அலாதியான பிரியம்
அமெரிக்கர்க்கு
அவரது பிராணிகளின் மேல் !!
அனேகர்க்கு அவை
அவர்தம் மனைவியரினும் மேல் !
பச்சோந்தி
பைங்கிளி
புலி
எலி
முயல்
கயல் என
வயதுக்கு ஒத்தோ
வசதிக்குட்பட்டோ
இல்லந்தோறும் செல்லப் பிராணி
இருக்கும் ஏகமாய் !!
அழகழகு பெயர்களில்
அந்தியும் அளவுச் சாப்பாட்டோடு
அனேகம் இருக்கும் அமோகமாய் !!
பலரது தோட்டத்தில்
மயிலும் அகவும் !!
பார்த்திருக்கிறார் இதனை
எந்தன் மகவும் !!
எது யாருடையதோ..
எப் பேருடையதோ..
மண்டைக் கனமுடையதோ..
சண்டைக் குணமுடையதோ..
பாதை மாறியோ...
போதை ஏறியோ...
வழி மாறி மாற்றான் தோட்டத்துள்
வரும் எப் பிராணியும்...
வரு முன்னே
வரப் போகும் நாளை சொல்வதில்லை !!
வலிய வந்த பின்
எளிதில் திரும்பியும் செல்வதில்லை!!
வீட்டின் பின்பக்கம்
விளையாடும் பிள்ளைகட்கு
வீணில் அவைகளால்
வினை வாராதிருக்க
வேண்டியிருக்கிறது ஒரு வேலி !!
தகப்பன் எனும் முறையில்
தமியேனுக்கு அதுவே
தரப்பட்ட முதல் சோலி !!
அறிவேன் நான்
அவ் அரணால்
அனைத்தையும் தடுக்க இயலாது !!
ஆனால்..
அது இருக்க
அகஸ்மாத்தாக நுழைந்து
அனேக பிராணிகள்
பீதி கொடுக்க முயலாது !!
அத்தகு சுவர்
அனைத்து தேசத்துக்கும்
அவசியம் வேண்டும் !!
அஃதன்றி தீவிரவாதம்
அவ்வப்போது தீண்டும் !!
எக் கரத்தால்
எத் தரத்தால்
எம் மரத்தால்
அதனைக் கட்ட ?
அதனால் ஆகுமா
அமைதி கிட்ட ?!
இருந்திருந்தால்
இருந்திருக்காதோ
இரு கண்ணிலும் நீர்
இளங் கன்றுகளை இன்று
இழந்து தவிக்கும் தாயிலும் ?!
இக் கேள்வி
இன்று எல்லோர் வாயிலும் !!
அன்பர்களே !
அதிகம் தேவையில்லை
அச் சுவர் எழுப்ப !!
அதுவன்றி வேறில்லை
மீளாத் துயிலினின்று
மக்களை எழுப்ப !!
தேவை அதற்கு நன் சொற்கள் !!
தேவையில்லை செங்கற்கள் !!
எந்நாளும் அதற்கு உதவாது
எது எவருடையது
எனும் எல்லைக் கோடுகள் !!
எத்தரப்பினருக்கும்
என்றும் வேண்டும்
செய்யும் தொழிலை
செவ்வனே செய்யும்
செயற் பாடுகள் !!
அச்சுவரின்
ஆதாரம் - மத நல்லிணக்கம் !!
அகலம் - மக்களின் அன்பு !!
உயரம் – நீதியின் நிலை !!
உறுதி – மக்கள் மன உறுதி !!
கட்ட உதவும் தண்ணீர் – கல்வி !!
கட்டுவதற்கான பணம் – வரி !!
கொத்தனார் – அரசியலமைப்பு !!
வாயிற்காப்பாளன் – காவல்துறை !!
சொந்தக்காரன் – வாக்காளன் !!
முக்கிய எதிரி - ஊழல் !
முதன்மை நண்பன் – ஒற்றுமை !!
என்ன பிரயோசனம்
எனதருமை மும்பையை
எப்போதும் நினைத்து அழுது !!
எங்கோ இருக்கிறது பழுது !!
தாஜ் என்றவுடன்
நினைவுக்கு வரப்போவது
ஆக்ராவில் இருக்கும்
அன்பின் சின்னமா ?!
11/26ல் நடந்த
சின்னா பின்னமா !!
எரிகின்றது மற்றொருமுறை
என் தேசம் !!
எங்கு காணினும்
எண்ணவொண்ணா நாசம் !!
தீவிரவாதத்தின் தாக்குதலில்
தவிக்கிறது மும்பை !!
இருப்பினும்....
இந்நேரத்தில் இழக்கலாகாது
இந்தியர்கள் அன்பை !!
மும்பையின் கண்ணீரும் கதறலும்
முட்டுகிறது வானை !!
தேவைப்படுகிறது அமைதிக்கு
தேசிய தானை !!
மார் தட்டுமா இனி
மராட்டம் மராத்தியர்க்கே என
நவ நிர்மாண் சேனை ?
இத்துணை நாள்
பேசியிருந்தீர் பார பட்சமாக !!
இமைப் பொழுதில்
இற்றுப் போனதே அது
இரண்டாம் பட்சமாக ?!
முக்கியமான இத் தருணத்தில்
முன்னேற்றச் சிந்தனைக்கு
முனைய வேண்டும் மக்கள்
முன்னம் நிகழ்ந்த
மும்பை கலவரத்தை
முழுதும் மனதில் கொண்டு !!
அதுவே இந்நேரத்தில்
அரசுக்கு அவர் செய்யும்
அளப்பரிய தொண்டு !!
இது
இந்து முஸ்லிம் பிரச்சினையல்ல !!
இஃதுணர்ந்தால் வினையல்ல !!
அரசுக்கு நன்மை தீமைகளை
”அகலாது அணுகாது”
குறள் மொழி பற்றி
அற வழி ஒற்றி
அரசியல் கட்சிகள்
அறிவுறுத்த வேண்டும்
சுயலாபம் தேடாது !!
அஃதன்றி வெற்றி கூடாது !!
எல்லாம் இருக்கட்டும்..
எழுத்தன்றி எமக்கென
என் செய்தாய் நீ?
என என்னையும்
என்னொத்த ஏனைய
வெளி நாடு வாழ் இந்தியரையும் தூண்டாதீர் !!
தேவையற்ற குப்பைகளை
தோண்டாதீர் !!
எனது நாட்டை விட்டு
எங்கோ இருப்பினும்
எங்கும் கேட்கும் கதறலினால்
என் மனமும் கனக்கும் !!
நாட்டுப் பற்றென்பது
நாளும் உண்டு எனக்கும் !!
Labels: mumbai terrorism 2008, need of the hour, taj burning