பாதையெல்லாம் மாறிவிடும். . .
பிற வெறி எதனினும்
நிற வெறி தீது !!
அதனினும் கொடிய
அநீதி யாது ?
அன்று முதல்
இன்று வரை
வாழ்வு
சுதந்திரம்
இன்பம் பேணுதல்
இம்மூன்றும்....
ஆதார உரிமைகளாக
அமெரிக்கருக்கு
அவர்தம் ”சுதந்திரப் பிரகடனம்”
அளிக்கிறது !
ஆயினும் அந்நாட்டின்
ஆரம்ப காலத்தை
ஆராயுங்கால்
அவனி முகம் சுளிக்கிறது !!
காட்டு வேலை
வீட்டு வேலை என
ஆதி நாளில்
ஆப்பிரிக்காவிலிருந்து
அடிமைகள்
அழைத்து வரப்பட்டனர்
அமெரிக்கர்க்கு
அலுவல் புரிந்திட !!
ஓரவில்லை
ஒருவரும்
ஓரளவாவது சுதந்திரத்தின்
ஒருமையான அர்த்தத்தை
புரிந்திட!!
அடிமைகளை
அங்கங்கே ஏலம் விட்டனர் !!
அவதியுற்ற
அனேகர் ஓலம் இட்டனர் !!
அவ்வேளையில்
அடக்கி ஆளும்
அநாகரீகத்தை
அன்பரொருவர் தட்டிக் கேட்டார் !!
அரசு ஆணையினால்
அடிமைத்தனம் எனும்
அராஜகத்திலிருந்து
அனேகரை மீட்டார் !!
இனியும் இருக்கலாகாது
இப் பழக்கம் நம்கண்....
இன்னணம்
இறுதிபடச் சாற்றினார்
ஆபிரகாம் லிங்கன் !!
ஆயினும்...
திறத்தால் அன்றி
நிறத்தால் வேறுபடுத்தும்
நிந்தனை
நெடுநாள் தொடர்ந்தது !!
நிற வெறி
நீக்கமற எங்கும் அடர்ந்தது !!
பல செயல்களில் விழையவும்..
பல இடங்களில் நுழையவும்....
தோல் நிறம் தடுத்தது !!
தோல்வியை போட்டியின்றி
தாமாய் கொடுத்தது !!
பேதமை ஒரு நாள்
பேருந்திலும் புகுந்தது !!
புரட்சி மிகுந்தது !!
இருக்கையை வெள்ளையனுக்கு
இப்பொழுதே விட்டுக் கொடு...
இல்லையேல் இங்கேயே
இறங்கி விடு....
ஓட்டுநன் ஒருவன்
ஓர் அணங்கை கேட்டான்
ஆற்றல் மெனக்கெட...
அவள் முனைந்தாள்
அகத் துயரை கணக்கிட.....
இருள் நிறமாக
இருக்கலாம் யாம்
கரி மை வண்ணம்...
இருப்பினும் எமக்குமுண்டு
உரிமை எண்ணம்...
உயிரை மதிக்கா
உன் போக்கை
உளமாற வெறுக்கிறேன் !!
உனது கோரிக்கைக்கு
ஒத்துழைக்க மறுக்கிறேன் !!
1955ல்
அபாய மணியாக
அலபாமா மண்ணில்
அநீதிக்கு எதிராக
அம்மணி ரோசா பார்க்ஸின்
அக்குரல் எழுந்தது !!
அன்பர் ஒருவர் காதில்
அப்போதே அது விழுந்தது !!
1963ல்.
அவ் அன்பர்
அமெரிக்க தலைநகரத்தில்
எழுப்பினார் ஒரு வினாவை !!
விவரித்தார்
விலாவாரியாக அவரது
வியத்தகு ”கனாவை” !!
என் இனிய நண்பர்களே!
இத்தேசம் இன்றே எழட்டும் !!
என் கோரிக்கை
எல்லோர் காதிலும் விழட்டும்!!
”எல்லோரும் சமம்” என்று
எங்கும் கத்தி வைக்கின்றீர் !!
இருப்பினும்
இயல்பு வாழ்க்கையில்
இதனை ஏன்
ஒத்தி வைக்கின்றீர் ?!
எங்கெங்கே
எது எது
எவர் எவர்க்கென
எதற்காக இத்தனை கட்டுப்பாடு ?
ஏரார்ந்த உமது சிந்தனையில்
ஏன் இத்தகு தட்டுப்பாடு ?
களி அரங்குகளில்
கழிப்பறைகளில்
ரயில் சந்திக்குமிடத்தில்
தேவனை வந்திக்குமிடத்தில்
கருப்பர்களுக்கென நீவிர்
கட்டிப்போட்டிருக்கிறீர்
தனித் தனி இடமாக !!
இருக்க முடியவில்லை
இனி என்னால் சடமாக !!
சனநாயகம் தழைக்குமோ
அவ்விடம் ?
அனைத்து மக்களையும்
அழிக்காது போகுமா
அவ் விடம்?
மனிதனை மனிதனாக
மதிக்காது நழுவுகின்றீர் !!
தேசுறு கொள்கையினின்று
வழுவுகின்றீர் !!
எவ்விடத்தும்
எல்லோரிடத்தும்
எந்நாளும் நான்
எதிர்நோக்குகிறேன்
”வண்ணம் சாரா” மதிப்பினை !!
நடந்தால்
நாளைய ஏடுகள்
நாளும் தாங்கும்
நமது சரித்திரத்தின் பதிப்பினை !!
கோட்பாடுகளின் உண்மையைக்
கோதறக் கற்போம் !!
அதற்காகவேணும்
எமது உரிமைக்கு யாம்
எழுந்து நிற்போம் !!
ஒருவன் நேசிக்கப்படுவதும்...
ஒருவனது ஆற்றல்
ஒருமனதாக உத்தேசிக்கப்படுவதும்..
தகவால் அமையட்டும் !!
நமது காலத்திலில்லையேனும்
நாளை அது நம்
மகவால் அமையட்டும் !!
மாசுற்றோர் மனதை
மாற்றியது
மார்ட்டின் லூதர் கிங்கின்
மாசறு பேச்சு !!
அனல் மூச்சு !!
1991ல்
தேசம் மறுபடி எரிந்தது !!
அக்கிரமம் மேலும் விரிந்தது !!
இம்முறையும்
கதை ஒரு ”கிங்கை” சுற்றி !!
உலகம் மறக்கலாகாது
அந்நிகழ்வின் பங்கைப் பற்றி !!
காக்கும் கரங்களாம்
காவல் படையே
வன்முறையில் ஈடுபட்டது !!
நிற வெறியை
நிலத்தினின்று எறிய
உலக உரிமைக் குழுக்கள்
பாடுபட்டது !
2008...
ஆரம்பம் முதலே
அவனியெங்கும் தண்டோரா
அமெரிக்கத் தேர்தல்
அதி விரைவில்
பராக் பராக் என !!
அது நடந்து முடிய...
அனுதினமும்
அகிலம் மொழிகிறது
”பராக் !!” ”பராக் !!” என
அன்பரே !!
உதிரத்தால் எழுதப்பட்ட
உமது மூதாதையர் சரித்திரம்
நெடிது !!
அவர்தம் துயரங்கள் கொடிது !!
மறவாதே அவர்கள்
கண்ட துயரங்களை !!
அடிகோலும் அவை
உன் வாழ்வின் உயரங்களை !!
“பிறப்பொக்கும் எல்லா உயிரும்”
அவ்வெழுத்துண்டு
அன்றே எம் ஊரில் !!
நிறத்தின் அடிப்படையில்
நிகழும் தீதை
நாங்களும் பார்த்திருக்கிறோம் பாரில் !!
“வெள்ளை நிறத்தொரு பூனை”
என எங்களவன்
அதனாலன்றோ
அன்றே எழுதினான்
வான் பார்த்த மீசையோடு ?!
வையத்தின் மீதிருந்த
வற்றா ஆசையோடு!
உனை ஒத்த
உனைப் போன்ற
உன் இனமும்....
உனை மதிக்கும்
உலகோர் மனமும்.....
உடன் அடியொற்றும் இனி
உன் பாதையில் !!
உணர் இதனை
உனை விட மேதையில் !!
அந்தியும் உன்னை
அவனி ஆராயும் !!
ஆராயாது
அது நடக்குமா சீராயும்?
அரசியல் சரித்திரத்தில்
அரிதான
அமெரிக்க அதிபர் நாற்காலியை
அவ்வளவு எளிதாக யாரும்
தொட்டதில்லை !!
வெற்றிக் கொடி நட்டதில்லை !!
உனக்கது கிடைத்தது
உனை மக்கள்
உளமாற வாழ்த்தி
வாக்கை விரும்பி இட்டதாலா?
அல்லது..
மாற்றத்தை காணமுடியா
மற்ற கட்சியினின்று
முகம் திரும்பி விட்டதாலா?
ஒசோன் ஓட்டையா ?
ஒரினச் சேர்க்கையா ??
போரா?
பொருளாதாரமா?
பழங்காலப் பிரச்சினையா ?
பழம் ”பாலப்” பிரச்சினையா?
எங்கே உனது கவனம்
என
எப்போதும் கவனிக்கும் புவனம் !!
தீர ஆலோசித்து
தீர்க்கமான முடிவை எடு !!
நாளைய நல்வாழ்விற்கு
நல்விதையை இன்றே நடு !!
அறிவாளரை
அறிவியலாளரை
அடிக்கொருதரம் சூழ்ந்து கொள் !!
அன்றாடப் பிரச்சினையில்
அறவே ஆழ்ந்து கொள் !!
கவலைப்படாதே அவ்வப்போது
களையெடுக்க ...
வசவு வரினும்
வழி செய்
வசந்த வாழ்வு தலையெடுக்க
09/11..
கத்ரீனா சீற்றம்..
எரிபொருள் விலையேற்றம்..
வர்த்தகத்தில் முடக்கம்..
வாகன உற்பத்தியில்
வானளாவும் தேக்கம் தொடக்கம்
என...
வழி தெரியா பாதையினால்..
வழி காண முடியா
வாதையினால்...
அனைவரும் நொந்திருக்கிறார் !!
உளம் வெந்திருக்கிறார் !!
மக்கள் அனைவரும்
மாற்றத்தை முன்வைத்து
அளித்திருக்கிறார் வாக்கை !!
மறக்காதே அவர்க்கு
நீ கொடுத்த வாக்கை !!
Labels: barack obama, emancipation proclamation, lincoln, martin luther king, rodney king, rosa parks, slavery
1 Comments:
I salute ur brilliant poem!!!
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home