தோல்வி நிலையென நினைத்தால்..
ஊரெங்கும் வெடிச் சத்தம் !!
உனது வாயிலோ
உலர்ந்து போன ரத்தம் !!
இருக்கிறது வெற்றிக் களிப்பில்
இங்கிலாந்து !!
எவன் எம்மை
எதிர்ப்பான் இனி
என இறுமாந்து !!
நின்று மோதினீர்
நீவிர் இருவரும்
ஒன்றுக்கு ஒன்றாக !!
நிதானமிழந்தீர் இன்று
"இரண்டுக்கு – ஒன்றாக” !!
போதாததற்கு உலக வரிசையில்
போயிருக்கிறீர் நான்கிற்கு !!
போதாதா இது
போதும் நரம்பில்லாது பேசும்
போக்கற்ற நாக்கிற்கு ?!
இரண்டாயிரத்து ஐந்தை மாற்ற
இருந்தது உன்னுள் தாகம் !!
இருப்பினும் இன்றோ
இரு விழியிலும் சோகம் !!
நண்பரே !!
ஆட்டத்தின் போக்கை மாற்றும்
ஆட்டக்காரர் இல்லை
ஆசியணியாம் உன்னணியில் !!
எவரை நீ
என்னணம் செயிப்பாய்
இத்தகு பின்னணியில் ?
அணியில் இல்லை
அணுவளவும் பலம் !!
எவர் தான் பார்க்கார்
எந்நாளும் நிலம் ?
தனியாளாய் உனது சாதனைகள்
தந்திருக்கிறது எமக்கு
தாளா வேதனைகள் !!
இரண்டாயிரத்து மூன்று
இறுதியாட்டம் போதும்
தரணி உந்தன்
தரம் அறிய !!
வியப்பில் இரு
விழி விரிய !!
பெயருக்கு பின்னால்
போட்டுக் கொள்ள உண்டு
முப்பத்து எட்டு செஞ்சுரிகள் !!
மெனக்கெட்டு அவற்றை
மெச்சியிருக்கின்றன நாளும்
மேதினியின் தினசரிகள் !!
உருட்டுகின்றன அவை இன்று
உந்தன் தலையை !!
நிர்ணயிக்கின்றன உன் பதவிக்கு
நியாயமான ஒரு விலையை !!
அவனிக்கு சொல்வேன்
அறுதியிட்டு ஒன்றினை !!
ஆட்டத்தில் விறுவிறுப்பு கூட்ட
ஆசியணிக்குண்டோ இன்றிணை?
ஐந்து நாள் ஆட்டத்தை....
அதன் மீது
அவனிக்கு இருந்த
அளவில்லா நாட்டத்தை....
அசாத்தியமாய் மீட்டுத் தந்தது
ஆசி அணி !!
அதில் உண்டு உந்தன்
அளப்பரிய பணி !!
“வா” தந்த பதவியை
“வா” என்று அள்ளி...
குறைகளை தள்ளி...
செதுக்கினாய் நீ
செம்மையாய் ஒரு அணியை !!
ஒதுக்கியது அது
ஒரு நாள் போட்டியோடு
ஒன்றிய சனம்
ஒதுக்கிடும் ஐந்து நாளையெனும்
ஒவ்வாமைப் பிணியை !!
அவனியோர் நாவில்
அத்தமித்தது "டிரா" !!
பெருமையை
பெருமளவில் சேர்த்தார்
"வார்ன் – மெக்ரா" !!
காலப்போக்கில் அவர்கள்
குல்லாயைக் கழற்ற....
இல்லை உன்னிடம்
இருவராகிலும் இன்று
கையை சுழற்ற !!
எடுத்தவுடன் இருவர் வீழ்ந்தாலோ
எடுத்த ஓட்டம் தாழ்ந்தாலோ
உன் அணி கையை
உதறுகின்றது !!
அடுத்து என் செய்ய என
அரண்டு பதறுகின்றது !!
உன்னை
உன் அணியை
உள்மூச்சாய் வெறுப்பவர்
உண்மையில் உம்மை
உயர்வாய் நினைக்கின்றார் !!
ஆயினும் ஏனோ
அல்லும் கனைக்கின்றார் !!
காழ்ப்புணர்ச்சிக்கு காரணம்
களத்தில் எதிரணியினரோடு
கட்டுப்பாடின்றி உம்மவர்
கணமும் பேசும்
கணக்கில்லா வசைகள் !!
விலா நோக சேர்த்த புகழை
வினாடியில் தீர்க்கும் விசைகள் !!
இதனை நீ
இனி சிறிது மாற்று !!
வீசும் உன் பக்கம்
வெற்றிக் காற்று !!
இந்திய அணி
இருக்கிறது இன்று வரை
”மூப்பை மறந்த
மூவேந்தர்”
கோப்பை அள்ள என
"நேற்றை" விற்று !!
நீவிர் விதைத்திருக்கின்றீர்
நீண்ட பலன் தரும்
"நாளைய" வித்து !!
எதிர்காலத்தை
எத்தடையுமின்றி
எதிர்நோக்கும் உன் பத்து !!
சீர் செய்யதனை
சீக்கிரம் சேரும் சம்பத்து !!
இருக்கலாம் கண்ணீரில்
இன்று கங்காரு !!
இனி கலக்கப் போவது
இங்காரு ?
Labels: australia loses 2009 ashes to england, ricky ponting, team in transition
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home