வரை நின்ற இறை....
பூ தொடுத்தோ
சூடிக் கொடுத்தோ
செய்யலாம் திருமாலுக்கு சேவை !
செய்திருக்கிறாள் ஒரு பாவை !!
அரங்கனிடத்திலே அவளுக்கு
அளவுக்கு அதிகமான
அன்பு !!
அவளே மாறினாள்
வடவேங்கடத்தானை கண்ட
பின்பு..
‘பாடும் குயில்காள்
ஈதென்ன பாடல்”
ஆண்டாளே பாடினாள்
அப்பாட்டையும் !!
அறியலாம் அதனின்று
அவன் மீது
அவளுக்கிருந்த உடன்பாட்டையும் !!
அரங்கன் சாடையோடு..
வெண்ணைத் தாடையோடு...
அங்கே ”நிற்பவன்”
சங்கு சக்ரதாரி !!
சனத்துக்கும் சகத்துக்கும்
சர்வகாலமும் அவனே
சர்வாதிகாரி !!
அணுவளவும்
அரங்கன் புகழுக்கு கீழே
சரியாதவன் !!
ஆயினும் அனேகர்க்கு
புரியாதவன் !!
அவனிடம் நம்மை ஈர்ப்பது
அவனது அன்பா?
அல்லது..
அவனது பண்பா ?
”மீனாய்ப் பிறப்பேன்
வேங்கடச் சுனையில்” எனும்
மித மிஞ்சிய பக்தியா ?
அல்லது..
சாமானியனையும் வசியப்படுத்தும்
சக்தியா?
பார்த்தால் ஏற்படுகிறதே
பரவச நிலை..
அது பயத்தாலா?
அல்லது சுயத்தாலா ?
கோவிந்தா ! கோவிந்தா ! என
இயல்பிழந்து ஓடுவதும்..
இந்தா இந்தா என
உண்டியலில் போடுவதும்...
நேரலாகாதது நேர்ந்ததாலா?
நேரலாகாதது நேரலாகாதென
நேர்ந்ததாலா ?
அனுதினம் அல்லல் பட்டதாலா?
அவனி சோர்ந்து
அவனன்றி நாமில்லை என
அறிந்து விட்டதாலா ?
இத்தகு கேள்விகளுக்கு
பிடிபடாதவன்...
சர்ச்சைகளில் அடிபடாதவன்...
திருப்பதி எனும்
திருப் பதி வசிப்பவன் !!
வினை விதி நசிப்பவன் !!
அகலும் அல்லல்
அனைத்தும் அண்ணல்
என எண்ணிட !!
துதி பண்ணிட !!
சிம்மமாய் தூண் பிளந்தவன்..
ஈரடியால் மூவுலகு அளந்தவன்..
ஒரு காலத்தில்
ஒன்றை ”முடிந்ததனால்”
ஒன்று முடியவில்லை
என்று போனான் !!
என்னவோ போல் ஆனான் !!
விழும் பணத்தை
விடிய விடிய அளந்தும்
விடியவில்லை என்றான் !!
விதிர் விதிர்த்து நின்றான் !!
“தம்பி உடையான்
படைக்கு அஞ்சான்” !!
அண்ணன் உடையான்?
ஆரையும் கெஞ்சான் !!
”எடுத்தும்” செய்யலாம்
எடுத்த பணியை...
திருமங்கை மன்னன் இதற்கு
தோதான சாட்சி !!
“படுத்தும்” செய்யலாம்
பன்னகசயனனுக்கு பணி !!
இதுவே கோவிந்தராஜன்
இம்பர்க்கருளும் காட்சி !!
இரண்டுக்கும் அடிப்படை
”எண்ணுதல்” !!
அன்பினால் அவனை
வசியம் பண்ணுதல் !!
எண்ணுதலை ஏற்றான்
அண்ணன் !!
அவன் தம்பி
அக் கண்ணன் !!
இவன் படுத்தவன் !!
மலையிருப்பவன்
இவனது அடுத்தவன் !!
மரக்கால் அண்ணன்
தலை மீது !!
தம்பி இருக்கிறான்
மலை மீது !!
கீழிருந்து அளக்கிறான்
கோவிந்தராஜன்
திருப்பதி உண்டியலில்
திரளும் பணத்தை !!
ஆராதித்தேன் முதலில்
அவனது அருங் குணத்தை !!
அலர்மேல் மங்கையையும்
அடுத்து கண்டு..
அவளது கோயில் பிரசாதம்
உண்டு..
ஏறினோம்
ஏழுமலை மீது
சஹஸ்ரநாமம் சொல்லி !!
சனத்துக்கு அதுவே
சர்வ வினை கொல்லி !!
அவன் நினைவில் கழித்தோம்
இரவினை !!
எதிர் நோக்கினோம் அதிகாலையின்
வரவினை !!
அடுத்த தினத்தில்
”அர்ச்சித அனந்த தரிசனத்தில்”
கண்டேன் குலதெய்வத்தை
கண்ணாற !!
மனப் புண்ணாற !!
அர்ச்சகரின் அர்ச்சனைக்கு
அவசரமாய் செவிமடுத்து
அகிலத்தின் அழுக்குகளை
தள்ளியிருந்தான் !
அருகில் போக முடியாதபடி
தள்ளி இருந்தான் !!
கர்ப்பகிருகம் சுற்றி
கோயில் விடு முன்...
வாகனத்தில் ஏறி
வந்த வழி தொடு முன்....
சிந்தனை கூடி..
கண்ணை மூடி...
இழுத்து மூச்சு விட்டு
இருமுறை சுவாசித்தேன்....
இமை திறவாது யோசித்தேன்....
அரங்கனையும் சேர்த்து
ஆயிரம் பெருமாளை நான்
ஆலயம் பலவற்றில்
ஆசையாசையாய் கண்டதுண்டு !!
அனேகமாய்
அனேக மக்கள்
அவருள் ஒருவரை
குல தெய்வமாக கொண்டதுண்டு !!
ஏதாவது ஒரு உருவமேனும்
என்னுள் முழுதாய் படிந்ததா ?
எப்போது எழுப்பிக் கேட்பினும்
என்னால் எவரையாகிலும்
பார்த்தது பார்த்தபடி
பாதாதி கேசம்
வருணிக்க முடிந்ததா ?
திருப்பதி என்றதும்
கண் இமைக்கும் நேரத்தில்...
கண்கவர் ஆரத்தில்....
நினைத்தவரை
நினைத்த வரை
காக்கும் நேமத்தில்...
நெற்றி மறைக்கும் நாமத்தில்..
வெண் சங்கு சக்கரத்தோடு
வெண்ணை மோவாயும் சேர
செவ்வினை யாவும் தீர...
தெரிகின்றானே உடனுக்குடன்
கண்ணுள் ?!
தெய்வம் என்றால் இருக்கவேணும்
அவன் போல் மண்ணுள் !!
அவனன்றி யாவுமில்லை !!
அவனைப்போல் தேவுமில்லை !!
பார்த்ததைக் காட்டவோ..
சுவற்றாணியில் மாட்டவோ..
நானே எடுத்த படமில்லை !!
இருப்பினும் சொல்கிறேன்..
இவனன்றி நெஞ்சில்
இன்னொரு தெய்வத்துக்கு
இடமில்லை !!
Labels: srirangam vs tirupati, tirupati, venkatachalapathi, what attracts people to go to tirupati?
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home