தாத்தா தடுமாறுகிறார்….
தச்சோ
அச்சோ
தட்ட வேண்டியதை
தக்க தருணத்தில்
தங்கு தடையின்றி
தட்ட வேண்டும் !!
முறுக்கோடு இருக்கும்
முரணான பலதை
முனைந்து கட்ட வேண்டும் !!
வளைந்தன நேராக்கவும்
விளைந்தன சீராக்கவும்
இரவு பகலாக
இழைக்க வேண்டும் !!
உளமாற உழைக்க வேண்டும் !!
உருவாவதில்லை சன்னல்கள்
இரு மரங்கள் கோராது !!
இயங்குவதில்லை அரசு
இயந்திரமும்
இன்னார்க்கு இது வேண்டும்
எனக் கோராது !!
பிரதி தினமும் மக்களின்
பிரதிநிதியாக...
பிரதிப் பிரதியாக...
மக்களோடு சோடியாக..
அவர்தம் நாடியாக...
நல்லன சொல்லி..
நலங்கெட்டன கெல்லி...
சஞ்சிகைகள் இயங்கவில்லையேல்
சனம் உய்வது எவ்வாறு?
உயர்ந்த இக்கருத்தை
உள்ளடக்கி ஒரு பத்திரிகை
உயர்ந்தது ஆதிநாளில் அவ்வாறு !!
அன்றும் இன்றும்
அதன் “ஐகான்”
அழகாய்ச் சிரிக்கும் ஒரு தாத்தா !!
அர்த்தமற்ற வார இதழ்களுக்கு
அனேக வருடங்களாக அதுவே
நல்லதெது கெட்டதெது என
நவிலும் ஆத்தா !!
அந்நாளிலே....
அரும்பெருமை மிக்க பலர்
அதன் பாசறையில்
அழகுற ஒளிர்ந்ததுண்டு !!
அடிக்கொருதரம் வரும்
அருங் கதை கட்டுரைகளினால்
அதிகம் அனேகர் குளிர்ந்ததுண்டு !!
கோபுலுவின் சித்திரங்களில்
கொள்ளை போகா மனமுண்டா?
வாலியின் வரிகளில்
வசமிழக்கா கணமுண்டா?
ராப்பிச்சையும்
ரெங்குடுவும்
சேர்க்காத சுகமுண்டா ?
மடிசார் ஸ்ரீவித்யாவுக்காக
”மடிசார் மாமி”
படிக்கா அகமுண்டா?
விறுவிறுப்பாய் பேசினதும்
விரலில் தான் நகமுண்டா?
சாண் உயரப் பத்திரிகையில்
வானுயர கருத்திருந்தது !!
அச்சேறிய அனைத்தும்
அளவில் நிறுத்திருந்தது !!
அந்தோ !
தடம் மாறிய பாதையில்..
தன்னை விட்டால் மக்கட்கு
தஞ்சமில்லை எனும் போதையில்…
அது இன்று போகின்றது !!
அடியேன் மனம் வேகின்றது !!
படிக்கப் படைத்தவனுக்கும்
படைத்ததைப் படித்தவனுக்கும்
விகடன் விகடன் என
வித விதமான தோரணைகளில்
வியந்து பேசுங்கால்....
ஒளி வீசுங்கால்.....
ஊருள் அந்நாளில்
உண்டு முன்பெல்லாம்
உன்னதமான
ஒரு தரம் !!
உற்று உற்று இந்நாள்
ஊர் முழுக்கப் பார்க்கினும்
ஒருவரும் திரும்புவதில்லை
ஒருதரம் !!
சாவி
இதயம் பேசுகிறது என
தாபித்தார் மறைவுக்குப் பின்னாலோ....
அல்லது தன்னாலோ...
இடம் தெரியாது போன
பத்திரிகைகள் ஏராளம் !!
இருப்பினும் விகடனுக்கு
இருந்தது பேராழம் !!
அது இன்று
எங்கே போயிற்று !!
என்னவாயிற்று ?
மாற்றம் எனும் பெயரில்
மாட்டலாமா பேனாவில்
எழுத்தை விட மற்றதை ?
சனத்தின் பிரச்சினை விடுத்து
சகத்திற்கு கொடுக்கலாமோ
சற்றும் தேவையற்றதை ?
அட்டைப் படம் மட்டும்
அனேக பொலிவு !!
கருத்தினில் கட்டுரையில்
காணவில்லையே வலிவு ?!
தலையங்கம் தொடங்கி
தவிடளவும் தரமில்லை !!
”தூ தூ” என வாங்கியவுடனே
தூக்கி எறியாக் கரமில்லை !!
எழுதிய எழுத்து
எழுந்து தெறிக்கவும்...
எண்ணற்றோர் மனதை
எட்டிப் பறிக்கவும்...
பத்திரிகையானது
முனைய வேண்டும் !
பத்திரிகையாளரும் அதனையே
பயபக்தியோடு நினைய வேண்டும் !
பக்கத்துக்குப் பக்கம் இன்று
பார்க்கின்றேன் திரைச் செய்தி !!
வாசிக்க வாசிக்க
வாடுகிறேன் நான்
விறைப்பெய்தி !!
குடியரசு நாட்டில்
முடியரசு பற்றிய துணுக்கினால்
இந்நாளில் புன்னகை அரும்புமா?
இளவட்டம் தான் அதனை
விரும்புமா?
நாஞ்சில் நாடனும்
காஷ்யபனும் தவிர
ஏகமாய் சோர்வை தருகின்றன
ஏனைய பல பகுதிகள் !!
இம்மியும்
இல்லை அவற்றிற்கு
அச்சேறும் தகுதிகள் !!
பிய்த்துப் பிய்த்து அவற்றை
பிரசுரிக்குமுன் ஆராய்ந்தால்
அவை என்னணம்
அச்சேறும் ?
அவ்வாறு வடிகட்டாக்கால்
அளவொண்ணா துயரில்
ஆழ்த்தாதோ உம்மை
அச் சேறும்?
உமது நோக்கம்
பத்திரிகை பெரிதும் விற்பதிலா ?
எழுத்து என்றும் நிற்பதிலா?
காசு பார்ப்பதிலா ?
கருத்தாழமிக்க படைப்புகளால்
கட்டுண்ட வாசகரோடு
கணமும் கரம் கோர்ப்பதிலா ?!
தம்மை வாசிப்பார் வகையறிதல்
தமது போட்டியாளர் பகையறிதல்
இதுவே பத்திரிகைக்கு அவசியம் !!
இவையிருக்க தேவையில்லை
தங்கம், பணம் எனும் வசியம் !!
அவனுக்கு “மோட்டார்”
அவளுக்கு “அவள்”
அரசியலுக்கு “ஜூனியர்”
அருளுக்கு “சக்தி”
அடியெடுக்கும் மழலைக்கு ”சுட்டி”
உழவுக்கு “பசுமை”
தொழிலுக்கு “நாணயம்”
திரைக்கு “சினிமா” என
ஆலம் விழுதாயிருக்கிறீர் !!
ஆயினும் பழுதாயிருக்கிறீர் !!
அனைத்தையும் கொண்டு வர
அதிகமாக உம்மிடம் அச்சிருக்கலாம் !
அனேகர் அதனில்
அல்லும் பகலும் கிறுக்கலாம் !!
எனினும் அன்பரே !
ஏரார்ந்த என் சொல் கேளும் !!
என்னைப் போற்றுவீர் நாளும் !!
உணர்வீரா எள்ளளவேணும்
உம்மையும்
உமது குழுமத்தையும்
உலகு எடை போட
உதவும் பத்திரிகை
ஆனந்த விகடனே என்று ?!
ஆகவே நடத்தாதீர் அதனை
கடனே என்று !!
வருவோம்
வார இதழிலிருந்து
வருடாந்திர இதழுக்கு !!
அதுவும் தருகிறது இழுக்கு
அளப்பொண்ணா உம் புகழுக்கு !!
போன வருடத்தில்
அட்டையில் போட்டீர் ”விசை”யை !!
திரும்பிய இடமெங்கும்
திரளாக மக்கள்
திட்டுவதற்கு தட்டினார் விசையை !
விஸ்வநாதன் ஆனந்தை
விட்டு விட்டீரே என
அடியேன் நான்
அஞ்சல் ஒன்றை
அனுப்பினேன் அன்றே
வசை மொழிந்து !!
உம்மிடமிருந்து வந்தது
உடனுக்குடன் பதில்
உணர்ந்தோம் தவறை என
என் கருத்தை வழிமொழிந்து !
அட்டை தொடங்கி இம்முறையும்
அதே தவறு !
கழுதை கெட்டால்
குட்டிச் சுவரு !!
இருக்கிறார் அட்டையில்
இம்முறை தமன்னா !!
இருந்திருக்கலாமே
நூற்றாண்டு காணும்
நம் அண்ணா ?!
உள்ளே இருப்பனவும்
இல்லை உயர்வாக !!
இதையே வருடந்தோறும் சொல்லி
இருக்கிறது எனக்கு அயர்வாக !!
தீபாவளி மலர்
படைக்கலாம் பலர் ....
பட்டொளி வீசிப்
பறப்பவர் சிலர் !!
படைத்திருக்கலாம் உம்முடையதை
மற்றவற்றிலிருந்து வேறுபடுத்தி !!
எரியும் நெருப்பில்
எண்ணையை விட்ட கதையாய்
யாது கண்டீர் மக்களை
நீர் வேறு படுத்தி ?
வார இதழ்களில்
வான் புகழுற்று
வாரா வாரம்
வாடிக்கையாளர்களை
வாரி அணைத்தாயே
வழி வழியாக !!
வாசன் வழியாக !!
வெளியேறலாமா உன் புகழ்
வாசல் வழியாக ?!
Labels: aval, deepavali malar, its roots and standards, nanayam, pasumai, sakthi, ss vasan, vikatan