Monday, January 05, 2009

சங்கீதம் எனில்.... – 03

எழுபத்திரண்டு மேளகர்த்தாவாக..
எண்ணற்ற ராகங்களின்
காரண கர்த்தாவாக..

அகன்று பரந்த
அச் சமுத்திரத்தை குறுக்க..
பார்ப்பாரும் கேட்பாரும்
புரியுமளவு சுருக்க...

தேவைப்பட்டது ஒருவரின்
தேசுடைய பார்வை !!
துவங்கியது நம்மவரின்
துயரறு கார்வை !!

சிம்ம வாஹினியோ
ஜகன் மோஹினியோ

பிலஹரியோ
மலஹரியோ

பசந்த் பஹாரோ
பாக்யஸ்ரீயோ

நடபைரவியோ
நளினகாந்தியோ

சாதா தன்யாசியோ
சுத்ததன்யாசியோ

பாடலின் சாரம் தெரிய
தேவை பாவம் !!
அதன்றி பாட்டாகும்
அந்தோ பாவம் !!

பிறிதொருவர் பாடியதையே
பின்பற்றி பாடினும்
தேவை பாட்டில் வித்தியாசம் !
தெரியவேண்டும் அப்பியாசம் !!

தாரஸ்தாயி
மத்தியஸ்தாயி என
உருட்ட வேண்டும் குரலை
அனாயாசமாக !!
ஆயினும் கேட்பவர்
ஆகலாகாது ஆயாசமாக !!

மேல்தட்டு மக்களுக்கு ஆகாது
மேலோட்டமாகப் பாடும்
வஞ்சகம் !!
சாமானியன் எதிர்பார்ப்பதோ
சனரஞ்சகம் !!

இம்மியளவும் வீணாக்கலாகாது
இசை சபாக்களின் நேரத்தை...
இருந்தும்
இரண்டு மணி நேரத்துள்
இசையில் தர வேண்டும்
இன்னிசை சுருதிகளின் சாரத்தை !!

பல வாக்கேயக்காரரின்
பாட்டையும் தொடுத்து. . .
பக்க வாத்தியக்காரரையும்
பலமாய் தட்டிக் கொடுத்து. . .

எளிமையாய்..
எனினும் வலிமையாய்...

பாடல் அளித்து..
பார்ப்பார் களித்து..

இவ்விரு குழுவினரையும் வெல்ல..
இமயத்தை நோக்கிச் செல்ல...

தேவை கம்பீரம் !!
கச்சேரியை கணப்பொழுதில்
கைவசமாக்கும் வீரம் !!

--தொடரும்

Labels: , , , , ,

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home