Tuesday, June 24, 2008

கடல் கடக்கிறான்...

hanuman for obama
Picture courtesy: The Hindu

இந்திரனின் வஜ்ஜிராயுதத்தால்
இரு கன்னம் வீங்கியவன் !!
தோளில் சூரிய குலத்
தோன்றல்களை
தோதாக முன்னம் தாங்கியவன் !!

இராக்கதன்
இந்திரசித்தனால்
இமை திறவாது...

மயங்கியோர்
மயக்கம் தெளிய
மலை ஏந்தியவன் !!
மண்ணில் அவனில்லையேல்
மடிந்திருப்பான் போரில்
சூர்ப்பனகை மூக்கறுத்த
சிலை ஏந்தியவன் !!

மணம் விரும்பாதவன் !!
மங்கையர் பக்கம்
கணமும் திரும்பாதவன் !!

கெளசலை புத்திரனின்
கெளரவ தூதன் !!
அனுதினம்
அவன் நாவில் இராம நாதன் !!

அறம் பிறழ்ந்து
அயன் மனை நோக்கினான்
அரண்மனை..
அந்நாளில் கண்டிருக்கிறது
அனுமனை..

வேண்டா வெறுப்பாக !!
வாலில் வைத்த தீயால்
வெந்தது ஊரே நெருப்பாக !!

அன்னையைக் காண
அன்றே பறந்தான்
ஓ ராமா என்று !!
அவனைத் தன்
அருகில் பார்ப்பான்
ஓபாமா இன்று !!

ஆஞ்ச நேயனே !!
அஞ்சனி சேயனே !!

அசோக வனமோ
அமெரிக்காவோ...

எதற்காக
என்று நீ வானில் ஏறினும்
எவர் தம் சுகத்தை
எவர்க்கு எடுத்துக் கூறினும்

நடக்கிறது ஒன்று அதுவாக !!
நயக்க வைக்கிறது பொதுவாக !

அமெரிக்காவிலும் இருக்கிறாள்
அழுது கொண்டு ஒரு
அன்னை !!
தன் கட்சியின் வேட்பாளராக
தகுதியிழந்தாள் தேர்தலில்
தன்னை !!

வேறொருவர் பக்கம்
வீசுகிறது இன்று காற்று !!
இதனைச் சொல்லி
இல்லேரியைத் தேற்று !!

பார்க்குமிடமெங்கும்
பாரினில்
பார்க்கிறேன்
பனிப் போரை!!
பார்த்ததா அமெரிக்கா
பாதிக்கப்பட்டு கண்
பனிப்போரை ?!

அநியாயத்தை
”அமைதிக்காக” என
அழைக்கிறது
அனேக நாவும் !!
எதற்கு வீணில் இதற்கு
எவர்க்கும் உதவா ஐ. நாவும் ?

வேலை நீக்கம்
விலை வீக்கம்

என..
எல்லாவற்றிலும் தளர்ச்சி !!
எதிலும் இல்லை
எள்ளளவும் வளர்ச்சி !!

எங்கும் எதிலும் ஓட்டை !!
எதை முன் வைத்து
எடுக்கப் போகிறார்
எல்லா மக்களின் ஓட்டை ?

பொறுப்பற்ற போரா?
பொருளாதாரத் தேரா?

எது முக்கியம் ?
எதற்கு வீணில்
எங்கும் அமைதி
எனும் அர்க்கியம் ?

அன்பனே !!
அரசவை தேர்தலை முன்னிட்டு
அமெரிக்கா செல்கிறாய்
அன்பர் ஓபாமாவுக்கு
அன்பளிப்பாய் !!
அவர் அனைவர்க்கும்
அனைத்து மதத்தையும்
அவனியில் மதிக்கும்
அன்பளிப்பாய் !!

Labels: , , , ,

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home