Tuesday, November 03, 2009

சிக்குன் குனியா. . . . - 3

குடும்ப மருத்துவர்
குவித்து உதட்டைப் பிதுக்கினார் !!
எலும்பியல் நிபுணர்
எனக்கு தொடர்புடையதில்லை
என ஒதுக்கினார் !!

வினை விதைத்திட்ட
வியாதியின் பெயரை
விலா நோக விவரித்தும்

நுழையவில்லை அது
நுண்ணுணர்வுடையார் வாயில்!

தொண்டு கிழம்
திருநாவுக்கரசர் கணக்காய்
தேடிப் போனேன் கோயில் !!

சதுர் வேதமோ
சஹஸ்ரநாமமோ
சற்றும் காதை துளைக்கவில்லை !!
சஞ்சலத்தில் மனம்
சரிவர பக்தியில் திளைக்கவில்லை !!

பல்லாயிரம் வலைப் பதிவுகளை
பக்கம் பக்கமாய் புரட்டி. . . .
செய்திகளை செவ்வனே திரட்டி. . .

வாத நோய் வல்லுனராம்
ரூமட்டாலஜி நிபுணரிடம் சென்றேன் !!
ஏதேனும் செய் என்றேன் !!

இங்கில்லா
இந்நோயை

எங்கு சென்று
எப்படிப் பிடித்தாய் என

கல கலவென அவரும் சிரிக்க.....
கையை விரிக்க.....

வெறுத்துப் போனேன் !!

சிறிய கொசுவா நம்மை
சிறைப்படுத்துவது என
சிந்தித்து சிந்தித்தே
சிறுத்துப் போனேன் !!

வக்கில்லா கொசுவால்
வசமிழந்து முடங்குவதா?
வாழும் வயதில்
வாழ்க்கை அடங்குவதா ?

நாளும் முன் போல்
நலமாய் வாழ
நடையே விடை என

விந்தி விந்தி நொண்டியாய்...
வீதியில் ஒண்டியாய் ...

வலியோடு பல நாள்
வழி நெடுகப் போனேன் !!

வந்த வழியிலேயே
வந்த வலி மறைய

விரைவில் மீண்டும்
வலுவானவனாய் ஆனேன் !!

வல்லரசு அமெரிக்காவுக்கும்
வலிய இந்நோய் வர
வலுவான சாத்தியங்களுண்டென

கருத்துக் கணித்திருக்கிறார்கள் !!
கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர
கணக்கற்றோரை
கடமையில் பணித்திருக்கிறார்கள் !!

இந்தியாவில் இந்நோய்
இதுகாறும் தலைவிரித்தாடுதற்கு

என்னிடம் உண்டு
மூன்று காரணங்கள் !!
அனைத்திற்கும் உண்டு
அவசரத்திற்கு உதவா
அரசியல் தோரணங்கள் !!

-- தொடரும். . .

Labels: ,

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home