Monday, June 09, 2008

பேனா ஒரு கேள்விக்குறி . . .

rajini9

சட்டம் இயற்றுவோர்
சட்டம் செயலாற்றுவோர்
சட்டம் காப்போர்
இதனோடு முடிவதில்லை
எந்த அரசும் !!
முடிந்தால் இருக்குமோ
”மாலை முரசும்” ?

இரு கண்
இரு செவி திறந்து
இடுக்கண் மறந்து

இருக்க வேண்டும் ஒன்று !!
இருப்பின்
இயல்பிலிருந்து மாறும்
இராக்கதரை
இறுக்கும் அது நன்று !!

இதழியல் என
இயம்பப்படும் அதனை
இறுதி செய்தார் பெரியோர்
இம்மூன்றை கட்டும் பூணாக !!
இன்றியமையாத அதன் பங்கினால்
இயங்குகின்றது அது
இப்புவியின் குடியரசுகளுக்கு
“நாலாம் தூணாக” !!

அதுவே உலகு
அறம் பிறழாதிருக்க
அச்சு !!
அதனாலே
அதன் மறுபெயரும்
அச்சு !!

மனிதனின் வாழ்வை
மாற்றக் கூடியவையுள்
முதன்மையானது
பேனா முனை !!
பிறகு தான்
போர் முனை !!

அதன் தலை
என்றும் குனிந்திருக்கும் !!
அன்னணம் இல்லையேல்
முன்னேற்றச் சிந்தனையை
என்னணம் சமுதாயம்
அணிந்திருக்கும்?

நாட்டு நடப்பினை
நானிலத்தார்க்கு
நாளும்
நவில வேண்டும் அத் துறை
நடு நிலையோடு !!
”நயம்பட உரை” எனும்
நல்வாக்குக்கு ஒப்பி
நற் கலையோடு !!

அச்சேறி எழுத்திலிருக்கும்
அனைத்தும்
அத் துறையின் கீழ்
அடங்கும் !!
அவ்வழியில் பார்க்கின்
அதன் பணி
பள்ளியில் இருந்தே
தொடங்கும் !!

சமுதாய அங்கத்தினரால்
சந்தேகமற அங்கீகரிக்கப்பட்ட

நேற்றைய வரலாறே
இன்றைய பாடம் !!
தன் போக்கினின்று பிறழ்ந்து
தரணி பிளவாதிருக்க
சமுதாயத்திற்கு அடிக்கப்படும்
லாடம் !!

எங்கே எது
எப்படி இருப்பினும்
என்று எதில்
எப்பக்கத்தை திருப்பினும்

எழுத்தினின்று
எதை விடுக்க
எதை கொடுக்க
என்பதற்கு வேண்டும்
சிந்தனை !!
இங்கு தான் தொடங்குகிறது
இத் துறைக்கு
இற்றை நாள்
இடையறா நிந்தனை !!

முழு மூச்சான
முயற்சி என்பதற்கு
முன்னுதாரணமாக

தோல்வி என்றும்
நிலையில்லை
தோற்றார்க்கு எங்கும்
சிலையில்லை

என...

இற்றை நாள் வரை
இருந்தான் பாடங்களில்
கஜினி !!
இவ் வழியில்
இனி
இவனுடன்
இருக்கப் போகின்றான்
ரஜினி !!

ஆசிரியர்கள்
ஆய்வாளர்கள்
ஆர் முகத்திலும்
அளவிலடங்கா
ஆத்திரம் !!
சிவந்த நேத்திரம் !!

கல்வியையும் சூழ்ந்தனவோ
கருப்பு மேகங்கள் ?
அரும்பும் முல்லைக்கெதற்கு
“அபூர்வ ராகங்கள்” ?!

பாடத்திலும்
பிள்ளைகள் இனி
ரஜினி ரஜினி என
ஊறும் !!
வருமோ வீணில்
ஊறும் ?

இனி ஆசிரியரிடம்
இருக்குமா கண்டிப்பு?
இச் செய்யுளை ஒப்பி
நூறு முறை எனும்
தண்டிப்பு ?

வருமே ”ஒரு முறை சொன்னால்
நூறு முறை“ என பதில் !
கிண்டலன்றோ ஆகும் கல்வி
அதில்?

மூன்று முடிச்சுக்கு முன்
நடப்பவை போதிப்பதிலா?
மூன்று முடிச்சில்
நடித்தவரை போதிப்பதிலா?

எது கல்விக்கு
பிரதானம் ?
வருந்த வைக்கிறது அதன்
விதானம் !!

”போகலாம் போகலாம்” என
ஆரம்பத்தில் அவன் இருந்தான்
சீட்டி அடித்து. . .
இன்று நாமன்றோ
பார்க்கிறோம் அவனை
சீட்டி அடித்து ?

அவ் விதத்தில்
அவன் சாதனை பெரிது !!
அனைவரும்
அவன் உயரம் எட்டல்
அரிது !!

அன்று முன்னுக்கு வந்தான்
அவனால்
படியில் இருந்தவன் !!
இன்று முன்னுக்கு வருவான்
இவனை படித்து
இருந்தவன் !!

பலர் இங்ஙனம்
பலவாறு
பேசுகின்றார் !!
தன் தரப்பு வாதத்தை
தங்கு தடையின்றி
வீசுகின்றார் !!

என் வழி
என்றும்
“தனி வழி” தான் !!
இதனை
இவனுக்கு முன்பே
சொன்னவன் நான் !!

கற்க வேண்டியதை
கசடற குழந்தைகள்
ரஜினியினின்று கற்கட்டும் !!
இப் பிரச்சினை
இதோடு நிற்கட்டும் !!

வேண்டாம் கேப்டன்
கண்டக்டரை தொடர்ந்து !!
பாடங்கள் ஆகலாகாது
சினிமா நட்சத்திரங்கள் அடர்ந்து !!

இல்லையேல் தேவைப்படும்
பிரம்பு !!
வரலாறு சொல்வதிலும்
வர வேண்டும் வரம்பு !!

Labels: , , ,

1 Comments:

At 6/19/2008 10:13 AM , Blogger Vijay said...

MR. Ganesh Venkittu,
What you have said is absolutely correct. The people who have framed the syllabus should have thought twice before creating a lesson based on the real life experiences of a cine star. There are so many umpteen examples to quote.
Regards,
Vijay

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home