Wednesday, June 17, 2009

"அன்பாலே அழகான" அந்நாள். . .

pasanga_picture

சீராக காக்கி-வெள்ளைச்
சீருடை அணிந்து....
அனுதினம் ஆசிரியர் சொல்லுக்கு
அடக்கமாய் கீழ்ப் பணிந்து....

சாதி மத
சமுதாய பாகுபாடுகள் விடுத்து....
சகோதரர் எல்லோரும் என
சமத்துவ உறுதிமொழி எடுத்து...

சாராதாரோடு பிரிந்து....
சார்ந்தாரோடு நண்பராய்
சாரி சாரியாய் திரிந்து....

ஓரளவு சொல்லிக் கொடுத்ததை
ஓராதே புரிந்து....

தேர்வு என்றடவுன்
சோர்வு தாங்கி....
முன்னம் படித்ததை
முழுக்க வாசித்து
மூச்சு வாங்கி.....

விடைத் தாளில் எழுதுமுன்
வினாத் தாளில்
விடைகளைக் குறித்து....
வீராப்பாய் சோம்பல் முறித்து....

தந்த தையல் நூலை
தாலியாய் நினைந்து
தாள் தாளா வண்ணம்
தாளைக் கட்டி.....
வேகமாய் வகுப்பறையினின்று
வேக வேக
வேக நடையைக் கட்டி...

தோழன் விடை முன்
தோற்குமோ தனதெனும்
ஆவல் விரிய...
அவனது முகமும்
அசமஞ்சமாய் வெளியில் தெரிய...

குறித்த விடைகளின்
குறை நிறை அளந்து....
எவர் சரி
எவர் தவறெனும்
சந்தேகம் மண்டையைப் பிளந்து....

இட்ட விடை
கெட்ட விடையாகின்

தோளுக்குத் தோளான
தோழனோடு கடுத்து....

தேர்வோமா என சிலரும்
தேர்வோம் என பலரும்
தமக்குத் தாமே
தட்டிக் கொடுத்து....

மதிப்பெண் வருநாள்
வயிற்றைப் பிசைய....
வாத்தியின் வாய்
வா இங்கே என அசைய....

தேர்ந்தானா?
தீர்ந்தானா ? என

தோழர் முகத்தில்
சோகம் திரள.....
கண் மூடு நேரத்தில்
கற்பனை கரை புரள.....
கண்கள் மிரள......

பலமாய் தாம் கண்ட
பல நாள் கனவு
பகல் கனவாமோ ?
அல்லது வகுப்பின் முதல்
அசலாய் தாமோ ?

வசமிழந்திருக்கிறார் பெற்றோர்
வட்டிக்கு வட்டி கட்டி !!
வைவரோ அவர் எம்மை
வயிற்றெரிச்சலை கொட்டி ?

என...
ஒவ்வொரு மாணவனின்
ஒருமித்த வாழ்க்கையை

எடுத்த முதல் படத்திலேயே
எடுத்துக் காட்டிய
“பசங்க” பாண்டிராஜுக்கு

தரலாம் தங்கப் பதக்கம் !!
தமிழ்த் திரைக்கு இது
தனிப் புது தொடக்கம் !!

இரண்டரை மணித்துளியுள்
இழுத்தது இப்படம் என்னை
இருபத்தோரு ஆண்டுகள் பின்னம் !
இறங்கவில்லை இரண்டொரு நாள்
இம்மியும் எனக்கு அன்னம் !!

அடியேன் நான்
அறைகுறையாய் படித்த பள்ளி
அரசுப் பள்ளி !!
அயலூரிலிருந்ததால்
அது சற்றுத் தள்ளி !!

அடிப்படை வசதிகளும்
அதற்கு சற்றுத் தள்ளி !!

மின்சாரம் அற்ற
மூங்கில் வேய்ந்த
கீற்றுக் கொட்டகை !!
முன்வாசல் முன்பாக
மூக்கை பிடிக்க வைக்கும்
மூன்று குட்டை !!

பலவகை கூற்றுகள் இருக்கும்
வேதியல் பாடத்துள் !!
படித்ததை படித்தவாறு
பரிசோதிக்கும் கருவியிராது
பரிசோதனைக் கூடத்துள் !!

காற்று புக முடியா
கல்வி அறைகளுள்
இருக்கும் புழுக்கம் !!
இருப்பினும் இருந்தது
இறவா ஒழுக்கம் !!

ஆசிரியர் வந்ததும்
எழுந்து நிற்போம் !!
எழுத்து கற்போம் !!

தமிழ் போதித்த இராமலிங்கம்
தனித்து ஒளிர்கிறார் இன்று
தமிழ்ப் பட்டிமன்ற மேடையில் !!
தட்டி இருக்கிறார் பலமுறை
தமியேன் என்னை தாடையில் !!

”வெக்டர் அல்ஜீப்ரா”வுக்கு
விஸ்வேஸ்வர பாபு !!
வேதியலுக்கு சிவகாமி !!
இயற்பியலுக்கு செளந்தர் !!

எனக்கு உயிரியல் இல்லை !!
எனவே இல்லை
எலும்புக் கூடின் தொல்லை !!

என் பெரியப்பாவின் அச்சு
”கலிஃபோர்னியா” விச்சு
மிகப் பெரிய பேச்சாளன் !!
”அட்லாண்டா” சரவணன்
வேகப் பந்து வீச்சாளன் !!

ER எனும் சிவக்குமார்
BC எனும் சந்திரசேகர் என

ஏனைய பலர்
இன்று போனது எங்கே ?!
எங்கு அவரிருப்பினும்
அங்கு ஒலிக்கிறதா
அவரது புகழ்ச் சங்கே ??

பள்ளியினின்று வெளிவந்தது
எண்பத்து எட்டு !!
போய் வருவேன் இம்முறை
ஓர் எட்டு !!

அடித்துச் சொல்வேன்
அக்காலம் பொற்காலம் !!
அணுவளவு ஒப்பாமோ
அதன் முன் தற்காலம் ?

Labels: , , , , , ,

3 Comments:

At 6/19/2009 2:53 AM , Blogger D. Chandramouli said...

You brought the elementary school days before my eyes, like a video movie. I shall remember to see this movie. விடைகளைக் குறித்து....
வீராப்பாய் சோம்பல் முறித்து.... What a beautiful expression! Thanks and Congrats!

 
At 6/21/2009 9:56 AM , Anonymous Kumudha said...

Ganesh,

Nice one...

I heard good reviews about the movie too.. will check it sometime.

Sarav will be pleased to read ur post.. :-)

 
At 7/20/2009 1:26 PM , Blogger SP said...

"Nanba"

Namathu palli natkallil ithuve naam payan paduthiya thamizh varthai.

unathu kavithaiku yenathu paratukkal.

thodarattum unathu aatral.

Anbudan, S.P.Saravanan

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home