Monday, June 22, 2009

133 * 10 = 1330

thiruvalluvar

அவன் தாடி வைத்தவன் !!
அறத்தை
அறத்துப் பாலாக
அழகுறப் பாடி வைத்தவன் !!

”யாமறிந்த புலவரிலே” என
யாத்தான் அவன் புகழை
எட்டையபுரத்தான் !!
எவர்க்கும் அஞ்சா திறத்தான் !!

அவ் வரியில்
அவன் நடுவானவன் !!

எழு சீர் எழுத்தில்
எண்ணற்ற அறச் சிந்தையை
என்றும் அகத்தே
நடுவா னவன் !!

பொழுதும் அவனுக்கு
பொருள் என்பது
பொருளல்ல !!
அறிந்தார் உரைப்பர்
அவ்வுணர்வினும் சிறந்ததோர்
அருளல்ல !!

அரசியல் முதல்
அன்றாட வாழ்வு வரை
அகற்றினான் அனேகர்க்கு
அறியாமை இருளை !!

பொருட் பால் காதலை
பொருட்படுத்த லாகாதென
பொருட்பாலில் வைத்தான்
பொழுதும் போற்றத்தக்க
பொருளை !!

அவனது வாக்கை..
அர்த்தமுள்ள நோக்கை..

அண்மைக் காலமாய்
அவனியோர்
அனுதினம் நாவில்
அதிகம் வைப்பதில்லை !!
ஆயினும் அவை
ஆதிநாள் முதல் பொய்ப்பதில்லை !!

ஆயிரத்து முந்நூற்று முப்பதாக
ஆங்கண் அவன்
ஆற அமரப் பாடியதுள்

அறம் பொருள் இன்பம்
அடக்கம் !!
அதனில் அவன்
அதிகம் பாடியது
அன்றாட வாழ்வில் நாம்
அவசியம் கடைப்பிடிக்க வேண்டிய
அடக்கம் !!

”யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு !! “

”அடக்கமுடைமை”யில் வருகிறது
அப் பா !!
அடக்கத்தின் தேவையை
அறுதியிட...

எப் பா எந்நாள் வரினும்
அப் பா அவற்றுக்கு
அப்பா !!

அர்த்தமுள்ள அம் மொழி
அன்பன் வள்ளுவனது
அருள் வாக்கு !!

இதைப் படிக்கட்டும்
இனியாகிலும்
இறுமாப்புடை
”இளைய தளபதி” யின்
இழிந்த நாக்கு !!



தூர எறிய வேண்டியவரை
தூக்கிக் கொண்டாடுகிறது
தூய தமிழ் நாடு !!
அட்டையிலும் போடுகிறது
அத்தகையோனை
அனேக தமிழ் ஏடு !!

தமிழ் நாட்டிலா இத்தகைய
தரக் கேடு ?
அன்றாட வாழ்வில்
அத்தமித்ததா
அறக் கோட்பாடு ?!

Labels: , ,

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home