Thursday, October 23, 2008

தப்புத் தாளங்கள்....

2008102355691301

Picture Courtesy: The Hindu



இதற்கு அது என
இரு கோடுகளாக
இணையாயிருக்கும்...
இருப்பினும் இரண்டும்
இணையாதிருக்கும்....

இருளில் கிடக்கிறது அது
இனவெறி கண்டு !!
இத்தனைக்கும் அது
இயல்பாகவே உறுதிமிக்க
இரும்புத் துண்டு !!

இது தான்
இருப்புப் பாதை !!
இன்று அதற்கு
இலேசில் குணமாகா வாதை !!

வாசிக்கும் ஏடோ
வசிக்கும் நாடோ

தக்க பிணைப்பின்றேல்
தனித் தனியாய்ப் பிய்ந்து விடும் !!
தலை தொய்ந்து விடும் !!

இமயம் முதல் குமரி வரை
இந்தியாவை இணைப்பது
இரயில்வே துறை !!
இன்றதன் முகத்தில்
இரத்தக் கறை !!

இயல்பாகவே எனக்கு
இரயில்வே இலாகாவிடம்
மட்டற்ற மதிப்புண்டு !!
இந்தியன் என அனற்றும்
ஈனர் சில செயலால்
இன்று கிடக்கிறேன் கொதிப்புண்டு !!

மாநிலத்துக்கு மாநிலம்
தலைவிரிக்கிறது வன்முறை !!
பார்த்திருக்கிறோம் நாமிதனை
பாரதத்தில் பன்முறை !!

கை கால் உதறி…
கணமும் பதறி..
கவலையில் கதறி....

மக்கள் வெறிக்கின்றனர் !!
எஞ்சியோர் இரயிலையே எரிக்கின்றனர் !!

எல்லாவற்றுக்கும் காரணம்
எங்கோ ஒரு மடையன்
எவர் எவரையோ
நையப் புடைத்தான் !!
மராட்டிய மண்
மராத்தியர்க்கே என
கையைத் துடைத்தான் !!

போதாததற்கு
போதும்
”போ உன் ஊருக்கு” என
போக்கற்றாரை மிரட்டுகிறான் !!
பொதுப் பணியில் சேர
பொதுத் தேர்வுக்கு வந்தாரை
விரட்டுகிறான் !!

நாடு தீப்பந்தத்தில் !!
நம் பிரதமர் கவனமெல்லாம்
நடந்து முடிந்த
அணு சக்தி ஒப்பந்தத்தில் !!

பிரதி தினமும்
பிரளயமான பூமி பீகார் !!
இப்படி ஒன்று நடக்க
இனி லல்லுவும் அங்கே போகார் !

தீப்பற்றி எரிகிறது
திசை எங்கும் !!
கை சொறிகிறாரா
மன்மோகன் சிங்கும் ?

Labels: , ,

Wednesday, October 22, 2008

நதியும்.....விதியும்....

தமிழில்..
நாற்றம் என்றால்
நல் வாசனை !!
வேண்டாம் வீண் யோசனை !!

துர்நாற்றமே நுகர்வாரை
குப்புற அடிக்கும் !!
சட்டென கை
மூக்கை பிடிக்கும் !!

தமிழ்நாடு என்றதும்
துர்நாற்றத்திற்கு சொல்வார்
கூவத்தை !!
காலம் காலமாக
களைவாரில்லை ஒருவரும்
அதன் பாவத்தை !!

அக் கறை அகற்றும்
அக்கறை சிலருக்கு
அவ்வப்போது எழும் !!
அங்கொன்றும் இங்கொன்றுமாய்
அனேக யோசனைகள்
அத்தினம் காதில் விழும் !!

ஒருமித்து ஊர்
ஒரு நாள் காலை
சோம்பல் முறிக்கையில்...
அவசரமாக பல
அர்த்தமற்ற யோசனைகள்
அரசுக்கு ஓர் அறிக்கையில்.. !!

கூவத்தின் துர்நாற்றம்
அசுத்த நீர் தேங்குவதால் !!
விடுபடலாம் அது
விரைவாய் தண்ணீர்
நகriரினின்று நீங்குவதால் !!

ஆழ்ந்து கவனிக்க வேண்டும்
ஆழ் கடலில்
ஆறு கலக்கும் வாயினை !!
அதன் மூலம் களையலாம்
அவல நோயினை !!

ஆங்கு தடைகள் அகல
ஆறு வேகமாய் நகல

போகலாம் கெட்ட வாடை !!
போற்றலாம் உலகு தமிழ் நாடை !!

இன்றளவில்
இவ்வாறு ஒரு யோசனை...
சந்தனம் என்றதும்
வருமா வாசனை ?

அதனை உரைக்க வேண்டும் !!
அவ்வகையில்
அரசுக்கும் உரைக்க வேண்டும் !!
அதனை மக்கள்
உரைக்க வேண்டும் !

மரம் ஒன்று நடுவதால்
மாறாது புவனம் !!
கட்டற்ற கழிவுகள்
கணக்கற்று கூவத்தில் கலப்பதில்
அனைவருக்கும் தேவை கவனம் !!

நகரம் கிடக்கிறது பிணியில் !!
நடக்கிறது பல சனம்
நமக்கென்ன என
“ஐந்து நிமிடப்” பணியில் !!

வீடு வீடாய்
வீணில் கூவத்தில்
வீட்டுக் கழிவுகளை கொட்ட...
வேண்டாம் இனியும்
அரசைத் திட்ட !!

நிறுவப்பட வேண்டும்
கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலைகள் !!
நடக்க வேண்டும் அதற்கான
நடைமுறை வேலைகள் !!

அவ்வப்போது
அரசு காட்டுகிறது
“சுத்தம் சோறு போடும்” எனும்
அழகான படத்தை !!
திக்கற்ற மக்கள்
தினமும் நம்புவதோ
திறந்த வெளி கழிவிடத்தை !!

திகட்டலாம் நமக்கு
அவர் நடத்தை !!
”அவசரத்திற்கு”
அவர் அமர
அரசு கட்டித் தர வேண்டும்
அங்கிங்கெனாது
அனேக இடத்தை !!

இவையே இதற்கு
இறுதியான முடிவு !!
இவையன்றி இல்லை
இன்ன பிறவற்றால் விடிவு !

Labels:

Wednesday, October 15, 2008

உயரப் பறக்கா ஊர்க்குருவிகள். . .

3401532220_rajthackeray

ஏறுமுகமாய் எண்ணை
விலையும்..
வீழுமுகமாய் வர்த்தக
நிலையும்...

இரு குழுமத்தை அழுத்தியது
ஒன்று சேர்ந்து !!
போயின அவை
படு சோர்ந்து !!

மக்களும்
பணத்திடை புத்தி வைக்க...
பயணத்தை ஒத்தி வைக்க...

அங்கும் இங்கும் செல்லாது
அவரவர் இருக்கையில்
அவரவர் இருக்க..
இலாபம் காணமுடியாது
இந்நிறுவனங்களை இந்நிலை
இறுக்க

முடியவில்லை அவற்றால்
முன்போல் ”இறக்கை” விரிக்க..
முகத்தில் முழுப்பொழுதும்
முறுவல் தரிக்க...

தன் குறை சொல்லியவை
தனித்து போராடி அலுக்க...
விழைந்தன விரைவாய்
வியாபாரத்தில் கை குலுக்க.....

இரு நிறுவனம்
இணையுங்கால்..
இங்கொன்றும் அங்கொன்றுமாய்
சில வேலைகளை
பிணையுங்கால்....

ஒரே வேலை செய்யும்
ஒரு சிலரை
சேமிப்பை முன்னிறுத்தி
வேலையினின்று சேதிக்கலாம்..
பாதிக்கப்பட்டாரை அது
பெரிதும் சோதிக்கலாம்....

அதற்காக அரசியல்
அங்கே எப்படி
அடியெடுக்கலாம் ?
”சட்டம் தன் கையில்” என
சனம் என்னணம்
முடிவெடுக்கலாம் ?

செய்த செயலின்
செய் விதம் முறையா ?
"செய்ய" செயலின்றேல்
செய்தவர்க்கு சிறையா?

இந்திய நீதிமன்றங்களே
இதனைச் சொல்ல வேணும் !!
எடுப்பார் கைப்பிள்ளையாக
அது மாறிட
இந்தியனின் நிலை கோணும் !!

மிக ஆத்திரம் கொண்ட
மகராட்டிர மக்களே !!
கேளுங்கள் எமது சொற்களே !!

தாக்கரேயிடம் தஞ்சம் என
ஏன் போனீர் ?
அனேகருக்கு கேள்விக்குறியாக
ஏன் ஆனீர் ?

சட்டத்தை கையிலெடுக்கலாமா
தனியொருவன் ?!
அப்படியே எடுத்தாலும்
அவனை விட்டு வைக்கலாமா
இனியொருவன் ?!

நீரா அவனுக்கு பொருட்டு?
தீச்சொல்லன்றி வேறு அறியானால்
தீராது உமது இருட்டு !!

உம்மைக் காக்கப் போவது
சட்டப் பேனாவா?
நவ நிர்மாண் சேனாவா ?

யார் பெரிய குற்றவாளி?
அரசியல் அமைப்புச் சட்டம்
அறவே மறந்து
அளவுக்கதிகமாக ஆடுபவனா?
அல்லது
அவனது சேவை நாடுபவனா?

அத்தகையோன் இதனாலன்றோ
அமரத்துவம் பெறுகின்றான் ?
அதற்காகத்தானே அனேகன்
அத்தொழிலுக்கே வருகின்றான் !!

அவனை ...
காராக்கிருகத்தில் தள்ளவும்
முளையிலேயே கிள்ளவும்

முனைந்து ஒரு
முடிவை எடுக்கவேண்டும்
முதல்வர் தேஷ்முக்கும் !!
இல்லையேல்....
சட்டம் ஒழுங்கின்றி
சந்தி சிரிக்கும்
எட்டுத் திக்கும் !!

Labels: , ,

Thursday, October 09, 2008

வரை நின்ற இறை....

balaji1


பூ தொடுத்தோ
சூடிக் கொடுத்தோ

செய்யலாம் திருமாலுக்கு சேவை !
செய்திருக்கிறாள் ஒரு பாவை !!

அரங்கனிடத்திலே அவளுக்கு
அளவுக்கு அதிகமான
அன்பு !!
அவளே மாறினாள்
வடவேங்கடத்தானை கண்ட
பின்பு..

‘பாடும் குயில்காள்
ஈதென்ன பாடல்”
ஆண்டாளே பாடினாள்
அப்பாட்டையும் !!
அறியலாம் அதனின்று
அவன் மீது
அவளுக்கிருந்த உடன்பாட்டையும் !!

அரங்கன் சாடையோடு..
வெண்ணைத் தாடையோடு...

அங்கே ”நிற்பவன்”
சங்கு சக்ரதாரி !!
சனத்துக்கும் சகத்துக்கும்
சர்வகாலமும் அவனே
சர்வாதிகாரி !!

அணுவளவும்
அரங்கன் புகழுக்கு கீழே
சரியாதவன் !!
ஆயினும் அனேகர்க்கு
புரியாதவன் !!

அவனிடம் நம்மை ஈர்ப்பது
அவனது அன்பா?
அல்லது..
அவனது பண்பா ?

”மீனாய்ப் பிறப்பேன்
வேங்கடச் சுனையில்” எனும்
மித மிஞ்சிய பக்தியா ?
அல்லது..
சாமானியனையும் வசியப்படுத்தும்
சக்தியா?

பார்த்தால் ஏற்படுகிறதே
பரவச நிலை..
அது பயத்தாலா?
அல்லது சுயத்தாலா ?

கோவிந்தா ! கோவிந்தா ! என
இயல்பிழந்து ஓடுவதும்..
இந்தா இந்தா என
உண்டியலில் போடுவதும்...

நேரலாகாதது நேர்ந்ததாலா?
நேரலாகாதது நேரலாகாதென
நேர்ந்ததாலா ?

அனுதினம் அல்லல் பட்டதாலா?
அவனி சோர்ந்து
அவனன்றி நாமில்லை என
அறிந்து விட்டதாலா ?

இத்தகு கேள்விகளுக்கு
பிடிபடாதவன்...
சர்ச்சைகளில் அடிபடாதவன்...

திருப்பதி எனும்
திருப் பதி வசிப்பவன் !!
வினை விதி நசிப்பவன் !!

அகலும் அல்லல்
அனைத்தும் அண்ணல்

என எண்ணிட !!
துதி பண்ணிட !!

சிம்மமாய் தூண் பிளந்தவன்..
ஈரடியால் மூவுலகு அளந்தவன்..

ஒரு காலத்தில்
ஒன்றை ”முடிந்ததனால்”
ஒன்று முடியவில்லை
என்று போனான் !!
என்னவோ போல் ஆனான் !!

விழும் பணத்தை
விடிய விடிய அளந்தும்
விடியவில்லை என்றான் !!
விதிர் விதிர்த்து நின்றான் !!

“தம்பி உடையான்
படைக்கு அஞ்சான்” !!
அண்ணன் உடையான்?
ஆரையும் கெஞ்சான் !!

”எடுத்தும்” செய்யலாம்
எடுத்த பணியை...
திருமங்கை மன்னன் இதற்கு
தோதான சாட்சி !!

“படுத்தும்” செய்யலாம்
பன்னகசயனனுக்கு பணி !!
இதுவே கோவிந்தராஜன்
இம்பர்க்கருளும் காட்சி !!

இரண்டுக்கும் அடிப்படை
”எண்ணுதல்” !!
அன்பினால் அவனை
வசியம் பண்ணுதல் !!

எண்ணுதலை ஏற்றான்
அண்ணன் !!
அவன் தம்பி
அக் கண்ணன் !!

இவன் படுத்தவன் !!
மலையிருப்பவன்
இவனது அடுத்தவன் !!

மரக்கால் அண்ணன்
தலை மீது !!
தம்பி இருக்கிறான்
மலை மீது !!

கீழிருந்து அளக்கிறான்
கோவிந்தராஜன்
திருப்பதி உண்டியலில்
திரளும் பணத்தை !!
ஆராதித்தேன் முதலில்
அவனது அருங் குணத்தை !!

அலர்மேல் மங்கையையும்
அடுத்து கண்டு..
அவளது கோயில் பிரசாதம்
உண்டு..

ஏறினோம்
ஏழுமலை மீது
சஹஸ்ரநாமம் சொல்லி !!
சனத்துக்கு அதுவே
சர்வ வினை கொல்லி !!

அவன் நினைவில் கழித்தோம்
இரவினை !!
எதிர் நோக்கினோம் அதிகாலையின்
வரவினை !!

அடுத்த தினத்தில்
”அர்ச்சித அனந்த தரிசனத்தில்”

கண்டேன் குலதெய்வத்தை
கண்ணாற !!
மனப் புண்ணாற !!

அர்ச்சகரின் அர்ச்சனைக்கு
அவசரமாய் செவிமடுத்து
அகிலத்தின் அழுக்குகளை
தள்ளியிருந்தான் !
அருகில் போக முடியாதபடி
தள்ளி இருந்தான் !!

கர்ப்பகிருகம் சுற்றி
கோயில் விடு முன்...
வாகனத்தில் ஏறி
வந்த வழி தொடு முன்....

சிந்தனை கூடி..
கண்ணை மூடி...

இழுத்து மூச்சு விட்டு
இருமுறை சுவாசித்தேன்....
இமை திறவாது யோசித்தேன்....

அரங்கனையும் சேர்த்து
ஆயிரம் பெருமாளை நான்
ஆலயம் பலவற்றில்
ஆசையாசையாய் கண்டதுண்டு !!
அனேகமாய்
அனேக மக்கள்
அவருள் ஒருவரை
குல தெய்வமாக கொண்டதுண்டு !!



ஏதாவது ஒரு உருவமேனும்
என்னுள் முழுதாய் படிந்ததா ?
எப்போது எழுப்பிக் கேட்பினும்
என்னால் எவரையாகிலும்
பார்த்தது பார்த்தபடி
பாதாதி கேசம்
வருணிக்க முடிந்ததா ?

திருப்பதி என்றதும்
கண் இமைக்கும் நேரத்தில்...
கண்கவர் ஆரத்தில்....

நினைத்தவரை
நினைத்த வரை
காக்கும் நேமத்தில்...
நெற்றி மறைக்கும் நாமத்தில்..

வெண் சங்கு சக்கரத்தோடு
வெண்ணை மோவாயும் சேர
செவ்வினை யாவும் தீர...

தெரிகின்றானே உடனுக்குடன்
கண்ணுள் ?!
தெய்வம் என்றால் இருக்கவேணும்
அவன் போல் மண்ணுள் !!

அவனன்றி யாவுமில்லை !!
அவனைப்போல் தேவுமில்லை !!

பார்த்ததைக் காட்டவோ..
சுவற்றாணியில் மாட்டவோ..

நானே எடுத்த படமில்லை !!
இருப்பினும் சொல்கிறேன்..
இவனன்றி நெஞ்சில்
இன்னொரு தெய்வத்துக்கு
இடமில்லை !!

Labels: , , ,

Tuesday, October 07, 2008

சுவர். . . .

rahul dravid wall
Picture Courtesy: The Hindu

”அடக்கம் அமரருள் உய்க்கும் “
அன்றே சொன்னான்
வள்ளுவப் பெருந்தகை !!
அவனியில் இல்லை
அவ்வாக்குக்கு மிகை !!

விளையாட்டுக்கும் அது
பொருந்தும் !!
விவரமறியா அணிகள்
வருந்தும் !!

ஆறு கம்புகள்.....
அதனூடே
ஆகாசம் கேட்குமளவு
அனேக வம்புகள்...

இப்படியே கிரிக்கெட்
இன்று போனாலும்...
திக்கற்று ஆனாலும்....

அதில் பங்குபெறும்
அனைத்து வீரரின்
அத்தியாவசியமான குறிக்கோளாக
அமைய வேண்டும் ஒன்று !!
அதுவே ஆட்டத்துக்கும்
ஆடுவாருக்கும் நன்று !!

முன்னே போனோர்
முன்னே வர....
பின்னே போவோர்
முன்னே போக...

போட்டி சில சமயம்
போகலாம் பரபரப்பாக !!
தோற்பது நம் அணியெனில்
தோன்றாது அது சிறப்பாக !!

அப்போதைய
அவசரத் தேவை
அணியை
அவச நிலையினின்று
தாங்கிப் பிடித்தல் !!
அதற்குப் பின்னரே
தூக்கி அடித்தல் !!

எப்படிப் பந்தை போட்டாலும்...
எத்துணை முறை
“how is that?” கேட்டாலும்...

வீழ்த்த முடியா
வீரனைக் கண்டு
எதிர் அணியினர் அஞ்சுவர் !!
உற்றுப் பார்த்தாலும்
உலகில் ஒரு சிலரே
உவமையாக அதற்கு மிஞ்சுவர் !!

அனேகர் அத்தகு வீரர்க்கு
அறுவை எனும்
அரிதாரம் பூசுவர் !!
பிறிதொரு சிலரோ
பிட்டுப் பிட்டு
பெருங்கதை பேசுவர் !!

அப்பேர்பட்ட
அப் பணிக்கும்....
அணி வகுத்து நிற்க
ஆட்கள் தேவை
அனைத்து அணிக்கும் !!

அவர்கள் தேவை
பலவானிடமிருந்து
பலகீனமானோரை காக்கும்
ஒரு சுவர் !!
அச்சுவர் இருக்கின்
அவரோடு எவர்
உரசுவர் ?

இங்கு தான் இருந்தது
சிக்கல் !!
இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு
இது நெடு நாள்
இருந்த விக்கல் !!

ஸ்ரீகாந்த் முதல்...
ஸ்ரீசாந்த் வரை.....

முதற்கண்ணாக
முனையவில்லை ஒருவரும்
தன்னிடம் வரும் பந்தை
தடுக்க.....
அவர் கவனமெல்லாம்
தமக்கும்
தமது அணிக்கும்
ஓட்டங்கள் எடுக்க...

எதிரணியின் பலம் அறிந்து...
எப்போது எதை
எப்படி ஆடவேண்டுமென தெரிந்து..

ஒருவரும் ஆடவில்லை !!
மூட வேண்டிய ஓட்டைகளை
மூடவில்லை !!

டிராவிட் எனும்
திராவிடன்
அவ்வேளையில் நுழைந்தான் !!
அவ்வேலைக்கு விழைந்தான் !!

இன்று....

பத்தாயிரம் ஓட்டம் கடந்து....
தன் அணியன்றி
தனக்கு பெருமையில்லை என
தலையை தொங்க போட்டே நடந்து....

ஆடும் சக ஆட்டக்காரரை
குரங்கு எனும்
குற்றக் கூவலின்றி..
தலைமைப் பதவிக்கு
ஆவலின்றி....

ஆடும் அச்சுவருக்கு
ஆடாத சுவரொன்றை

எழுப்பியிருக்கிறது கர்நாடகம்
சேவையின் சிறப்புணர்த்தும்
சின்னமாக !!
வாழ்த்தொலி அங்குமிங்கும்
சன்னமாக......

அன்பனே!
எனக்கு உன் ஆட்டம்
அவ்வளவாக பிடித்ததில்லை!!
விரைவாக ஆட்டமிழந்து நீ
வெளியேறிய போதும்
விசனத்தில் நான் துடித்ததில்லை !!

இருப்பினும்..
உன்னிடமிருந்து ஒன்றை
நாடும் நானும்
நாளும் கற்கின்றோம் !!
அவ்வழியில்
அத்தமித்து நிற்கின்றோம்....

காலமும் உன் பெருமையை
மறைத்தது சச்சின் என்பானது
நிழல்....
இருப்பினும் நீ
தனித்து தகன்ற தழல்....

எவர் நம் பெருமையை
எக்குத்தப்பாய் சாடினும்...
எவர் நம் பெருமையை
எமது என சூடினும்.....

நமக்கென உண்டொரு தொழில் !!
அதுவே எழில் !!

உன்னிடம் இதனை கண்டேன் !!
உய்யவும் உயரவும் இதுவே
உன்னதமான வழியென
தெரிந்து கொண்டேன் !!

என்றென்றும் உன் பெயரிருக்கும்
எமது நாவில் !!
எழுதியிருக்கிறாய் உன் புகழை
எந்நாளும் அழியாது
கொல்கத்தாவில் !!

Labels: , , , ,