கவியரசர்....
வயதில் பெரியவரே !
வணக்கத்துக்கு உரியவரே !!
6/24
உங்கள் பிறந்த நாள் !!
உரக்கப் பாடுகிறது
உந்தன் புகழை
எந்தன் தாள் !!
நின்னை
நினையாத நாளில்லை !!
நினையாதார் ஆளில்லை !!
எவ்வெழுத்தும் உன்முன்
என்றென்றும் எடுபடாது !!
எழுதாக்கால் என் சோகம்
என்னின்று விடுபடாது !!
நல்ல பாடலுக்கு
நீங்களே அலகு !!
நன்கு அறியட்டுமிதை
நம் கவிதை உலகு !!
பொங்கிப் பெருகும்
புது வெள்ளமாய்
புதுக்கவிதை புனைந்தவரே !!
”நம்மை அறிந்தால்
நம் தலை தாழாது” என
நினைந்தவரே !!
தமிழ் நாட்டில்
தமிழ்ப் பாட்டில்
முறுக்கும் மிட்டாயும்
முழுமையாய் இன்று
முற்றுகை !!
இத்தகு பாடலுக்கே
இந்நாளில் இங்கே ஒற்றுகை !!
போதாததற்கு
யரலவழள
ஞஙனநமண வுடன்
போட்டி போட்டிட !!
இடையினம் மெல்லினத்தை
இழுப்பதாய்
கோடிட்டுக் காட்டிட !!
அரிதாய் ஒரு பாடல்
அதிகம் பிரபலமானால்
அரும்பெருவிழா எடுக்கிறார் !!
அறைகூவல் விடுக்கிறார் !!
இது ஒரு வகையில் !!
இன்னமும் சொல்வேன் – மிகையில் !!
காற்றுள்ள போதே
தூற்றிக் கொண்டு
தமிழ் தமிழென்பாரை
போற்றிக் கொண்டு
போதி
சேதி
நீதி
தேதி என
இன்றளவும்
இருக்கின்றார் சிலர்
“பேரரசாய்” பட்டம் அணிந்து !!
எத்தரப்பினரையும்
எளிதில் கவரும் பாடல்
என்றைக்குத் தருவாரவர் துணிந்து?
”மயக்கமா? கலக்கமா?”
என இரு சொல்லில்
என்றுமழியா உங்கள் பாடல்
எமது உள்ளத்தை ஆற்றியது !!
ஒரு நாளில்
ஒருவரது வாழ்க்கையையே
ஒருங்கே அது மாற்றியது !!
உருக்கமான சங்கதிகளில்
உணர்ச்சியை தூண்ட
உம்மால் முடிந்தது !!
உலகத் தமிழரின்
உள் மனதில்
உங்கள் பாடல் படிந்தது !!
அத்தகு..
எளிய சொல்லின்றி
தெளிய கருத்தின்றி
எங்ஙனம் இவர் பாடல்
எண்ணற்றவரை ஈர்க்கும்?
என்றாகிலும் தோற்கடிக்குமோ
எக்கினை ஈர்க்கும்?
ஆழ் கடலினை
ஆதிக்கம் செய்யுமோ
ஆர்ப்பரிக்கும் அலை நுனி ?
காய்ச்சுமோ கதிரவனைக்
காலைப் பனி ?!
இசையுலகு
இருபத்தேழு வருடமாக
இழந்து தவிக்கிறது
இனிமையான உந்தன் பாடலை !!
இருந்தும் நாங்கள்
இழக்கவில்லை
இன்றளவும் எங்கள் தேடலை !!
உண்டோ ஒருவரேனும்
உன்னிடத்தை நிரப்ப ?
சிறிய சந்தங்களில்
சீரிய சிந்தனை பரப்ப ?
Labels: anniyan song, kannadasan birthday, pokkiri song, tamil cinema lyrics of today
1 Comments:
wow. fantastic kavidhai. www.junaid-hasani.blogspot.com. this is my site. hope u visit it. thanking you.
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home