Friday, June 04, 2010

நாஞ்சில் நாடன் . . .



வாசகன் என்பவன்
வாசகத்தில் நெருப்பு எனும்
வார்த்தையை
வாசிக்குங்கால்

நுகரவேண்டும் அவனது
நுனிமூக்கு புகை வாசம் !!
எழுத்தாளனுக்கு என்றும்
எழுத்தே சுவாசம் !!

பரந்த பாதையுடை
பத்திரிகை உலகில்

கட்டுரை என்பது
கருக்கழியாக் கன்னி !!
கருத்தைக் கவரும் அது
காலத்தை பதிவு பண்ணி !!

அரசியல் அக்கிரமங்கள்
அன்றாட நிகழ்வுகள்

சமர் சனங்கள்
விமர்சனங்கள்

எழில் குறிப்புகள்
தொழில் முயற்சிகள்

என ..
எப்பக்கம் புரட்டினும்
எதுவாகிலும்

கடிவாளமிட்ட குதிரையாய்
கண்டபடி அலையாது..
கட்டுக் கோப்பாய்
கருத்து கலையாது..

எழுதத் தகாதன
எவையென தூர் நீக்கி..
எடுத்துப் படிப்பார் தம்
எண்ணங்களை சீர்தூக்கி..

சமூக அவலங்களை
சளைக்காது சாடி
நல்லது நடக்குங்கால்
நலமென பாடி

எழுதுபவன் எழுதினால்
எழுத்து ஏற்றமுறும் !!
சமுதாயம் தேற்றமுறும் !!

அவ்வாறு எழுதுவார்
அனேகருடையது நாடு!
நானறிந்த வரை இல்லை
நாஞ்சில் நாடனுக்கு ஈடு !!

குளிர் சாதன அறையினின்று
குமுறல்களை கொட்டாது..
தற்குறியாய்
தற்பெருமை சொட்டாது..

கண்டதை சொல்லாது
கண்டதை சொல்லி

நச்சதனை ”நச்”சென்றும்
நன்றதனை நறுக்கென்றும்

நவிலும் நாஞ்சிலாரின்
நயமிகு கட்டுரைத் தொகுப்பு
” தீதும் நன்றும் “ !!

தொலை தூரத்தில் இருப்பினும்
தொடர்ந்து விகடனில் அதனை
தொடராக வாசித்ததுண்டு அன்றும் !!

பண்டை தமிழர் உணவுப்
பழக்கமோ..
இழிவு செய்யோம் மாதர் தம்மை
இனி இங்கே! எனச் சொல்லி
இன்றுவரை இழிவு செய்யும்
”இரட்டை அரசியல்”
மடமை முழக்கமோ..

சாமன்யனாய் தான் பார்க்கும்
சாதாரண நிகழ்வுகளை
சலனமின்றி ஒதுக்கித் தள்ளாது..
வெகுஜனத்தின் மீது
வெஞ்சினத்தை பாய்ச்சி
வெகுவாய் எள்ளாது..

அரசியலாளர்
அன்றாட வாசகர்
ஆய்வாளர் என

அவையறிந்து
அலச வேண்டியதை
அழகுறச் செப்பி..
அரசியல் சாயத்தினின்று தப்பி..

ஏரார்ந்த எழுத்தில்
ஏகமாய் வேகமும்..
ஏற்றமுறுமா இந்தியா? எனும்
ஏக்கம் தணிக்கும் தாகமும்..

எந்நாளும் காட்டும்
நாஞ்சிலார் பேனா !!
ஆயிரம் சொல்லியும்
ஆவன செய்யாத
ஆட்சியாளருக்கு ஒருக்கால்
தலையில் பேனா ?

வந்து விழும் சாடலுக்கு
வழுக்கைத் தலையர்களும்
இரட்டை இலையர்களும்

தவமேற்கொண்டு செய்வதறியாது
தலை சொறிகிறார் !!
இந்த ஈட்டி எமக்கில்லை என
இன்னொருவர் மீது எறிகிறார் !!

நிரந்தரமாய் ஒன்று சொல்வேன்
நிலத்தை ஆள்வாருக்கு !!

கத்தி எனில் வெட்டணும் !!
புத்தி எனில் எட்டணும் !!

Labels: , ,

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home