அது....
அமெரிக்காவில்
அனேக வருடமாய் நடக்கும்
“அட்சரப்” போட்டி !!
அடிக்கொருதரம்
அனைத்து இந்திய பெற்றோரும்
அவரவரது வாரிசை
அமோகமாய் ஊக்குவிக்கின்றனர்
அதனை போட்டுக் காட்டி !!
அதன் பெயர்
National Spelling Bee !!
பல காலமாய் அது
பதின்மூன்று வயது சிறாருக்கு
புகழ் பரப்பும் தீ !!
கொடுக்கும் வார்த்தைக்கு
கூட்டுக எழுத்தை !!
கடைசி வார்த்தை வரை
கூட்டியது சரியாக இருப்பின்
நீட்டுக மாலைக்கு கழுத்தை !!
இதுவே அதன்
இன்றியமையாத விதி !!
இவ்விதியை பற்றி
இப்போட்டியில் வெற்றி வரின்
இமயமாய்க் குவியும் நிதி !!
அண்மைக் காலமாய்
அமெரிக்க வாழ் இந்தியர்
அதிகமாய் இப்போட்டியில்
அளப்பரிய வெற்றி ஈட்டுகின்றார் !
”நாமார்க்கும் குடியல்லோம்” என
நம் நாட்டின் சிறப்பை
நானிலத்தார்க்கு காட்டுகின்றார் !!
நம்மவர் வெற்றியால்
நமக்கு உண்டாகிறது
நாட்படா தாக்கம் !!
இருப்பினும் இருக்கிறது எனக்கு
இழையோடும் ஒரு ஏக்கம் !!
சொல்லவே முடியா பல
சொற்களில்
பலவாறு காண்கிறேன் நான்
பல மொழிகளின் கலப்பை !!
“குர்தா” எனும் நூலாடை
கேள்விப்படாத ஒரு
ஃபிரெஞ்சு பாலாடை
என...
போட்டி நடத்துபவர் கவனம்
போதும் போதுமென
போதும்
போட்டியாளரை வடி கட்ட !!
போட்டியாளர் முனைகின்றார்
போராட்டத்தின் ஊடே
வெற்றிக் கொடி கிட்ட !!
வார்த்தையின் மூலமென்ன ?
வழக்கத்தில் புகுந்த காலமென்ன ?
உயர்திணையா?
அஃறிணையா ?
எடுத்துக்காட்டாய் வார்த்தையை
ஏதோ வரியொன்றில்
எங்ஙனமேனும் பிரயோகியுங்கள் !!
வேறொரு உச்சரிப்புண்டெனில்
வேகமாய் அதனை
உபயோகியுங்கள் !!
இவ்வாறு பல கேள்வி தொடுத்து
நேர கால நியமங்களுக்கு
செவி மடுத்து
எட்டுகின்றார் விடையை !!
எட்டியை விடை
ஏற்புடையதாகாக்கால்
கட்டுகின்றார் நடையை !!
வருடா வருடம் போட்டிக்கு
வருவாரது திறன் கண்டு
வருகிறது திகைப்பு !!
அடித்துச் சொல்லலாம்
அவர் அடையும் வெற்றி
அன்னாரது அகைப்பு !!
ஆயினும் அவ் வெற்றியால்
ஆய பயனென் ?
ஒரு வார்த்தையால்
ஒருவர் புலமையை
ஓர்தல் முறையோ ?
ஒரு சொல்லை
ஒழுங்காய்ச் சொன்னால்
ஒளிர் என்றோ
ஒழுங்கில்லையேல்
ஒதுங்கு என்றோ
கூறல் நிறையோ ?
தடுமாற்றம் தரும் ஒரு சொல்
தரப்படுவதில்லை மற்றவருக்கு !
அவரும் அதனை
அழகுற சொல்லியிருப்பாரா எனும்
அவ் ஏக்கம் அமையாதோ
அவ்வார்த்தையை உற்றவருக்கு ?
எடுத்தேன் கவிழ்த்தேன் என
எப்புலமையை இப்போட்டி
என்னணம் இறுதி செய்கிறது ?!
எப் பிணக்குமின்றி
எழுத்தைக் கூட்டுவேன்
எங்கதனை பிரயோகிக்கலாம் என
எடுத்துக் காட்டுவேன்
எனும் ஒரு புலமையால்
எத்துணை நாள்
எவ் இலக்கை நோக்கி
எவ் அம்பை எய்கிறது ?
பங்கேற்பாரை
பல ”தனி மனித” குழுவாய்
பகுத்து
பல வார்த்தைகளை
பக்கம் பக்கமாக தொகுத்து
சரி சமமாய்
சம காலத்தில்
ஒவ்வொரு வார்த்தையாய்
ஒவ்வொருவருக்கும்
ஒலி வடிவில் கொடுத்து
அவரவர்
அதனதன்
”அட்சர” அளவினை
காகிதத் தாளில் குறிக்க
பதிவான
பதில்களை நிறையிட்டு
குறைகளை முறையிட்டு
முன்னே வருபவர்
முன்னிறுத்தப் படலாமே
முதல்வன் எனும் பட்டத்தில் !!
முரணிருக்கிறதா என் திட்டத்தில் ?
Labels: a different perspective, kavya shivashankar, spelling bee