நகைச்சுவை நாயகர். . .
அவர் ”முனைவர்” !!
அகத் தெளிவு தரும்
அவரது பேச்சை ரசிப்பார்
அணுவளவேனும்
அவரொத்து சிந்திக்க முனைவர் !!
இளங்காலை நேரம்
இல்லந்தோறும் வந்து
”இன்றைய சிந்தனை” என
இனிய கருத்துக்களை பகர்ந்தவர் !!
மனதிற்கு மகிழ்ச்சியூட்டும்
மதுரைத் தமிழை
மனதார நுகர்ந்தவர் !!
நகுதலன்றி நம் வாழ்வில்
நமக்குண்டோ உய்வென
நிதம் உலுக்கும் துயரரிய
நம்பி எடுத்தார் நாவில்
நகைச்சுவை எனும் பரசு !!
”கலைமாமணி” எனும்
கவித்துவமிக்க பட்டத்தால்
கண்ணியமாய் கெளரவித்தது அரசு!
பட்டிமன்ற பேச்சால்
பதவிசாய் வெற்றி
படியேறி வந்தது !!
பலகோடி புகழ் தந்தது !!
திசைக்கு ஒன்றாய்
திரளாய் வந்தன பெருமைகள்
திரை கடல் தாண்டி !!
பெயருக்கே
பெருமிதம் தந்தது விருமாண்டி !!
சமீபத்திய சென்னை விசயத்தில்..
சிரமம் வேண்டாம் பிறர்க்கென சுயத்தில்...
பல கடை ஏறி
பலவாறு முயன்றேன்
பலதரப்பட்ட அவரது
புத்தகங்களை வாங்க !!
முக்கிய நகரமாம் சென்னையில்
முன்னோடியான கடைகளும்
முதன்மையாய் தமிழ் நூல்களை
முதற்கண் முன்னிறுத்தாததால்
முடியாது நின்றேன்
மூச்சு வாங்க !!
முனைவரின் மூதாதையர் ஊர்
முன்னைக்கு இப்போது
முற்றும் மாறா சோழவந்தான் !!
சோழவந்தான் எனும்
சேமமிகு ஊர்விட்டே
எனது மாமனாரும்
என்றோ சென்னைக்கு வாழவந்தார் !
எனது விசனத்தை
எனது மாமனாரிடம்
எளியேன் நான் அளக்க....
ஞானசம்பந்தன் யாரென
நச்சென்று நாலு வரியில்
நயமாய் நான் விளக்க....
தொல்லை விடு !
முடியவில்லை எனும்
சொல்லை விடு !
என..
தந்தார் எனக்கு மாமனார்
தனக்கே உரிய ஆசியை !!
எடுத்தார் தொலைபேசியை !!
அச்சகம் அச்சகமாக
அனேக எண்களை சுற்றினார் !!
ஏரார்ந்த விஜயா பதிப்பகத்தை
எவர் மூலமோ
என்னணமோ
எளிதாய் பற்றினார் !!
அறிஞர் ஞானசம்பந்தனின்
அனைத்து புத்தகங்களும்
அடுத்த நாளே
அடியேன் கையில்
அடங்கின !!
இனிய என் மாமனார்
இரண்டாவது பிரதியோடு
இரண்டறக் கலந்ததால்...
புத்தகம் படித்தல் எனும்
புண்ணியக் கலையை...
இருவர் இல்லமும்
இனிதே தொடங்கின !!
”முனைவரின் தந்தையாரது
முதற்பெயர் குருநாதன் !!
தருமமிகு சோழவந்தானில்
தவசீலர் அவரே
தனக்கும் தம்பியருக்கும்
தமிழ் போதித்த குருநாதன் !!”
என்று
என் மாமனார் அறிய. .
எண்ணிலா வியப்பில்
எல்லோர் கண்ணும் விரிய...
முனைவரின் தந்தையை நினைந்து
மாமனார் ஒற்றினார் கண்ணை !!
முனைவர் இல்லத்துக்கு
சுற்றினார் எண்ணை !!
இனிய பழங்கதை
இருவரும் பேசியிருக்கின்றனர்
ஆசை தீர...
இடையே என்னைப் பற்றியும்
இங்கொன்றும் அங்கொன்றுமாய்
இனிய மாமனார் கூற...
அடித்தது தொலைபேசி
அடியேன் இல்லத்தில்
அனேகமாய் மதியம் இரண்டளவில் !
அமர்ந்தது அளவொண்ணா வியப்பு
ஆரென்று கேட்ட உதட்டுப் பிளவில் !!
அரை நொடியில்
அடிமொத்தமாய்
அற்றுப் போனது
அடியேன் சுவாசம் !!
என்ன பேசுவது
என்று அறியாது
எக்கச்சக்கமாய் பிய்ந்தது
என் தலைக் கேசம் !!
தண்டோரா கேட்ட
தருமியாய் நான்
தனித்துப் பதற...
கையும் காலும் உதற....
”தத்தக்கா பித்தக்கா” வென
தமிழ்ப் புலவரொடு
தமியேன் நான் பேசினேன்
தடுக்கித் தடுக்கி
தமிழ்ச் சொல் இரண்டை !!
ஏடாகூடமாய்
ஏதாவது நான் பேசாதிருக்க
ஏழுமலையானை வேண்டி
பெற்றவள் தேடினாள்
பெற்ற வயிற்றுக்கு பிரண்டை !!
சுருக்கமாய் இரு வார்த்தை
சுடச் சுட பேசி..
”அமெரிக்கா வந்தால்
அவசியம் எம்மில்லம் வாருங்கள் !!
அடியேனுக்கு புகழ் சேருங்கள் !! “
என..
வடிவாய்ச் சொல்லி
வைத்தேன் தொலைபேசியை !!
விழியில் விழுந்தவள்
விரைந்து வைத்தாள்
வியர்த்த உடம்புக்கு “ஏசியை” !!
மானுடமே !
மறுபடியும் சொல்கிறேன்
மகான் வள்ளுவனின்
மகத்தான வாக்கு பொய்க்கவில்லை !!
பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து
நிறையப் படிக்காத
நிரட்சரகுட்சியாம் என்னை
நலமா? என
ஞாலம் போற்றும்
ஞானசம்பந்தன் கேட்டது
அவரது பணிவுக்கு
அத்தாட்சி !!
அடியேன் அகத்திலும்..
அவதரித்த அகத்திலும் ..
அனேக நாள் ஓடும்
அக் காட்சி !!
தியாகராஜர் கல்லூரியில்
போதித்தும்...
தனித்து சாதித்தும்...
எடுத்த பணிக்கோர்
எடுத்துக்காட்டாக...
நாளெல்லாம் தொடர்கின்றார்
நானிலத்தார்க்கு
நான்கு வார்த்தை
”நகைச்சுவையோடு” நல்கி !!
வாரந்தோறும்
வாசித்து மகிழ
வாங்குங்கள் இன்றே கல்கி !!
Labels: Kalaimamani Munaivar Gnanasambandan, madurai, Sholavandan, Thiagarajar College of Arts