கல்யாணம்....
ஆயிரம் காலத்துப் பயிர் !!
ஆனந்திக்கும் உயிர் !!
மயக்கும் சேலையிட்டு
மனதுக்குப் பிடித்தவனை
மாலையிட்டு
புகுந்த வீட்டில் காலையிட்டு..
“மாசம்” என ஓலையிட்டு..
நாட்பட நிச்சயிக்கப்பட்டது
சொர்க்கத்தில் !!
நாளும் இங்கு இருக்கிறது
தர்க்கத்தில் !!
ஆணுக்குப் பெண் என
ஆண்டாண்டு இருந்தது
கல்யாணத்தின் ஈர்ப்பு !!
மாற்றியிருக்கிறது அதனை
மாகாணம் ஒன்றின் தீர்ப்பு !!
ஆதரவு எதிர்ப்பென்று
ஆர்த்தெழுகின்றன
ஆங்காங்கே முரசுகள் !!
ஆகுலத்தில் அரற்றுகின்றன
ஆளும் அரசுகள் !!
மதில் மேல் பூனையாக
மக்களும் சிக்கலில் !!
மயங்கித் தவிக்கின்றார்
மட்டுப் படாத விக்கலில் !!
தகுமா
தன் இனத்தை
தானே
தரணியில் தழுவுதல் ?
தன் விதியினின்று
தடம் புரண்டு நழுவுதல்?
இருக்குமா அதில்
இல்லறத்தின் நேரும் ?
அமைதியின்மை
அன்றோ நேரும் ?!
இறைவன் எதற்குப் படைத்தான்
ஆதாம் ஏவாளை ?
இமைப்பொழுதும்
ஆதாமை ஏவாளை ?
திருமணம் என்பது
சிறுமனத்தார் தேடும்
சிற்றின்ப புணர்ச்சிக்கா?
உளம் உளம் நேசிக்கும்
உணர்ச்சிக்கா?
இனம் சேரவா?
இதற்கு அப்பால்
இன்னல் வரு வேளையில்
சினம் ஆறவா ?
இவன் அவளை
இவள் அவனை என
இறைவன் குறித்தது
இணை திருத்தல் !!
இல்லாவிடில் எதற்கு வீணில்
இணைந்திருத்தல் ?
மறுமொழி எதற்கும் வருகிறது!!
மயக்கம் பலர்க்கு தருகிறது !!
இழைந்து செல்லல்
இல்லறத்தில் தேவை
இரு தரப்பு நெஞ்சுக்கும் !!
இதில் என்ன வேலை
நெருப்புக்கும் பஞ்சுக்கும் ?
இது நாள் வரை
இணையை
இனச்சேர்க்கையை
இணையற அங்கீகரிக்கும்
இன்றியமையா துருப்புச் சீட்டன்றோ
இல்லறம் என்பது ?!
இறுதி செய்தது
இன்று அதனை
இதற்கு அப்பாற்பட்ட எங்கள்
இதயத்தின் அன்பது !!
மணந்து கொள்கின்றோம் நாங்கள்
மனம் விரும்பி !!
மானுடம் இருக்கலாமா
முகம் திரும்பி ?
நடப்பதென்ன என வீணில்
நீங்கள் பயக்க...
நாங்கள் நவில்கிறோம்
”பழையன கழிதலும்
புதியன புகுதலும்”
நன்மை பயக்க..
எது எப்படியோ..
எது தப்படியோ..
புவி போகலாம்
புரியாத புதிரினை
புதுசாக கொள்ளல் !!
போகலாகாது
புதியது எனும் பெயரில்
புராதனத்தை எள்ளல் !!
எழுதத் தொடங்குகிறது மானுடம்
எவர்க்கும் புரியா அத்தியாயம் !!
எத்தரப்பும்
எவரும்
எது சரி
எது தவறென
எடுத்தவுடன் சொல்வது அநியாயம் !!
இவ்வழியில் சேர்ந்தார்
இந்தியாவில் தற்கொலை என
இன்றளவில் பல
இன்னல் செய்திகள் தந்தியில் !!
இந்தியாவின் மானம் சந்தியில் !!
சற்று மாற வேண்டும்
சமுதாயப் பார்வை !!
மயக்கி முடக்கலாமா அதனை
மரபு எனும் போர்வை ?!
எம் பாரம்பரியம்
என்ன என்ன என
எடுத்துச் சொல்லுங்கள் !!
எனினும்
எவரையும் புண்படுத்தாது
எட்ட நில்லுங்கள் !!
எக்குத் தப்பாக
எதிர் கொள்ளலாகாதிதனை
எதிர்ப்படும் சமுதாய வட்டங்கள் !!
எதற்கு இருக்கிறது பிறகு
எழுதிய சட்ட திட்டங்கள் ?!
யார் யாரைப்
பார்க்கலாம் மன்பதை..
எவர் எவரைச்
சேர்க்கலாம் என்பதை..
சட்டம் மட்டுமே
சந்தேகமின்றி தீர்க்கலாம் !!
வீணில் இக்கவலை
வேண்டாம் ஊர்க்கெலாம் !!
அலசாதீர் ஆபாசமாய்
அனுதினம் இதனை
வீதி வீதியாக..
ஆராய்வீர் ஆங்கிதனை
மருத்துவ ரீதியாக !!
உடலியல்
உளவியல் என
நீள்கிறது இச்சர்ச்சையின்
ஆதார காரணங்கள் !!
பூட்டாதீர் இதற்கு
மொழி இன
மத தோரணங்கள் !!
Labels: california ruling on same sex marriage, physiological/psychological factors, rule of law, traditional values
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home