கை ?!
அதுவன்றோ மாற்றும்
அவமானமாக அதனை
அறிவுக்கு உணர்த்தாத
அந்நிய அரசின்
அலட்சியப் போக்கை ?!

ஸ்பீல்பெர்க் இயக்க
இசைஞானி இசைக்க
கலைஞானி நடிக்க
பி.சி புகைப்படம் பிடிக்க

அமையுமா படம் இனி ?
அள்ளுமா ஆஸ்கர் எனும்
அரிதாய்க் கிட்டும் கனி ?

Labels: , , , , ,

Thursday, June 19, 2008

கல்யாணம்....

ammi

ஆயிரம் காலத்துப் பயிர் !!
ஆனந்திக்கும் உயிர் !!

மயக்கும் சேலையிட்டு
மனதுக்குப் பிடித்தவனை
மாலையிட்டு

புகுந்த வீட்டில் காலையிட்டு..
“மாசம்” என ஓலையிட்டு..

நாட்பட நிச்சயிக்கப்பட்டது
சொர்க்கத்தில் !!
நாளும் இங்கு இருக்கிறது
தர்க்கத்தில் !!

ஆணுக்குப் பெண் என
ஆண்டாண்டு இருந்தது
கல்யாணத்தின் ஈர்ப்பு !!
மாற்றியிருக்கிறது அதனை
மாகாணம் ஒன்றின் தீர்ப்பு !!

ஆதரவு எதிர்ப்பென்று
ஆர்த்தெழுகின்றன
ஆங்காங்கே முரசுகள் !!
ஆகுலத்தில் அரற்றுகின்றன
ஆளும் அரசுகள் !!

மதில் மேல் பூனையாக
மக்களும் சிக்கலில் !!
மயங்கித் தவிக்கின்றார்
மட்டுப் படாத விக்கலில் !!

தகுமா
தன் இனத்தை
தானே
தரணியில் தழுவுதல் ?
தன் விதியினின்று
தடம் புரண்டு நழுவுதல்?

இருக்குமா அதில்
இல்லறத்தின் நேரும் ?
அமைதியின்மை
அன்றோ நேரும் ?!

இறைவன் எதற்குப் படைத்தான்
ஆதாம் ஏவாளை ?
இமைப்பொழுதும்
ஆதாமை ஏவாளை ?

திருமணம் என்பது
சிறுமனத்தார் தேடும்
சிற்றின்ப புணர்ச்சிக்கா?
உளம் உளம் நேசிக்கும்
உணர்ச்சிக்கா?

இனம் சேரவா?
இதற்கு அப்பால்
இன்னல் வரு வேளையில்
சினம் ஆறவா ?

இவன் அவளை
இவள் அவனை என
இறைவன் குறித்தது
இணை திருத்தல் !!
இல்லாவிடில் எதற்கு வீணில்
இணைந்திருத்தல் ?

மறுமொழி எதற்கும் வருகிறது!!
மயக்கம் பலர்க்கு தருகிறது !!

இழைந்து செல்லல்
இல்லறத்தில் தேவை
இரு தரப்பு நெஞ்சுக்கும் !!
இதில் என்ன வேலை
நெருப்புக்கும் பஞ்சுக்கும் ?

இது நாள் வரை
இணையை
இனச்சேர்க்கையை
இணையற அங்கீகரிக்கும்
இன்றியமையா துருப்புச் சீட்டன்றோ
இல்லறம் என்பது ?!
இறுதி செய்தது
இன்று அதனை
இதற்கு அப்பாற்பட்ட எங்கள்
இதயத்தின் அன்பது !!

மணந்து கொள்கின்றோம் நாங்கள்
மனம் விரும்பி !!
மானுடம் இருக்கலாமா
முகம் திரும்பி ?

நடப்பதென்ன என வீணில்
நீங்கள் பயக்க...
நாங்கள் நவில்கிறோம்
”பழையன கழிதலும்
புதியன புகுதலும்”
நன்மை பயக்க..

எது எப்படியோ..
எது தப்படியோ..

புவி போகலாம்
புரியாத புதிரினை
புதுசாக கொள்ளல் !!
போகலாகாது
புதியது எனும் பெயரில்
புராதனத்தை எள்ளல் !!

எழுதத் தொடங்குகிறது மானுடம்
எவர்க்கும் புரியா அத்தியாயம் !!
எத்தரப்பும்
எவரும்
எது சரி
எது தவறென
எடுத்தவுடன் சொல்வது அநியாயம் !!

இவ்வழியில் சேர்ந்தார்
இந்தியாவில் தற்கொலை என
இன்றளவில் பல
இன்னல் செய்திகள் தந்தியில் !!
இந்தியாவின் மானம் சந்தியில் !!

சற்று மாற வேண்டும்
சமுதாயப் பார்வை !!
மயக்கி முடக்கலாமா அதனை
மரபு எனும் போர்வை ?!

எம் பாரம்பரியம்
என்ன என்ன என
எடுத்துச் சொல்லுங்கள் !!
எனினும்
எவரையும் புண்படுத்தாது
எட்ட நில்லுங்கள் !!

எக்குத் தப்பாக
எதிர் கொள்ளலாகாதிதனை
எதிர்ப்படும் சமுதாய வட்டங்கள் !!
எதற்கு இருக்கிறது பிறகு
எழுதிய சட்ட திட்டங்கள் ?!

யார் யாரைப்
பார்க்கலாம் மன்பதை..
எவர் எவரைச்
சேர்க்கலாம் என்பதை..

சட்டம் மட்டுமே
சந்தேகமின்றி தீர்க்கலாம் !!
வீணில் இக்கவலை
வேண்டாம் ஊர்க்கெலாம் !!

அலசாதீர் ஆபாசமாய்
அனுதினம் இதனை
வீதி வீதியாக..
ஆராய்வீர் ஆங்கிதனை
மருத்துவ ரீதியாக !!

உடலியல்
உளவியல் என
நீள்கிறது இச்சர்ச்சையின்
ஆதார காரணங்கள் !!
பூட்டாதீர் இதற்கு
மொழி இன
மத தோரணங்கள் !!

Labels: , , ,

Monday, June 16, 2008

நாடகம் என்பது....

cho as tughlaq

முத்தமிழின் மூன்றாவது
முகம் நாடகம் !!
முற்போக்கிற்கு
முக்காலத்தில்
முக்கியமானதாய்
முன் நிறுத்தப்பட்ட ஊடகம் !!

சுதந்திர தாகம்
தேச ஒற்றுமை என
அந்நியனை அகற்ற
அனேக கருத்துக்கள்

ஆங்கிலேய
ஆதிக்கமிருந்த
ஆதி நாளில்
ஆக்கிரமித்தன !!
ஆண்டாண்டு காலம்
ஆனந்தித்து சனம் இவற்றை
ஆர்ப்பரித்தன !!

இதிகாசம்
இலக்கியம்
வரலாறு
வாழ்வியல்
பகுத்தறிவு
பழமைச் சீர்திருத்தம்
சிந்திக்கத் தூண்டும்
சிரிப்பு என

காலத்தே அதன் போக்கு
மாறியது !!
தினம் ஒரு வகையில்
தினுசு தினுசாக நாடகம்
மேடை ஏறியது !!

மேடைக்கு இழுத்தது அது
ரோமானியனையும் !!
விட்டு வைக்குமா அது
சாமானியனையும் ?!

காலையில் இருப்பார்
பாட்டரசர் புரந்தர தாசர் !!
மாலையில் இருப்பார்
நாட்டரசர் ஜூலியஸ் சீசர் !!

கலைவாணர்
கே.பி
ஆர். எஸ் மனோகர்
பூர்ணம்
மெளலி
மேஜர்
...
...

இவர்களின்
இணையற்ற நடிப்பால்
இத்துறை

பண்டை நாளில்
பல வகையில்
பரிமளித்தது !!
பங்கு பெற்றாரது
பங்கினை ஒத்து
பல்சுவையை பார்ப்பாருக்கு
பரிசளித்தது !!

நானறிந்த வரையில்
நாடு போற்றும் பல
நடிகர் இயக்குனருக்கு
நாடகமே அத்திவாரம் !!
இங்கொன்றும் அங்கொன்றுமாய்
இன்றளவும் காணலாம்
இவர்தம் பரிவாரம் !!

ஆயினும் கண்டது
ஒரு குறை
அத் துறை

அரசியல் என்பது
ஆண்டாண்டு காலம்
அமைந்திருக்கிறது இந்தியாவில்
அவல நிலையில் !!
அலசவில்லை
அதனை எவரும்
அக்கு அக்காக
நாடகக் கலையில் !!

அதனையும் மாற்ற
ஒருவர் எண்ணினார் !!
முண்டக் கண்ணினார் !!

அரசியல் அமைப்புச் சட்டம்
அதிகம் படித்தவர் !!
அரசியலை அன்றாடம்
கரைத்துக் குடித்தவர் !!

சிறிது காலம் திரையில்
சிறிய கதாபாத்திரங்களில்
நடித்தவர் !!
எழுத்துலகில் ”துக்ளக்” என
எழுதுகோலைப் பிடித்தவர் !!

இருக்காது
இவர் எழுத்தில்
ஆளாக் கட்சி
ஆளும் கட்சி என
ஆதாயம் பார்க்கும் பாரபட்சம் !!
பயம் என்பது அவர்க்கு
இரண்டாம் பட்சம் !!

அரசியலை கிண்டலடிக்கும்
அரங்க நாடகத்தில்
அமைதியாய் கீதையின்
அறக் கோட்பாடுகள்
அங்கங்கே சொலிக்கும் !!
இந்து மதத்தை
இழிவு செய்வாரை
இலை மறையாய் அது
இகழ்ந்து ஒலிக்கும் !!

இன்று வந்தாலும்
இந்நாட்டை ஆளலாம்
துக்ளக் எனும் முகமது !!
இந்திய அரசியலின்
இன்றைய
இழுக்கான முகமது !!

என..

1968ல் எழுதிய நாடகம்
நாற்பதாண்டுக்குப் பின்னும்
நன்கு பொருந்துகிறது !!
நம் நாடு என்று
நல் வழியில் திருந்துகிறது ?
என் மனம் வருந்துகிறது !!

ஒன்று கூறிட துடிக்கிறேன்
அதனோடு இதனை முடிக்கிறேன்

மனுநீதியோ
மனு நீட்டிய பின் நீதியோ

தேர்ச் சக்கரமோ
தேர்தல் சக்கரமோ

அறம் தழைக்க
அரசுக்குத் தேவை மணி !!
அதனை ஒலிப்பதுவே
அன்பர் நம்மவர்
அமைத்துக் கொண்ட பணி !!

விசாரணைக்கு
விவகாரத்தை
விவரித்தல்

மாடைப் போல் இழுத்தா ?
மாற்றப் போகும் எழுத்தா ?

இதில் இரண்டாவது
இவர் எடுத்த கருவி !
அதனாலன்றோ
அரசியல் குதர்க்கத்தை
அதட்டிக் கேட்கிறார்
தோண்டித் துருவி ?!

தைரியமாய்..
வைரியமாய்...

நீதியை துதிக்காதோரை
சட்டத்தை மதிக்காதோரை

எங்கு காணினும்
எவர் கோணினும்...

தவறைச் சுட்டி
தலையில் குட்டி..

தனித்து நிற்பவர்
திகைக்க வைப்பவர்

சோ ராமஸ்வாமி
எனும் சோ. ரா !!
எழுத்துலகில் அவரது பணி
என்றும் சோரா !!

Labels: , , , , ,

Monday, June 09, 2008

பேனா ஒரு கேள்விக்குறி . . .

rajini9

சட்டம் இயற்றுவோர்
சட்டம் செயலாற்றுவோர்
சட்டம் காப்போர்
இதனோடு முடிவதில்லை
எந்த அரசும் !!
முடிந்தால் இருக்குமோ
”மாலை முரசும்” ?

இரு கண்
இரு செவி திறந்து
இடுக்கண் மறந்து

இருக்க வேண்டும் ஒன்று !!
இருப்பின்
இயல்பிலிருந்து மாறும்
இராக்கதரை
இறுக்கும் அது நன்று !!

இதழியல் என
இயம்பப்படும் அதனை
இறுதி செய்தார் பெரியோர்
இம்மூன்றை கட்டும் பூணாக !!
இன்றியமையாத அதன் பங்கினால்
இயங்குகின்றது அது
இப்புவியின் குடியரசுகளுக்கு
“நாலாம் தூணாக” !!

அதுவே உலகு
அறம் பிறழாதிருக்க
அச்சு !!
அதனாலே
அதன் மறுபெயரும்
அச்சு !!

மனிதனின் வாழ்வை
மாற்றக் கூடியவையுள்
முதன்மையானது
பேனா முனை !!
பிறகு தான்
போர் முனை !!

அதன் தலை
என்றும் குனிந்திருக்கும் !!
அன்னணம் இல்லையேல்
முன்னேற்றச் சிந்தனையை
என்னணம் சமுதாயம்
அணிந்திருக்கும்?

நாட்டு நடப்பினை
நானிலத்தார்க்கு
நாளும்
நவில வேண்டும் அத் துறை
நடு நிலையோடு !!
”நயம்பட உரை” எனும்
நல்வாக்குக்கு ஒப்பி
நற் கலையோடு !!

அச்சேறி எழுத்திலிருக்கும்
அனைத்தும்
அத் துறையின் கீழ்
அடங்கும் !!
அவ்வழியில் பார்க்கின்
அதன் பணி
பள்ளியில் இருந்தே
தொடங்கும் !!

சமுதாய அங்கத்தினரால்
சந்தேகமற அங்கீகரிக்கப்பட்ட

நேற்றைய வரலாறே
இன்றைய பாடம் !!
தன் போக்கினின்று பிறழ்ந்து
தரணி பிளவாதிருக்க
சமுதாயத்திற்கு அடிக்கப்படும்
லாடம் !!

எங்கே எது
எப்படி இருப்பினும்
என்று எதில்
எப்பக்கத்தை திருப்பினும்

எழுத்தினின்று
எதை விடுக்க
எதை கொடுக்க
என்பதற்கு வேண்டும்
சிந்தனை !!
இங்கு தான் தொடங்குகிறது
இத் துறைக்கு
இற்றை நாள்
இடையறா நிந்தனை !!

முழு மூச்சான
முயற்சி என்பதற்கு
முன்னுதாரணமாக

தோல்வி என்றும்
நிலையில்லை
தோற்றார்க்கு எங்கும்
சிலையில்லை

என...

இற்றை நாள் வரை
இருந்தான் பாடங்களில்
கஜினி !!
இவ் வழியில்
இனி
இவனுடன்
இருக்கப் போகின்றான்
ரஜினி !!

ஆசிரியர்கள்
ஆய்வாளர்கள்
ஆர் முகத்திலும்
அளவிலடங்கா
ஆத்திரம் !!
சிவந்த நேத்திரம் !!

கல்வியையும் சூழ்ந்தனவோ
கருப்பு மேகங்கள் ?
அரும்பும் முல்லைக்கெதற்கு
“அபூர்வ ராகங்கள்” ?!

பாடத்திலும்
பிள்ளைகள் இனி
ரஜினி ரஜினி என
ஊறும் !!
வருமோ வீணில்
ஊறும் ?

இனி ஆசிரியரிடம்
இருக்குமா கண்டிப்பு?
இச் செய்யுளை ஒப்பி
நூறு முறை எனும்
தண்டிப்பு ?

வருமே ”ஒரு முறை சொன்னால்
நூறு முறை“ என பதில் !
கிண்டலன்றோ ஆகும் கல்வி
அதில்?

மூன்று முடிச்சுக்கு முன்
நடப்பவை போதிப்பதிலா?
மூன்று முடிச்சில்
நடித்தவரை போதிப்பதிலா?

எது கல்விக்கு
பிரதானம் ?
வருந்த வைக்கிறது அதன்
விதானம் !!

”போகலாம் போகலாம்” என
ஆரம்பத்தில் அவன் இருந்தான்
சீட்டி அடித்து. . .
இன்று நாமன்றோ
பார்க்கிறோம் அவனை
சீட்டி அடித்து ?

அவ் விதத்தில்
அவன் சாதனை பெரிது !!
அனைவரும்
அவன் உயரம் எட்டல்
அரிது !!

அன்று முன்னுக்கு வந்தான்
அவனால்
படியில் இருந்தவன் !!
இன்று முன்னுக்கு வருவான்
இவனை படித்து
இருந்தவன் !!

பலர் இங்ஙனம்
பலவாறு
பேசுகின்றார் !!
தன் தரப்பு வாதத்தை
தங்கு தடையின்றி
வீசுகின்றார் !!

என் வழி
என்றும்
“தனி வழி” தான் !!
இதனை
இவனுக்கு முன்பே
சொன்னவன் நான் !!

கற்க வேண்டியதை
கசடற குழந்தைகள்
ரஜினியினின்று கற்கட்டும் !!
இப் பிரச்சினை
இதோடு நிற்கட்டும் !!

வேண்டாம் கேப்டன்
கண்டக்டரை தொடர்ந்து !!
பாடங்கள் ஆகலாகாது
சினிமா நட்சத்திரங்கள் அடர்ந்து !!

இல்லையேல் தேவைப்படும்
பிரம்பு !!
வரலாறு சொல்வதிலும்
வர வேண்டும் வரம்பு !!

Labels: , , ,

Friday, June 06, 2008

கவிஞனின் கால் சுவட்டில்..

200px-Subramanya_Bharathi

9/11…
தீண்டியது
தீவிரவாதம் புவியை !!
மறந்து விட்டோம்
மண்ணினின்று அந்நாள்
மறைந்த நம் கவியை !!

பாரினில் பெருமை மிக்கது
பாண்டிய நாட்டு
முத்துச் சரம் !!
முன்பொரு நாள்
முந்தியது அதனை
எட்டயபுரம் !!

அதனில் சுப்பிரமணியனாய் பிறந்து
அவனியில் பாரதியாய் சிறந்து

ஒப்பார் இல்லா
ஒரு புலவனாய்
ஒளிர்ந்தவன் ஒருவன் !!
தங்கு தடையற்ற தமிழில்
தனக்கென நடையமைத்து
தனித்து நின்ற துருவன் !!

பழம் நாளில்
பழம்பெரும் நம் நாடு
பரவலாய் கட்டுண்டது
பரங்கியர் கரத்தில் !!
அனைத்து மக்களும்
அறிவிழந்து கிடந்தனர்
அடிமை சுரத்தில் !!

இதற்கு ஊடாக
வீடு வீடாக

வீணில் மதமும் சாதியும்
வீறு கொண்டு எழுந்தன !!
நம்மவன் காதில் அவை
நாராசமாய் விழுந்தன !!

பாகைச் சிரத்தவன்
பார்த்தான் அந்த
கையறு நிலையை !!
தாழ்த்தினான் தலையை !!

கொண்டிருக்கிறோம் நாம்
”கோதுமைப் பண்டத்திற்கு
காவிரி வெற்றிலையை”
தருதலை...
ஆள்வதா நம்மை
ஆங்கிலேயன் என்னும்
தறுதலை?

ஆயிரம் தெய்வம்
ஆங்கெதற்கு நம்மை காக்க ?
”அறிவொன்றே தெய்வம்”
நம் துயர் நீக்க என...

அன்றே பாடினான் !!
அனைவரும் மதத்திற்கு
அடிமையாவது கண்டு
அவன் வாடினான் !!

பெண்ணுக்கு இழைக்கப்பட்ட
பெருங் கொடுமைகளை
”கும்மி”யடித்து சாடினான் !!
போதாததற்கு பிள்ளைகட்கு
புதிய ஆத்திச்சூடியும்
சூடினான் !!

“நெஞ்சு பொறுக்குதில்லையே” வின்
சிந்தனை தூண்டும்
சில பத்திகள் .....
உணரலாம் அதனை
உன்மத்தமான புத்திகள் !!

அதன் சாரம்
தசாவதாரத்துக்கும் பொருந்தும் !!
அதனை உணரா மனம்
என்று திருந்தும் ?

பிரசித்தி பெற்றன
பாஞ்சசன்யன் கபடமும்
பாஞ்சாலி சபதமும்
பாரதியின் பாட்டில் !!
பசுந் தமிழில்
பகவத் கீதையும் ஒலித்தது
தமிழ் நாட்டில் !!

எட்ட முடியா உயரத்தை
எட்டிப் பிடித்தவன் !!
”இமயமலையும்
இன்னரு கங்கையும் “
எமதே என
இந்தியாவையே
கட்டிப் பிடித்தவன் !!

இன்று
அருவிக்கும் ஆறுக்கும்
அடித்துக் கொள்கின்றார் !!
ஐந்தறிவினோர்
ஆறறிவாளராய்
நடித்து வெல்கின்றார் !!

சொன்னது உன் சந்தம்
”சிங்க மராட்டியர்க்கு
சேரத்துத் தந்தம்” !!

இன்றைய வாதமோ
எங்கள் மண்
எங்கள் மராட்டியர்க்கே
என்றும் சொந்தம் !!

பார் போற்றிய புலவனே !!
பார்த்தோரும் படித்தோரும்
பாரதியை உவமிக்கின்றார்
புத்துணர்ச்சியாம் எழுச்சிக்கு !
இனி யார்
இங்கே வருவார்
தூங்கிக் கொண்டிருக்கும்
தமிழின் எழுச்சிக்கு ?!

அந்தி வரை உனக்கிருந்தது
”யாமறிந்த மொழிகளிலே” எனும்
தமிழ் நேசம் !!
அதனால் புகழுற்றது
அவனியுள் நம் தேசம் !!

இன்று
பேச்சில் மட்டும்
தமிழ் ஒரு செம்மொழி !!
கல்லூரிகளுள் இல்லை
கனவிலும் நம் மொழி !!

பைந்தமிழினி
பல நாள்
பயிற்றுவிக்கப் படலாம்
பள்ளி வரை !!
அவர்கட்கு
அவசியமா
தொல்காப்பிய உரை ?!

உனது கனவு
”தேமதுரத் தமிழோசை”
உலகு பரவும் வகை !!
தமிழகத்தில் இன்று
தமிழனுக்குள்ளேயே
தீராப் பகை !!

தமிழகம் கேட்பதோ
தீயது தன்னை
தீர்த்து வையென !!
ஆள்வார் ஆடுகின்றார்
ஆண்டுப் பிறப்பு
ஆரம்பிப்பது குறித்து
”தை” தையென !!

மண்ணின் மைந்தர்கள்
மனதளவில் இல்லை
உன் சிந்தனையை ஒப்பி !!
பள்ளிக் குழந்தைகளுக்கு
பாடம் மட்டும்
“பாரதியை ஒப்பி” !!

மீசை நண்பனே !!
கடற்கரை எங்கும்
கறை கறையாய்
காண்கிறேன்
கட்சித் தலை !!
பூவினில் இன்று மட்டும்
பூமாலை ஏந்துகின்றது
உன் சிலை !!

தீர்க்கதரிசியே !!
தரணியுள் நீ
தளர்ந்து வாழ்ந்த நாளில்
தமிழ்நாட்டில் ஒருவன்
தலை தாழ்த்தவிலை !!
வையம் உனை
வாழ்த்தவிலை !!

உண்மை தான்..
உளதோ உன் பாட்டை
உளமார வாழ்த்த விலை ?!

Labels: , , , , , , ,