ஆடலரசன்...ஆர்க்கெஸ்ட்ராவில்..
மாணிக்கவாசகம்
மாந்தர்க்கு அருளிய
மாசில்லா வாசகம்
திருவாசகம் !!
தனித்துவமிக்க அதனை
தனித்து உணர
தமிழ் அறிவன்றி
தவிடளவும் தேவையில்லை
தனியொரு யாசகம் !!
அதுவைதத்தின் ஆதியை..
அடி முடி
அற்ற சோதியை...
பண்ணைபுரம் தந்திருக்கிறது
பரங்கியர் வாத்திய சுரத்தில் !!
”ஆரடோரியோ”வாக நம் கரத்தில் !!
”நமச்சிவாய வாழ்க” என
நமது எழுத்தோடு
இசைஞானி பறந்தார்
இங்கேறி !!
இறங்கினார் ஹங்கேரி !!
ஆர்க்கெஸ்ட்ரா குழுவினரோடு
அங்கேறி...
அக மகிழ்ந்து
அவையோர்க்கு முகமன் கூறி ...
சந்திர சூடனை
சுடலை நாடனை
பண் தொடுத்து
பனுவல் பனுவலாக
இளையராஜா விரவ..
“தேமதுரத் தமிழோசை
உலகமெலாம்” பரவ...
இமைக்கும் நேரத்தில் நம்
இரு காதுகளுள்
இன்ப மயமான
இசை வெள்ளம் !!
உருகத் தொடங்குகிறது
உறங்கிக் கிடக்கும் உள்ளம் !!
அறுகின்றோம் பந்தம் !
உறுகின்றோம் ஆனந்தம் !!
குறையொன்றுண்டு கைவசம் !
குந்துமணியாயினும் அது நிசம் !!
பாடப் பட்டவன்
பரம்பொருளெனினும்
நமக்கு அவன்
நம்மூர் சிவன் !!
உறையுமிடம் அவனுக்கு
உடல் எரிக்கும் மயானம் !
கயிலைநாதனை பாட எதற்கு
கடல் கடந்த பிரயாணம் ?
உமாமகேசனின் நாதம்
உடுக்கைச் சத்தம் !!
அவனைப் பாட
அங்கெதற்கு
அக்கார்டியனோடு யுத்தம் ?
பஞ்ச பூதமாக
பரவி நிற்கின்றான் அவன்
பழந்தமிழர் நிலத்தில் !
ஆராய வேண்டுமா அவனை
ஆங்காங்கே தலை காட்டும்
ஆங்கிலத்தில் ?
நம் கருவியின் துணையோடு
நம் நாட்டார் இணையோடு
நம் நாதத்தின் இசையோடு
இசைத்தட்டு
இன்னொன்றில்
செய்ய வேண்டும் இசைஞானி
செயற்கரிய செயல் !!
தழைக்க வேண்டும்
தமிழர்தம் இசை வயல் !!
Labels: hungary orchestra, ilaiyaraja, manikavachagar, oratorio, tiruvasagam