உலகின் மிகப் பெரிய
ஜனநாயகம்
இந்தியா எனும் என்
தாயகம் !!
கறை படிந்த ஆட்சியை
நினைந்து
மனம் வெம்பி...
நாலாண்டுக்கு ஒரு முறை
செழிக்கட்டும் தலைமுறை
என நம்பி...
புதிய பாதை
நீ வடி !!
அடங்கட்டும் அடாவடி !!
தொடங்கட்டும் புதிய
அரிச்சுவடி !
என
மார் தட்டி..
மாடு கட்டி...
என்னவன் ஜெயித்தால்
கந்தனுக்கு காவடி என
வாக்குச் சாவடி
சென்று..
முதலமைச்சர் நாற்காலியில்
நீ வசி !
தீர்த்து வை
தேசத்தின் பசி !!
என்று...
ஒவ்வொருவனும் எடுக்கிறான்
ஆள்காட்டி விரலில்
மசி !!
அவன்
கவலை அனைத்தும்
அவலை நினைத்து..
என்ன பயன்
எதிர்க் கட்சியை ஏசி?
யாது கண்டோம் பேசி பேசி?
ஏழ்மையில் இருக்கிறோம் கூசி !!
எம்மைச் சுற்றிலும் தூசி !!
தூய்மையை எதிர்நோக்கி
எமது நாசி !!
எம்மையும் சிறிது
நேசி !!
நாடு முன்னேற நல்வழி
யோசி !!
இருப்பேன் நான் என்றும் உன்
விசுவாசி !!
நட முதல்வர் நாற்காலிக்கு
கை வீசி !!
ஆட்சி பீடம் ஏற
உண்டு எமது ஆசி !!
சனநாயகத்தின் முதுகெலும்பு
எனப்பெறும்
அவனது பொதுப் பெயர்
"திருவாளர் பொதுசனம்" !
அவனுக்காக இயற்றப்பட்டது தான்
இந்திய அரசியல்
சாசனம் !!
அவன் தயவின்றி
கிடையாது எவர்க்கும்
அரியாசனம் !!
அறிந்து தான் அவனிடம்
காண்பிக்கின்றனர் தேர்தல் தோறும்
கரிசனம்....
கை கூப்பி
வீடு வீடாய் சென்று
காண்கின்றனர் அவன் தரிசனம் !
பேசிடுவர் அவன் வாழ்வு உயர்த்துவதாய்
பல வசனம் !!
சிங்கோ, மோடியோ, யாதவோ...
ரெட்டியோ, செட்டியோ...
மெல்ல மெல்ல
மெல்ல வேண்டிய
உணவை வைத்து
வெல்ல வேண்டியது
அரசு !
பிரதானம் அல்ல அதற்கு
சிரசு !
மக்கள் எதிர்பார்ப்பெல்லாம்
சோறு தருகிறோம் எனும்
முரசு..
என்பதை அறிந்தனர் !!
சலுகைகளை எறிந்தனர் !!
வீராப்பாய் பேசினர் !!
வாக்குறுதிகளை அள்ளி
வீசினர் !!
ரொட்டி தருகிறேன் என்றால்
தொட்டி பட்டி எங்கும்
கூட்டம்
கை கொட்டி இருக்கிறது !!
புன்னகை சொட்டி இருக்கிறது !!
அடுப்பு அரிசி உண்டெனில்
தலைவர் படம் தாங்கி
வீட்டு ஆணி !!
இல்லையேல்
சுவரொட்டியில் சாணி !!
மக்கட்கு
பெரிது அன்னம் !
பெரிதல்ல பல வகை
சின்னம் !!
என்பதை கட்சிகள்
உணர்ந்தன !!
வேலைக்கு உதவாத
பல திட்டங்களை
கொணர்ந்தன !!
மக்கட்கு என்று
உணவு கனவு ஆனதோ
அன்றே
உலையை வைத்து ஓட்டுக்கு
விலையை நிர்ணயிக்கும்
கலையை கட்சிகள்
கற்றன !!
தூய அரசியல் நெறிமுறைகள்
அற்றன !!
நன்னெறிகளை
நாலணாவுக்கு இரண்டு
என காற்றில்
விற்றன !!
2 ரூபாய்க்கு அரிசி
இலவச அடுப்பு என
நாக்கை வைத்து
வாக்கை வாங்கும் அளவுக்கு
அரசியல் போனது !!
இந்த அவலம் ஏனது?
வாக்காளனே சிந்தி !!
வருந்தாதே பிந்தி !!
அரசியல்வாதிகளின் இலக்கு
கோட்டை !!
அவரில் எவர் உணர்ந்தார்
உன் வறுமைக்
கோட்டை ?!
உனது வரி !!
அதனை ஒழுங்காய்
உபயோகப்படுத்துவதாய்
வந்தாதா எந்த தினசரியிலாவது
ஒரு வரி ?
என் வரி
எத் திட்டங்களுக்கு
எவ்வளவு போகும்
என விவரி
என்று கேள் !!
வரி தனை சவரி
என நினைப்போர்க்கு
உன் கேள்வியாகட்டும்
தேள் !!
கையை நம்பு என்றால்
"கையை" நம்புகிறாய் !!
அல்லது
கை ரேகையை நம்புகிறாய் !!
பாதகம் தரும்
கேட்டை ஒழி என்றால்
ஜாதகத்தில் எனக்கு கேட்டை
என்கிறாய்.....
குடந்தை..
அதில் நிகழ்ந்த இரு
இழுப்புகளுக்கு உன்
இற்றை நாள் முதல்வர்
உடந்தை.
தென்னகத்தின் கும்பமேளா எனும்
மகாமகம்
1992ல் நடந்தது !
கும்பகோணம் நெரிசலில்
கிடந்தது !!
அதற்கு தலைமை தாங்கியவள்
உதித்த நட்சத்திரம் மகம் !!
சொல்வர் ஆய்வாளர்
அத்தகு பெண்ணை கண்டதில்லை
சகம் !!
நடந்தது சோகம் !!
பறந்தது பிணந்தின்னும்
காகம் !!
இறந்தது 40 பேர் !
2004...
கும்பகோணம்..
தீ விபத்து
தவிர்த்திருக்க வேண்டிய
ஆபத்து...
இறந்தனர் பல
சிறுவர் சிறுமி !!
இருந்தாய் சில நாள் நீ
உறுமி !!
வருமா அரசுக்கு அறிவு ?
கேட்பது உனக்கு செறிவு !!
கல்வி..
அதற்கு ஒரு சலுகை
அறிவித்தாளா
செல்வி?
சிவகாசியில்..
பள்ளி செல்லும் வயதில்
வெள்ளிப் பணத்துக்கு
கொள்ளியாகும் பட்டாசு
சுற்றும் சிறுவனுக்கு..
காச நோய்..
கந்தல் ஆடை...
பரட்டைத் தலை..... !
பதில் என்ன கூறும் அவனுக்கு
இரட்டை இலை ?!
அவன் அழுகையை நீக்க
தேக்கத்தில் இருந்து
அவனை மீட்க
போடுவாரா ஒரு திட்டத்தை
மு.க ?!
தமிழை மீட்டு என்ன பயன்
தமிழனை எவன் மீட்பான்
என்று
எவன் கேட்பான் ?
அவன் குரல்
அதன் துயர் போக்குமா
ஐந்து விரல்?
பாட்டாளியின் ஏழ்மைக்கோ
அவனது வாழ்க்கையில் காணும்
கீழ்மைக்கோ
பொங்கல் அன்று
உலகுக்கு உணவு தருபவன்
தலைக்கு மேல்
ஒரு செங்கல் இன்றி
வாழும் தாழ்மைக்கோ
ஒரு வழி சொன்னாரா
கூட்டாளியை சேர்த்த
வை.கோ ?
குருநாதா என்னை
மன்னி !!
கோபத்தில் கொதிக்கிறது எனது
சென்னி !!
நிரம்பிக் கிடந்தன..
பூமாலையை பிய்த்துப்
பார்க்கும்
"கவி" அரங்கத்தில் !!
பேசினாய் நீ அக்
கவியரங்கத்தில் !!
கவிஞனாய் உன்னை
என்றும் போற்றுகிறேன் !
சிறு குறை கண்டேன்
உன் பேச்சில்
சாற்றுகிறேன் !!
"இந்தியா போற்றும்
சந்தியா மகளே " !
இதுவும் நீ எழுதியது
தான் !!
எடுத்துச் சொல்லும்
கடமையில் உள்ளேன்
நான் !!
நினைவூட்டுகிறேன் !!
உனை ஊக்குகிறேன் !!
எல்லோர் ஆட்சியின்
குற்றங்களையும்
நடுநிலையோடு நீ
அடுக்கி இருக்கலாம் !
வார்த்தைகளால் நீ
சொடுக்கி இருக்கலாம் !!
அவர்களைப் போல்
நீ ஆகலாமா
நிரட்சரகுட்சியாய்?
எழுதுகோல் சாரலாமா
கட்சி கட்சியாய் ?
இலை..
சூரியன் மறையும் மலை..
நிர்ணயிக்கலாமா இவை
எழுதுகோலின் விலை?
தேவையில்லையா அதற்கு
நடு நிலை ?
கழுத்து..
அதற்கு பயந்து
சுருங்கலாமா
எழுத்து?
பிறகென்ன தேவையற்ற
வழுத்து ?
போகலாமா உன் சொல்
பழுத்து?
மாறலாமா உன் சிந்தனையும்
புழுத்து?
தர தரவென இழுத்து
தீயோரை விழுத்து !
குற்றத்தை அழுத்து !!
தமிழ்நாடே இதனைக்
கேட்கிறது நா
தழு தழுத்து !!
எங்கோ யாருக்கோ
நீ கடமைப்பட்டிருக்கிறாய் !
கடமைப் பட்டதால்
கட்டுப்பட்டிருக்கிறாய் !!
நான் உனது
Well wisher !!
நீ தமிழ்நாட்டின்
Treasure !!
எனக்குத் தெரியும்
நீ அவ்வாறு பேசியது
மேலிடத்து Pressure !!
எமது ஆட்சியில்...
தேசத்தின் ஒழுங்கீனங்கள்
அகன்றன..
துரித வேகத்தில் காரியங்கள்
நகன்றன...
முன்னேற்றத் தட்டுப்பாடுகள்
தகன்றன...
எம்மால் தான்
இகழ் இன்றி
திகழ்கின்றது தேசம்
என தன்
புகழ் சொல்லி
"ஒளிர்கிறது இந்தியா"
என
தன்னேற்றத்தில் எக்களிக்கிறது
"தாமரை" !!
புகழ்ந்து உயர்த்தும் ராமரை !!
தகர்க்கும் பாபரை !!
பெயரில் வைத்திருந்தார்
அதன் தலைவர்
ஒரு பாய் !!
ஆயினும் அக்கட்சியின்
சன்மப் பகைவன்
முசல்மான் எனும்
" பாய் " !!
பொறுப்பாய்
இருக்க வேண்டிய ஒரு
அரசியல் தலைவர்
இருந்தார்
வெறுப்பாய்....
கிடந்தது தேசம்
கொதிப்பாய் !!
பற்றி எறிந்தது
நெருப்பாய் !!
குளிர்கிறது
குப்புறப் படுத்தாலும்
ஊழல் எதற்கு
எடுத்தாலும்...
தத்தளிக்கும் எம்மை
சேர்த்து விடு தரைக்கு
வழிகாட்டு முன்னேற்றத்தின் கரைக்கு
என்போரது புலம்பல்...
விழுமா அவர் காதில் ?
பிறகு வென்று என்ன
சாதித்தார் அவர்
வாதில்?
நாட்டின் பிணி
அதனைப் போக்குமா
இக்கட்சிகளின்
கூட்டணி?
யாரோடு சேர்தல்?
என்பதல்லவா
இவர்கள் அளவில்
தேர்தல்?
நிற்பது அனைத்தும்
கிழங்கள் !!
கொள கொளத்த
பழங்கள் !!
ஆயினும் நீள்கிறது
"இந்தியா இளைஞர் கையில் "
எனும்
வார்த்தை முழங்கள் !!
எந்த தேசமும்
முதல் நாள் தொட்டே
முழுமையாய்
செழுமையாய்
அமைந்ததில்லை !!
அமைதியிலேயே அனுதினமும்
சமைந்ததில்லை !!
அதனை
அமைத்திட வேண்டும் !!
அமைத்த பிறகே
இமைத்திட வேண்டும் !!
செதுக்கிட வேண்டும்!!
செதுக்கின்
நமக்கு வேண்டாம் என எதற்கு
ஒதுக்கிட வேண்டும்?
தீமைகளை நீ தகர் !
உருப்படும் நகர் !!
பின் வரும் சமுதாயத்துக்கு
வழி விட்டு நகர் !!
இது தான்
"ரங் தே பசந்தி"யின்
செய்தி !
சிந்திப்போம் இதனை
மூளையில் இனியாவது
புதிய சிந்தனை
எய்தி !!
தமிழனே !
உனக்குத் தேவை
மூன்று !!
அம் மூன்றுக்கு நீ
அடித்தளத்தை ஆழமாய்
ஊன்று !!
வறுமை !!
நீக்கின் வரும் உனக்கு
பெருமை !!
கல்வி !!
எண் கல்வி
பெண் கல்வி என
எல்லோர்க்கும் எல்லாமுமாய்
வல்வினை போக்கும்
கல்வி !!
வீதி அனைத்துக்கும் சம
நீதி எனும்படி
சட்டம் ஒழுங்கு !!
தீயோரை தீ போல்
விழுங்கு !!
தீமைகளை சத்தியம் கொண்டு
முழுங்கு !!
காவல் துறையே..
நீதித் துறையே...
கரம் கோர்த்து வினையொழிப்போம்
என முழங்குவீர் !!
தூங்கிக் கிடக்கும்
பல வழக்குகளுக்கு
துரித கதியில் தீர்ப்பை
வழங்குவீர் !!
தமிழா!
அரசியல்வாதியிடம் வைக்கும்
நம்பிக்கைக்கு வை
தடை !
நீ முன்னேற அது தான்
விடை !!
வயிறு என்பது
ஒரு சாண் உறுப்பு !!
எதிர்பார்க்கிறேன் உன்னிடத்து
சோற்றை வைத்து ஏய்ச்சுவோரை
நெருங்க விடாத மறுப்பு !!
பறவைக் காய்ச்சல்
SARS
AIDS என
நீ கேட்க வேண்டியது
நோய் தடுப்பு !!
தேவையில்லை உனக்கு
வாய்க்கு உணவளிக்கும்
அடுப்பு !!
அணைய விடாதே உன்
அகத்திடை வைத்த
நெருப்பு !
அதில் தான் அமைந்திருக்கிறது
தமிழ் நாட்டின்
தலை எழுத்தை
மாற்றி எழுதும்
துருப்பு !!