Friday, June 06, 2008

கவிஞனின் கால் சுவட்டில்..

200px-Subramanya_Bharathi

9/11…
தீண்டியது
தீவிரவாதம் புவியை !!
மறந்து விட்டோம்
மண்ணினின்று அந்நாள்
மறைந்த நம் கவியை !!

பாரினில் பெருமை மிக்கது
பாண்டிய நாட்டு
முத்துச் சரம் !!
முன்பொரு நாள்
முந்தியது அதனை
எட்டயபுரம் !!

அதனில் சுப்பிரமணியனாய் பிறந்து
அவனியில் பாரதியாய் சிறந்து

ஒப்பார் இல்லா
ஒரு புலவனாய்
ஒளிர்ந்தவன் ஒருவன் !!
தங்கு தடையற்ற தமிழில்
தனக்கென நடையமைத்து
தனித்து நின்ற துருவன் !!

பழம் நாளில்
பழம்பெரும் நம் நாடு
பரவலாய் கட்டுண்டது
பரங்கியர் கரத்தில் !!
அனைத்து மக்களும்
அறிவிழந்து கிடந்தனர்
அடிமை சுரத்தில் !!

இதற்கு ஊடாக
வீடு வீடாக

வீணில் மதமும் சாதியும்
வீறு கொண்டு எழுந்தன !!
நம்மவன் காதில் அவை
நாராசமாய் விழுந்தன !!

பாகைச் சிரத்தவன்
பார்த்தான் அந்த
கையறு நிலையை !!
தாழ்த்தினான் தலையை !!

கொண்டிருக்கிறோம் நாம்
”கோதுமைப் பண்டத்திற்கு
காவிரி வெற்றிலையை”
தருதலை...
ஆள்வதா நம்மை
ஆங்கிலேயன் என்னும்
தறுதலை?

ஆயிரம் தெய்வம்
ஆங்கெதற்கு நம்மை காக்க ?
”அறிவொன்றே தெய்வம்”
நம் துயர் நீக்க என...

அன்றே பாடினான் !!
அனைவரும் மதத்திற்கு
அடிமையாவது கண்டு
அவன் வாடினான் !!

பெண்ணுக்கு இழைக்கப்பட்ட
பெருங் கொடுமைகளை
”கும்மி”யடித்து சாடினான் !!
போதாததற்கு பிள்ளைகட்கு
புதிய ஆத்திச்சூடியும்
சூடினான் !!

“நெஞ்சு பொறுக்குதில்லையே” வின்
சிந்தனை தூண்டும்
சில பத்திகள் .....
உணரலாம் அதனை
உன்மத்தமான புத்திகள் !!

அதன் சாரம்
தசாவதாரத்துக்கும் பொருந்தும் !!
அதனை உணரா மனம்
என்று திருந்தும் ?

பிரசித்தி பெற்றன
பாஞ்சசன்யன் கபடமும்
பாஞ்சாலி சபதமும்
பாரதியின் பாட்டில் !!
பசுந் தமிழில்
பகவத் கீதையும் ஒலித்தது
தமிழ் நாட்டில் !!

எட்ட முடியா உயரத்தை
எட்டிப் பிடித்தவன் !!
”இமயமலையும்
இன்னரு கங்கையும் “
எமதே என
இந்தியாவையே
கட்டிப் பிடித்தவன் !!

இன்று
அருவிக்கும் ஆறுக்கும்
அடித்துக் கொள்கின்றார் !!
ஐந்தறிவினோர்
ஆறறிவாளராய்
நடித்து வெல்கின்றார் !!

சொன்னது உன் சந்தம்
”சிங்க மராட்டியர்க்கு
சேரத்துத் தந்தம்” !!

இன்றைய வாதமோ
எங்கள் மண்
எங்கள் மராட்டியர்க்கே
என்றும் சொந்தம் !!

பார் போற்றிய புலவனே !!
பார்த்தோரும் படித்தோரும்
பாரதியை உவமிக்கின்றார்
புத்துணர்ச்சியாம் எழுச்சிக்கு !
இனி யார்
இங்கே வருவார்
தூங்கிக் கொண்டிருக்கும்
தமிழின் எழுச்சிக்கு ?!

அந்தி வரை உனக்கிருந்தது
”யாமறிந்த மொழிகளிலே” எனும்
தமிழ் நேசம் !!
அதனால் புகழுற்றது
அவனியுள் நம் தேசம் !!

இன்று
பேச்சில் மட்டும்
தமிழ் ஒரு செம்மொழி !!
கல்லூரிகளுள் இல்லை
கனவிலும் நம் மொழி !!

பைந்தமிழினி
பல நாள்
பயிற்றுவிக்கப் படலாம்
பள்ளி வரை !!
அவர்கட்கு
அவசியமா
தொல்காப்பிய உரை ?!

உனது கனவு
”தேமதுரத் தமிழோசை”
உலகு பரவும் வகை !!
தமிழகத்தில் இன்று
தமிழனுக்குள்ளேயே
தீராப் பகை !!

தமிழகம் கேட்பதோ
தீயது தன்னை
தீர்த்து வையென !!
ஆள்வார் ஆடுகின்றார்
ஆண்டுப் பிறப்பு
ஆரம்பிப்பது குறித்து
”தை” தையென !!

மண்ணின் மைந்தர்கள்
மனதளவில் இல்லை
உன் சிந்தனையை ஒப்பி !!
பள்ளிக் குழந்தைகளுக்கு
பாடம் மட்டும்
“பாரதியை ஒப்பி” !!

மீசை நண்பனே !!
கடற்கரை எங்கும்
கறை கறையாய்
காண்கிறேன்
கட்சித் தலை !!
பூவினில் இன்று மட்டும்
பூமாலை ஏந்துகின்றது
உன் சிலை !!

தீர்க்கதரிசியே !!
தரணியுள் நீ
தளர்ந்து வாழ்ந்த நாளில்
தமிழ்நாட்டில் ஒருவன்
தலை தாழ்த்தவிலை !!
வையம் உனை
வாழ்த்தவிலை !!

உண்மை தான்..
உளதோ உன் பாட்டை
உளமார வாழ்த்த விலை ?!

Labels: , , , , , , ,

1 Comments:

At 6/25/2008 7:41 AM , Blogger samukam.com said...

I came across this new Tamil social networking website called Samukam.com. It’s like Facebook and MySpace but for Tamils. Because it’s new it doesn’t seem to be flooded with tons of members. But, like any other social site you can post your own pix, videos etc and do the usual blogging, forums etc. It’s got other fancy features too. And as they say on the site might end up being great for Samukam-ising with friends.

Revathi

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

Links to this post:

Create a Link

<< Home