Wednesday, October 28, 2009

சிக்குன் குனியா. . . . -- 1



அவற்றின் உணவு
அகில ஜீவராசிகட்கும்
அத்தியாவசியமான ஒரு திரவம் !!
அவற்றால் நமக்கோ
அன்றாடம் உபத்திரவம் !!

அயர்ந்த மனிதனுக்கு
அவை வைக்கும்
அதன் அளவில்
அன்பாய் ஒரு முத்தம் !!

எடுத்த பொருளை சிந்தாது
எவ் வரிசையிலும் முந்தாது

தொன்று தொட்டு உண்டதற்கு
தொழில் சுத்தம் !!

மாலைப் பொழுதின்
மயக்கத்தில் அவை
மதி இழக்கும் !!

நம்மை அறியாமல்
நம் தொடையில்
நச்சென்று தாளமிட

நம் மதி
நம்மைப் பழக்கும் !!

அதன் தேவை இரத்தம்
அப்போதைக்கு !!
அடங்காக் குடியெனும்
அப் போதைக்கு !!

வகை வகையாய்
வட்ட வட்டமாய்

வசதிக்கு ஏற்ப
வத்தி வைத்தும்......

வாயிற் கதவை
பொத்தி வைத்தும்....

கொல்லிகளை தெளித்தும்...
களிம்புகளை பூசிக்
கவலையில்லை இனி எனக்
களித்தும்...

ஒடுக்க முடியவில்லை மனிதனால்
ஒருபோதும் அவற்றை !!
மறந்தான் அவன்
முதற்கண் அவனது தவற்றை !!

அதிகப்படியான தூக்கமும்
அசுத்த நீர் தேக்கமும்

நாடு நாறினால்
நமக்கென்ன எனும் நோக்கமும்

மனிதனை முடக்குகின்றன !!
மண்டியிட வைத்து மடக்குகின்றன !!

மலேரியா
டிங்கு
ஃபைலேரியா என

பல வியாதிகள் அவனை
பலவாறு அடக்குகின்றன !!

”சிக்குன் குனியா” எனும்
சித்திரவதையில்
சில நாளாய்
சிக்கியிருக்கிறது நம் நாடு !!

சிக்குண்டு தவிக்கின்றார்
சிரமத்தில் பலர்
செய்வது அறியாது !!

இன்ன பிற சுரம் போல்
இச்சுரமும்

மூன்று நாள்
மூலையில் ஒடுங்கவும்...
குய்யோ முய்யோ என
குளிரில் நடுங்கவும்...

ஒருமித்து செய்யும் !!
உடல் நையும் !!

பத்தாம் நாள் முதலாய்
பலத்த வலி
பலவாறு உடலில் தங்கும் !!

அது போல் ஒரு வலி
அம்மவோ!
அறிந்ததில்லை நான்
அகிலம் எங்கும் !!

தொடரும். . .

Labels: , ,

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home