Thursday, December 04, 2008

மும்மூர்த்திகள். . .

wagonermullalynardelli

நிந்தன் உதவியின்றி
நிறுவனம் ஆகும் திவால் !!
சற்றும் சளைக்காமல்
சட்டம் இயற்றுவார் முன்
வாகன உற்பத்தியாளர்
வைத்திருக்கின்றார் சவால் !!

ஆண்டாண்டுகளாக யாமே
அமெரிக்காவின் வேர் !!
GM , Ford, Chrysler
என்பது எங்கள் பேர் !!

வீழ்ந்த பொருளாதாரத்தால்
விற்காமல் கிடக்கின்றன
வணிகர் கிடங்குகளில்
எமது வாகனங்கள் !!

வாங்க வருவார்க்கும்
வங்கிக் கடன் கிடைக்காமையால்
வழி அறியாது
வந்த வேகத்தில்
வெளியேறுகின்றனர் மாசனங்கள் !!

இந்நிலை நீடிப்பின்
இழுத்து மூடப்படும் எமது கதவு !!
இதற்காகவேணும் இன்றே
இருநூறாயிரம் கோடி
இரவல் தந்து உதவு !!

அவ்வுதவியின்றி
அந்திமக்கிரியைக்கு யாம் போனால்
கைப்பணம் இழந்து
கையேந்தி ஆனால்

எமது தொழிலாளர்
எல்லாரது வயிறும் காயும் !!
வேரொடு அமெரிக்காவே
வீழ்ச்சியில் சாயும் !!

சந்தி சிரிப்பர்
சகத்தார் எங்கள்
சரிவு பார்த்து !!
சளைக்காது எமக்கு அதனால்
சற்றே பரிவு காட்டு !!

வாகன நகரம் டெட்ராய்டினின்று
வாலை வாரிச் சுருட்டி
வாஷிங்டன் சென்று
வாயைக் கெல்லி
வாதாடுகின்றனர்
வாகனர், முல்லாலி, நார்டெல்லி !!

வண்டி வண்டியாய்
வரிப் பணம் கேட்கும் அவரை
வறுத்தெடுக்கின்றனர்
வாக்கு வாங்கியோர்
வகை வகையாய் குற்றஞ்சொல்லி !

பரிதவப்பார் கதை
பலர் காதை எட்டுமா?
பணம் அவர்க்கு கிட்டுமா ?

இதுவே எங்கணும்
இன்றைய பேச்சு !!
இருப்பினும் கேட்கிறது
இங்குமங்குமாய் ஏச்சு !!

கச்சா எண்ணை
கணிசமாக இருந்த காலத்தில்
கணக்கு வழக்கின்றி எரிபொருளை
கப கபவென குடித்து

கருப்புப் புகையை
கணமும் உம் வண்டி கக்கியது !
கண்ட பணத்தை
கணக்காய் எண்ணியே
கண்ணும் உமக்கு சொக்கியது !!

விற்ற வண்டியிலெல்லாம்
ஆயிரம் பிரச்சினை !!
தவிடளவும் இல்லை
தரத்தின் இலச்சினை !!

பழுது பார்ப்பவனையே
பொழுதும் பார்த்து மக்கள்

போக்கறியாது நின்றனர் !!
போதும் போதுமென்றனர் !!

ஒளிரும் வகையின்றி
ஒருவித மிகையின்றி

நாமும் இருக்கிறோம் என
நாளைக் கழித்தாய் !!
தேவையற்ற வேலைகட்கு
தேடிய செல்வத்தை அழித்தாய் !!

ஊரார் ஓர் நாளும்
உபயோகமற்ற
உன் வண்டியை
பார் கார்! என
பார்க்கார் !!
சிலர் அதனை
சிறிதும் அருகே சேர்க்கார் !!

உன்னோடு போட்டியிட்ட
உலக வாகன
உற்பத்தியாளர்கள்

உயர்த்தினார் அன்றே
உடனுக்குடனாக தரத்தை !!
உனக்கு ஏனில்லை
உருப்படியான அச் சிரத்தை?

உலகோர்க்கு
உம் வாகனம் மேல் பரிவில்லை !!
உமக்கு ஏனிந்த
உண்மை உணரும் அறிவில்லை ?

விற்பனை தேக்கம் நிறைந்தாலும்
உற்பத்தி குறைந்தாலும்

உபகாரச் சம்பளம்
சுகாதாரக் காப்பீடு
தொழிற் சங்கச் சலுகைகள்
கொள்ளையடிக்கும் வணிகர்களென

கொழுப்பேறிக் கிடக்கிறாய் !!
இன்றோ நாளையோ என
இழுபறியாய் நாளை கடக்கிறாய் !!

இந்நிலையில்
இழுக்குமா உம் தேரை
இரவலாய் வரும் அப்பணம் ?!
என்றைக்காவது ஒருநாள்
எழுந்து நிற்போமென
எதற்கு வீண் சொப்பனம் !!

தொலையட்டும் சனியனென்று
மக்கள் கையை உதறுகின்றார் !!
தொலையலாகாது தம் வரி என
தெருத் தெருவாய் பதறுகின்றார் !

ஒன்று நிச்சயம் !!
ஒழி என ஓர்
உதவி வராது....
உலகில் அமெரிக்க வண்டி இராது !!

அப்படியொன்று நடந்தால்
அதன் பாதிப்பு
அனைவரையும் தாக்கும் !!
பலரை வேலையினின்று நீக்கும் !!

”கார்” நகரம் ஆகும்
கார் நகரம் !!

Labels: , , , , , ,

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

Links to this post:

Create a Link

<< Home