Tuesday, October 07, 2008

சுவர். . . .

rahul dravid wall
Picture Courtesy: The Hindu

”அடக்கம் அமரருள் உய்க்கும் “
அன்றே சொன்னான்
வள்ளுவப் பெருந்தகை !!
அவனியில் இல்லை
அவ்வாக்குக்கு மிகை !!

விளையாட்டுக்கும் அது
பொருந்தும் !!
விவரமறியா அணிகள்
வருந்தும் !!

ஆறு கம்புகள்.....
அதனூடே
ஆகாசம் கேட்குமளவு
அனேக வம்புகள்...

இப்படியே கிரிக்கெட்
இன்று போனாலும்...
திக்கற்று ஆனாலும்....

அதில் பங்குபெறும்
அனைத்து வீரரின்
அத்தியாவசியமான குறிக்கோளாக
அமைய வேண்டும் ஒன்று !!
அதுவே ஆட்டத்துக்கும்
ஆடுவாருக்கும் நன்று !!

முன்னே போனோர்
முன்னே வர....
பின்னே போவோர்
முன்னே போக...

போட்டி சில சமயம்
போகலாம் பரபரப்பாக !!
தோற்பது நம் அணியெனில்
தோன்றாது அது சிறப்பாக !!

அப்போதைய
அவசரத் தேவை
அணியை
அவச நிலையினின்று
தாங்கிப் பிடித்தல் !!
அதற்குப் பின்னரே
தூக்கி அடித்தல் !!

எப்படிப் பந்தை போட்டாலும்...
எத்துணை முறை
“how is that?” கேட்டாலும்...

வீழ்த்த முடியா
வீரனைக் கண்டு
எதிர் அணியினர் அஞ்சுவர் !!
உற்றுப் பார்த்தாலும்
உலகில் ஒரு சிலரே
உவமையாக அதற்கு மிஞ்சுவர் !!

அனேகர் அத்தகு வீரர்க்கு
அறுவை எனும்
அரிதாரம் பூசுவர் !!
பிறிதொரு சிலரோ
பிட்டுப் பிட்டு
பெருங்கதை பேசுவர் !!

அப்பேர்பட்ட
அப் பணிக்கும்....
அணி வகுத்து நிற்க
ஆட்கள் தேவை
அனைத்து அணிக்கும் !!

அவர்கள் தேவை
பலவானிடமிருந்து
பலகீனமானோரை காக்கும்
ஒரு சுவர் !!
அச்சுவர் இருக்கின்
அவரோடு எவர்
உரசுவர் ?

இங்கு தான் இருந்தது
சிக்கல் !!
இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு
இது நெடு நாள்
இருந்த விக்கல் !!

ஸ்ரீகாந்த் முதல்...
ஸ்ரீசாந்த் வரை.....

முதற்கண்ணாக
முனையவில்லை ஒருவரும்
தன்னிடம் வரும் பந்தை
தடுக்க.....
அவர் கவனமெல்லாம்
தமக்கும்
தமது அணிக்கும்
ஓட்டங்கள் எடுக்க...

எதிரணியின் பலம் அறிந்து...
எப்போது எதை
எப்படி ஆடவேண்டுமென தெரிந்து..

ஒருவரும் ஆடவில்லை !!
மூட வேண்டிய ஓட்டைகளை
மூடவில்லை !!

டிராவிட் எனும்
திராவிடன்
அவ்வேளையில் நுழைந்தான் !!
அவ்வேலைக்கு விழைந்தான் !!

இன்று....

பத்தாயிரம் ஓட்டம் கடந்து....
தன் அணியன்றி
தனக்கு பெருமையில்லை என
தலையை தொங்க போட்டே நடந்து....

ஆடும் சக ஆட்டக்காரரை
குரங்கு எனும்
குற்றக் கூவலின்றி..
தலைமைப் பதவிக்கு
ஆவலின்றி....

ஆடும் அச்சுவருக்கு
ஆடாத சுவரொன்றை

எழுப்பியிருக்கிறது கர்நாடகம்
சேவையின் சிறப்புணர்த்தும்
சின்னமாக !!
வாழ்த்தொலி அங்குமிங்கும்
சன்னமாக......

அன்பனே!
எனக்கு உன் ஆட்டம்
அவ்வளவாக பிடித்ததில்லை!!
விரைவாக ஆட்டமிழந்து நீ
வெளியேறிய போதும்
விசனத்தில் நான் துடித்ததில்லை !!

இருப்பினும்..
உன்னிடமிருந்து ஒன்றை
நாடும் நானும்
நாளும் கற்கின்றோம் !!
அவ்வழியில்
அத்தமித்து நிற்கின்றோம்....

காலமும் உன் பெருமையை
மறைத்தது சச்சின் என்பானது
நிழல்....
இருப்பினும் நீ
தனித்து தகன்ற தழல்....

எவர் நம் பெருமையை
எக்குத்தப்பாய் சாடினும்...
எவர் நம் பெருமையை
எமது என சூடினும்.....

நமக்கென உண்டொரு தொழில் !!
அதுவே எழில் !!

உன்னிடம் இதனை கண்டேன் !!
உய்யவும் உயரவும் இதுவே
உன்னதமான வழியென
தெரிந்து கொண்டேன் !!

என்றென்றும் உன் பெயரிருக்கும்
எமது நாவில் !!
எழுதியிருக்கிறாய் உன் புகழை
எந்நாளும் அழியாது
கொல்கத்தாவில் !!

Labels: , , , ,

1 Comments:

At 10/08/2008 8:33 AM , Blogger Karthik said...

Superb...:)

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home