டி. கே. பி
அழுது அரற்றுகிறது ”தாமல்” !!
அமைய முடியவில்லை அதனால்
அனுதினம் வருந்தாமல் !!
ஊர் பெயர் முன் கொண்ட
ஊர்ப்பட்ட பெயருள்
உதித்த ஊருக்கு
உச்சப் புகழ் சேர்ப்பவர்
உன்னதமான ஒரு சிலரே !!
உதிர்ந்துவிட்டது சமீபத்தில்
உயர்ந்த சங்கீதத்திற்கு
உதாரணமாய் வாழ்ந்து
உலகெங்கும் சுகந்தம் வீசிய
உவமிக்க முடியாதொரு மலரே !!
பட்டொளி வீசிப்
பறந்த அம்மலரின்
பட்டப் பெயர் ”பட்டா” !!
ஆண்டு பல முன்
ஆற்றிய அருஞ்செயலால்
அவனிக்கு தந்தாள்
அப்பெண்
தன்னொத்த ஏனைய பெண்களும்
தனித்து மேடையேறலாம் எனும்
தகத்தகாயமான பட்டா !!
சங்கீத மேடையில்
சமத்துவமும் - அதன்
மகத்துவமும்...
“என்ன பெரிது” என
எகத்தாளமாய் இக்காலத்தில்
எதிர்நோக்கப்படும் ஒன்று !!
வழி வந்த
வரலாற்று பாதையில்
விழி வைத்தால்
விலாவாரியாகப் புரியும்
அக் காலத்தில் அது
அதுவாக அமைந்தது அன்று !!
ஆணுக்கு பெண்
ஆண்டாண்டு காலம்
உருவளவில்
உலகளவில் பேடை !!
தாமாக வேண்டியும்
தாண்டியதில்லை வீடை !!
சுதந்திரத்துக்கு முன்
சரி சமமாக பெண்களும்
சம்மணமிட்டு பாட...
சற்றும் அனுமதித்ததில்லை
சரிகமபதநி தவிழ்
சங்கீத மேடை !!
சமுதாயத்துக்கு அவள் காலமும்
சந்தோஷக் கூடை !!
ஏழு சுரத்துள்
எட்டு முழமும்
ஒன்பது கஜமும்
நேருக்கு நேர் என
நினைந்ததில்லை அனேகம் பேர் !!
ஆழமாக ஓடவில்லை அதனால்
கர்நாடக சங்கீதமெனும்
கற்பகத் தருவின் வேர் !!
டி. கே. பி எனும் மூன்றெழுத்து
சமவாய்ப்பை பிரகடனப்படுத்திய
சான்றெழுத்து !!
பல வழக்கொழிந்த தாளங்களில்
பல்லவி பாடி
”பல்லவி” பட்டம்மாள் என
சாற்றப்பட்டவர் !!
எம். எஸ். எஸ்
எம். எல். வி
டி. கே. பி என
பெண் மும்மூர்த்திகளில் ஒருவராய்
பெரிதும் போற்றப்பட்டவர் !!
அந்நியன் இந்தியனுக்கு
கை கட்டிய நாள்...
எட்டு திக்கும் வெற்றி
எட்டிய நாள்.....
எண்ணளாவிய ஆனந்தத்தில்
”வெற்றி எட்டு திக்கும் எட்ட”
கொட்டிய முரசு !!
வாழ்ந்த காலம் வரை
வாஞ்சையாய் வழித்தோன்றல்களை
வழிநடத்திய சிரசு !!
இறக்கும் வரை
இம்மியும் பிறழாத
இழுத்துக் கட்டப்பட்ட சுரத்தானம் !!
இசைக்கு இல்லை
இன்னதென்று எல்லை என
கலைஞானிக்கே உணர்த்திய
கண்ணியமான கானம் !!
டி. கே. பி
டி. கே. ஜே
ஓர் குளத்தில் பூத்த
ஈர் அல்லி !!
ஆறுமோ சங்கீத உலகு
அழுத்தமான உச்சரிப்புக்கு
அடுத்த உதாரணமாக
ஆரையேனும் இனி சொல்லி ?
திகட்ட திகட்ட இருவரையும்
தினம் கேட்டும்
தீராது எனது அவா !!
இனி வரும் காலத்தில்
இழப்பை ஈடு செய்வரோ
நித்யஸ்ரீ /விஜய் சிவா ?
Labels: d.k. pattamal, female trinity of carnatic music, Hey Ram with L. Subramanian and kamalhassan, nityashree, vijay siva
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home