Monday, November 02, 2009

சிக்குன் குனியா. . . . - 2

மணிக்கட்டில்
கால் மூட்டில்

பிடரில்
பிருட்டத்தில்

ஆறு மாதமோ
ஆண்டாண்டு காலமோ

வந்தாரது
வயதைப் பொறுத்து
வலி படுத்தும் !!

போது போய்விடும்
போர்த்துப் படுத்தும் !!

நாடி நரம்பெல்லாம்
நாளெல்லாம் நோகும் !!
நாளை சரியாகும் எனும்
நம்பிக்கை போகும் !!

இந்தியாவில் நான்
இவ்வருடத்திய விடுமுறையில்
இந்நோய் என்றறியாது
இரு தினம் படுத்தேன் !!

விடுமுறை முடிந்திட
”விடைகொடு எங்கள் நாடே” என
விடை கொடுத்தேன் !!

அமெரிக்கா வந்திறங்கிய
அந்த நாள் முதலாய்

வலியான
வலி ஒன்று
வதைத்தது !!

என்னமோ ஏதோவென்று
என் மனம்
எந்நாளும் பதைத்தது !!

இயல்பிழந்தேன்
இன்னதென்று சொல்லொணா
இம்சையில் இருந்து !!
இப்பிணி தரும் வலிக்கு
இல்லை இத்தேதியில் மருந்து !!

நடை குறைந்தது !!
நகை மறைந்தது !!

“கோள் என் செயும்
கொடுங் கூற்றென் செயும்”

என

சொல்லிப் பழகிய நான்
சொல்வதறியாது நின்றேன் !!

நமக்கு ஒருவேளை
நாளும் நேரமும்
நலமில்லையோ என்றேன் !!

சகுனம் பார்த்தேன் !!
சனியை நொந்தேன் !!

சோதிடம் இனித்தது !!
என் செய்கை நினைந்து
என் கண்ணே பனித்தது !!

-- தொடரும். . .

Labels: , ,

Wednesday, October 28, 2009

சிக்குன் குனியா. . . . -- 1



அவற்றின் உணவு
அகில ஜீவராசிகட்கும்
அத்தியாவசியமான ஒரு திரவம் !!
அவற்றால் நமக்கோ
அன்றாடம் உபத்திரவம் !!

அயர்ந்த மனிதனுக்கு
அவை வைக்கும்
அதன் அளவில்
அன்பாய் ஒரு முத்தம் !!

எடுத்த பொருளை சிந்தாது
எவ் வரிசையிலும் முந்தாது

தொன்று தொட்டு உண்டதற்கு
தொழில் சுத்தம் !!

மாலைப் பொழுதின்
மயக்கத்தில் அவை
மதி இழக்கும் !!

நம்மை அறியாமல்
நம் தொடையில்
நச்சென்று தாளமிட

நம் மதி
நம்மைப் பழக்கும் !!

அதன் தேவை இரத்தம்
அப்போதைக்கு !!
அடங்காக் குடியெனும்
அப் போதைக்கு !!

வகை வகையாய்
வட்ட வட்டமாய்

வசதிக்கு ஏற்ப
வத்தி வைத்தும்......

வாயிற் கதவை
பொத்தி வைத்தும்....

கொல்லிகளை தெளித்தும்...
களிம்புகளை பூசிக்
கவலையில்லை இனி எனக்
களித்தும்...

ஒடுக்க முடியவில்லை மனிதனால்
ஒருபோதும் அவற்றை !!
மறந்தான் அவன்
முதற்கண் அவனது தவற்றை !!

அதிகப்படியான தூக்கமும்
அசுத்த நீர் தேக்கமும்

நாடு நாறினால்
நமக்கென்ன எனும் நோக்கமும்

மனிதனை முடக்குகின்றன !!
மண்டியிட வைத்து மடக்குகின்றன !!

மலேரியா
டிங்கு
ஃபைலேரியா என

பல வியாதிகள் அவனை
பலவாறு அடக்குகின்றன !!

”சிக்குன் குனியா” எனும்
சித்திரவதையில்
சில நாளாய்
சிக்கியிருக்கிறது நம் நாடு !!

சிக்குண்டு தவிக்கின்றார்
சிரமத்தில் பலர்
செய்வது அறியாது !!

இன்ன பிற சுரம் போல்
இச்சுரமும்

மூன்று நாள்
மூலையில் ஒடுங்கவும்...
குய்யோ முய்யோ என
குளிரில் நடுங்கவும்...

ஒருமித்து செய்யும் !!
உடல் நையும் !!

பத்தாம் நாள் முதலாய்
பலத்த வலி
பலவாறு உடலில் தங்கும் !!

அது போல் ஒரு வலி
அம்மவோ!
அறிந்ததில்லை நான்
அகிலம் எங்கும் !!

தொடரும். . .

Labels: , ,