அந்த 14 நொடிகள் . . . . .
நாள் இரண்டு முன்னம்
நடந்தது ஒரு சம்பவம் !!
அதனின்று தப்பித்தது
அடியேன் செய்த
அருந்தவம் !!
எழுதும் எனக்கு
இன்னமும் உதறுகிறது !!
நடந்ததை நினைக்க நினைக்க
நெஞ்சம் பதறுகிறது !!
கடல் வானில் அன்று
கரும் மேகம் !!
சாலையில் விரையும் வண்டியில்
120 கிமீ வேகம் !!
வலப் பக்க இருக்கையில்
வலக் கரம் பற்றியவள்
வழக்கொழிந்த கதை பேசியவாறு !!
பின் பக்கம் எனது
பிழையறியா பிஞ்சுகள்
Lilo & Stitch பார்த்தவாறு !!
நெரிசலில்லை சாலையில் !!
முனைந்தேன் நான்
முழு மூச்சாக வேலையில் !!
திடுமென வண்டியில்
திகைக்க வைக்கும் உதறல் !!
என்னவோ ஏதோவென
எல்லோரும் கதறல் !!
அதற்குள் வண்டி
அங்கும் இங்கும்
அலை பாய....
என்னவோ ஏதோவென்று
எல்லோரது எண்ணமும் மேய......
திருப்பும் விசை
திருப்பிய வழியில் திரும்பாது
திடுமென செயலிழக்க...
வண்டியை நிறுத்துவோம் எனும்
வடிவான என் எண்ணம்
வலுவிழக்க.....
நெற்றி நரம்பு புடைக்க..
நெஞ்சுக் குழியில் காற்று அடைக்க..
அவச நிலையில்
அனைவரது கண்ணும் விரிய...
அரங்கன் அல்லா என
அனைத்து தெய்வமும்
அடியேன் கண்ணில்
அதி விரைவாய் தெரிய..
நடப்பதும் அறியாது.....
நடக்கவிருப்பதும் தெரியாது...
ஒருவாறு வண்டியை
ஓரங் கட்டி...
விதியைத் திட்டி....
வண்டியினின்று இறங்கி
வலப் பக்கம் பார்த்தால்
பின்னம் பக்கத்தினின்று
பிய்ந்து பறந்திருக்கிறது
புத்தம் புதிய டயர் !!
Michellin அதன் பெயர் !!
உதவிக்கு AAA யை அழைத்து....
உபரியாக இருந்த
உதிரி டயரால் பிழைத்து....
வாடிய முகத்தோடு
வீடு வந்து சேர்ந்தோம் !!
நடந்ததை நினைந்தே
நாளெல்லாம் சோர்ந்தோம் !!
அன்று
அச் சம்பவம்
அவ் வேளையில்
அவ்விடத்தில்
அரங்கேறிய பிறகு
அடியேனுக்கு நடந்த
அனைத்தையும்
அறிவியலால் ஆய இயலும் !!
அது எதனால்
அரங்கேற்றப்பட்டது என்பதற்கு
அறிவியலில் உண்டோ பதிலும் ?!
நண்பர்களே !!
அவ்விதத்தில் எனக்கு நடந்ததும்
அனேகமாக ஒரு Big Bang !!
அல்லும் அது
அறிவியலைக் கொட்டும் Fang !!
பிரபஞ்சம் பிறந்தது அதனால்..
பிறப்பித்தது எதனால் ?
என...
அந் நிகழ்வின்
ஆதார காரணம்
அறிவியலில் இல்லை !!
விரியும் பிரபஞ்சம் என
விரிவுரையாற்றுவோரும்
விரைவில் காட்டுவார் பல்லை !!
மஞ்சள் துண்டு
பகுத்தறிவு என
அனைவரிடம் இன்று காண்கிறேன்
அழகாய்ப் பேசும் யுக்தி !!
அதற்கு அப்பாற்பட்டது
அனைத்தையும் ஆட்டுவிக்கும் ஓர்
சக்தி !!
எவரையும் இடிக்காது
எவ்வெலும்பையும் பொடிக்காது
அந்த 14 நொடியுள்
அச் சக்தியை நான்
அருகில் கண்டேன் !!
“நமக்கும் மேலே ஒருவனடா” எனும்
நாட்பட்ட வாக்கை
நினைத்துக் கொண்டேன் !!
Labels: AAA, Big Bang, honda odyssey, I77N south of charlotte, tire tread separation/blow out, where science ends